தெய்வத்தின் குரல் (முதல் பாகம்) தேவதாமூர்த்திகள் அவதார புருஷர்கள் அம்பாளை உபாஸிப்பதன் பலன் அம்பாளை உபாஸிப்பதே ஜன்மா எடுத்ததின் பெரிய பலன் அன்பு மயமான

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

தேவதாமூர்த்திகள் அவதார புருஷர்கள்

அம்பாளை உபாஸிப்பதன் பலன்

அம்பாளை உபாஸிப்பதே ஜன்மா எடுத்ததின் பெரிய பலன். அன்பு மயமான அம்பிகையைத் தியானிப்பதைவிடப் பேரானந்தம் எதுவும் இல்லை. பெரிய சித்தாந்தங்கள் மதங்கள் எல்லாம் எத்தனையோ இருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் முடிவாகக் கிடைக்கிற பெரிய பலன் அம்பாளைத் தியானிப்பதால் லகுவாகக் கிட்டிவிடுகிறது. "அம்மா! நான் எத்தனையோ தோஷம் உள்ளவன். என்றாலும் உன்னை நம்பி விட்டேன். நீ கடாக்ஷித்துவிட்டால் எத்தனை தோஷமானாலும் தூர ஓடிவிடும். நான் எப்படி இருக்க வேண்டுமோ அந்த மாதிரியாக இருக்கும் படியாக நீயே பண்ணம்மா" என்று அவளிடம் நம்மை ஓயாமல் ஒப்புக்கொடுத்துக் கொண்டிருந்தாலே போதும் - அதைவிடப் பெரிய மதமோ, சித்தாந்தமோ, அநுஷ்டானமோ இல்லை. எல்லாம் அவள் சித்தப்படி ஆகட்டும் என்று விட்டு விட்டு, நாம் பஞ்சு மாதிரி மனசில் எந்த கனமும் இல்லாமல் லேசாகிவிட்டால் அதைவிட பேரானந்தம் இல்லை.

அம்பாளை உபாஸிப்பதற்கு வேறு பலன் எதுவும் வேண்டாம். அதுவே அதர்குப் பலன். ஆனாலும், இந்த லோகத்தின் மாயையில் நாம் எல்லோரும் ஒன்றாகச் சிக்கிக் கொண்டிருப்பதால், 'நான்' என்பதைவிட்டு, அவளை அவளுக்காகவே உபாஸிக்கிற ஆனந்தம் நமக்கு ஆரம்பதசையில் புரியமாட்டேன் என்கிறது. நமக்கு என்று எதேதையோ எதிர்பார்த்து, அதை எல்லாம் அவள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்காக அவளை உபாஸிக்கத் தொடங்குகிறோம். இந்த நிலையில் அவளும்கூட நம்மை விட்டுப்பிடிக்கிற மாதிரி, நம் பிரார்த்தனைகளை நிறை வேற்றி வைக்கிறாள். தர்மத்துக்கு விரோதமாக இல்லாத வரையில் நாம் செய்கிற பிரார்த்தனைக்குச் செவிசாய்க்கிறாள்.

மநுஷ்ய ஸ்வபாவம் ஆசார்யாளுக்கு நன்றாகத் தெரியும். அம்பாள் உபாஸனையால் ஜனன நிவிருத்தி கிடைக்கும், மோக்ஷம் கிடைக்கும் என்று சொன்னால் எடுத்த எடுப்பில் யாறும் அதில் ஈடுபடமாட்டார்கள் என்பது ஆச்சார்யாளுக்குத் தெரியும். அதனால் அம்பாளை உபாஸிப்பதன் பலன் இன்னின்ன என்று 'ஸெளந்தரிய லஹரி'யில் சொல்கிறபோது, முதலில் படிப்பு, செல்வம், அழகு முதலியன கிடைக்கும் என்கிறார்.

'ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா'என்று ஆரம்பிக்கிற சுலோகத்தில் அம்பிகையே ஆராதிப்பதால் கிடைக்கிற பலன்களை வரிசையாகச் சொல்கிறார்.

இதில் விசேஷம் என்னவென்றால், சாதாரணமாக ஒவ்வொரு ஸ்துதியின் முடிவிலும் கவி, 'இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்வதால் இப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்று சொல்வது ஒரு மரபு - இதை 'பலச்ருதி' என்பார்கள். அதாவது அந்த ஸ்தோத்திரத்தின் சக்தியாலேயே அந்தப் பலன்கள் கிடைக்கும் என்று தொனிக்கிற மாதிரி இருக்கும். 'இதைப் பாராயணம் செய்வதால்' 'இதையே படிப்பதால்' என்று திருப்பத் திருப்ப ஸ்தோத்திர கர்த்தா நூலைச் சிலாகித்துச் சொல்வர். ஆனால் துளிக்கூட அகம்பாவமேமில்லாத ஆச்சாரியாளோ, 'ஸெளந்தரிய லஹரி பாராயணத்துக்கு இது பலன்' என்று சொல்லாமல், "அம்மா உன்னைப் பூஜிப்பவனுக்கு நீ இப்படியாகப்பட்ட அநுக்கிரஹங்களைச் செய்கிறாய்" என்றே சொல்கிறார்.

முதல் பலனாக ஸரஸ்வதீ கடாக்ஷம் கிடைக்கும் என்கிறார். அதாவது நல்ல கல்வி, உண்மையான கல்வியின் பயனாக நல்ல குணம் கிடைக்கும் என்கிறார். பிறகு லக்ஷ்மீ கடாக்ஷம் கிடைக்கும் என்கிறார். அதாவது நிறைய சம்பத்து கிடைக்கும் என்கிறார்.

பொதுவாக யாரும் பணத்தை விரும்புகிற மாதிரி குணத்தை விரும்பி ப்ரார்த்திருப்பதில்லை! ஆனால் குணம் இல்லாத இடத்தில் பணம் இருந்து என்ன பிரயோஜனம்? நாம் பணத்தை விரும்பியே உபாஸித்தாலும்கூட, அம்பாளே, 'இந்தப் பிள்ளை அசட்டுத் தனமாக பிரார்த்தனை பண்ணுகிறது; விவேகம் ஏற்படுவதற்கு முன்பு அர்த்தத்தைக் (பொருளை, பணத்தைக்) கொடுத்தால் அது அனர்த்தமே ஆகும். எவ்வளவுக்கெவ்வளவு பணம் தருகிறோமோ அத்தனைக்கத்தனை பாபத்தையே விலைகொடுத்து வாங்கிக் கொள்வான். எனவே பணத்தை எப்படி தர்ம மார்க்கத்தில் பிரயோஜனப்படுத்துவது என்கிற விவேகத்தை முதலில் தந்து, பிறகு தனத்தைத் தரலாம்' என்று எண்ணுகிறாள். குழந்தை பக்ஷணம் கேட்டால் அதைச் செய்துகொடுக்கிற தாயார் பிற்பாடு அதனால் கெடுதல் ஏற்படாமல் விளக்கெண்ணெய் தருகிறாள். ஸரஸ்வதீ கடாக்ஷத்தைத் தந்து பிறகு லக்ஷ்மீ கடாக்ஷத்தைத் தருகிறாள். தைத்திரியோபநிஷத்திலும் இப்படியேதான், முதலில், "மேதை (நல்ல புத்தி) யைக் கொடு" என்று சொல்லி, அப்புறம் "ஸ்ரீயை (செல்வதை) க் கொடு" என்று சொல்லியிருக்கிறது. இதற்கு ஸ்ரீ ஆச்சாரியாள் பாஷ்யம் செய்யும்போது, "மேதை இல்லாதவனுக்கு ஸ்ரீயைத் தந்தால் அனர்த்தம்தான் உண்டாகும்" என்கிறார். 'பஜகோவிந்த'த்திலும் 'அர்த்தம் அனர்த்தம்' என்கிறார்.

அம்பாளை உபாஸிப்பவர்கள் தனியாக லக்ஷ்மி, ஸரஸ்வதி இருவரையும் உபாஸிக்க வேண்டும் என்பதில்லை. அவர்கள் இரண்டு பேரும் இவளுக்கு இரண்டு பக்கத்திலும் சாமரம் வீசிக்கொண்டிருக்கிறார்கள். இப்படியே லலிதா ஸஹஸ்ரநாமத்தில் சொல்லியிருக்கிறது. (ஸ சாமர ரமாவாணீ ஸவ்ய தக்ஷிண ஸேவிதா). சகல சக்திக்கும் ஆதாரமான பராசக்தியை உபாஸித்தால் இவளே ஸரஸ்வதியையும், லக்ஷ்மியையும் கடாக்ஷிக்கச் செய்கிறாள். காமாக்ஷிக்கு ஸரஸ்வதியும் லக்ஷ்மியும் இரண்டு கண்கள். 'க' என்று பிரம்மாவுக்குப் பெயர் - 'சிவ' பத்தினி சிவா என்பதுபோல் 'க'வின் பத்தினியான ஸரஸ்வதிதான் 'கா'. 'மா' என்றால் மஹாலக்ஷ்மி. 'மா'- தவன் என்றால் லக்ஷ்மிபதி. 'கா'வையும் 'மா'வையும் தன் அக்ஷங்களாக (கண்களாகக்) கொண்டவள் எவளோ அவளே "காமாக்ஷி".

ஸரஸ்வதி கடாக்ஷம், லக்ஷ்மி கடாக்ஷம் இரண்டும் அம்பாள் அநுக்கிரஹத்தால் கிடைக்கும் என்றேன். இந்த இரண்டையும் பற்றி மநுஷ்ய சுபாவம் ரொம்பவும் விசித்திரமாக இருக்கிறது. எல்லோருக்கும் தங்களுக்கு ரொம்பவும் ஸரஸ்வதி கடாக்ஷம், அதாவது புத்திசாலித்தனம் இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் - தங்களை மஹா புத்திசாலிகளாகலவே வெளியில் காட்டிக் கொள்ளப் பிரியப்படுகிறார்கள். ஆனால் நல்ல புத்தி வேண்டும் என்று அதற்காகத் தாபத்தோடு யாரும் பிரார்த்திப்பதாகத் தெரியவில்லை. பொதுவாகப் புத்திசாலித்தனம் என்பது சாமர்த்தியம் என்றுதான் நினைக்கப்படுகிறது. ஞானமும் விவேகமும்தான் உண்மையான புத்திமானின் லக்ஷணங்கள். இவற்றுக்கு யாரும் ஆசைப்படுவதில்லை. நமக்கு நிறைய சாமர்த்தியமும் சாதூர்யமும் இருக்கின்றன. அதாவது 'யாரையும் ஏமாற்றிவிடலாம்' என்று அவரவரும் சந்தோஷப்பட்டுக்கொண்டு, இந்த 'புத்திசாலித்தன'த்தோடு நின்றுவிடுகிறோம். ஆனால் லக்ஷ்மி கடாக்ஷம் மட்டும் எவ்வளவு இருந்தாலும் நமக்குப் போதமாட்டேன் என்கிறது. மண்டுவாக இருந்தாலும்கூட தன்னைப் புத்திசாலியாகக் காட்டிக்கொள்வதற்கு நேர் மாறாக, நமக்கு எத்தனை சம்பத்து இருந்தாலும் அது வெளியில் தெரியக்கூடாது என்று ஏழை வேஷம்தான் போடுகிறோம். ஒருத்தனைப்பற்றி யாராவது 'எத்தனை புத்திசாலி' என்று பேசினால் சந்தோஷப்படுகிறான். ஆனால் ஒருத்தன் பாங்கில் லட்ச லட்சமாகப் பணம் போட்டிருக்கிறான் என்று யாராவது சொன்னால், அவனுக்குக் கோபம்தான் வருகிறது. தங்களுக்கு இருக்கிற செல்வம் போதாது என்று நினைப்பதால்தான் இவர்களுக்கு அதைப்பற்றிச் சொன்னாலே கோபம் வருகிறது. அதிருப்திதான் தரித்திரம். திருப்திதான் சம்பத்து. ஆகையால், நாம் நிஜமான புத்திசாலிகளானால் தரித்திரர்களாக இருந்தாலும்கூட, அப்படிச் சொல்லிக் கொள்ளாமல், மனஸால் நிறைந்து, திருப்தியால் பணக்காரர்களாக இருந்துகொண்டிருக்கலாம். தரித்திரம் என்று சொல்லிக் கொண்டால்தான் நமக்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? சொல்லிக்கொள்ளாமலேதான் பணக்காரரை விடத் திருப்தியாக இருப்போமே!

புத்தி, செல்வம் - இவற்றோடு ஒவ்வொருத்தருக்கும் அழகாக இருக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. தான் புத்திசாலி என்பதைப்போல, எல்லோரையும்விடத் தானே அழகு என்கிற எண்ணம் நம் ஒவ்வொருத்தருக்கும் இருக்கிறது. இதற்குத்தான் அலங்காரம் எல்லாம் பிரமாதமாகச் செய்துகொள்கிறோம். தினத்துக்குத் தினம் ஃபாஷன்கள் மாறிக்கொண்டே இருப்பதெல்லாம் நம் அழகைப் பிரகடணம் பண்ணிக் கொள்ளத்தான். பரம கருணாமூர்த்தியான அம்பாள், கேவலம் ரக்த - மாம்ஸ சம்பந்தமான இந்தச் சரீர அழகை விரும்புகிறவர்களுக்கு அதைக்கூடப் பூரணமாகத் கொடுத்து அநுக்கிரஹிக்கிறாள். "ஸரஸ்வத்யா லக்ஷம்யா" என்கிற சௌந்தரிய லஹரி சுலோகத்தில் ஆசாரியாள் இதையும் சொல்கிறார். "அம்பாளை உபாஸிக்கிறவனுக்கு பிரம்மாவவே அசூயைப்படுகிற அளவுக்கு ஸரஸ்வதியின் அநுக்கிரஹம் உண்டாகிவிடும். மகாவிஷ்ணு பொறாமைப் படுகிற அளவுக்கு மஹாலக்ஷ்மியின் அனுக்ரஹம் கிடைத்து விடும். இவனைப் பார்த்து "மன்மதன்தானோ?" என்று ரதியே சந்தேகப்படுகிற மாதிரி லாவண்யம் உண்டாகிவிடும்" என்கிறார்.

இத்தனையும் இருந்து தீர்காயுசு இல்லை என்றால் என்ன பிரயோஜனம்? அம்பாள் சிரஞ்ஜீவித்துவமும் தருவாள் என்கிறார்.

'இதற்குமேல் வேறென்ன வேண்டும்?' என்று தோன்றலாம். ஆனால், இதற்குமேல்தான் அம்பாளின் பரமாநுக்கிரஹத்தை தேடச் செய்யும் கேள்வியே பிறக்கும். 'இத்தனை பணம், அழகு, புத்தி எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு இத்தனை காலம் ஓட்டியாச்சு; இதிலெல்லாம் வாஸ்தவத்தில் என்ன மனநிறைவைக் கண்டோம்? இதையெல்லாம் வைத்துக்கொண்டு எப்போது பார்த்தாலும் சஞ்சலப்பட்டுக்கொண்டே, ஒன்றை விட்டால் இன்னொன்று என்று தாவிக்கொண்டே இருந்துவிட்டோம். நிரந்தர சௌக்கியத்தை, சாந்தத்தை இவை எதனாலும் பெற்றதாகத் தெரியவில்லையே! இதை எப்படிப் பெற்றுக்கொள்வது?' என்கிற கேள்வி பிறக்கும். நடுநடுவே நமக்கு இந்தக் கேள்வி தோன்றினாலும், அடுத்த க்ஷணமே மாயை நம்மை இழுத்துக் கொண்டு போகிறது. ஆனால் நாமாக இப்படி நினைக்காமல் அம்பாளை உபாஸிப்பதன் பலனாக, அவள் நம்மை இப்படி நினைக்கப் பண்ணுகிறபோது, அந்த நினைப்பு நாளுக்குநாள் மேலும் மேலும் தீவிரமாக ஆகும். 'பணம் வேணும், படிப்பு வேணும், அழகு வேண்டும், ஆயுசு வேண்டும்' என்பதெல்லாம் மேலும் மேலும் நம்மைப் பாசத்தில் கட்டிப் பிரம்மையில்தான் தள்ளிக் கொண்டிருந்தது என்கிற அறிவு உண்டாகும். பாசம் என்றால் கயிறு, பாசத்தில் கட்டப்படுவது பசு. கயிற்றைப் போட்டுத் தறியில் கட்டின பசு மாதிரி, ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் போக முடியாமல், அதற்குள் கிடக்கிற தாற்காலிக இன்பங்களையே மேய்ந்துக்கொண்டு, அசட்டுத் தனமாக 'இதுவே எல்லாம்' என்று திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தக் கட்டை அறுத்துக் கொள்ள வேண்டும். அப்புறம் பரம சுதந்திரம். இந்த இந்திரியங்களின் சின்ன சௌக்கியங்களுக்கு அப்புறம் அகண்டமான, சாசுவதமான ஆத்ம ஆனந்தம்! பாசம் போய், நாம் பசுவாகக் கட்டுப்பட்டுக் கிடந்த நிலையும் போய்விட்டால், அப்புறம் நாம் பரப்பிரம்மம்தான். பணம், புத்தி, ஆயுள், அழகு ஆகிய சிற்றின்பங்களுக்குத் தவித்த மனஸில் இவற்றின் கட்டுக்களே வேண்டாம் என்கிற வைராக்கியம் உண்டானால், அப்புறம் பேரின்ப மயமாவதற்கான ஸாதனைகளில் இறங்கி, முடிவில் அம்பாள் அருளால் பேரின்பமாகவே ஆகலாம். அதைவிடப் பெரிய பலன் வேறில்லை. முடிந்த முடிவாக அம்பாள், பக்தனை இந்தப் பரமானந்த ரஸத்தில் திளைத்துக் கொண்டிருக்குமாறு அநுக்கிரஹம் செய்கிறாள் என்று ஆசார்யாள் முடிக்கிறார்.