வேத நெறியை வாழ்விப்பவன் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

ஸ்கந்த மகாபுராணம்தான் புராணங்களுக்குள்ளேயே மிகப் பெரியது. ஏறக்குறைய ஒன்றரை லட்சம் சுலோகம் கொண்டது. உலகத்திலேயே இருப்பதற்குள் மிகப் பெரிய கிரந்தம் அதுதான் எனலாம். இப்படிப்பட்ட ஸ்காந்தம், இன்னம் வால்மீகி ராமாயணம், காளிதாஸரின் குமார ஸம்பவம் எல்லாம் ஸுப்ரம்மண்யர் பெருமையைச் சொல்கின்றன. ‘குமாரகுப்தன்’ என்கிற மாதிரி, பழைய ஆரியாவர்த்த ராஜாக்களின் பேர் சுப்ரம்மண்ய பரமாக இருக்கிறது. ரொம்பப் பழங்கால நாணயங்களில்கூட – வட இந்தியாவின் மூலைக் கோடிகளில் கண்டெடுக்கப்பட்டவற்றில் – மயூர வாகனராகக் குமாரஸ்வாமி இருக்கிறார். இப்போது பாகிஸ்தானுக்குப் போய்விட்ட எல்லை மாகாணத்தில் (North – West Frontier) கண்டெடுத்த குஷானர் நாணயங்களில் குமாரஸ்வாமி உருவம் பொறித்திருந்தது. வடபுலத்தின் பல ராஜ வம்ஸங்கள் அவரை ‘ப்ரம்மணிய குமாரர்’ என்று குலதெய்வமாகக் கொண்டிருக்கின்றன. அந்த ராஜாக்கள் தங்களையும் ‘ப்ரம்மண்யர்’கள் என்றே சொல்லிக் கொள்வார்கள். ‘ஸுப்ரம்மண்ய’த்தின் முதல் எழுத்தைத் தள்ளினால் ‘ப்ரம்மண்யம்’ தானே நிற்கிறது? இங்கே நம் தமிழ் நாட்டில் வேதத்துக்கும் சமஸ்கிருதத்துக்கும் ரொம்பத் தொண்டு செய்திருக்கிற காஞ்சிப் பல்லவ ராஜாக்களும், தங்களை சிவ பக்தியில் சிறந்த ‘பரம மாஹேசுவரர்களாகவும்’ விஷ்ணு பக்தியில் சிறந்த ‘பரம பாகவதர்’களாகவும் சொல்லிக் கொள்வதோடு, ஸ்கந்த உபாஸனையை விசேஷமாகச் செய்த ‘பரம ப்ராம்மண்யர்’களாகவும் வர்ணித்துக் கொண்டிருக்கிறார்கள். சாஸனங்களில் இவற்றைப் பார்க்கிறோம்.

எல்லாவற்றுக்கும் முற்பட்ட வேதத்தில் போற்றப்பட்ட ஸ்வாமியாக அவர் இருக்கிறார். ரிக்வேத பஞ்ச சூத்திரத்தில் “தகப்பன் சாமி” யைப் பற்றிய பிரஸ்தாவம் வருகிறது. பரமேசுவரனைப் போற்ற வந்த இந்த வேத ஸூக்தத்தில் ஒரு மந்திரம் ‘குமாரனை வணங்குகிற பிதா’ என்று அவரைக் கொண்டாடுவது அதிவிசேஷம். சாந்தோக்ய உபநிஷத்தில் ஸனத்குமார – ஸ்கந்தரைப் பற்றி வருகிறது. பாணினியின் வியாகரணம், அதற்குப் பதஞ்சலி செய்த மஹா பாஷ்யம் எல்லாவற்றிலும் ஸ்கந்தன், விசாகன் என்ற பெயர்களில் முருகனைப் பற்றிப் பிரஸ்தாவம் உண்டு.

போதாயன தர்ம சூத்திரத்தில் தினமும் செய்ய வேண்டிய வேத தர்பணங்களில் ஸ்கந்தனும், அவனது பார்ஷதரும் (பரிவாரங்களும்) இடம் பெறுகிறார்கள்.

தமிழபிமானம் உள்ளவர்களுக்கு இதை எல்லாம் சொல்ல வேண்டும். ஏனென்றால், தமிழ் மொழிக்கே முருகன்தான் அதிஷ்டான தெய்வம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்! ‘முருகன்’ என்று அலாதி அன்பு சொட்டச் சொல்வது தமிழர்களுக்கே உரிய பெருமை. ஆதிகாலம் தொட்டு இங்கு குறிஞ்சி நிலக்கடவுளாக அவரை வழிபட்டு வருகிறோம். தொன்மையிலும் தொன்மையான தொல்காப்பியம் இதை ‘சேயோன் மேய மைவரை உலகமும்’ என்கிறது. ஆறுபடை வீடுகள் என்று பிரசித்தமான சுப்ரம்மணிய க்ஷேத்திரங்கள் தமிழ் தேசத்தில்தான் இருக்கின்றன. அவர் தமிழை உண்டாக்கியவர், வளர்த்தவர். சங்கப்புலவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார். அகஸ்தியருக்குத் தமிழிலக்கணம் உபதேசிக்கிறார். மிகப் பழய சங்க காலத்திலேயே நக்கீரர் இவர் மீது ‘திருமுருகாற்றுப்படை’யைப் பாடியிருக்கிறார். பலர் அதைப் பாராயணம் செய்தே கைகண்ட மருந்தாகப் பலன் அடைந்திருக்கிறார்கள். முன்னொரு முறை நம் மடத்துத் துவாரா மூலமாக ஒரு வைகாசி விசாகத்தின்போது இந்தத் திருமுருகாற்றுப்படையும், விநாயகர் அகவலையும் நிறைய அச்சுப் போட்டு எல்லோருக்கும் அன்பளிப்பாக வழங்கினோம் – விநாயக சதுர்த்திக்குள் இவற்றை மனப்பாடம் செய்ய ஒப்புக் கொண்டவர்களுக்கு. காவடி எடுப்பது, கிருத்திகா விரதம், சஷ்டி உபவாஸம் இருப்பதெல்லாம் தமிழ் நாட்டுக்கே விசேஷமானவை.

இதனாலெல்லாம் முருகனைத் ‘தமிழ்த் தெய்வம்’ என்று குறிப்பாகச் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் இந்தக் காலத்தில் தமிழ் மதம் வேறு, வேதநெறி வேறு என்று பேதம் செய்வதில் சிலருக்கு ருசி இருந்து வருகிறது. இது ஆராய்ச்சி என்று சொல்லிக் கொண்டு நம் ஜனங்களை பேதப்படுத்துவதற்காக வெள்ளைக்காரர்கள் செய்த விஷமத்தின் அனர்த்தமான விளைவு. வேத மதம்தான் என்றைக்கும் தமிழ் மதமாக இருந்திருக்கிறது என்பதுதான் என் அபிப்பிராயம். அந்த விவாதம் இப்போது வேண்டாம். குமாரஸ்வாமி ஒருத்தரை எடுத்துக் கொண்டால், ‘இவர் தமிழ் தெய்வம்’ என்கிற போது, ‘வேதத்திலும் தமிழ்நாட்டுக்கு வெளியிலும் இவர் ஆதியில் கிடையாது’ என்ற தப்பபிப்ராயம் ஏற்படக்கூடாது என்பதற்கே, ரிக்வேத காலத்திலிருந்து ராமாயணம், அப்புறம் புராண காலம், காளிதாஸன் காலம், குப்தர்கள் முதலிய ராஜாக்களின் காலம் எல்லாவற்றிலுமே பாரத தேசம் முழுக்க அவர் பெருமை பரவியிருந்திருக்கிறது என்று காட்ட வந்தேன்.

வைதிக நெறியை வளர்க்கவே ஏற்பட்ட ஸ்வாமி அவர் என்பதற்கு “ஸுப்ரம்மண்யர்” என்ற பெயரே போதும் என்று சமநிலையிலிருந்து (Un – biassed) பார்த்தால் தெரியும். பிரம்மண்யத்தை – அந்தணர்கள் பற்றி ஒழுகுகிற வேத நெறியை – வளர்க்கிறவர் சுப்ரம்மண்யர் என்பது வெளிப்படை.

வேதத்துக்கு முக்கியம் வேள்வி, யாகம். வேள்விக்கு முக்கியம் அக்னி. தெய்வங்களுக்குள் சுப்ரம்மண்யர்தான் அக்னி ஸ்வரூபமானவர். அவருக்குப் பஞ்சபூத சம்பந்தமும் உண்டு. ஆகாச ஸ்வரூபமான ஈசுவரனின் கண்களிலிருந்து நெருப்புப் பொறியாகத் தோன்றி, வாயுவும், அக்னியும் அவரைச் சுமந்து கங்கையிலே சரவணப் பொய்கை என்ற நீர் நிலையில் விட, அவர் அங்கே ஷண்முகராகி, பிறகு பூமி உச்சமாக எழுப்புகிற மலைச்சிகரங்களிலெல்லாம் கோயில் கொண்டிருக்கிறார். இப்படிப் பஞ்சபூத சம்பந்தமிருந்தாலும் அவர் அக்னிச் சுடராகவே பிறந்தவர். அக்னியில் பிறந்தவர் – “அக்னி பூ” – என்றும் அவருடைய பெயர் வரிசையில் அமரகோசம் சொல்லிக் கொண்டு போகிறது.

ஸேநானீ: அக்னி: பூ குஹ:

குகையில், நம் இருதய குகையில் ஆத்ம ஸ்வரூபமாக அரூபமாக இருக்கிற குகன், இப்படி வெளிப்பட்ட பஞ்சபூதங்களில் இருந்தாலும், முக்கியமான அக்னி ஸ்வரூபியாக இருப்பதால் அவர் அக்னியாராதனையை மையமாகக் கொண்ட வேதப் பிரதிபாத்யமான தேவதையே ஆவார்.

வேதநெறி க்ஷீணித்தால் அதைப் புணருத்தாரணம் பண்ணுவதே சுப்ரம்மண்ய ஸ்வாமிக்கு முக்கியமான காரியமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு முறையும், வட தேசத்தில் ஒரு முறையும் இப்படிப் புறச் சமயங்களை வென்று வைதிகத்தை ஸ்தாபிக்கவே அவர் இரு அவதாரங்கள் செய்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் ஏற்பட்ட அவதாரம் ஞானசம்பந்தர், பரமேசுவரனோ, முருகனோ அவதாரம் செய்ததாகச் சொன்னால் இழுக்கு என்று நினைக்கிற சித்தாந்திகள் இருக்கிறார்கள். கர்ப்பவாஸம் செய்தால் நிஷித்தம் என்பது அவர்கள் கருத்து. ‘விஷ்ணுதான் அவதரிப்பவர், எங்கள் ஸ்வாமியான சிவபெருமான் பிறவாயாக்கை’ என்பார்கள். ஆனால், அத்வைதிகளுக்கு எல்லா ஸ்வாமியும் ஒன்றுதான். ஜீவாத்மாவும் பரமாத்மாவும்கூட ஒன்றுதான். இத்தனை ஜீவர்களாக அந்தப் பரமாத்மா கர்ப்பவாஸம் பண்ணி வெளி வந்திருப்பதையே இழுக்காக நினைக்காமல் இவனிடம்கூட ‘நீயும் பிரம்மம் தானப்பா’ என்று சொல்வது நம் கொள்கை. தப்புப் பண்ணுகிற ஜீவர்களை ரக்ஷிப்பதற்காக, ஒரு பாபமும் தொடமுடியாத ஸ்வாமி அவர்களில் ஒருத்தராகப் பரம கருணையுடன் அவதரிப்பதாகச் சொல்வது அவருக்குப் பெருமை தருவதாகவே நமக்குத் தெரிகிறது. அருணகிரிநாதரைவிடப் பெரிய முருகனடியார் இருக்க முடியாது. அவரே திருப்புகழில் முருகனை “உறை புகலியூரில் அன்று வருவோனே” என்கிறார். புகலியூர் என்பது சீர்காழி. ஞான சம்பந்தமூர்த்தி ஸ்வாமிகள் சீர்காழியில்தான் அவதாரம் செய்தார்.

ஞானசம்பந்தர் எதற்கு அவதரித்தார் என்பதைச் சேக்கிழார், “வேதநெறி தழைத்தோங்க” என்று சொல்கிறார். சமணர்களை வாதில் வென்று பிரம்மண்யத்தை நிலைநாட்டினவர் ஞானசம்பந்தர். தமிழ் வேதமான தேவாரம் பாடிய அவரும் தம்மை “நான்மறை ஞானசம்பந்தன்” என்றே சொல்லிக் கொள்கிறார். இந்த மறைகளை, மறை கூறும் யாகாதி கர்மாக்களை வாழ்த்தி வளர்ப்பது முருகனுக்கே ஏற்பட்ட ஒரு விசேஷமான காரியம் என்று, ‘திருமுருகாற்றுப்படை’யும் சொல்கிறது.

தொன்மை வாய்ந்த பத்துப்பாடலில் முதலாவதாக இருக்கிற நூல் அது. தமிழ்நாட்டில் குறவரினத்திலிருந்து சகல சமுதாயத்தினரும் சுப்ரம்மண்யரை எப்படி எப்படி வழிபட்டார்கள் என்பதை அது சொல்கிறது. நக்கீரர் அதில் ஷண்முக நாதனின் ஆறுமுகங்களில், ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு விசேஷமான காரியத்தைச் சொல்கிறபோது,

ஒரு முகம்

மந்திர விதியின் மரபுளி வழா அது

அந்தணர் வேள்வி ஓர்க்கும் மே

(மந்திர விதி தப்பாமல், வைதிக சம்பிரதாயப்படி பிராமணர்கள் செய்கிற யாகங்களைக் கண்டு இன்புற்று அவற்றை வளர்க்கவே முருகனுக்கு ஒரு முகம் இருக்கிறது) என்றார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is தந்தையை மிஞ்சிய தனயன்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  முருகனின் தமிழ்நாட்டு அவதாரம்
Next