காமாக்ஷியின் சரிதை : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

காஞ்சிபுரத்தில் பரம கருணாமூர்த்தியான அம்பாள் எப்படியிருக்கிறாள்? கரும்பு வில்லும் (இக்ஷுசாபம்) மலரம்பும் (புஷ்பபாணம்) வைத்திருக்கிறாள். இந்த இரண்டும் இன்னொருத்தருக்கும் உண்டு. மன்மதன் என்கிற காமன்தான் அது. காமன் காமாக்ஷி இருவருக்கும் கரும்பு வில், புஷ்ப பாணம் ஆகியன காமன் (Common) – பொது. மன்மதன் கரும்புவில்லை வைத்துக்கொண்டிருக்கிறான். அதற்கு நாண் தேன் வண்டுகள். வளைந்த கரும்பு வில்லின் ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரையில் குறுக்காக வண்டுகள் நாண் மாதிரி வரிசையாகச் சேர்ந்திருக்கின்றன. இந்தக் கரும்பு வில்லில் ஐந்து மலர் அம்புகளைத் தொடுத்துத்தான் சமஸ்த ஜீவப் பிரபஞ்சத்தையும் மன்மதன் ஆட்டிவைக்கிறான். உலகத்தில் உள்ள தித்திப்பு பக்ஷணங்கள் அத்தனையும் வெல்லம், சர்க்கரையில் செய்ததுதான். வெல்லம், சர்க்கரைக்கு ஆதாரம். கரும்பு தித்திப்புச்சுவை மன்மதனுக்கு வில். சுகந்தத்துக்கும் மென்மைக்கும் ரூப ஸெளந்தர்யத்துக்கும் புஷ்பங்கள் பெயர் போனவை. இப்படிப்பட்ட புஷ்பங்களில் ஐந்து அவனுக்குப் பாணங்களாக இருக்கின்றன. காதுக்கு சுகமான ரீங்காரம் வண்டிடமிருந்து வருகிறது. இப்படியாக தன் வில், அம்பு, நாண் இவற்றால் நம் பஞ்சேந்திரியங்களுக்கான அத்தனை விதமான அழகுகளையும் காட்டி, லோகத்தை காமத்தில் கட்டிப் போடுகிறான் என்று அர்த்தம். அம்பாள்தான் அவனுக்கு இப்படி இரும்பு வில்லுக்கும் பாணத்துக்கும் பதிலாகக் கரும்புவில்லையும் புஷ்ப பாணங்களையும் தந்து, எல்லா உயிரனங்களையும் கவர்ந்து இழுத்து ஆட்டி வைக்கிற சக்தியை அநுக்கிரகிக்கிறாள். சிருஷ்டி லீலை நடக்க வேண்டும் என்பதற்காகக் காமனுக்கு இந்த அதிகாரம் தந்திருக்கிறாள்.

ஆனால் ஜீவப் பிரபஞ்சம் முழுவதும் எப்போதும் இந்திரிய சுகங்கள் என்கிற துக்கத்திலேயே சிக்கிக்கொண்டு கிடப்பதையும் அம்பாள் விரும்பவில்லை. லோக ரீதியாக வாழ்க்கை நடத்துகிறவர்களும் காமத்தினால் தர்மத்தை விட்டுவிடக்கூடாது; அர்த்த காமங்களையும் (பொருள் ஈட்டுதலையும்) ஆசைகளை அநுபவிப்பதையும்) கூட தர்மத்துடனேயே இணைத்து ஒழுங்கோடு வாழ வேண்டும். மனசும் இந்திரியமும் போன போக்கில் விட்டுவிடாமல் அவற்றை தர்மத்தில் கட்டுப்படுத்த வேண்டும். லோக விவகாரத்தை முழுதும் விடாமலே இப்படி கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் இருப்பது முதல் நிலை. அப்புறம் மனசு, இந்திரியம் இவை கொஞ்சம்கூடச் சலனமே இல்லாமல் இருக்கிற ஞான நிலை சித்திக்கும். அந்த நிலை வந்துவிட்டால் அப்புறம் ஜன்மமே இல்லை. சிருஷ்டி லீலைக்கு சகாயம் செய்கிற மன்மதனுக்கு இங்கு வேலையே இல்லை. மன்மதனுக்கு காமத்தை உண்டாக்குகிற சக்தியைத் தந்த அம்பாளேதான், காம விகாரத்தைக் கட்டுப்படுத்த தர்மத்தையும் முடிவாக அவளுடைய சிருஷ்டி லீலையிலிருந்து விடுபடுகிற ஞானநிலையான மோக்ஷத்தையும் ஏற்படுத்தியிருக்கிறாள்.

காமத்துக்காகவே ஏற்பட்ட மன்மதனுக்கு அவள் தந்த கரும்பு வில்லையும், மலர் அம்பையும் ஒரு சமயம் அவளே அவனிடமிருந்து எடுத்துக் கொள்ளும்படியாகி விட்டது. பரம காருண்யத்தால் அவள் அப்படிச் செய்தாள். வெளி நினைப்பே இல்லாத பிரம்ம ஸ்வரூபம் லோகத்திடம் கருணை கொண்டு கடாக்ஷிக்க வேண்டும். லோகத்துக்குத் தர்மத்தையும் ஞானத்தையும் அநுக்கிரகிக்க வேண்டும் என்றே, அம்பாள் காமனுக்குத் தந்த தனுஸையும் பாணங்களையும் எடுத்துக்கொண்டு காமாக்ஷியானாள்.

அது பரமேசுவரன் தக்ஷிணாமூர்த்தியாக அமர்ந்துவிட்ட சந்தர்ப்பம். ஒரே ஞானமயமான மூர்த்தியாக, பரம சாந்த ஸ்வரூபமாக, நிச்சலனமாக உட்கார்ந்துவிட்டார் தக்ஷிணாமூர்த்தி. எல்லாம் ஒன்றாகியிருக்கிற அத்வைத வடிவமாக அவர் இருக்கிறார். ஆனால் அவர் இப்படி ஞான ஸ்வரூபமாய் பரதத்துவமாய் இருந்தால் ஜீவராசிகள் என்ன ஆவது? ஜீவராசிகளைக் கை தூக்கி விடுவது யார்? இந்த ஞான ஸ்வரூபி கருணைக் கடலாகி, எல்லோரையும் கடாக்ஷிக்க வேண்டும் என்று ஜகன்மாதா திருவுள்ளம் கொண்டாள். இவள் தன் கடாக்ஷத்தாலேயே ஸர்வ லோகத்தையும் ரக்ஷித்து விடலாம்தான். ஆனாலும் ஜனங்களுக்கு உத்தம ஸதியின் லக்ஷணத்தைத் தானே நடத்திக் காட்ட நினைத்து, ஈசுவரனுக்கும் பெருமை கொடுக்க உத்தேசித்தாள். அவள் வேறு, அவர் வேறு அல்ல, ஒன்றேதான். அதாவது தன்னுடைய ஞானத்திலேயே காருண்யமும் பொங்கியிருக்க வேண்டும் என்று எண்ணினாள். அப்போது சந்தர்ப்பமும், அவள் கரும்புவில், மலர்ப்பாணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு காமேசுவரியாவதற்கு அநுகூலமாக ஆயிற்று.

தாரகாசுரன், சூரபத்மன் போன்ற அசுரர்கள் மூன்று லோகங்களையும் ஹிம்ஸித்து வந்த சந்தர்ப்பம் அது. இவர்கள் நிரம்பத் தபஸ் பண்ணி எல்லையில்லாத பலம் பெற்றிருந்தார்கள். சாக்ஷாத் பரமேசுவர தேஜஸிலிருந்து உண்டாகும் குமாரர்தான் தங்களை வதம் செய்ய முடியுமென்று இவர்கள் வரம் வாங்கிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பரமேசுவரனோ இப்போது பரம ஞான மூர்த்தியாக, எந்தக் காரியமும் இல்லாமல், ஆத்மானந்தத்தில் முழுகி, தக்ஷிணாமூர்த்தியாக உட்கார்ந்துவிட்டார்.

இவரை எப்படிப் புத்திரோத்பத்தி செய்ய வைப்பது? அசுரர்களால் ஹிம்ஸிக்கப்பட்ட தேவர்களுக்கு ஒரே வழிதான் தெரிந்தது. அப்போது ஹிமயபர்வத ராஜனுக்குப் புத்திரியாகப் பிறந்திருந்த பார்வதி தேவி, இந்த தக்ஷிணா மூர்த்திக்குக் கைங்கரியம் செய்து வந்தாள். காமத்துக்கு அதிதேவதையான மன்மதன், பார்வதியிடம் பரமேசுவரனின் மனஸைத் திருப்பிவிட்டால், பிறகு சிவகுமார ஜனனம் ஏற்பட்டுவிடும் என்று தேவர்கள் எண்ணினார்கள். மன்மதனிடம், ‘உன் சக்தியைப் பரமேசுவரனிடம் காட்டு’ என்று ஏவி விட்டார்கள்.

லோகம் முழுக்க ஸ்வாதீனம் பண்ணிக் கொள்கிற ஆற்றலை, மனமதனுக்குத் தந்ததே பரமேசுவர சக்திதான். இவன் அந்தப் பரமேசுவரனிடம் பக்தியோடு போய்த் தன் சக்தியை அவரிடம் அர்ப்பணம் பண்ணியிருந்தாலே போதும். கருணா மூர்த்தியான அவர் காரியத்தை முடித்துத் தந்திருப்பார். ஆனால் இவனோ அப்படிப்பட்ட சமர்ப்பண புத்தி இல்லாமல், அகங்காரத்தோடு போனான். பரமேசுவரனையே தன்னால் வசப்படுத்தி பார்வதியிடம் மோகிக்கச் செய்ய முடியும் என்று அகம்பாவப்பட்டுக்கொண்டு போனான். பெற்ற தாயிடமே கற்ற வித்தையைக் காட்டுவதுபோல் பரமேசுவரன் மேல் மலர் அம்புகளை விட்டான்.

சட்டென்று ஸ்வாமிக்கு ஒரு சலனம் உண்டாகிறாற்போலிருந்தது. கண்களைத் திறந்தார். அவருக்கு மூன்று கண்கள். ஆனால் இப்போது மூன்றுக்கும் வேலை வைக்கவில்லை. அக்கினி மயமான நெற்றிக் கண்ணை மட்டும்தான் துளித் துளி திறந்தார். அவ்வளவுதான்! மன்மதன் அக்னி ஜ்வாலையான அந்தத் திருஷ்டியில் அப்படியே எரிந்து பஸ்பமாகிவிட்டான். ‘தான் மகா அழகன்’ என்ற கர்வம் அவனுக்கு உண்டு. சரீர ஸெளந்தர்யம் ஞானாக்னியின் முன்னால் நிற்க முடியாது என்று காட்டுகிற மாதிரி, இப்போது பரமேசுவரன் முன்னால் சாம்பல் குவியலாகி விட்டான். எவன் சர்வாங்கசுந்தரன் என்று பேர் பெற்றிருந்தானோ, அவனுக்கு இப்போது அங்கமே இல்லாததால் ‘அனங்கன்’ என்ற பேர் ஏற்பட்டது.

மன்மதனின் பத்தினியான ரதி புலம்பினாள். பார்வதி தேவி அவளுக்கு அபயம் தந்து, அவள் கண்ணுக்கு மாத்திரம் மன்மதன் தெரியும்படியாக அநுக்கிரகித்தாள். மன்மதனைப் பார்த்து, “நான்தான் உனக்கு இந்த வில்லையும் அம்பையும் தந்து சகல ஜீவராசிகளையும் காம வசப்படுத்தும்படி அநுக்கிரஹம் செய்கிறேன். இப்போது இருக்கிற ஜனங்கள் எல்லாரும் ஸநகாதி முனிவர்களைப்போல் ஞானிகளாக இருந்துவிட்டால், ஏராளமான கர்மா பாக்கியோடு மரணம் அடைந்து இன்னமும் ஜனனம் எடுக்காமல் இருக்கிற ஜீவாத்மாக்கள் மறுபடி பிறக்க முடியாமல் ஆகி, பெரிய கஷ்டம் உண்டாகும். அவர்கள் மறுபடியும் ஜன்மா எடுத்தால்தான் சித்தசுத்தி செய்துகொண்டு, கர்மாவை தீர்த்துவிட்டு ஜனன நிவிருத்தி பெறமுடியும். இதற்காகத்தான் லோகத்தில் பிரஜா உற்பத்தி நடக்க வேண்டுமென்று உனக்குச் சக்தி தந்து உன்னை ஒர் அதிகாரியாக வைத்தேன். ஆனால் நீ இப்போது மேலதிகாரியிடமே உன் கை வரிசையைக் காட்டிவிட்டாய். சக்தியைக் காட்டிப் பிரயோஜனம் இல்லை; பக்திக்குத்தான் அவர் வசப்படுவார். அவரிடம் எப்படிக் காரியம் நடத்திக் கொள்வது என்று இப்போது பார்” என்று அம்பாள் சொல்லிவிட்டு, அவனுக்குத் தந்திருந்த கரும்பு வில்லையும், புஷ்ப பாணங்களையும் தானே கையில் எடுத்துக் கொண்டாள். ஈஸ்வரனிடத்தில் போய் நின்றாள். அன்புமயமாக அவரைப் பார்த்தாள். கரும்பு வில்லும், மலரம்பும் தரித்து, இப்படி அன்பு பொங்கப் பார்த்தபோதுதான் அவளுக்கு காமாக்ஷி என்று பேர் வந்தது. காம – அன்பு; அக்ஷி – கண்; அன்பு பொங்கும் கண்ணை உடையவள் காமாக்ஷி. “காமாக்ஷி” என்பதற்கு வேறு தத்வார்த்தங்களும் சொல்வதுண்டு. அது இருக்கட்டும். நேர் அர்த்தம் ‘காமக்கண்ணி’.

“காமக்கண்ணி” என்ற இந்த காமாக்ஷி நாமம் தமிழில் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது. சங்க காலப் பெண் புலவர் ஒருத்தருக்குத் ‘காமக் கண்ணியர் நப்பசலையார்’ என்று பெயர். காமாக்ஷி வழிபாடு தமிழ்நாட்டில் ஆதிகாலத்திலேயே இருந்ததினால்தான், அந்தப் பெண்மணிக்கு இப்படி பெயர் இருந்திருக்கிறது. இது இருக்கட்டும். கதைக்குப் போகலாம்.

முதலில் மன்மதன் பரமேசுவரன் மேல் பாணப்பிரயோகம் செய்தான். எதிரியாகப் போர் செய்தான். எரிந்து போனான். அம்பாளோ வில் கரும்பையும் அம்பு புஷ்பங்களையும் ஈஸ்வரனுடைய பாதத்தில் அர்ப்பணம் செய்து, நமஸ்கரித்தாள். அவர் தன்னையே அவளுக்கு ஸ்வாதீனப் படுத்திவிட்டார். அன்புக்கு அடக்கத்துக்கு உள்ள சக்தி இது!

இவளுடைய அன்பு ததும்புகிற கண்களை, கண்டவுடனேயே அவருக்கும் அன்பு சுரந்தது. பஞ்ச இந்திரியங்களாலும், மனஸாலும் ஜீவ சமூகத்தை எல்லாம் ஆட்டிப் படைத்து விளையாடும் மகாசக்தி படைத்த இவள், அந்தச் சக்திக்கு அடையாளமான ஐந்து பூக்களையும் கரும்பையும் அவர் முன் போட்டு சமர்ப்பணம் பண்ணி நமஸ்காரம் செய்தவுடன் ஈசுவரனுக்குப் பிரேமை பொங்கியது.

பிறகு பார்வதி கல்யாணம் – அதன்பின் குமார ஸம்பவம் அதாவது முருகக் கடவுளின் உற்பத்தி, அப்புறம் சுப்பிரமணியரால் தாரகன், சூரபத்மா ஆகியோரின் சம்ஹாரம் எல்லாம் நடந்தன.

யாருமே இன்னொருவரிடம் தோற்றுப்போனால் அவமானம்தான் கொள்வார். ஆனால் இதற்கு ஒரு விதி விலக்கு உண்டு. சொந்தப் பிள்ளையிடம் தோற்றுப்போனால் மட்டும் அவமானத்துக்குப் பதில் பெருமையாகவே இருக்கும். ‘புத்ராத் இச்சேத்பராஜயம்’ என்று இதையே சொல்வார்கள். இதற்கு அநுசரணையாக, பரமேசுவரனும் கூடத் தன்னாலேயே வதைக்க முடியாத தாரகாதி அசுரர்களை, தன் குமாரனான சுப்பிரமணியன் சம்ஹாரம் செய்ததில் பெருமையே கொண்டார். இதற்கு முன்னால் தக்ஷிணாமூர்த்தியாக, மூல குருமூர்த்தியாக இருந்த அவரே சுப்பிரமணியஸ்வாமியிடம் பிரணவ உபதேசம் வாங்கிக்கொண்டு, தன்னைவிட ஒருபடி பிள்ளையை உயர்த்திக்காட்டிப் பெருமை அடைந்தார். இப்படியாக ஈஸ்வரன் ஞானம், வீரம் இரண்டிலும் தன்னைவிடத் தானே அதிகப் பிரகாசமான ரூபமெடுத்துக்கொண்டு சுப்பிரமணியராக வந்ததற்குக் காரணம் அம்பாளின் சேர்க்கைதான். காமன் எரிந்தபின் அவள் கரும்பு வில்லும், மலர் அம்பும் தரித்துக் காமேசுவரியாகி, இவரைத் தன்னிடம் அன்பு கொள்ள வைத்ததுதான் இத்தனைக்கும் காரணம்.

இந்தப் புராணக் கதைக்கு திருஷ்டாந்தமாகவே, இன்றைக்கும் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் ஆலயத்துக்கும், காமாக்ஷியம்மன் ஆலயத்துக்கும் நடு மத்தியில் குமரக்கோட்டம் என்கிற சுப்பிரமணியர் ஆலயம் இருக்கிறது. ஸோமாஸ்கந்த மூர்த்தத்தில் எப்படி ஈஸ்வரனுக்கும் உமாதேவிக்கும் நடுவில், ஸ்கந்தர் இருக்கிறாரோ, அப்படியே காஞ்சியில் காமாக்ஷியின் காமக்கோட்டம் அல்லது காமகோடிக்கும் ஏகாம்பரேசுவரரின் ஆலயமான ருத்ரகோடிக்கும் மத்தியில் குமரக்கோட்டம் இருக்கிறது.

தக்ஷிணாமூர்த்தியைக் கல்யாணசுந்தரராகக் காமாக்ஷி மாற்றினாளே, அது எதற்காக? தாரகாதிகளின் வதத்துக்காக மட்டுமல்ல. ஜனன மரணங்களிலிருந்து விடுபடுவதற்காகவே பல ஜீவர்கள் ஜனனம் எடுக்க வேண்டும். அவர்களின் கஷ்டங்களையும், அஞ்ஞானத்தையும் போக்குவதற்காகக் கருணாமூர்த்தியான ஒரு கடவுள் வேண்டும். தக்ஷிணா மூர்த்திக்கு மாயா பிரபஞ்சத்தையோ, அதிலிலுள்ள பிரஜைகளையோ அவர்களுடைய கஷ்டங்களையோ பற்றிச் சிந்தையே இல்லை. ஞான சாகரமாக இருந்த அவரைத் கிருபா சமுத்திரமாக்கி ஜீவராசிகளின் துயர் தீர்க்கவைக்கவே, அம்பிகை, காமேசுவரியாகி அவரைக் கல்யாண சுந்தரராக்கினாள். இவளே இந்த லோக அநுக்கிரகத்தைச் செய்கிற யோக்கியதை வாய்ந்தவள்தான். அவரை இவள் அநுக்கிரகம் செய்ய வைப்பதாகச் சொன்னாலும், வாஸ்தவத்தில் செய்பவள் இவளேதான். சும்மா இருப்பதுதான் அவர் சுபாவம். செயல் என்று வந்துவிட்டாலே அது இவளுக்கு உரியதுதான். இருந்தாலும் ஒரு லீலையாக அவர் செய்வதுபோல் காட்டினாள். அவ்வளவுதான். லோகத்தில் ஸ்திரீ தர்மம் எப்படி இருக்க வேண்டும் என்று காட்டுவதற்காகத் தனக்குப் பதில் ஒருத்தனை ஏற்படுத்திக்கொண்டு, அவனுக்கே பெருமையை எல்லாம் சேர்த்தாள்.

பரமேசுவரனிடம் தம்மீது மோகத்தை உண்டாக்கினாள் காமாக்ஷி. எதற்காக? மநுஷ்யர்களின் மோகத்தை அவர் அடக்கி, அவர்களுக்கு ஜனன நிவிருத்தி தரவேண்டும் என்பதற்காகவே. கலப்பில்லாத ஞான மயமாக இருக்கிற ஈஸ்வரனை லோக க்ஷேமத்துக்காக மோகிக்க வைத்த சிவகாம சுந்தரி அவள். ‘இப்படிப்பட்ட நீயே மோகத்தில் மூழ்கிக் கிடக்கிறவர்களைக் கைதூக்கி மோக்ஷம் தருகிறாயே, என்ன ஆச்சரியம்!’ என்று பாடுகிறார் மூகர்.

பரமேசுவரனுக்குக் காமத்தை உண்டாக்கியவாறே நம்முடைய காமத்தைக் கண்டிக்கிறாள். காமன் பஞ்ச புஷ்ப பாணங்களையும் கரும்பு வில்லையும் பிரயோகித்து நம்முடைய பஞ்ச இந்திரியங்களையும் மனசையும் தடுமாறிப் போகச் செய்கிறான். பரதேவதை இந்தப் பஞ்ச பாணங்களைத் தன் திருக்கரங்களில் பிடித்துக் கொண்டிருப்பதாலே, நம்முடைய இந்திரியங்கள் வெறித்து ஒடாமல் தன் பிடிப்பில் வைத்துக் கொண்டு ரக்ஷிக்கிறாள். அவளுடைய கையில் மனோரூபமான இக்ஷு (கரும்பு) இருப்பதால் நம் சித்த விவகாரங்கள் எல்லாம் நசிக்கின்றன. சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரஸம், கந்தம் என்று ஐம்புலன்கள் அநுபவிக்கிற அழகுகள் எல்லாம் அவளுடைய அழகுதான். இவற்றை அநுபவிக்கிற நம் மனசும் அவள் கையில் வசப்பட்ட வஸ்துதான் என்று உணர்த்துவதற்காகக் கரும்பு வில்லும், மலரம்புகளும் வைத்துக்கொண்டு, காமாக்ஷியாக திவ்ய ரூபம் கொண்டிருக்கிறாள். கரும்பின் மாதுரியமும், புஷ்பங்களின் மிருதுத்தன்மையும் கொண்டவளாக இருக்கிறாள்.

எந்த அக்ஷரங்களால் (கண்களால்) ஈசுவரனுக்குக் காமத்தை உண்டாக்கி காமாக்ஷியானாளோ, அதே கண்களின் கடாக்ஷம் நம்மேல் துளி விழுந்தால்போதும். நமக்கு எந்த விதமான காமமும் பறந்துவிடும். நாம் பார்ப்பதை எல்லாம் அவளுடைய பல வேஷங்களாகவே பார்ப்போம். எல்லாம் ஒன்றாகி விடும். அத்வைதமாகிவிடும். ஒன்று உசத்தி, ஒன்று தாழ்த்தி என்று இராது. “காடும் வீடும், சத்துருவும் மித்திரரும், ஓடும் யுவதியின் உதடும் சமமாகவே தெரியும். ஸ்ரீ காமாக்ஷியின் கடாக்ஷம் பெற்றவர்களுக்கு” என்று மூகர் இதையே சொல்கிறார். எல்லாம் சமமாகும் அந்த நிலைதான் பிரம்ம ஞானம் என்பது.

பார்வதீ கல்யாண வைபவத்தின்போது சகல லோகங்களும் ஆனந்தமாக இருந்தன. அப்போது மன்மதனுக்கு மட்டும் தேகமில்லாத குறை இருக்க வேண்டாம் என்று அம்பாளும் ஈஸ்வரனும் கிருபை கொண்டு அவனுக்கு எரிந்துபோன சரீரத்தை மறுபடியும் தந்தனர்.

தபஸ்வியாக இருந்த பரமேசுவரன் பார்வதியைத் திருக்கல்யாணம் செய்துகொண்டார். பிறகு குமரோத்பத்தியும் செய்துவிட்டார். ஒருவிதத்தில் இது தன்னுடைய வெற்றிதான் என்று மன்மதன் சந்தோஷப்பட்டான். இதைத் தன் வெற்றியாக அகில லோகமும் மதிக்கச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டான். தாம்பத்யம் செய்துவைப்பது இவன் டிப்பார்ட்மெண்ட்தானே? அம்பாளே இந்த இலாகாவுக்கு அவனை ஆபீஸராகப் போட்டிருந்தாளே! தன் இலாகாவுக்குள் வருகிற காரியம் நடந்தபோது, அதற்குரிய பெருமை தனக்கே சேரவேண்டும் என்று நினைத்தான். பரமாநுக்கிர மூர்த்தியான அம்பாளைப் பிரார்த்தித்தாலே தன் ஆசை நிறைவேறும் என்று கண்டுகொண்டான்.

ஸர்வ வியாபினியாக இருக்கிற பரப்பிரம்ம சக்தியான அம்பாள், காஞ்சீ மகா க்ஷேத்திரத்தில் விசேஷ சாந்நித்தியத்தோடு காமாக்ஷியாக எழுந்தருளியிருப்பதை அறிந்து கொண்டான். பூலோகத்தை ஒரு ஸ்திரீயாகப் பாவித்தால் அவளுக்குப் பூட்டிய ஒட்டியாணம் மாதிரி காஞ்சீபுரம் உலகத்தின் மையமாக இருக்கிறது. காஞ்சீ என்றால் ஒட்டியாணம் என்றே அர்த்தம். அதில் நாபி ஸ்தானத்தில் காமாக்ஷியின் வாஸஸ்தானமான கர்ப்பகிருஹம் இருக்கிறது. அதற்குப் பேர் பிலாகாசம். பிலம் என்றால் குகை. நாபிக்கொடியிலிருந்து கர்ப்பத்திலிருக்கிற குழந்தை ஆகாரம் பெறுகிற மாதிரி, சகல ஜீவராசிகளும் இந்த பிலாகாசத்திலிருந்துதான் அம்பாளின் அநுக்கிரஹத்தால் சகல சக்திகளையும் பெறுகிறார்கள்.

ஆகாசம் என்பதே ஆத்ம ஸ்வரூபம். எங்கும் பரவியிருக்கும் வெளியை மாஹாகாசம் என்பார்கள். அந்த வெளியே நமக்குள்ளே ஆத்மாவாக, ஞான மயமாக இருக்கிறபோது, பேரம்பலம் சிற்றம்பலமாகிறது. மஹாகாசம் தஹராகாசமாகிறது. சிதம்பரம் என்பதும் அதுதான். சித் என்றால், ஞானம், அம்பரம் என்றால் ஆகாசம். நம்மை நாமே அறிந்து கொள்ளும் ஞானம் உண்டாகும்போது, நம்முடைய சகல எண்ணங்களுக்கும் மூலமான வஸ்து, நம்முடைய சுவாசத்துக்கும் மூலமாக இருதய ஆகாசமாக இருப்பதை அநுபவிக்க முடியும்.

லோகத்தையே ஒரு புருஷ வடிவமாகக் கொண்டால் அந்த விராட் புருஷனின் இருதய ஸ்தானம்தான் சிதம்பர க்ஷேத்திரத்தில் ரகசியமாக உள்ள ஆகாசம். “சிதம்பர ரஹஸ்யம்” என்றே அதைச் சொல்வார்கள். அதுவேதான் காஞ்சிபுரத்தில் பிலாகாசமாகவும் இருக்கிறது. “காம கோஷ்டம்” என்று சமஸ்கிருதத்திலும், “காமகோட்டம்” என்று தமிழிலும் சொல்லப்படுகிற காமாக்ஷி ஆலயத்தின் கர்ப்பகிருஹத்தில் பிலாகாசம் இருந்தாலும், அதன் சக்தி காஞ்சி மண்டலம் முழுவதுமே பரவியுள்ளது. சிதம்பரத்தில் சித்சபையில் மட்டுமே ஞானாகாசம். இங்கோ காஞ்சீ மண்டலம் முழுக்க அது வியாபித்திருக்கிறது. புராணம் இப்படித்தான் சொல்கிறது.

பிலாகாச ரூபிணியான அம்பிகை காமனின் கரும்பு வில்லையும், மலர் பாணங்களையும் தானே தாங்கிக் காமாக்ஷியாக அமர்ந்திருக்கிறாள். ராஜராஜேஸ்வரியான அவளை வேண்டினால் தன் காரியம் நடக்கும் என்று தெரிந்து கொண்ட மன்மதன் காஞ்சிபுரத்திற்கு வந்து தபஸ் செய்தான்.

கருணாமூர்த்தியான அம்பாள் அவனுக்குப் பிரஸன்னமானாள்.

“அம்மா! என்னை பஸ்மம் செய்த அதே பரமேசுவரன் பிற்பாடு உன்னிடம் பிரேமை கொண்டான். காமத்துக்கு அதிகாரியாக என்னை நீதான் நியமித்தாய். அதனால் எவர் பிரேமை கொண்டாலும் அது என் அதிகார எல்லையைச் சார்ந்தது” என்று Jurisdiction பேசினான் மன்மதன்.

“அம்மா, பரமேசுவரன் உன்னை விவாகம் செய்து கொண்டது என் வெற்றிதான். ஆனால் அவர் என்னைச் சாம்பலாகச் சுட்டெரித்ததுதான் லோகப் பிரசித்தமாயிருக்கிறதே ஒழிய, நான் அவரை ஜயித்தது எங்குமே பிரகடனமாகவில்லை. எல்லோருக்கும் மாதாவாக இருக்கிற நீதானம்மா, இந்தக் குழந்தையிடமும் கருணை கொண்டு, என்னை ஜயசாலி என்று பிரகடனப்படுத்த வேண்டும்” என்று காமாக்ஷியைப் பிரார்த்தித்தான் மன்மதன்.

கருணை நிறைந்த அம்பிகை அக்குழந்தைக்கு மனமிரங்கினாள்.

உடனே கைலாஸத்திலும், மற்றும் ஸகல க்ஷேத்திர சிவாலயங்களில் உள்ள அம்பாள் சந்நிதிகளிலும் இருக்கிற தன்னுடைய சக்தியையெல்லாம் ஆகர்ஷித்து, இந்த பிலாகாசத்துக்குள் அடைத்துக் கொண்டு விட்டாள். கைலாஸத்தில் பார்வதியின் ஜீவசக்தியைக் காணவில்லை. அப்படியே பூலோகத்தில் எல்லா சிவன் கோயில்களிலும் உள்ள அம்பாள் மூர்த்திகளும் ஜீவகளை இழந்துவிட்டன. கைலாஸத்திலும், மற்ற க்ஷேத்திரங்களிலும் எழுந்தருளியிருக்கிற பரமேசுவரன் தம்முடைய பிரிய பத்தினியை இழந்து தவிக்க ஆரம்பித்து விட்டார். அவருக்கு மன்மதனின் ஆசையும் அம்பாளின் லீலையும் தெரியாதா? அவன் ஆசைப்பட்டபடிதான் இருக்கட்டுமே என்று அவரும் தவித்ததுபோல் நடித்தார். முன்பு தாம் எரித்த மன்மதனுக்கு விட்டுக்கொடுத்து விளையாடினார்; க்ஷேத்திரந்தோறும் இப்படி சிவன் தவிப்பதையும் கைலாஸத்திலும் அவர் பரிதவிப்பதையும் பார்த்த பிரம்மா காமாக்ஷியிடம் ஈஸ்வரனுக்காகப் பரிந்து தூது பேசினார்.

‘பரமேசுவரன் மன்மதாவஸ்தைக்கு ஆளாகித் தவிப்பது இப்போது ஜகப் பிரசித்தியாகிவிட்டது. மன்மதன் வேண்டியதும் இதுதான். அதற்காகவே இப்படி என்னுடைய சகல கலைகளையும் இங்கேயே ஆகர்ஷித்துக் கொண்டேன்’ என்று அம்பாள் பிரம்மாவுக்குக் கூறி, மறுபடியும் ஜீவகலையை கைலாசத்துக்கும் மற்ற சகல க்ஷேத்ரங்களுக்கும் அனுப்பி வைத்தாள். அவற்றில் அம்பிகையின் சாந்நித்தியம் உண்டாயிற்று. பரமேசுவரனும் தாபசமனமாகி திருப்தி அடைந்தார்.

இது “காமாக்ஷி விலாஸ”த்தில் காணப்படும் விருத்தாந்தம். இந்தப் புராண வரலாற்றுக்குச் சரித்திர ரீதியிலும் கல்வெட்டுகளில் நிரூபணம் ( proof ) இருக்கிறது.

அநேக சிவஸ்தலங்களில் உள்ள அம்பாள் சந்நிதிகளுக்குக் ‘காமகோட்டம்’ என்ற பெயர் இருப்பதாக அந்தந்த சந்நிதிகளில் உள்ள கல்வெட்டுகளிலிருந்து தெரிகிறது. சோழர் காலத்திலிருந்து பல அரசர்கள் இந்த சந்நிதிகளுக்குத் திருப்பணி செய்ததை சிலர் சாஸனமாகப் பொறித்து வைத்திருக்கிறார்கள். அவிநாசி, விஜயமங்கலம், திருவொற்றியூர், திருக்காட்டுப்பள்ளி, வல்லம், திருப்பழனம், கோயிலாடி மாதிரி பல க்ஷேத்திரங்களில் உள்ள அம்பாள் சந்நிதிக் கல்வெட்டுகளில், அந்தந்த அம்பாளைப் பற்றிச் சொல்லும்போது, “திருக்காமக் கொட்டத்து நாச்சியார்”, “திருக்காமக் கொட்டமுடைய அழகமர் மங்கையார்”, “திருக்காமக் கொட்டமுடைய அகிலநாயகியார்” என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் குறிலைக் குறிக்கும் ஒற்றைக் கொம்பு, நெடிலைக் குறிக்கும் இரட்டைக் கொம்பு என்ற வித்தியாசமே கிடையாது. இதனால்தான் ‘காம கோட்டம்’ ‘காம கொட்டம்’ என்று இருக்கிறது. சிதம்பரத்திலும் இப்படி ஒரு தமிழ் கல்வெட்டு இருக்கிறது. அதோடு ஸம்ஸ்கிருதத்திலும், “காமகோஷ்ட ஸ்திதாயா;” என்று அங்குள்ள சிவ காமேசுவரியைச் சொல்லும் சாஸனம் இருக்கிறது.

எல்லா சக்தி கோட்டங்களிலும் இருந்த ஜீவகளை காஞ்சிபுரத்திற்கு இழுக்கப்பட்டு மறுபடியும் அங்கிருந்து அந்தந்த க்ஷேத்திரத்திற்கு அனுப்பப்பட்டதாகப் புராணம் சொல்லுகிறதல்லவா? அதாவது இப்போது நாம் எந்த ஒரு க்ஷேத்திரத்து அம்பாள் சந்நிதியிலும் அநுபவிக்கிற சாந்நித்தியமானது ஒரு காலத்தில் காஞ்சி காமாக்ஷியின் சந்நிதிக்கு இழுக்கப்பட்டு, பிறகு அங்கிருந்தே இந்த க்ஷேத்திரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகும். இப்படிக் காமக்கோட்டத்திலிருந்தே எல்லா ஸ்தலங்களுக்கும் ஜீவகளை வந்ததால்தான், இதர ஸ்தலங்களிலுள்ள அம்பாள் சந்நிதிகளையும் “காமகோட்டம்” என்றே குறிப்பிடுகிற வழக்கம் வந்திருக்க வேண்டும்.

இன்று ஆலங்குடி என்கிற, பழங்காலத் திருஇரும்பூளையில் ஞானசம்பந்தர் பாடியுள்ள தேவாரத்தில், “கச்சிப் பொலி காமக் கொடியுடன் கூடி” என்கிறார். முன்பே சொன்னதுபோல் குறில் – நெடில் கொம்பு வித்தியாசத்தை நினைத்தால், இங்கே காமகோடி என்பது ‘காமக்கோடி’ அல்லது ‘காமகோடி’ என்றேயிருக்கலாம். ஆலங்குடி அம்பாளை ‘காமகோடி’ என்று சொன்னதோடு மட்டுமின்றி, அது ஏதோ அந்த க்ஷேத்திரத்துக்கே சுபாவமாக ஏற்பட்ட பேர் அல்ல என்று தெளிவு படுத்துகிற மாதிரி, ‘கச்சிப்பொதி’ என்று காஞ்சீபுரத்தைப் பிரஸ்தாபிக்கிறார் ஞானசம்பந்தர். அப்பர் ஸ்வாமிகள் திருவதிகைத் திருத்தாண்டகத்தில் “கொழும் பவளச்செங்கனி வாய்க்காமக் கோட்டி” என்கிறார். இதிலிருந்தும், மற்ற க்ஷேத்திரங்களிலும் கூட காமாக்ஷியின் சக்தியே அருள்பாலித்தது என்று ஆகிறது. காம கொட்ட வாஸினி என்பதால் அப்பர், காமக்கோட்டி என்றார் போலிருக்கிறது.

‘காமகோடி’ வேறு. ‘காமக்கோட்டி’ வேறு. காமாக்ஷியின் இருப்பிடமான கோட்டம் காமகோட்டம். கர்மங்கள் எல்லாம் முடிந்து போகிற கோடியாக, அதாவது ஞான ஸ்வரூபமாக இருப்பது காமகோடி. காமாக்ஷியேதான் காமகோடி. மூர்த்தியாகச் சொல்லுகிறபோது காமாக்ஷி. பீடமாகச் சொல்லும்போது காமகோடி. காமாக்ஷி சந்நிதியில் காமகோடி பீடம் இருக்கிறது. பாகவதத்தில் பரசுராமனின் தீர்த்த யாத்தரையின்போது, அவர் காஞ்சிபுரத்திற்கு வந்ததைக் கூறுகையில், ‘காமகோடி புரியான காஞ்சிக்கு’ என்றே சொல்லியிருக்கிறது. (காமகோடி புரீம் காஞ்சீம்) காஞ்சிபுரத்தில் ஏராளமான சிவ, விஷ்ணு ஆலயங்கள் இருந்தாலும், அம்பாளின் காமகோடி புரியாகவே அது ஆதி காலத்திலிருந்து விசேஷிக்கப்பட்டிருக்கிறது என்று இதிலிருந்து தெரிகிறது.

இதர க்ஷேத்திரங்களில் அம்பாள் சாந்நித்தியத்தை மறுபடியும் ஏற்படுத்திய காமாக்ஷி மன்மதன் வெற்றிக்குக் காஞ்சியில் மட்டும் சாசுவதமான அடையாளம் இருக்க வேண்டும் என்று கருணை கொண்டாள். அதனால் காஞ்சீபுரத்தில் மட்டும் எந்தச் சிவாலயத்திலும் அம்பாள் சந்நிதி இருக்கலாகாது என்றும், மன்மதன் சிவனை ஜயித்ததற்கு அடையாளமாகக் காஞ்சிக்கு ‘சிவஜித்’ க்ஷேத்திரம் என்று பெயர் வழங்க வேண்டும் என்று உத்திரவிட்டாள். இப்படிச் செய்தால், ஏன் இந்தக் காஞ்சி மண்டலத்தில் ஒரு சிவன் கோவிலில்கூட அம்பாள் சந்நிதி இல்லை? இதற்கு ஏன் சிவஜித் க்ஷேத்திரம் என்று பெயர் இருக்கிறது? என்று எல்லோரும் யோசிப்பார்கள் அல்லவா? அப்போது புராணத்தை, அல்லது புராணம் பார்த்தவர்களைக் கேட்பார்கள். உடனே இது மன்மதனுக்கு அம்பாள் தந்த வரப்பிரசாதம் என்று பதில் தெரியும். அதாவது மன்மதன் பிரார்த்தித்தப்படி அவனுடைய வெற்றி என்றென்றும் லோகத்தில் விளங்கும். இப்படித் தீர்மானம் பண்ணி, அபச்சாரம் பண்ணின மன்மதனுக்கும் அநுக்கிரஹம் செய்தாள் அம்பாள். இன்றைக்குக்கூட காஞ்சியில் எத்தனையோ சிவாலயங்கள் இருந்தும், காமாக்ஷீ கோவிலைத் தவிர வேறு அம்பாள் சந்நிதியே கிடையாது.

சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் காஞ்சீபுரத்தில் உள்ள ஓணகாந்தன்தளியில் பாடும்போது

வாரிருங்குழல் வாள்நெடுங்கண் மலைமகள்,

மதுவிம்மு கொன்றைத்

தாரிரும் தடமார்பு நீங்காக் தையலாள்,

உலகுய்யவைத்த

காரிரும்பொழில் கச்சிமூதூர்க் காமகோட்டம்

உண்டாக நீர்போய்

ஊரிடும் பிச்சை கொள்வ தென்னே,

ஓணகாந்தன் தளியுளீரே.

என்கிறார். இந்தத் ‘தளி’ அல்லது கோயிலுக்குத் தனியாக அம்பாள் இல்லாததால்தான், ‘உலகுக்கெல்லாம் சோறு போடுகிற காம கோட்டத்துக் காமாக்ஷி இருக்க, நீ ஏன் பிக்ஷாடனனாகக் கப்பரையோடு திரிகிறாய்?’ என்று பரமேசுவரனைக் கேட்கிறார். காமாக்ஷி ஞானப் பிரதமான தெய்வம் மட்டுமில்லை. ஞானப்பால் தருவதோடு அன்ன பூர்ணேசுவரியாக உலகுக்கெல்லாம் சோறும் போடுகிறாள். இரு நாழி நெல்லைக் கொண்டு அவள் முப்பத்திரெண்டு அறங்களையும் ஆற்றினாள் என்று தமிழ் நூல்கள் சொல்லும். அவள் நமக்குச் சோறு போடுவாள். நம் காமனைகளை எல்லாம் கடாக்ஷத்தால் நிறைவேற்றித் தருவாள். “காமாக்ஷி” என்றாலே நம் ஆசைகளைத் தன் கடாக்ஷத்தால் நிறைவேற்றுபவள் என்றும் ஓர் அர்த்தமாகும்.

காமனுக்கு அநுக்கிரஹம் செய்து, பரமேசுவரனைக் காமேசுவரனாக்கிய அந்த சிவகாம சுந்தரியைத் தியானித்தால், நம்முடைய ஆசைகள், காமங்கள் எல்லாமே கடைசியில் அழிந்து போகும். அவளுடைய கடாக்ஷம் கிடைத்துவிட்டால் அதன்பின் எவ்வளவு ஆசையை உண்டு பண்ணக்கூடிய வஸ்துவும், நமக்கு ஆசை உண்டாக்காது. காமம், குரோதம், லோபம் (பணத்தாசை), மோகம், மதம், மாத்சரியம் (பொறாமை) ஆகிய துர்குணங்களில் ஒன்றும் இல்லாமல் நம் சித்தம் பரிசுத்தம் ஆவதற்கு அவளையே பிரார்த்திக்க வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is காமாக்ஷியின் பெருமை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  காமாக்ஷியின் கண்கள்
Next