அன்னபூர்ணி : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

நம் தேசத்தில் மட்டும் என்றில்லை; லோகம் முழுக்க துர்ப்பிக்ஷம் அதிகமாகி வருகிறது. மெஷின்கள் நிறையச் செய்து விடலாம். ஃபாக்டரிகள் நிறைய வைத்து விடலாம். ஆனால் பயிர் பச்சைகள் வளர்வது நம் கையில் இல்லாமல் இருக்கிறது. தானிய ஸம்ருத்தி (செழிப்பு) இருந்தாலொழிய, வயிறு நிரம்பினால் அன்றி, பாக்கி என்ன சுபிக்ஷம் செய்து கொண்டாலும், மொத்தத்தில் துர்பிக்ஷமாகத்தான் இருக்கிறது. பயிர் பச்சை விளைச்சலுக்கு நம்முடைய அகட விகட சாமர்த்தியங்களால் பிரயோஜனமில்லை. என்ஜினீயர் அணை கட்டலாம். ஆனால், மழையை பெய்விக்க அவரால் முடியாது. ஜகன்மாதாவான அன்னபூர்ணேசுவரியை எல்லோரும் மனஸாரப் பிரார்த்தித்துக் கொண்டால்தான் விமோசனம் உண்டு. அவளே நாம் செய்கிற மகாபாபங்களை க்ஷமித்துத் தானிய ஸம்ருத்தியை அநுக்கிரஹிப்பாள். துர்பிக்ஷம் போக அவளே பிச்சை போடுவாள்.

நம்முடைய ஆசார்யாள் ஸ்ரீசங்கர பகவத் பாதாள் காசியில் இருந்தபோது, அன்னபூர்ணி மீது ஒரு ஸ்தோத்திரம் பாடியருளினார்.

அதில் சுலோகத்துக்குச் சுலோகம் முடிவிலே, “கருணையின் பற்றுக்கொம்பாக இருக்கிற அம்மாவே, அன்னபூர்ணேசுவரியே பிச்சை போடு” என்று உருக்கமாக வேண்டிக் கொள்கிறார்.

‘பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ

மாதா அன்னபூர்ணேச்வரீ’

‘தேஹி – போடு’ என்றால் அவருக்கில்லை. அவருக்குப் பிக்ஷை ஜாம் ஜாம் என்று நடந்துகொண்டிருந்திருக்கும்! தவிரவும் நம் ஆச்சார்யாளுக்குச் சரீராபிமானம், உதரபோஷணம், தான் என்கிற எண்ணம் லவலேசம்கூடக் கிடையாது. கிரகசன் என்ற காபாலிகன் அவரிடம், “ஒரு சக்கரவர்த்தி அல்லது சந்நியாசியின் தலையைப் பலிக் கொடுத்தால் தனக்குக் கபாலியின் தரிசனம் கிடைக்கும்” என்றான். உடனே ஆச்சார்யாள், “சக்கரவர்த்தியின் தலைக்கு ஆசைப்பட்டால் உன் தலையே போய்விடும். சந்நியாசியின் தலை வேண்டுமானால் இதோ இந்தத் தலையை எடுத்துக் கொள்” என்று தனது சிரசையே தொட்டுக் காட்டினார். அப்புறம் ஈஸ்வர சங்கல்பத்தால் கதை மாறிப்போயிற்று. அது வேறு விஷயம். இப்போது நான் அந்தத் கதையைச் சொல்ல வரவில்லை. ஆச்சாரியாளுக்குக் கொஞ்சம்கூட அஹங்கார மமகாரமே கிடையாது. தேகாபிமானமே கிடையாது என்பதற்காக இதைச் சொன்னேன். அப்படிப்பட்டவர் “பிக்ஷாம் தேஹி – பிச்சை போடு” என்றால் என்ன அர்த்தம்?

இந்த ஸ்தோத்திரத்தின் கடைசி சுலோகத்தைப் பார்த்தால் அர்த்தம் புரியும். அதில், ‘எனக்குப் பார்வதியே அம்மா; பரமேசுவரனே அப்பா! சிவபக்தர்கள் எல்லாம் பந்துக்கள்; மூவுலகமும் வீடு’ என்கிறார். எனவே தேஹி – பிச்சை போடு என்று இவர் கேட்கிறபோது, திரிலோகங்களுக்கும் பிச்சை போடு என்று பிரார்த்தித்ததாகவே அர்த்தமாகிறது.

அதோடு, தனக்கு என்றே வேண்டிக்கொள்கிற நம் மாதிரி இருக்கப்பட்டவர்கள், பாராயணம் செய்வதற்குப் பொருத்தமாக இப்படிப் பிரார்த்தனை செய்திருக்கிறார்.

அன்ன பிக்ஷை மட்டும் பிரயோஜனமில்லை. முடிவில் ஞானமில்லாமல் வெறுமே தின்று தின்று ஊனை வளர்த்துப் பிரயோஜனமில்லை. கையில் க்ஷீரான்ன (பால் சோற்று)ப் பாத்திரமும், கரண்டியும் வைத்துக்கொண்டு அன்புருவாக உணவுபோடும் அன்னபூரணி இந்த ஞானத்தையும் விசேஷமாக அநுக்கிரஹிக்கிறாள். ஞான வைராக்கியப் பிச்சையைத்தான் ஆதிசங்கரரும் முடிவாகக் கேட்கிறார்.

காஞ்சி காமாக்ஷியில் அன்னபூர்ணேசுவரியும் அடக்கம். காமாக்ஷி இருநாழி நெல் கொண்டு முப்பத்திரண்டு அறங்களை வளர்த்தாள். அதில் அன்னதானம் ஒன்று. காமக்கோட்டத்தில் அன்னபூரணி சந்நிதி இருக்கிறது. காஞ்சியில் ஓண காந்தன் தளியில் இருக்கும் ஸ்வாமியைப் பாடும் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள், ‘காமக்கோட்டத்தில் அன்னபூரணியே இருக்கும்போது நீர் ஏன் பிக்ஷாண்டியாக அலைகிறீர்?’ என்று கேட்கிறார்.

வாரிரும் குழல்வாள் நெடுங்கண்

மலைமகள் மதுவிம்மு கொன்றைத்

தாரிருந் தடமார்பு நீங்காத்

தையலாள் உலகுய்ய வைத்த

காரிரும் பொழில்கச்சி மூதூர்க்

காமகோட்டம் உண்டாக நீர்போய்

ஊரிடும் பிச்சைகொள் வதென்னே

ஒண்காந்தன் றளியுளீரே!

சரீரம், ஆத்மா இரண்டுக்கும் உணவூட்டி வளர்க்கிற அன்னபூரணேசுவரியைத் துதித்து சமஸ்த ஜீவர்களுக்கும் துர்பிக்ஷம் நீங்கப் பிரார்த்திப்போம்.

பாபம் செய்ததற்குத் தண்டனையாக துர்பிக்ஷத்தில் கஷ்டப்படுபவர்களுக்கு காமாக்ஷியேயான அன்னபூரணி கருணை பாலிக்கிறாள். பசி என்பது பாபிக்கும் வரக்கூடாது. கேரளத்தில் செருக்குன்னம் என்று அன்னபூர்ணா க்ஷேத்திரம் இருக்கிறது. அங்கே சேவார்த்திகளுக்கெல்லாம் சாப்பாடு போடுகிறார்கள். அதுமட்டுமில்லை; ராத்திரி வேளையில் கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு மரத்தில் ஒரு சோற்று மூட்டையைக்கட்டி வைக்கிறார்கள். இராக்காலத்தில் அந்தப் பக்கமாகப் பசியோடு போகிற திருடர்களும்கூடப் பசியாற வேண்டும் என்று இந்த ஏற்பாடு.

இத்தனை கருணையோடு ஓர் அம்மா இருக்கிறபோது, இன்றைக்கு லோகத்தில் இவ்வளவு துர்பிக்ஷை இருக்கிறது என்றால், அதிலிருந்து நாம் எத்தனை பாபம் செய்திருக்கிறோம் என்பதைத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். “சரக ஸம்ஹிதை”யில் ஆத்ரேயர் சொல்வதாக வருகிறது; ஒரு தேசத்திலோ, நகரத்திலோ, கிராமத்திலோ ஆட்சியில் இருக்கப்பட்டவர்கள் தர்மம் தவறி நடந்தால் அவர்களைச் சேர்ந்த ஜனங்களும் இதே போக்கை அநுசரிக்க வேண்டியதாகிறது. இப்படி அதர்மம் ரொம்பவும் பரவுகிறபோது தேவர்கள் இவர்களைக் கைவிட எண்ணுகிறார்கள். (தேவர்கள் என்றால் இயற்கைச் சக்திகளை நடத்துகிற ஈசுவரனின் அதிகாரிகள்). உடனே ருதுக்கள் மாறுகின்றன. மழை சரியாகப் பெய்வதில்லை. பெய்தாலும் காலம் தவறி, இடம் தவறி, அளவு தவறிப் பெய்யும். பருவக் காற்று முறைப்படி வீசுவதில்லை. வியாதிக் கிருமிகள் அதிகமாகின்றன. பயிர் பச்சைகளின் செழிப்புப் போகிறது. உணவுப் பதார்த்தங்களில் துர்பிக்ஷம், கிடைக்கிற கொஞ்சத்திலும் தோஷங்கள், கெட்ட காற்று, வியாதி இவற்றால் தேசம் பாழாகிறது.

இம்மாதிரி உலகத்துக்கு ஏற்படும் துர்பிக்ஷத்திலிருந்து நம்முடைய தப்பையே புரிந்துகொண்டு திருந்தப் பிரயாசை எடுத்தோமாயின், அன்னபூர்ணியே அன்னபிக்ஷை, ஞான பிக்ஷை எல்லாம் போடுவாள். அவள் சரீரமே ஞானமயமானது. ‘அ’விலிருந்து ‘க்ஷ’வரையிலான எல்லா அட்சரங்களுமே உருவான மந்திர மாத்ருகா ரூபிணி அவள் என்கிறார் ஆசாரியாள்.

‘ஆதி க்ஷாந்த ஸமஸ்த வர்ணனகரீ.’

இப்படிப்பட்ட சரீரம் படைத்தவளாதலால் நம் சரீரத்தை மட்டுமின்றி அறிவையும் வளர்க்கிற பிக்ஷையைப் போட்டு ஞானம் தருவாள்.

அது எப்படிப்பட்ட ஞானம் என்பதைத்தான் ஆச்சார்யாள், அன்னபூர்ணி ஸ்துதியின் கடைசியில் சொல்கிறார். அந்த நிலையில் பரமேசுவரனே தகப்பனாகவும், அம்பாளே தாயாராகவும் தெரிவார்கள். உடனே சகல ஜீவராசிகளுக்கும் சகோதரர்களாகி விடுவார்கள். மூவுலகமும் சொந்த வீடாகிவிடும். இது இப்போது நிறையப் பேசப்படுகிற தேச ஐக்கியப்பாட்டைவிட எத்தனையோ படி மேலே! சர்வதேச ஐக்கியப்பாட்டுக்கும் மேலே! மூன்றுலக ஐக்கியப்பாடு. பக்தி இருந்தால், பராசக்தி ஒருத்தி இருக்கிறாள் என்ற பயமும் பக்தியும் இருந்துவிட்டால், எல்லோரும் அவள் குழந்தைகள்தான் என்கிற சகோதர பாவம் தானாகவே வந்துவிடும். இதற்குப் பிரசங்கம் வேண்டாம், திட்டம் வேண்டாம், பிரசாரம் வேண்டாம்.

அநாதி காலமாக இப்படித்தான் பிரத்தியக்ஷத்தில் ஐக்கியம் இருந்திருக்கிறது. ஸ்வாமிக்காகத் தெற்கத்திக்காரன் காசிக்குப் போனான். ஸ்வாமிக்காக வடக்கத்திக்காரன் ராமேசுவரத்துக்கு வந்தான். ஐக்கியப்பாடு (Integration) என்கிற பேச்சு இல்லாமலே, ‘சகோதர சகோதரிகளே’ என்ற பிரசங்கம் இல்லாமலே, மத உணர்ச்சியால் ஐக்கியமாக, ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளாக இருந்து வந்தோம். இதோடுகூட அறிவாளிகளின் மட்டத்திலோ சகல சாஸ்திரங்களுக்கும் பொது பாஷையாக இருந்த ஸம்ஸ்கிருதம் தேசத்தின் நாலு கோடிகளையும் ஒன்றாகச் சேர்த்து வைத்திருந்தது. இப்போது ‘ஸெக்யுலர்’ நாகரிகத்தில் மதத்தை விட்டாயிற்று. ஸம்ஸ்கிருதத்தையும் ஒரு மாதிரி தீர்த்துக் கட்டிவிட சகல யத்தனங்களும் நடக்கின்றன – நான் இங்கேயுள்ள நம்மவர்களை மட்டும் சொல்லவில்லை. ஹிந்திக்காரர்களும் இந்த கைங்கரியத்தில் நன்றாகவே காரிய ரீதியில் செய்து வருகிறார்கள். இடைக்காலத்தில் ஒரு பொது இணைப்பாக (Link) வந்த இங்கிலீஷையும் விரட்டிவிடப் பார்க்கிறார்கள்.

பாஷை விஷயம்கூட இரண்டாம் பட்சம்தான். பக்தியை வளர்த்துவிட்டால் போதும். அப்புறம் என் மாகாணம், என் ஜாதி, என் பாஷை என்று நமக்குள்ளேயே சண்டைகள் ஒரு காலும் வராது. ஐக்கியப் பிரசங்கம் அதிகமான இப்போதுதான் நமக்குள்ளேயே ஒரு சீமைக்காரன் இன்னொரு சீமைக்காரனுக்கு தண்ணீர் தர மாட்டேன், தானியம் தரமாட்டேன் என்று பிரிந்து பிரிந்து நிற்கிறான். மாகாணத்துக்கு மாகாணம் எல்லைச் சண்டை வந்திருக்கிறது. பாஷையின் பேரால், ஜாதியின் பேரால் ஏற்கெனவே கொடுமை நடந்ததாக இப்போது கிளப்பி விட்டிருக்கிற பிற்பாடுதான் வாஸ்தவத்தில் பாஷைச்சண்டை, ஜாதிச்சண்டை எல்லாம் வந்திருக்கின்றன. இத்தனைக்கும் மூலக்காரணம், மத உணர்ச்சி, பக்தி போனதுதான். ஜனங்கள் எல்லோரையும் ஒன்றாகக் கட்டிப் போட்ட மதமும் பக்தியும் போனதும் சமூகத்திலேயே கட்டுவிட்டுப் போய்விட்டது. எனவே இப்போது சர்வரோக நிவாரணியும் பக்திதான். உண்மையான ஈசுவர பக்தியானது, அவன் குழந்தைகளான சகலரிடமும் அன்பாகத்தான் பரணமிக்கும். அப்புறம் பரஸ்பர சகாயத்தைத்தவிர வேறெதற்கும் இடமே இராது. அன்பே சிவம் என்கிறார் திருமூலர். அதுவே அறிவு. ‘அறிவான தெய்வமே’ என்றார் தாயுமானவர். இந்த அன்பையும் அறிவையும் – அன்பேயான அறிவை – அன்னபூரணி நமக்கெல்லாம் பிக்ஷை போடப் பிரார்த்திப்போம். ஆதி ஆசார்யாள் செய்த பிரார்த்தனையும் இதுதான்.

அன்னபூர்ணே ஸதாபூர்ணே, சங்கர ப்ராண வல்லபே |

ஞானவைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி ||

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is சிவத்தின் சக்தி ; நாராயண ஸஹோதரி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  அம்மா
Next