கல்வெட்டைப் பற்றிய விவரம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இப்படி ஊர் ஸபையின் அங்கத்தினர்களை எப்படித் தேர்ந்தெடுத்தார்கள் என்பதைக் காஞ்சீபுரத்துத்து அருகிலுள்ள உத்தரமேரூரில் உள்ள சாஸனத்தால் மட்டுமின்றி, தெற்கு ஜில்லாகளிலுள்ள வேறே பல செப்பேடுகளிலிருந்தும் கல்வெட்டுக்களிலிருந்தும் தெரிந்து கொள்கிறோம்.

மாயவரம் தாலுகாவின் தலைஞாயிறு என்று (க்ராமம்) இருக்கிறது. அங்கே “குற்றம் பொறுத்தீச்வரர்” என்ற கருணை பெயர் கொண்ட சிவன் கோயில் இருக்கிறது. தனிவாழ்க்கையில் தனி மநுஷன் குற்றத்தைத்தான் பொறுக்கும்படி பகவானிடம் வேண்டலாம். பொதுவாழ்க்கையில் குற்றமில்லாமல் அப்பழுக்காகத்தான் ஒழுகணும்’ என்று காட்டுகிற மாதிரி இந்தக் கோவிலிலேயே ஊராட்சி பற்றி ஒரு சோழர் காலக் கல்வெட்டு இருக்கிறது. இத்தனை வயஸுக்கு மேலே ஆனவர்கள், இதற்கு முந்தி இத்தனை வருஷகாலம் ஊர்ஸபையில் அங்கம் வகிக்காதவர்கள், வேறே தன் உறவுக்காரர்கள் யாரும் ஊர்ஸபையில் இத்தனை வருஷத்துக்கு முந்திவரை மெம்பராயில்லாதவர்கள் ஆகியவர்களைத்தான் ‘எலெக்ட்’ செய்யலாமென்று இந்தக் கல்வெட்டிலிருப்பது, ஏறக்குறைய உத்தரமேரூர் “பாணியிலேயே இருக்கிறது.

சிலாசாஸனமும் (கல்வெட்டும்) , தாம்ர சாஸனமுமாக (செப்பேடுமாக) உத்தம சோழன், ஸுந்தர சோழன், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்த்ரன், முதலாம் குலோத்துங்கன் என்று பல பேர் காலத்தியதாக ஊராட்சி விஷயங்களைச் சொல்பவை பல இருக்கின்றன. “அன்பில் plates”, “Leyden plates” என்று இவற்றில் இருப்பதிலும் இந்த விஷயங்கள் வருகின்றன. ஆனாலும் முக்யமாக, exhaustive ஆக (முழு விவரமும் தருவதாக) இருப்பது உத்தரமேரூர் சாஸனந்தான்.

ஸரியாகச் சொன்னால் உத்தரமேரூரிலேயே இரண்டு சாஸனங்கள் இருக்கின்றன. முதலில் ஒன்றும், அப்புறம் இரண்டு வருஷங்களுக்குப் பின்னால் இன்னொன்றுமாக இரண்டு கல்வெட்டுக்கள் அங்குக் காணப்படுகின்றன. முதல் கல்வெட்டு சுருக்கமாக இருக்கிறது. பிந்தையதுதான் விவரமாக இருப்பது. அதுதான் அதிக ப்ரஸித்தி அடைந்தது. நான் அதிலுள்ள விஷயங்களைத்தான் இப்போது சொல்ல இருக்கிறேன். ஏனைய கல்வெட்டுக்களில் கொஞ்சம் கொஞ்சம் தெரிகிற விஷயங்களைப் பூர்த்தியாகக் கொடுப்பது பராந்தக சோழன் காலத்திய இரண்டாம் கல்வெட்டுத்தான். (கி.பி.920-ம் வருஷத்தியது.)

ஓர் ஊரில் பொதுக் கார்யங்களில் ஏதாவது குறை ஏற்பட்டிருந்தால், முறையின்மை நடந்திருப்பதாகத் தெரிந்தால், அதை விசாரித்து நிவ்ருத்தி செய்வதற்காகச் சோழராஜா (எந்த அரசனுமே) தகுந்த அதிகாரிகளை அனுப்பி வைப்பான். இப்படி ஆயிரம் வருஷத்துக்கு முந்தி ‘பராந்தகன்’ என்று நாம் சுருக்கமாக சொல்லும் வீர நாராயண பராந்தக தேவ பரகேஸரி வர்ம சோழ மஹாராஜா, தத்தனூர் மூவேந்த வேளாண் என்னும் அதிகாரியை ஒரு தடவையும், அதற்கு இரண்டு வருஷங்களுக்கு அப்புறம் ஸ்ரீ வங்கநகர் ஸோமாசி க்ரமவித்தபட்டன் என்னும் அதிகாரியை இன்னொரு தடவையும் உத்தரமேரூருக்கு அனுப்பித் தேர்தல் முறைகளைச் சீர்ப்படுத்தியிருக்கிறான். இந்த இருவரும் மேற்பார்த்துச் செய்த ஏற்பாடுகளைத்தான் முறையே அந்த இரண்டு உத்தரமேரூர் சாஸனங்கள் தெரிவிக்கின்றன. அந்த ஊர்ப் பரிபாலன ஸபையார் கூடி வகுத்துக் கொண்டே தேர்தல் விதிகளை இந்த அதிகாரிகள் ஸூபர்வைஸ் செய்து அதிகார பூர்வமாக அங்கீகரித்திருக்கிறார்களென்று தெரிகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is க்ராம ஸபையின் அமைப்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  அந்தண - வேளாள அதிகாரிகள்
Next