சிவ-சக்தியின் ஐக்கிய ஸ்தானம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்று ஒளவைப்பாட்டி சொல்கிறார் என்றால், அந்தத் தெய்வமே அன்னையும் பிதாவுமாகி – ஒரு பாதி அன்னை, ஒருபாதி பிதா என்று – அர்த்தநாரீசுவரராக உட்கார்ந்திருக்கிறது. இது நமக்குப் பரம லாபம் என்று கிட்டே போகிறோம். போனால் அப்புறம் இதனாலேயே சில குழறுபடிகள், சண்டைகூட, உண்டாகிவிடுகின்றன. காலில் போய் விழலாம் என்றால், ஒரு கால் ஈசுவரனுடையது, மற்றது அம்பாளுடையது என்று இருக்கிறது. இப்படிக்கு ஒன்றுக்குமேல் ஆசாமி இருந்தால், உடனே நம்மையறியாமல் இது உசத்தியா அல்லது அது உசத்தியா, என்று ஒப்புப் பார்க்கிற எண்ணம் (Comparison) உண்டாகிவிடும். இது உண்டானால் அனர்த்தம்தான். எந்தக் காலில் விழுவது என்றே தெரியாது. அர்ச்சனை செய்யப்போனால். இவருக்கு ஒரு தினுசு புஷ்பத்தால் அர்ச்சனை பண்ண வேண்டும்; அவளுக்கு இன்னொன்றால் பண்ணவேண்டும் என்கிறார்களே, ‘இந்தப் பக்கத்துப்பூ அந்தப் பக்கத்தில் விழுந்தால் அபசாரமாகிவிடுமோ?’ என்று கலக்கமாயிருக்கிறது. ‘கடாக்ஷம் வேண்டும்’ என்று கேட்கிறபோதே வலது கண்ணா, இடது கண்ணா என்று குழப்பம்.

குழப்பம் போதாதென்று சண்டையே மூட்டிவிடுகிறார் ஒருகவி. அப்பைய தீக்ஷிதரின் வம்சத்தில் பிறந்து மதுரையில் மந்திரியாகப் பரிபாலனம் செய்த நீலகண்ட தீக்ஷிதர்தான் அவர். “ஆனந்த ஸாகர ஸ்தவம்” என்று மீனாக்ஷியைத் துதிக்க ஆரம்பித்தவர், பார்வதீ பரமேசுவரர்களான தம்பதியருக்குள் கலகம் மூட்டி சந்தோஷப்படுகிறார். “அம்மா! இதென்ன உன் பதி அக்கிரமக்காரராக இருக்கிறார்? உன் புகழையெல்லாம் அவர் அல்லவா திருடிக்கொண்டிருக்கிறார்? காமதகனர், மன்மதனை எரித்தவர் என்று பெயர் வாங்கியிருக்கிறாரே, எரித்தது நெற்றியின் நடுவில் இருக்கிற கண் அல்லவா? அது வலது இடது இரண்டுக்கும் பொது. எனவே உனக்கும் அந்த நெற்றிக் கண்ணில் பாதி உண்டு. வெற்றியிலும் பாதி உன்னுடையதாக இருக்க, அவர் மட்டுமே பேரை அடித்துக்கொண்டு போய்விட்டாரே! போனால் போகிறது. இதிலாவது பாதி உரிமை அவருக்கு இருக்கிறது. இதைவிட, அநியாயம் அவரைக் ‘காலகாலன்’ என்பதுதான். காலனை உதைத்தது எந்தக் கால்? இடது கால் அல்லவா! அது முழுவதும், நூறு பெர்ஸெண்டும் உன்னுடையதல்லவா? நீ செய்த கால சம்ஹாரத்தை, அவர் தமதாகத் தஸ்கரம் பண்ணியிருக்கிறாரே!” என்கிறார். ஜனனம், மரணம் இரண்டையும் கடக்க முறையே காமஜயம், காலஜயம் பண்ண வேண்டுமானால், அம்பாள் அருள் இன்றி முடியாது என்கிற பெரிய தத்துவத்தைக் கவித்வ ஸ்வாதந்திரியத்தோடு, ஸ்வாதீனத்தொடு இப்படிச் சொல்கிறார்.

ஆனால், அவர் ரொம்பப் பெரியவர். சண்டை மூட்டி விட்டதோடு அவர் நின்றுவிடவில்லை. எல்லாச் சண்டைகளும் (வாழ்க்கைப் போராட்டமே) தீர்ந்து போகும்படியான பரமப்பிரேமை, இந்த அர்த்தநாரீசுவரருக்குள் எங்கே ஊற்றெடுக்கிறது என்பதையும், ‘சிவலீலார்ணவ’த்தில் சொல்கிறார். (‘அசக்யமங்காந்தர’ என்று தொடங்கும் சுலோகம்). பரமாத்மாவின் அன்பு ஊற்றெடுக்கும் அந்த இடத்தை நினைத்து விட்டால் நமக்கு ஒரு குழப்பம், குறைவும் உண்டாகாது. அப்படியே அதில் ஊறிப்போகவே தோன்றும். அவர் இரத்தினச் சுருக்கமாகச் சொல்வதை விவரித்துச் சொன்னால்தான் நமக்குப் புரியும்.

அர்த்தநாரீசுவர ரூபத்திலிருந்து பார்வதி – பரமேசுவரர்களின் எல்லா அங்கங்களையும் பிரித்துப் பிரித்து பாகம் பண்ணுகிறோம். ‘மாதொரு பாகன்’ ‘உமையொரு பாகன்’ என்றெல்லாம் அவருக்கும், ‘பாகம் பிரியா’ என்றே அவளுக்கும் பெயர்கள் இருந்தாலும்கூட, இது இவர் கண்- அது அவள் கண்; இது இவர் காது – அது அவள் காது என்று இப்படிப் பாகம் பிரித்துப் பார்க்க முடிகிறது. இந்தக் கூறு இவருடையது; அந்தக் கூறு அவளுடையது என்று மொத்தத்தையும் பப்பாதியாக பிரிக்க முடிகிறது. இப்படி இரண்டு ஆசாமிகளைக் கொண்டுவந்தவுடனே ‘கம்பேர்’ பண்ணுகிற அனர்த்தம். ‘அடாடா, அப்படியானால் பிரித்துச் சொல்ல முடியாமல் ஒரிடமும் இவர்களிடம் இல்லையா?’ என்று தேடுகிறோம்.

பிரிக்க முடியாமல் இருப்பது எது? அணு (Atom) தான். அதற்கு மேலே பிரித்துக் காட்ட முடியாது என்று நம்மை நிறுத்தி வைப்பது அணுதான். (பிரிக்க முடியாத) அதைப் பிளந்துதான் இப்போது எத்தனையோ உற்பாதங்களைப் பண்ணியிருக்கிறார்கள்! இப்படி உபாதம் பண்ணுவதால் எதிர்த்தரப்பு, சுயத்தரப்பு என்ற பேதமில்லாமல் எல்லாம் சர்வ நாசமாகிவிடும் என்று இரண்டு கட்சிக்காரர்களுக்கும் தெரிந்தும்கூட, ‘அப்படியும் உண்டாகிவிடுமோ?’ என்று பீதியையாவது உண்டாக்கலாமே என்று உண்டாக்கி வருகிறார்கள். (இவ்விஷயம் இருக்கட்டும்) இப்படி அணு மாத்திரமாக ஒன்று அர்த்தநாரீசுவர ஸ்வரூபத்தில் இருந்து விட்டால் போதும், பிரச்னை தீர்ந்தது. அதை ஸ்மரித்து விடலாம். ஏனென்றால் ‘இவளுக்கு அவருக்கு’ என்று இதை பாகம் போட முடியாது. அது இரண்டு பேருக்கும் சொந்தமாயிருக்கும். ஒப்புவமை, ஒருத்தரை விட்டோம், ஒருத்தருக்கு அபச்சாரம் செய்தோம் என்கிற தோஷங்கள் உண்டாவதற்கில்லை. அப்படி அணுப்பிரமாணமாக ஒன்று இந்த இரண்டுக்கும் மத்யஸ்தானத்தில் இருந்துவிட்டால் போதும். எவ்வித மனக்கலக்கமும் இல்லாமல் அதைப் பிடித்துக் கொண்டு அம்மை அப்பனின் கூட்டு அநுக்கிரகத்தைப் பெற்றுவிடலாமே என்று தேடுகிறோம்.

இங்கேதான் கவி நமக்கு சகாயம் பண்ண வருகிறார். ஒரு சரீரத்துக்கு மத்தியில் இருக்கிற இருதயத்துக்கும் மத்தியில் ஒரு அணு இருக்கத்தான் செய்கிறது. அணு என்றுகூட அதைச் சொல்ல முடியாது. அணுவையாவது ரொம்பவும் நுண்ணிய மைக்ராஸ்கோப் வைத்துப் பார்த்துவிடலாம். உடனே மானஸிகமாகவாவது அதில் இரு பக்கங்களைப் பங்கு போடலாம். இருதய மத்தியில் இருக்கிற இந்த ‘அணு’வையோ எந்த சூக்ஷ்மதரிசினியாலும் காண்பிக்க முடியாது. ஆனால், இது இல்லாவிட்டால் மநுஷ்யனுக்கு எண்ணமே இல்லை. உணர்ச்சியே இல்லை.

இது என்ன? மனசு மனசு என்கிறோமே அதுதான். எந்த எக்ஸ் – ரேயிலாவது அதைக் காட்ட முடியுமா?

அர்த்தநாரீசுவரர் மட்டும் என்றில்லை. எந்த மூர்த்தியானாலும் அதன் மனசு என்று ஒன்று இருக்கிறதே அதைத் தியானிப்பதுதான் விசேஷம். உருவத் தியானம் ரொம்ப ரொம்ப அழகாகத்தான் இருக்கிறது. ஆரம்ப தசையில் அத்தியாவசியமாகத்தான் இருக்கிறது என்றாலும்கூட, இதிலும் நம் மனசு அந்தண்டை இந்தண்டை அசையாமல் ஒருமுகப்படுவதில்லை. ஆடத்தான் செய்கிறது. பரமேஸ்வர ஸ்வரூபம் என்றால் ஜடை, அதை விட்டு கங்கை, அதை விட்டு சந்திரன், நெற்றிக்கண், நீலகண்டம் இப்படி எண்ணமானது எதில் நிலைத்து நிற்பது என்று தெரியாமல் சலித்துக் கொண்டே இருக்கிறது. பரமாத்மாவின் மனசு என்று எடுத்துக் கொண்டாலோ அது ஒன்றாகவே இருக்கிறது. நம் மனசிலே நூறு கோடி எண்ணங்கள். அதில் முக்கால்வாசி தோஷமயமாகவே இருக்கும். தாயும் தந்தையுமாக இருக்கப்பட்ட அர்த்தநாரீசுவர மனசு இப்படியா இருக்கும்? அதில் பிரமப்பிரேமை என்கிற ஒரு எண்ணம் தவிர வேறென்ன இருக்கும்? கருணை ஒன்றே நிறைந்த அணுமாத்திரமான மனசு அது. அதைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்கிறார் கவி. அதிலே நம்மைக் கொண்டுபோய் நிறுத்துகிறவர்தான் குமாரஸ்வாமி. சிவ சக்திகளின் ஐக்கியத்தில் தோன்றிய அன்புக் குழந்தை.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is குமாரன்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  தந்தையை மிஞ்சிய தனயன்
Next