சிறுவர் இருவரின் சிறப்பு வாக்கு : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

பரமேசுவரனுக்கு எத்தனையோ நாமங்கள் இருக்கின்றன. மஹாவிஷ்ணுவுக்கு எத்தனையோ நாமங்கள் இருக்கின்றன. இருந்தாலும் ஒரு ஸத்ஸங்கத்தின் காரியங்களை முடிக்கும்போது ‘நம: பார்வதீ பதயே’ என்று ஒருவர் சொன்னவுடன், எல்லோரும் ‘ஹரஹர மஹாதேவ’ என்ற நாமத்தையே கோஷம் செய்கிறோம். அல்லது, முடிவாக ஒருத்தர் ‘ஸர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம்’ என்கிறார். உடனே எல்லோரும் ‘கோவிந்தா கோவிந்தா’ என்கிறோம். அல்லது ‘கோபிகா ஜீவன ஸ்மரணம்’ என்று ஒருவர் சொன்னால், அனைவரும் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற பெயரைச் சொல்லியே கோஷிக்கிறோம். பார்வதீ பதிக்கு சிவன், ருத்திரன், நடராஜன் என்று எத்தனையோ பெயர்கள் இருந்தாலும், கூட்டமாக கோஷம் செய்யும்போது ‘ஹர’ நாமமே முன்னால் நிற்கிறது. அப்படியே திருமாலுக்கு நாராயணன், மஹாவிஷ்ணு, ஸ்ரீநிவாசன் என்றெல்லாம் பல நாமங்கள் இருந்த போதிலும், பக்தகோடிகள் சேர்ந்து முழங்குவது ‘கோவிந்த’ என்ற பெயராகவே இருக்கிறது. இந்த இரண்டு நாமங்களுக்கு மட்டும் என்ன விசேஷம், முக்கியமாக ஏராளமான ஜனங்கள் ஒன்று சேர்ந்து இந்த இரு பெயர்களை முழக்குமாறு இவற்றுக்கு என்ன சிறப்பு என்று யோசனை செய்து பார்த்தேன்.

குழந்தையின் வாக்குக்கு விசேஷம் உண்டு. கள்ளம் கபடமில்லாத ஒரு குழந்தை சொல்வது மகான்களின் வாக்குக்குச் சமதையானது. எல்லாக் குழந்தைகளின் வாக்குக்கும் விசேஷம் உண்டு என்றால், தெய்வக் குழந்தைகளாக, அவதாரக் குழந்தைகளாக உள்ளவற்றின் வாக்கு அதிவிசேஷமானதல்லவா? ஹர நாமமும் கோவிந்த நாமமும் இரண்டு அவதாரக் குழந்தைகளின் வாக்கில் விசேஷமாக வந்த பெயர்கள். இந்தப் பெயர்கள் எல்லோரிடமும் தழைத்தோங்க வேண்டும் என்று அந்தக் குழந்தைகள் ஆக்ஞை போட்டன! அதனால்தான் பரமேசுவரனின் பல நாமங்களில் ஹரநாமமும், ஸ்ரீ மகா விஷ்ணுவின் பல நாமங்களில் கோவிந்த நாமமுமே ஜனசமூகத்தின் கோஷ்டி கோஷத்துக்கு உரியனவாயின என்று கண்டுபிடித்தேன்.

அந்த இரு தெய்வக் குழந்தைகள் யார்?

ஒருவர் திருஞானசம்பந்தர். அம்பாளின் க்ஷீரத்தை அருந்தியதால் முருகனாகவே போற்றப்படுபவர். மதுரையில் அவரோடு வாதிட்ட சமணர்கள் புனல் வாதமும், கனல் வாதமும் செய்யவேண்டும் என்றனர். அதாவது இரு கட்சிக்காரர்களும் தங்கள் கொள்கைகளை ஓலையில் எழுதி வெள்ளத்தில் விடவேண்டும். பிரவாகத்தை எதிர்த்துக்கொண்டு எவரது ஏடு வருகிறதோ, அவரது கொள்கைக்கே வெற்றி என்பது புனல் வாதம். இதேபோல் அவரது சித்தாந்தத்தை எழுதிய ஓலையை நெருப்பிலே போட்டால் எது எரியாமலிருக்கிறதோ அதற்கே வெற்றி என்று கொள்வது கனல் வாதம். மதுரையில் சம்பந்தரும் சமணரும் புனல் வாதம் – கனல் வாதம் செய்ததில் சமணரின் ஏடுகள் ஆற்றோடு போயின. நெருப்பில் எரிந்தன. திருஞானசம்பந்தரின் ஓலை, பிரவாகத்தை எதிர்த்து வந்தது. தீயிலும் எரியாமல் இருந்தது. பிரவாகத்திலே போட்ட ஓலையில் சம்பந்தமூர்த்தி ஸ்வாமிகள் என்ன எழுதினார்? முடிவாக சைவத்தை நிலைநாட்ட நடந்த இறுதிப்பரீட்சை புனல்வாதம்தான். இந்த ஜயத்தை வாங்கித் தந்த ஓலையில் சம்பந்தர் என்ன எழுதினார்:

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக

ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே

சூழ்க வையகமும் துயர் தீர்கவே!

இதில் ‘வையகம் துயர் தீர்கவே’ என்று உலகமெல்லாம் க்ஷேமமாக இருக்க வேண்டும் – ஸர்வேஜனா: ஸுகினோ பவந்து என்ற தத்துவத்தைச் சொல்கிறார். உலகில் உள்ள ஜீவராசிகள் யாவரும் சௌக்கியமாக இருக்க வேண்டுமென்று சொல்பவர், ‘வாழ்க அந்தணர், ஆனினம்’ என்று தனியாக பிராம்மணர்களையும் பசுக்களையும் சொல்கிறாரே, அவை வையகத்தில் சேரவில்லையா, அல்லது ஸ்வாமிகளுக்கு பக்ஷபாதமா என்று கேட்கலாம். இந்த இரு உயிரினங்களுக்கும் நடுவில் அவர் ‘வானவர்’ என்கிறார். வானவர்களுக்கான காரியம் யாகம். வானவர்களை யாகத்தினால் திருப்திப்படுத்தினால், மேற்படி பாட்டின் இரண்டாம் வரியில் சொன்ன ‘தண்புனல்’ வீழ்கிறது. லோகமனைத்தின் க்ஷேமத்துக்காக மழை பெய்ய வேண்டுமென்றால், இதற்கு தேவர்களைப் பிரீதி செய்ய வேண்டும். இப்படி லோக க்ஷேமத்திற்காக தேவதைகளை பிரீதி செய்யவே யாகங்கள், யக்ஞங்கள் இருக்கின்றன. யாகம் செய்கிற கடமையைப் பெற்றவன் பிராமணன். யாகத்தில் ஆஹூதி செய்ய அத்தியாவசியமான நெய், பால் மற்றும் அதில் பிரயோஜனமாகும் எரிமுட்டை முதலியன ஆவினத்திடமிருந்தே வருகின்றன. வைதிய யாகங்களில் நம்பிக்கையற்ற சமணர்களை ஆட்சேபித்த சம்பந்தர், யாகத்தையே முக்கியமாகக் கருதி, அதில் சம்பந்தப்பட்டிருப்பதால்தான் அந்தணரையும், ஆவினத்தையும் தனிப்பட வாழ்த்துகிறார். யாகம் செய்து, மழை பெய்து, சுபிக்ஷமாயுள்ள பூமியில் தர்மத்தை வளர்த்து அதர்மக்காரர்களை அடக்குவதற்காக வேந்தனை வாழ்த்துகிறார். இப்படிப்பட்ட தர்ம ராஜ்ஜியத்தில் எங்கு பார்த்தாலும் ‘அரன் நாமமே சூழ்க’ என்றார் – ஹரன் என்பதுதான் தமிழில் ‘அரன்’ என்றாகிறது. “ஹர ஹர” என்று எங்கு பார்த்தாலும் ஜனங்கள் கோஷிக்க வேண்டும் என்று அந்த தெய்வக் குழந்தை போட்ட ஆக்ஞா விசேஷத்தால்தான் இன்றளவும், ‘நம: பார்வதீ பதயே’ என்று ஒருவர் சொன்னால், நாம் அத்தனை பெரும் ‘ஹர ஹர மஹாதேவா’ என்கிறோம். ‘அரோ ஹரா’, ‘அண்ணாமலைக்கு அரோஹரா’ என்றெல்லாம் அத்தனை பேரும் சேர்ந்து சொல்கிறோம். முருகனுக்கு காவடி எடுத்து கோஷம் போட்டாலும் இந்த அரோஹராதான். “தண்டாயுத பாணிக்கு அரோ ஹரா” என்கிறோம்.

கோவிந்த நாமத்தை சொன்ன தெய்வக் குழந்தை யார்? நம் பகவத் பாதர்களாகிய ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியர்களே. எட்டு வயதுக் குழந்தையாக இருக்கும் போதே கோவிந்த பகவத் பாதர் என்ற மகானிடம் சன்னியாசம் வாங்கிக் கொண்ட ஸ்ரீ ஆசாரியாளுக்கு, ‘கோவிந்த’ நாமத்திலே விசேஷமான பற்று. தம் குரு, கீதாசாரியரான ஜகத்குரு கிருஷ்ணன் இருவருக்கும் “கோவிந்த” என்ற பெயர் பொதுவாக இருந்ததால் நம் ஆசாரியர்களுக்கு இந்த நாமத்தில் அலாதி அபிமானம் ஏற்பட்டாற் போலிருக்கிறது. அவர் காசியில் சஞ்சாரம் செய்து கொண்டு வரும்போது, வயோதிக தசை வந்தும் பகவானைத் தேடாமல் இலக்கணத்தை உருவேற்றிக் கொண்டிருந்த ஒரு பண்டிதரைப் பார்த்ததும், பாலசங்கரருக்கு மனம் உருகியது. “இந்த வியாகரண சூத்திரம் மரணம் வந்த சமயத்தில் காப்பாற்றுமா? அப்போது வாக்கிலும் மனசிலும் கோவிந்த நாமம் இருந்தாலே அல்லவா சம்ஸாரத்திலிருந்து விடுபடலாம்?” என்று பண்டிதருக்கு உபதேசித்தார். அந்த ஒரு பண்டிதரை முன்னிலைப்படுத்தி, உலகத்தை எல்லாம் பார்த்து, “பஜ கோவிந்தம், பஜகோவிந்தம்” என்று பாடினார் ஸ்ரீ சங்கர பகவத் பாதாள். பரமேசுவர அவதாரமான அந்தக் குழந்தையின் கட்டளைப்படிதான். இப்போது நாம், ‘கோவிந்தா, கோவிந்தா’ என்று கூட்டத்திலே கோஷிக்கிறோம். தனியாக நாம் பல நாமங்களையும், மந்திரங்களையும், சொல்லி சிரேயஸ் பெற்றாலும், வையகம் துயர் தீர வேண்டுமானால், நாம் கோஷ்டியாக இந்த இரு நாமங்களையே கோஷம் செய்ய வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is விபூதி, திருமண்ணின் மகிமை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  ஸரஸ்வதி
Next