அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன்? : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

‘நாம் இதைச் சாதித்தோம், அதைச் சாதித்தோம்’ என்று அகம்பாவப்பட கொஞ்சம்கூட நியாயம் இல்லை. நாம் எதையும் சாதிப்பதற்கான புத்தியோ, தேக பலமோ எங்கிருந்து வந்தது? இந்தப் பிரபஞ்ச காரியங்கள் அனைத்தையும் செய்கிற ஒரு மஹா சக்தியிடமிருந்தே நம்முடைய, சக்தி எல்லாம் வந்திருக்கிறது. அது இல்லாவிட்டால் நம்மால் ஒரு சுவாசம்கூட விடமுடியுமா? ஒருநாள், இத்தனை சாதித்ததாக எண்ணிக் கர்வப்படுகிற நம்மைவிட்டுச் சுவாசம் போய் விடுகிறது. அதைப் பிடித்து வைத்துக் கொள்கிற சாமர்த்தியம் நமக்குக் கொஞ்சம்கூட இல்லை. அப்போது நம் சக்தி எல்லாமும் சொப்பனம் மாதிரிப் போய்விடுகிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்கூட, சக்தி சமுத்திரமாக இருக்கப்பட்ட அம்பாளின் ஒரு சிறு துளி அநுக்கிரகத்திலேயே நடக்கிற காரியங்களை, நம்முடையதாக நினைத்து அகம்பாவப்படுவது அசட்டுத்தனம்தான் என்று தெரியும். எத்தனைக்கெத்தனை இதை அநுபவத்தில் தெரிந்துகொண்டு அம்பாளுக்கு முன் ஒரு துரும்பு மாதிரி அடங்கிக் கிடக்கிறோமோ அத்தனைக்கத்தனை அவள் அநுக்கிரஹமும் அதிகம் கிடைக்கும்.

அவதார புருஷர்களாக வந்தவர்களும் இந்த அடக்கத்தை நமக்கெல்லாம் போதிப்பதற்காக ரொம்பவும் விநய சம்பத்தோடு வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். ராமசந்திரமூர்த்தி இப்படித்தான் தர்மத்துக்கும், சத்தியத்துக்கும், சாஸ்திரத்துக்கும் அடங்கி மநுஷ்யன் மாதிரியே நடந்து காட்டினார். அவருடைய விநயத்தை நினைக்கிறபோது எனக்குத் தோன்றுகிற ஓர் எண்ணத்தைச் சொன்னால் உங்களுக்கு விசித்திரமாக இருக்கும். எல்லோரும் ராமர் பிறந்த காலத்தில் நாம் பிறக்கவில்லையே என்று வருத்தப்படுவார்கள் அல்லவா? எனக்கோ நான் அப்படிப் பிறக்காமல் போனதே நல்லதுதான் என்று தோன்றுகிறது. ஏன் தெரியுமா? ராமர் தாம் ஒரு க்ஷத்திரியர் என்பதால் அடக்கத்தோடு வேத வித்துக்களையும், ரிஷிகளையும் ஆசாரியர்களையும் விழுந்து விழுந்து நமஸ்கரித்தார். அவர் காலத்தில் ஒரு மடாதிபதியாக இருந்தால், அவர் வந்து நமஸ்கரிக்கும் படியாக ஆகிவிடும். அது எத்தனை தர்மசங்கடமாயிருக்கும்! இப்போதோ அவரை நான் நமஸ்காரம் செய்து சந்தோஷப்பட முடிகிறது.

எதற்குச் சொல்கிறேன் என்றால், சாக்ஷாத் நாராயணனான ராமசந்திரமூர்த்தி விநயமே வடிவமாக இருந்தார். அவதாரம் என்பதால் ஜனங்களுக்கு எட்டாத கொம்பிலே இருக்கவேண்டும் என்றில்லாமல் மநுஷ்யராகவே நடித்தார். பொது ஜனங்களுக்கு இருக்கிற துக்கம் கஷ்டம் எல்லாம் கூடத் தமக்கு இருக்கிற மாதிரி நடித்தார். சீதையைப் பிரிந்ததற்காக அழுதார்; லக்ஷ்மணன் மூர்ச்சித்த போது புலம்பினார். சமுத்திர ராஜனிடம் ரௌத்ராகாரமாகக் கோபம் கொண்டார். ஜனங்களுக்கு, ‘இவரும் தங்கள் மாதிரி ஒருத்தர்’ என்று பிடிமானம் உண்டாவதற்கே அவதார புருஷர்களுக்கு கோபம், பயம், துக்கம் எல்லாம் வந்த மாதிரி ஓரொரு சந்தர்ப்பங்களில் காட்டிக் கொள்வார்கள். கைகால் ஆடுகிற மாதிரி, மனசும் அதனுடைய சாதாரண சுபாவப்படி கொஞ்சம் ஆடிவிட்டுப் போகட்டுமே என்று விட்டுவிடுவார்கள். ஆனால் உள்ளூற இவர்கள் இந்த உணர்ச்சி பேதங்களால் பாதிக்கப்படாமல் சாந்தமாகவே இருப்பார்கள். உள்ளூறத் தங்கள் ஈசுவரத்தை உணர்ந்தபோதிலும் வெளியே மநுஷ்யர் போல இருப்பார்கள். மற்றவர்களுக்கு வழிகாட்டுவதற்காக அடக்கமாக இருப்பார்கள். ராமரே அடக்கமானவர் என்றால், புத்தி, தேகபலம் எல்லாவற்றிலுமாக சக்திமானாக இருந்த ஆஞ்சநேயரே அடங்கி அடங்கி இந்த ராமனுக்கும் தாஸனாக இருந்து கொண்டே அசாத்தியத்தை எல்லாம் லகுவாக சாதித்தார்.

இவர்களைப் போலவேதான் நம் ஆதிசங்கர பகவத் பாதாளும். அவர்களைக் காட்டிலும் ஒரு பெரிய அவதாரம் இதுவரைக்கும் ஆவிர்பவித்தது உண்டா என்று தோன்றுகிறது. பரமேசுவராவதாரமான ஆசார்யாள், சொற்ப காலமே இந்த பூமியில் வாழ்ந்த போதிலும், லோகம் முழுக்கச் சேர்ந்தாலும், செய்ய முடியாத காரியங்களைச் சாதித்துவிட்டார். ஆசேது ஹிமாசலம் சஞ்சாரம் பண்ணித் தனியொரு மநுஷ்யராக இருந்துகொண்டு வைதிக மதத்தைப் புனர் உத்தாரணம் பண்ணினார். அத்வைத ஸ்தாபனம், ஷண்மத ஸ்தாபனம் எல்லாம் பண்ணினார். ஞானியாக, பக்தராக, கவியாக, மகாபுத்திமானாக, ஏகப்பட்ட காரியம் சாதிக்கிற சக்திமானாக, பரம கருணாமூர்த்தியாக – இப்படி எல்லாமாகவும் இருந்திருக்கிறார். அவருடைய பாதபங்கஜத்தில் சகல ஞானிகளின் சிரசுகளும் வண்டுகள் மாதிரி மொய்த்துக்கொண்டு கிடந்தன என்று கம்போடியா தேசத்தில் உள்ள எண்ணூறு வருஷங்களுக்கு முற்பட்ட ஒரு கல்வெட்டு அழகான ஸம்ஸ்கிருதத்தில் சொல்கிறது.

நிச்சேஷ மூர்த்தாலி மாலா லீடாங்க்ரி பங்கஜாத்

“பகவான்” என்றே அவரை அக்கல்வெட்டு சொல்கிறது. அப்படிப்பட்டவர் அம்பாளிடம் எத்தனை அடக்கத்துடன் பக்தி செலுத்தினார் என்பது ஸெளந்தர்ய லஹரியின் கடைசி ஸ்லோகத்திலிருந்து தெரிகிறது.

‘ஸெளந்தர்ய லஹரி’ போல் ஒரு கிரந்தத்தைச் செய்கிறவருக்கு எத்தனை அஹம்பாவம் வேண்டுமானாலும் ஏற்படுவதற்கு நியாயமுண்டு. பூலோகம் ஏற்பட்ட நாளாக இதற்கு முந்தியோ, பிந்தியோ இவ்வளவு பூரணமான ஸெளந்தர்யம் உள்ள வாக்கு தோன்றியதும் இல்லை. இனி தோன்றப்போவதுமில்லை என்று சொல்லும்படி, எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத அழகு வாய்ந்ததாக இருப்பது ‘ஸெளந்தர்ய லஹரி’. இப்படிப்பட்ட கிரந்தத்தைச் செய்த நம் ஆசாரியாளுக்கோ தாம் அதை பண்ணினோம் என்ற அகங்காரம் எள்ளளவும் இல்லை. ஸ்தோத்திரத்தைப் பூர்த்தி செய்து அம்பாளின் சரண கமலத்தில் அர்ப்பணம் பண்ணுகிற நூறாவது சுலோகத்தில் மிகவும் விநயமாகச் சொல்கிறார். (ப்ரதீப ஜ்வாலாபி: என்று தொடங்கும் ஸ்லோகம்)

அம்மா, வாக்கு ஸ்வரூபிணியான உன்னை வாக்கினால் துதிக்கிறேனே, இது எப்படி இருக்கிறது? சூரியனுக்கு கர்ப்பூர ஹாரத்தி காட்டுகிற மாதிரித்தான் இருக்கிறது” என்று ஆரம்பிக்கிறார். சூரிய தேஜஸ் எங்கே? கர்ப்பூரத்தின் அற்ப ஒளி எங்கே! சூரியனால்தான் கர்ப்பூரத்துக்கு எரிகிற சக்தியே உண்டாகிறது. நாலு நாள் வெயில் அடிக்காவிட்டால் கர்ப்பூரம் லேசில் பிடித்துக் கொள்வதில்லை. ஸங்க்ராந்தியன்று சூரிய பூஜை செய்து, அந்த தேஜோமயத்துக்குக் கர்ப்பூரம் காட்டுகிறோமே. அதனால் சூரியனையா விளக்கிக் காட்டுகிறோம்? சூரிய ஒளியில் கர்ப்பூரத்தின் ஸ்வாபமான பிரகாசம்கூடத் தெரியாமல் அது மங்கிப்போவதைத்தான் பார்க்கிறோம். அம்பாளைத் தாம் வாக்கால் வர்ணிக்கப் பார்த்தது அப்படிப்பட்ட காரியம்தான் என்கிறார் ஸ்ரீ ஆசார்யாள்.

இன்னோர் உதாரணம் சொல்கிறார்: “சந்திர காந்தக்கல்லானது சந்திரனுக்கு அர்க்கிய ஜலம் விடுகிற மாதிரி உன்னை இந்த வாக்கால் துதிக்கிறேன்” என்கிறார். சந்திர காந்தக்கல் என்பது பூர்ணிமை சந்திரன் உதிக்கிற சமயத்தில் அந்த நிலவை உள்ளே வாங்கிக்கொண்டு ஜலமாகக் கக்கும் என்பார்கள். வாஸ்தவத்தில் இப்படி ஒன்று உண்டோ இல்லையோ கவிகள் சம்பிரதாயமாக (poetic tradition) இதைப் பற்றிச் சொல்லி வருகிறார்கள். இப்படிப்பட்ட சந்திரகாந்தக் கல் சந்திரனைப் பூஜை செய்கிறேன் என்று ஆரம்பித்து, பதினாறு உபசாரங்களில் ஒன்றாக ‘அர்க்கியம் சமர்ப்பயாமி’ என்று நீர் வார்க்கிறபோது, நிலவின் சக்தியிலேயே பிறந்த ஜலத்தை அர்க்கியமாக வடித்தால் எப்படி இருக்கும்? அம்பாளின் அநுக்கிரகமே தமக்குள் பிரவேசித்து இந்த வாக்கை வடித்திருக்கிறது என்று ஆசார்யாள் இங்கே சொல்லாமல் சொல்கிறார்.

முன்றாவதாக இன்னொரு திருஷ்டாந்தம்.

“சமுத்திரத்துக்கு அதன் தீர்த்தத்தையே எடுத்து ஸ்நானம் செய்விக்கிற மாதிரி, உன்னை இந்த ஸ்துதியால் புகழ்கிறேன்” என்கிறார். ராமேசுவரத்திற்குப் போனால் சேதுவில் சமுத்திர பூஜை செய்வார்கள். அப்போது பூஜா அங்கமாக சமுத்திரத்திற்கு அபிஷேகம் பண்ணுவார்கள் – அந்தப் பெரிய சமுத்திரத்திலிருந்தே துளிபோல எடுத்து, அதற்கே ஸ்நானம் செய்வார்கள். வாக் சமுத்திரமாக இருக்கிற அம்பிகைக்கு அதிலிருந்தே கொஞ்சத்தை எடுத்து, துதி செய்வதாக ஆசார்யாள் சொல்கிறார். அந்த ஜலம் பூஜை செய்கிறவருக்கா சொந்தம்? சமுத்திரத்துக்கே சொந்தமானதை எடுத்து அதற்கே மீண்டும் தருகிறாராம்!

அவள் கொடுத்த வாக்காலேயே அவளைத் துதிக்கிறோமே ஒழிய, இதில் தாமாகச் செய்தது எதுவுமே இல்லை என்று அடக்கத்துடன் சாக்ஷாத் ஈசுவராவதாரமான ஆசார்யாள் சொல்கிறார்.

‘சந்திரன் இல்லாவிடில் எப்படி சந்திர காந்தக் கல் ஜலம் வடிக்காதோ அப்படி அவளருளின்றி இந்த வாக்கில்லை. பெரிய சமுத்திரத்திலிருந்து கையளவு ஜலம் எடுக்கிற மாதிரி வாக்கு சாகரத்திலிருந்தே இந்த வாக்கை எடுத்திருக்கிறோம். இதனால் அவள் மகிமையை விளக்கியதாக நினைப்பது, கர்ப்பூரத்தால் சூரியனைக் காட்டிக் கொடுப்பதாக எண்ணுகிற பரிஹாஸத்துக்குரிய செயல்தான்’ என்பதெல்லாம் சுலோகத்தின் தாத்பரியம்.

அவதார புருஷர்களும் அம்பாளிடம் இப்படி அடங்கிப் பேசுகிறார்கள். அப்படி இருக்க நமக்கு எதைப் பற்றியும் அகங்காரம் கொள்ள ஏது நியாயம்? நாம் நன்றாக எழுதுகிறோம், பேசுகிறோம், பாடுகிறோம், வேறு ஏதோ காரியம் செய்கிறோம் என்று உலகம் புகழ் மாலை போடுகிறது. அதே சமயத்தில் நமக்குத் தலைகனம் ஏறத்தான் தொடங்கும். அப்போது நமக்குச் சக்தி உண்டா என்று யோசிக்க வேண்டும். எந்த இடத்திலிருந்து நம் சக்தி வந்ததோ, அந்த அம்பாள் இருக்க, புகழுக்குப் பாத்திரராகி அகம்பாவப்பட நமக்குக் கொஞ்சம்கூட உரிமையில்லை என்று உணர வேண்டும். வருகிற பெருமையை எல்லாம் அவற்றுக்குறிய பராசக்தியின் பாதாரவிந்தங்களிலேயே அர்ப்பணம் செய்துவிட வேண்டும். பெருமைப் பூரிப்பில் இருப்பதைவிட, இப்படி அர்ப்பணம் பண்ணிப் பாரம் இல்லாமல் லேசாக ஆவதுதான் நமக்கே பரம சௌக்கியமாக இருக்கும். நமக்கு அகம்பாவமே இல்லை என்கிற எண்ணம் வந்து அதில் ஒரு பூரிப்பு உண்டாகிவிட்டால், அதுவும்கூட அகம்பாவம்தான். எனவே அகம்பாவம் தலை தூக்க இடமே தராமல் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எத்தனை கண்குத்திப் பாம்பாக இருந்தாலும், துளி இடுக்குக் கிடைத்தால்கூட ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கே தெரியாமல் அஹம்பாவம் உள்ளே புகுந்து விடும். இது போகவும் அவள் அருள்தான் வழி. அவளையே வேண்டி இப்படியாக நம் புகழையெல்லாம் அவளுக்கு அர்ப்பணம் பண்ணிவிட்டால், நமக்கு ஒரு குறைவுமில்லாமல் மேலும் மேலும் அவள் அநுக்கிரஹம் கிடைக்கும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is பதிபக்தியும் குருபக்தியும் வழங்கும் தேவி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  ஆசாரியாள் காட்டும் அம்பாள்
Next