ஞானாம்பிகை : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

‘ஸ்ரீ வித்யா’ என்று தேவி உபாஸனையைச் சொல்கிறோம். ‘வித்யா’ என்றாலே ஞானம்தான். அவித்யை என்றால் அஞ்ஞானம், ஞானப்பால் தருகிற குருவான அம்மாவாக அம்பிகை இருக்கிறாள். இந்திராதி தேவர்களுக்கும் ஞானம் தந்தவள் அவளே என்று ஸாம வேதத்தைத் சேர்ந்த கேன உபநிஷதம் ஒரு கதை சொல்கிறது.

கதை இதுதான்:

ஒரு காலத்தில் தேவாசுர யுத்தத்தில் தேவர்கள் ஜயம் பெற்றார்கள். ‘பரமாத்மா தந்த சக்தியைக் கொண்டே யுத்தம் செய்தோம்; அவரது அநுக்கிரகத்தாலேயே வெற்றி பெற்றோம்’ என்பதை மறந்து, தேவர்கள் தங்களைத் தாமே மெச்சிக் கொண்டார்கள்.

தங்கள் சக்தியால் தாங்களே வெற்றியைச் சாதித்துவிட்டதாகச் கர்வப்பட்டார்கள். ‘இது ஏதடா, அசுரர்களை ஜயித்த இந்த தேவர்களுக்கே அசுர குணம் வந்துவிடும் போலிருக்கிறதே’ என்று பார்த்தார் பரமாத்மா.

அவர்கள் அப்படிக் கெட்டுப் போகாமல் ரக்ஷிப்பதற்காக அவர்களுடைய கண்ணுக்கெட்டுகிற தூரத்தில் அடிமுடி தெரியாத ஒரு ஜோதிஸ்வரூபமாய் நின்றார்.

‘இதென்ன யக்ஷ வடிவம்?’ என்று தேவர்கள் அதிசயித்தார்கள். நமக்குப் புரியாததை ‘யக்ஷிணி’ என்று இப்போதும் சொல்கிறோம் அல்லவா? அம்மாதிரி தேவர்கள் அதை ‘யக்ஷம்’ என்கிறார்கள். அதனிடம் அக்னியை அனுப்பினார்கள்.

அது என்ன என்று தெரிந்துகொண்டு வருவதற்காக அக்னியை அனுப்பினார்கள். அவன் அதை நெருங்கி “நீ யார்?” என்று கேட்பதற்கு முன்பே, அது இவனைப் பார்த்து “நீ யார்?” என்றது?.

“நான் அக்னியாக்கும். ‘ஜாத வேதஸ்’ என்கிற பெயரும் எனக்கு உண்டு” என்றான்.

“சரி, உனக்குள்ள சக்தி என்ன?” என்று யக்ஷம் கேட்டது.

“நான் எதையும் எரித்து பஸ்மீகரம் பண்ணிவிடுவேன்” என்றான் அக்னி.

“ஒஹோ! அப்படியானால் இதை எரி பார்க்கலாம்” என்று சொல்லி ஒரு துரும்பை எடுத்துப்போட்டது யக்ஷம்.

அக்னி தன் பூரண சக்தியையும் அந்தத் துரும்பின் மேல் பிரயோகித்தான்.

ஆனால் துரும்பு எரியவே இல்லை.

அக்னி வெட்கமடைந்து தேவர்களிடம் திரும்பி வந்து நடந்ததைச் சொன்னான்.

‘இதென்னடா! நாம் வெற்றி கொண்டாடும்போது இப்படி நம்மில் ரொம்ப சக்திமானான ஒருத்தனுக்கு – அக்னிக்கு – அபஜயம் வந்ததே’ என்று தேவர்கள் நினைத்தார்கள். யக்ஷம் இன்னதென்று தெரியாததே ஒரு தோல்விதான்; அப்புறம் இந்த அபஜயம் வேறு. அதன்பின் அவர்கள் வாயுவை யக்ஷத்திடம் அனுப்பினார்கள்.

முன்போலவே, “நீ யார்” என்று கேட்டது யக்ஷம்.

‘நான் வாயு’. ‘மாதரிச்வன்’ என்றும் பெயர் பெற்றவன். எதையும் புரட்டித் தூக்கிக்கொண்டு போகும் சக்தி வாய்ந்தவனாக்கும்’ என்றான் வாயு.

“சரி, இந்த சின்னத் துரும்பைத் தூக்கிப்பார்” என்றது யக்ஷம்.

வாயு பிரம்மப் பிரயத்தனம் செய்தும் அவனால் துரும்பை அசைக்க முடியில்லை.

வாயுவும் திரும்பி வந்தான்… “நீ யார்?” என்று யக்ஷத்தைக் கேட்பதற்கே வாயில்லாதவனாக.

‘நாம் அசுரரிடம் அடைந்த ஜயத்தைக் கொண்டாடும் வெற்றி விழாவை இப்படி இது அபஜயமாக்கிவிட்டதே’ என்று தேவர்கள் யோசித்தார்கள்.

இப்போது தேவராஜனுக்கே ஒருவித அடக்கம் உண்டாகிவிட்டது. தங்களைவிடப் பெரியதொரு சக்தி இருக்கிறது என்கிற அறிவு உண்டாயிற்று. அகம்பாவம் போய், ஒரு க்ஷணம் ஈசுவர பக்திகூட உண்டாகிவிட்டது.

நாம் ஏதோ சாதித்துவிட்டதாக அவ்வப்போது வெற்றிவிழாக் கொண்டாடுகிறோம். இப்போது நம் தேசத்தில் இது ரொம்ப ஜாஸ்தி. கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் அந்த வெற்றி எங்கே போச்சு என்று தெரிவதேயில்லை. வேறு யாரோ வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். அப்புறம் அவர்கள் கதையும் மாறிப்போகிறது. மாறாத ஜயம் ஆத்ம ஜயம்தான். அந்த ஜயமும் சரி. மற்ற லௌகிக வெற்றிகளும் சரி, பரதேவதையின் கிருபையாலேயே கிடைப்பவை.

இதைப் புரிந்துகொண்டு, தேவதைக்கெல்லாம் சக்கரவர்த்தியாக இருக்கப்பட்ட இந்திரன் யக்ஷத்தை விநயத்துடன் நெருங்கினவுடன், மகாகாருண்யம் பொருந்திய அது இவனுக்கு ஞான அநுக்கிரஹம் செய்வதற்காக திவ்விய ஸ்திரீ ரூபத்தில் நின்றது.

(யக்ஷம் நின்ற) ‘அந்த ஆகாசத்திலேயே மகத்தான சோபை பொருந்திய ஹைமவதியான உமாதேவி பிரகாசித்தாள்’ என்கிறது உபநிஷத்து.

உருக்கிய பொன்னைப் போன்ற பிரகாசத்தோடு, அதாவது ஞான ஒளியாக ஒளித்துக்கொண்டு நின்ற அம்பாளை இந்திரன் நமஸ்கரித்தான். “சற்று முன் இங்கு தோன்றிய யக்ஷ வடிவம் என்ன?” என்று கேட்டான்.

சாக்ஷாத் அம்பிகை அவனுக்கு ஆசாரிய ஸ்தானம் வகித்து ஞானோபதேசம் செய்தாள்;

“அப்பா, பிரம்மம்தான் அந்த யஷ வடிவம். இவ்வளவு பிரபஞ்சத்துக்கும், உனக்கும். சகல தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் காரணமாக, ஆதாரமாக இருப்பது அது ஒன்றுதான். அதன் அகண்டமான சக்திதான் எல்லா ஜீவராசிகளிடமும் கண்டம் கண்டமாக, துளித் துளி இருக்கிறது” என்று உபதேசித்தாள்.

முதலில் யக்ஷ வடிவமாக நின்று, தேவர்களை அவமானப்படுத்தினாள். அவமானப்படுத்தியது அகம்பாவத்தை அடக்குவதற்கே! அகம்பாவம் அடங்கினவுடன் பரமாநுக்கிரஹமாக ஞானோபதேசம் தந்தாள்.

தேவராஜன் உண்மையை இதுவென (இதம்) முதலில் கண்டுகொண்டதாலேயே (த்ர) அவனுக்கு ‘இந்திரன்’ என்று பெயர் உண்டாயிற்று. மற்ற தேவர்கள் பிரம்ம ஸ்வரூபத்தை பார்த்ததோடு சரி. இவன்தான் அதன் கருணாமூர்த்தமான அம்பாளைத் தரிசனம் செய்து, அவளிடமிருந்து பிரம்ம ஸ்வரூப ரஹசியத்தை உபதேசமாகப் பெற்றுக்கொண்டு வந்தவன்.

இந்த உபநிஷத்தில், ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்களின் பாஷ்யத்தில் பஹுசோபமானா – ‘மிகவும் சோபை பொருந்தியவள்’ என்பதற்கு அர்த்தம் செய்கிறபோது, ‘சோபை உள்ளவற்றுக்கெல்லாம் மேலான உத்கிருஷ்டமான சோபை ஞானம்தான் – வித்யைதான். அந்த வித்யா ரூபிணியே உமா. ஹைமவதியாகி ஹேம (பொன்) ஆபரணங்களை அணிந்தும், இந்தச் சோபையை வெளிப்படக் காட்டுகிறாள். எல்லாவற்றையும் அறிகிற அறிவான ஸர்வக்ஞ தத்துவமே பரமேசுவரன். அந்த அறிவோடு இரண்டறச் சேர்ந்திருக்கிற ஞான ஸ்வரூபிணியே அவள்’ என்கிறார்.

அறிகிறவன், அறியப்படுகிற பொருள், அறிவு எல்லாமே தானாக ஆகிய ஏக வஸ்துவான பிரம்மத்தின் சக்தி அவள். ‘சித்தமிசை குடிகொண்ட அறிவான செய்வமே’ என்று இந்த ஞான ஸ்வரூபத்தைத்தான் தாயுமான ஸ்வாமிகள் சொல்கிறார்.

அடி முடி தெரியாத யக்ஷ வடிவம் என்று சொன்னவுடன், இந்தக் கதைக்கும் அருணாசலத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக தோன்றும். இந்த உபநிஷக் கதை ஸ்ரீ காளஹஸ்தியுடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது.

நான் காளஹஸ்திக்கு போயிருந்தபோது, கிரிப்பிரதக்ஷிணம் செய்தேன். வழியில் ஒரு மலைமேல் ஏறி, அங்கு வனத்திலுள்ள சிவலிங்கத்தைத் தரிசனம் செய்துகொண்டேன். அந்த லிங்கம், ‘ஸஹஸ்ர லிங்கம்’ – அதாவது லிங்காகாரமான ஒரே சிலைக்குள் சின்னச் சின்னதாக ஆயிரம் லிங்கங்கள் வடித்திருக்கும். அந்த ஸஹஸ்ர லிங்க ஆலயத்தில் ‘யக்ஷ லிங்கம்’ என்று ஒன்றைச் சொல்கிறார்கள். ‘இந்திர லிங்கம்’ என்றும் ஒன்று இருக்கிறது. காளஹஸ்திப் பெரிய கோயிலில் இருக்கிற அம்பாளின் பெயரோ ஞானாம்பிகை அல்லது ஞானப்ரஸுனாம்பிகை. ப்ரஸுனம் என்றால் பூ, ஞானப்ரஸுனாம்பிகையை ஞானப் பூங்கோதை என்பார்கள். இதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால், கேன உபநிஷத்தில் சொல்லியிருக்கிற சம்பவம் – யக்ஷம் தோன்றினதும், பிறகு அம்பாள் ஆவிர்பவித்து இந்திரனுக்கு ஞானோபதேசம் செய்ததும் – இந்தக் காளஹஸ்தியில்தான் நடந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

அம்பாளை ஆராதிக்க நாமாகப் புது மார்க்கம் கண்டு பிடிக்க வேண்டியதில்லை. ஸ்ரீகாளஹஸ்தியைப்போல் தேவர்களும் பெரிய ரிஷிகளும் மகாத்மாக்களும் அவளை ஆராதித்த இடங்கள் இன்று மஹா க்ஷேத்திரங்களாக விளங்குகின்றன. அங்கே போய் நமஸ்கரித்துத் தியானம் செய்தால் போதும். அவளுடைய கடாக்ஷம் கிட்டிவிடும்.

புஷ்பமும் சுகந்தமும்போல், பாலும் சுவையும்போல், அக்னியும் பிரகாசமும்போல், அவள் பரமேசுவரனோடு பிரிக்க முடியாத ஞான சக்தி. இதேமாதிரி ஸ்ரீமந் நாராயணனோடும் பிரிக்க முடியாமல் சகோதர் பாவத்தில் இருக்கிறாள். அவள் துர்க்கையாக வந்து அசுரர்களை வதைத்தபோது வைஷ்ணவியாக இருக்கிறாள். ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியின் போதே யசோதையின் கர்ப்பத்திலிருந்து விஷ்ணு மாயையாக இந்த துர்க்கை அவதரித்தாள். துர்க்கையை சரத்கால நவராத்திரியில் பூஜிக்கிறோம். கெட்டதை வதைத்தவள் அவள். இந்த சம்ஹாரத்துக்கு பிறகு நல்லதை வளர்க்க வேண்டும். ஞானத்தை வளர்க்க வேண்டும். ஞானோபதேசம் செய்ய அம்பாள் ஆவிர்ப்பதையே வஸந்த காலத்தில் ஒரு நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். கிருஷ்ணனோடு துர்க்கை தோன்றின மாதிரி, ஸ்ரீராம நவமியின்போது ‘ஞானாம்பிகை’ தோன்றினாள். இந்த நவமி முடிய ஒன்பது நாட்கள் ‘வஸந்த நவராத்திரி’ எனப்படும். சண்டிகையாக உக்கிர ரூபத்தில் எந்தப் பராசக்தியை சரத்கால நவராத்திரியில் பூஜித்தோமோ, அவளையே இப்போது ஸெளம்ய ரூபத்தில் ஞானாம்பாளாக பூஜிக்க வேண்டும். சண்டிகையாகிக் கெட்டதை சிக்ஷித்தவளே ஞானாம்பிகையாகி நல்லதை உபதேசித்து ரக்ஷிக்கிறாள்.

உமா என்பது பிரணவ ஸ்வரூபம் முன்பே சொன்னேன். நாதமே அவளுக்கு சரீரம் மாதிரி. நம் சரீரம் எத்தனை அழகாக இருக்கிறது என்று நாம் அகம்பாவப் பட்டுக் கொண்டாலும், துளி மேலே கீறிவிட்டால்கூட உள்ளே பார்க்கச் சகிக்காமல் இருக்கிறது. எத்தனையோ கழிவடைகளை உள்ளே அடைத்து வைத்திருக்கிறோம். இதற்குள் எங்கே என்று சொல்லத் தெரியாமல் அறிவு என்கிற ஒரு மணி இருக்கிறது. அவளுடைய சரீரமோ நாதமயம், சப்த மயம், வாக்கு மயம் – ஐம்பத்தோர் அக்ஷரங்களுமே அவளுக்குச் சரீரமாக இருக்கிறது. அதில் முழுக்க முழுக்க அறிவே வியாபித்திருக்கிறது. அந்த அறிவைத்தான் ஞானாம்பிகை என்பது.

மாறிக்கொண்டும் அழிந்துகொண்டும் இருப்பவைகளைச் சத்தியமென்று நினைக்காமல், மாறாமல் சாசுவதமாக உள்ள ஒரே வஸ்துவை, அதற்கு வேறாக நான் என்று தனியாக ஒன்று இல்லை என்று அநுபவத்தில் தெரிந்து கொள்வதுதான் உண்மையான அறிவு. இந்த அறிவைத் தருகிற பராசக்தி ஞானாம்பிகையாகி திவ்விய மங்கள ஸ்வரூபிணியாக விளக்குகிறாள். அவளை எந்நாளும் தியானம் செய்து அநுக்கிரஹம் பெறுவோம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is அம்பாளின் இருப்பிடம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  பவானித்வம்
Next