அன்னைத் தெய்வம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று ஒளவைப் பாட்டி சொல்லியிருக்கிறாள். இரண்டு முன்னறி தெய்வங்களிலும் முன்னதாக ‘அன்னை’யைச் சொல்லியிருக்கிறாள். தைத்திரீயோபநிஷதமும், ‘மாதாவைத் தெய்வமாகக் கொள்வாயாக; பிதாவைத் தெய்வமாகக் கொள்வாயாக’ என்கிறது. இங்கேயும் முதலில் அம்மாவைத்தான் சொல்லியிருக்கிறது.

தாயாரைத் தெய்வமாக நினைக்க முடியுமானால் இதையே திருப்பி வைத்துப் பார்க்கும்போது தெய்வத்தைத் தாயாராக நினைக்க முடியும். சர்வ லோகங்களையும் படைத்துக் காத்துக் கொண்டிருக்கிற மகாசக்தியைத் தாயாராக நினைக்கும்போது ‘அம்பாள்’ என்கிறோம்.

எல்லாமாக ஆகியிருக்கிற பரமாத்மா, நாம் எப்படி நினைத்தாலும் அப்படி வந்து அருள் செய்கிறது. எந்த ரூபமாகத் தியானித்தாலும், அப்படியே வந்து அநுக்கிரகம் செய்கிற கருணை பரமாத்மாவுக்கு உண்டு. அப்படி சாக்ஷாத் பரப் பிரம்மமே தாயாகி, அம்பிகையாய் இருந்துகொண்டு, நமக்கு அநுக்கிரகம் செய்யவேண்டுமென்று நாம் பிரார்த்தித்தால் அவ்விதமே வருகிறது.

பரமாத்மாவை அன்னைத் தெய்வமாக பாவிப்பதில் தனியான விசேஷம் உண்டு. அம்மாவிடம் நமக்குள்ள அன்பும் அம்மாவுக்கு நம்மிடம் உள்ள அன்பும் அலாதியானவை அல்லவா? எனவே, ‘அம்மா’ என்று நினைத்து பக்தி செய்தால் ஒரே அன்பு மயமாக இருக்கிறது. ஆனந்த மயமாக இருக்கிறது. நாம் குழந்தையாகி விடுவதால், தானாகவே காமக் குரோதாதிகள் நம்மை விட்டு விலகுகின்றன. வயசேறிப் போவதால் ஏற்படும் விகாரங்களை, அவளுடைய குழந்தை என்ற உணர்வினால் போக்கிக் கொள்கிறோம்.

பரமாத்மாவை ‘அம்மா’ என்பது நாமாக உபசாரத்துக்கு செய்கிற பாவனை அல்ல. வாஸ்தவத்திலேயே பரமாத்மா ஒரு தாயாரின் அன்போடு கூடவே சமஸ்தப் பிராணிகளுக்கும் அநுக்கிரகம் செய்து கொண்டிருக்கிறது.

இந்த ஜன்மத்துக்கு ஏற்பட்ட தாயையே தெய்வமாக வழிபட வேண்டுமானால், எந்தெந்த ஜென்மத்துக்கும் துணையாக இருக்கிற பரமாத்மாவையும் தாயாக வைத்து வணங்கத்தான் வேண்டும். நம்வீட்டு அம்மா, இந்த ஒரு ஜன்மாவில், நாலைந்து குழந்தைகளுக்கு மட்டும் தாய் ஆவாள். அம்பிகையோ எல்லா ஜன்மங்களுக்கும் எல்லா ஜந்துக்களுக்கும் தாயாக இருக்கிறவள். அவள் ஜகன் மாதா, அணு முதல் மனிதன் வரை, பசு, பட்சி, புழு, பூச்சி, புல், செடி, கொடி, மரம் எல்லாம் ஒரே சக்தியிலிருந்துதானே பிறந்திருக்கின்றன? ஒரே ஜகன்மாதாவிடமிருந்துதான் நாம் இத்தனை பேரும், இத்தனை வஸ்துக்களும் வந்திருக்கிறோம். பரமாத்மாவை அம்பிகையாகப் பூஜிப்பதால், அவள் ஒருத்திதான் அம்மா, நாம் அனைவரும் அவளுக்குப் பிறந்த குழந்தைகள்; அதாவது எல்லாரும், எல்லாமும் சகோதரர்கள் என்ற அநுபவம் உண்டாகும். எல்லாரையும் தழுவும் பரம மதுரமான அன்பு நமக்கு வரும்.

தெய்வங்களும், அவதார புருஷர்களும், மகான்களும்கூட அம்பாளை உபாஸித்து அநுக்கிரகம் பெற்றிருக்கிறார்கள். ஆதிசங்கர பகவத்பாதர்களும், காளிதாஸனும் அவளுடைய அநுக்கிரகத்தாலேயே விசேஷ வாக்குச் சக்தி பெற்றார்கள். திருஞானசம்பந்தருக்கு, அவளது க்ஷீரமே திவ்வியப் புலமை தந்தது.

எல்லாவித இகபர நலன்களும் தருகிற அம்பிகை, விசேஷமாக வாக்குவன்மையை அருளுகிறாள். ஏனெனில், அவளே அக்ஷர ஸ்வரூபமானவள். நம் உடலின் மேல் சதையைச் சிறிது கீறிவிட்டால் – வெளியில் நாம் எத்தனை அழகாக இருந்தாலும் – உள்ளே அருவருப்புத் தருகிற வஸ்துக்களையே பார்க்கிறோம். பரமாத்மா அம்பாளாக வருகிறபோது, தரித்த சரீரமோ கருணா மயமானது. அம்பிகையாக வரும்போது, பரமாத்மா ஐம்பத்தொரு அக்ஷரங்களையே சரீரமாகத் தரித்துக் கொண்டு வருகிறது. அதனால்தான் தேவீ உபாஸகர்கள் விசேஷ வாக்கு வன்மை பெறுகிறார்கள்.

லோகம் முழுவதற்கும், காலம் முழுவதற்கும் தாயாக இருந்து அநுக்கிரகம் செய்கிற பராசக்தியின் கடாக்ஷம் எப்படிப்பட்டவனையும் கைதூக்கி ரக்ஷிக்கும். அந்த அம்பிகையை நாம் அன்போடு தியானம் செய்ய வேண்டும். அக்ஷர மயமானவளை வாக்கால் துதிக்க வேண்டும். அம்மாவின் சரீரவாகு, மனப்பான்மை எல்லாம் குழந்தைக்கும் வருவதுபோல், அம்பாளே நம் சரீரம், மனஸ் எல்லாமாயிருக்கிறாள் என்ற உணர்ச்சியோடு – அவள் வேறு நாம் வேறு அல்ல என்ற அனன்ய பாவத்தோடு – அபேதமாக அம்பாளை உபாஸிக்க வேண்டும். அப்படி உபாஸித்துக்கொண்டேயிருந்தால், அவளைப்போலவே நாமும் அன்பே உருவமாகி லோகம் முழுவதற்கும் ஆனந்தத்தைக் கொடுக்கலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is எனக்கு முக்கியம் அம்பாள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  தேவியின் திருவடித் தியானம்
Next