நம் தருமத்தின் மூல புருஷர் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

கிராமாந்தரங்களில் முன்னிருட்டு நாட்களில் திருட்டு இருக்கும். இதற்காக ஒரு நாலு பேராவது முன்கூட்டியே ஏற்பாடு செய்துகொண்டு ரோந்து சுற்றுவார்கள். கொஞ்சத்தில் கொஞ்சம் திருட்டுக் குறையும்.

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா லோகத்தைவிட்டுப் போனவுடன் லோகம் முழுவதிலும் கலியின் இருட்டு வீரியத்துடன் பரவக்கூடிய நிலைமை ஏற்பட்டது. வரப்போகிற அதர்ம இருட்டில் வேதம் என்கிற தீபம் சில இடங்களிலாவது அணையாமல் இருக்கச் செய்ய வேண்டுமே என்று ஒரு மகா பெரியவர் விசாரப்பட்டு அதற்கான காரியங்களில் இறங்கினார். கலிகால மநுஷ்யர்களுக்கு வேதம் முழுவதையும் அத்யயனம் செய்கிற சக்தி இருக்காது என்று அவருக்குத் தெரியும். ஆனாலும் வேத மந்திர சப்தம் லோகத்தில் கொஞ்சமாவது இருந்தால்தான் சமஸ்தப் பிராணிகளுக்கும் க்ஷேமம் உண்டாகும். கலிகாலத்திலும்கூட தர்ம மார்க்கப்படி இப்படிச் சிறிது க்ஷேமம் எல்லா ஜீவராசிகளுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று அவர் தனது அபார கருணையினால் நினைத்தார். இதற்காகக் கலிகாலத்தில் வரப்போகிற அற்ப சக்தர்களுக்கு ஏற்றபடி, அதுவரை கங்குகரை இல்லாமல் இருந்த வேதங்களை நாலாகப் பிரித்தார். தம் சிஷ்யர்களில் பைலர் என்கிறவருக்கு ரிக்வேதத்தையும் வைசம்பாயனருக்கு யஜுர் வேதத்தையும், ஜைமினிக்கு ஸாம வேதத்தையும், ஸுமந்துவுக்கு அதர்வண வேதத்தையும் உபதேசித்தார். “உங்களிடம் இந்த பெரிய சொத்தை ஒப்படைத்தேன். வேதத்தின் இந்த ஒவ்வொரு சாகை (கிளை) யையும் சிஷ்ய பரம்பரை மூலம் ரக்ஷித்து வர ஏற்பாடு பண்ணுங்கள்” என்று அந்த நாலு சிஷ்யர்களை ரோந்து சுற்றுகிற மாதிரி அனுப்பி வைத்தார். அனந்தமாக இருந்த வேதங்கள் இப்படிக் கலிகால அற்ப சக்தர்களும் ஒரு ஆயுளில் கற்று அத்யயனம் செய்கிற அளவுக்கு நாலாக வகுத்துத் தரப்பட்டன.

அந்த நாலு சிஷ்யர்கள், அப்புறம் அவர்களுடைய சிஷ்யர்கள், சிஷ்யர்களின் சிஷ்யர்கள் என்று எத்தனையோ ஆயிரம் வருஷங்களாக இந்த நாலு வேதங்களும், காதால் கேட்டுக் கேட்டே – ‘எழுதாக் கிளவி’ என்றே தமிழில் சொல்வார்கள் – நம் காலம்வரை வந்துவிட்டது. அதனால், கலியின் கோலாஹலமும் அடங்கியே இருந்தது. வேத அத்யயனம் குறைந்த இந்த ஒரு நூற்றாண்டில் கலி எப்படி முற்றிவிட்டது என்று நன்றாகப் பார்க்கிறோம்.

கலியுக ஆரம்பத்தில் லோக ரக்ஷணத்துக்காக வேதத்தை இப்படிக் காத்துத் தந்த அந்த மகா பெரியவரைத்தான் ‘வேத வியாஸர்’ என்கிறோம். ‘வியாஸ’ என்றால் ‘பகுத்து வைப்பது’ என்று அர்த்தம். வேதத்தை நாலாகபப் பகுத்தவர் வேத வியாஸர்.

அவருடைய இன்னொரு பெயர் பாதராயணர். தீவில் (த்வீபம்) பிறந்ததால் அவருக்கு ‘த்வைபாயனர்’ என்றும் ஒரு காரணப் பெயர் உண்டு. அவர் சியாமள வர்ணமாதலால் ‘கிருஷ்ணர்’ என்றும் ஒரு பெயர் உண்டு. ‘கிருஷ்ணத்வைபாயனர்’ என்று சேர்த்தே சொல்வார்கள் – கிருஷ்ண பரமாத்மாவிடமிருந்து வித்தியாசம் தெரிவதற்காக.

வாஸ்தவத்தில் அவரும் கிருஷ்ண பரமாத்மாவும் வேறல்ல. வேத வியாஸர் மகாவிஷ்ணுவின் அம்சாவதாரம்தான். பிற்காலத்தில் நம் ஆதி சங்கர பகவத்பாதாளுடைய மகிமையை வெளிப்படுத்துவதற்காக விளையாட்டாக அவரிடம் கோபித்து அவரோடு விவாதச் சண்டை போடுவதற்காகக் கிழப்பிராமணராக வியாஸர் வந்தார். இருவரும் உக்கிரமாக வாதப் பிரதிவாதம் செய்தபோது, ஆசாரியாளின் சிஷ்யர் பத்மபாதருக்கு இரண்டு பேரும் உண்மையில் யார் என்று ஞானதிருஷ்டியில் தெரிந்து, ‘சங்கர சங்கர ஸாஷாத்; வ்யாஸோ நாராயண ஸ்வயம்’ என்று அவர் சொன்னதாக சுலோகம் இருக்கிறது. ‘ஆசாரியாள் சாக்ஷாத் பரமேசுவரன்; வியாஸர் நாராயணனே’ என்று அர்த்தம், ‘முனிவர்களில் நான் வியாஸர்’ என்று கிருஷ்ணரே கீதையில் சொல்லியிருக்கிறார். ‘வ்யாஸாய விஷ்ணு ரூபாய’, ‘வ்யாஸ ரூபாய விஷ்ணுவே’ என்றும் சுலோகம் இருக்கிறது.

தக்ஷிணாமூர்த்தி ஆதி குரு என்றாலும் அவர் பேசாத குரு. பேசி உபதேசிக்கிற குரு என்று வருகிறபோது, நம் அத்வைத வேதாந்த ஸ்மார்த்த ஸம்பிரதாயத்தில் முதல் குரு, சாக்ஷாத் நாராயணன்தான். அப்புறம் அவரது பிள்ளையான பிரம்மா. அப்புறம் பிரம்மாவின் பிள்ளையான வஸிஷ்டர். வஸிஷ்டருக்குப்பின் அவருடைய புத்திரரான சக்தி. சக்திக்குப் பிறகு, அவரது புத்திரரான பராசரர். பராசரர்தான் விஷ்ணு புராணம் எழுதி உபகரித்தவர். இவருடைய புத்திரர்தான் வியாஸர். வியாஸருக்குப் பின் நம் சம்பிரதாயத்தின் குரு அவருடைய புத்திரரான சுகர். மகா பிரம்ம நிஷ்டர் இவர். பிறந்ததிலிருந்தே பரப்பிரம்மமாக இருந்ததால் கல்யாணமே பண்ணிக்கொள்ளாதவர். அதனால் இவருக்குப் பிள்ளையும் இல்லை. அப்படியானால் இதுவரை தகப்பனார் – பிள்ளை என்று தொடர்ந்து வந்த குரு பரம்பரை இவரோடு நின்று விட்டதா? இல்லை, இவருக்கப்புறம் அது குரு – சிஷ்யர் என்கிற புதுக்கிரமத்தில் விருத்தியாயிற்று. சுகருடைய சிஷ்யர் கௌடபாதர். கௌடபாதர் சந்நியாச ஆசிரமம் ஸ்வீகரித்தவர். இனிமேல் சந்நியாச பரம்பரையிலேயே வேதாந்த சம்பிரதாய ஆசாரியர்கள் வருகிறார்கள். கௌடபாதருடைய சிஷ்யர் கோவிந்த பகவத் பாதர். கோவிந்தரின் சிஷ்யர்தான், நம் சங்கரபகவத் பாதர்கள். சங்கரருடைய நாலு முக்கியமான சிஷ்யர்கள் பத்மபாதர், ஹஸ்தாமலகர், தோடகர், ஸுரேச்வரர் ஆகியவர்கள். இதற்கப்புறம் ஒவ்வொரு சங்கர பீடத்திலும் இன்றுவரை வரிசையாக வந்திருக்கிற ஆசாரியர்களெல்லாரும் நம் குருமார்கள் ஆவார்கள். இந்த குரு பரம்பரையைச் சொல்கிற சுலோகத்தை எல்லாரும் தினமும் சொல்லி நமஸ்கரிக்க வேண்டும். அதைச் சொல்கிறேன்.

நாராயணம் பத்மபுவம் வஸிஷ்டம்

சக்திம் ச தத்புத்ர பராசரம் ச |

வ்யாஸம் சுகம் கௌடபதம் மஹாந்தம்

கோவிந்த யோகீந்த்ரம் அதாஸ்ய சிஷ்யம் |

ஸ்ரீ சங்கரா சார்யம் அதாஸ்ய பத்மபாதம்

ச ஹஸ்தாமலகம் ச சிஷ்யம் |

தம் தோடகம் வார்த்திககாரம் அன்யான்

ஆஸ்மத் குரூன் ஸந்ததம் ஆனதோஸ்மி ||

இதில் ‘பத்மபுவன்’ என்பது ‘பிரம்மா’. ‘வார்த்திககாரர்’ என்பது ஸுரேச்வரர். மற்ற பெயர்கள் உங்களுக்கே புரியும்.

இப்படி வியாஸர் குரு பரம்பரையில் முக்கியமாக இருக்கிறார். அவரை விஷ்ணு என்று சொல்லிவிட்டால் மட்டும் போதுமா? ‘குருர் பிரம்மா, குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர:’ என்று திரிமூர்த்தியாகவும் அல்லவா குருவைச் சொல்கிறோம்? இப்படியே வியாசரை மும்மூர்த்தியாகவும் வர்ணிக்கிற ஒரு சுலோகம் இருக்கிறது. அது ‘நெற்றியில் கண்ணில்லாவிட்டாலும் இவர் சிவன்தான். நாலு முகமில்லாவிட்டாலும் இவர் பிரம்மாதான். நாலு கையில்லாமல் இரண்டே கையுடன் இருந்தாலும் இவர் மஹாவிஷ்ணுதான்’ என்று சொல்கிறது.

வியாஸரைவிட நமக்குப் பரம உபகாரம் செய்த இன்னொருவர் இல்லை. அவர் வேதங்களை விபாகம் செய்ததோடு நிற்கவில்லை. வேதங்களைச் சில பேர்தான் ரொம்பவும் நியம ஆசாரங்களோடு ரக்ஷிக்க முடியும். ஆனால் வேதத்தின் தாத்பரியமான அஹிம்ஸை, சத்யம், தர்மம் முதலியவை சகல ஜனங்களுக்கும் தெரிந்து, அவர்கள் அவற்றைக் கடைபிடிக்க வேண்டும் என்று மிகுந்த கருணை கொண்டார் வியாஸர். இதற்காகவே வேதத்தில் ஒவ்வொர் இடத்தில் நுணுக்கமாகச் சொல்லியிருக்கிற விஷயங்களை சகல ஜனங்களும் ரஸிக்கிற கதா ரூபத்தில் விளக்கிக் காட்டுவதற்கு – நுண்ணிய வஸ்துவை பூதக்கண்ணாடியால் காட்டுகிறது போல் – பதினெட்டுப் புராணங்களையும், ஐந்தாவது வேதம் எனப்படும் மகாபாரதத்தையும் எழுதி அநுக்கிரகம் செய்தார் ஸ்ரீ வியாஸ பகவான். அவரவர்கள் இஷ்டதேவதையை முழு முதல் தெய்வமாக ஆராதிப்பதற்குச் சௌகரியமாக விசால மனசு வாய்ந்த வியாஸர் பதினெட்டுப் புராணங்களையும் தந்திருக்கிறார். ஈசுவரன், விஷ்ணு, அம்பாள், சுப்பிரமணியர் என்று ஒவ்வொரு தேவதையைப் பற்றியும் ஒவ்வொரு புராணமாகக் கொடுத்தார். சமீப காலம் வரையில் நம் தேசத்தில் எழுதப் படிக்கத் தெரியாத கிராம ஜனங்கள்கூடப் பொய், புனைசுருட்டு, திருட்டு, லஞ்சம், நாஸ்திகம் இவற்றுக்குப் பயந்து, கூடியவரையில் ஒழுக்கத்தோடு, தெய்வ பக்தியோடு, திருப்தியோடு இருந்து வந்தார்கள் என்றால், அதற்கு முக்கியமான காரணம் வியாஸ பகவானின் பிரசாதமான பாரதமும் புராணங்களும்தான்.

இவ்வளவு செய்ததோடு பரம சத்தியமான பிரம்ம தத்வத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்கிற பிரம்ம ஸூத்திரத்தையும் அநுக்கிரகித்தார் ஸ்ரீ வியாஸர். இதனாலேயே முக்கியமாக பிரம்ம வித்யா ஆசார்யர்களில் ஒருவராகி ‘வியாஸாசாரியாள்’ எனப்படுகிறார். பிரம்ம வித்தையில் அவருக்கு சிஷ்யர் அவரது புத்திரரான சுகப் பிரம்மம்.

நாலு வேதங்களைப் பரப்பிய சிஷ்யர்கள் பேரை முன்பே சொன்னேன். புராணங்களையும் மகாபாரதத்தையும் அவரிடமிருந்து உபதேசம் பெற்று லோகத்தில் பிரசாரம் பண்ணினவன் ஸுதர் – தேரோட்டி வகுப்பில் பிறந்தவர். மகா பக்திமான். புத்திமான்.

பிரம்மஸூத்திரத்துக்குச் சங்கரர் (அத்வைதம்) , ராமாநுஜர் (விசிஷ்டாத்வைதம்) , மத்வர் (த்வைதம்) , ஸ்ரீ கண்டாசாரியர் (சைவ சித்தாந்தம்) வல்லபாசாரியார் (கிருஷ்ண பக்தி மார்க்கம்) எல்லோரும் தத்தம் சித்தாந்தப்படி பாஷ்யம் எழுதியிருக்கிறார்கள். ‘பிரம்ம ஸூத்திரம்’ என்றால் பண்டித லோகத்தில் அதற்கு ஒரு தனியான கெளரவம்.

ஹிந்துக்கள் என்று சொல்லிக் கொள்கிற நாம் அனைவரும் மேலே சொன்ன சித்தாந்தப் பிரிவுகளில் ஏதாவது ஒன்றைச் சேர்ந்தவராக இருக்கிறோம். இதனால் நாம் பிரிந்தே இருக்கிறோம் என்று அர்த்தமில்லை. மரத்தின் கிளைகள் ஒவ்வொன்றும் ஒரு திசையில்தான் வளர்ந்து கொண்டிருக்கும். அதனால் அவை ஒன்றில்லை என்றாகி விடுமா? அடி மரமும் வேரும் ஒன்றுதானே? அப்படித்தான் நம் இத்தனை பேருக்கும், இத்தனை பிரிவுகளுக்கும் அடிமரமாக, வேராக இருக்கிற மகாபுருஷர் வேத வியாஸ மகரிஷி. ‘மூலம்’ என்றால் வேர். நம் தர்மத்துக்கு மூல புருஷர் வியாஸ பகவான்தான்.

இன்று நாம் இந்த மட்டுமாவது ஆஸ்திக புத்தியோடு க்ஷேமமாக இருப்பதற்குக் காரணம் அன்று வியாஸர் போட்ட விதைதான்.

ஹிந்துவாகப் பிறந்த நாம் ஒவ்வொருவரும் தத்துவத்தில் (ஃபிலாஸஃபியில்) பிரிந்திருப்பதால் தோஷமில்லை. ஃபிலாஸஃபி என்று வருகிறபோது, ‘நான் அத்வைதி – எனக்குச் சங்கரர்; நீ த்வைதி – உனக்கு மத்வர்; அவர் விசிஷ்டாத்வைதி – அவருக்கு ராமாநுஜர்’ என்று இருந்துவிட்டுப்போவோம். பல அபிப்பிராயங்கள் இருப்பதால் அவற்றை ஆராய்ந்து பார்ப்பதால் தப்பில்லை. ஆனாலும், எந்தப் பிரிவாயிருந்தாலும் சரி, ஹிந்துவாகப் பிறந்த சகலரும் ஒன்று சேர்ந்து வேத வியாஸ பகவானின் படத்தைத் தோளில் ஏற்றிக்கொண்டு வீதி பவனி எடுத்துவரக் கடமைப்பட்டிருக்கிறோம். பல பேருக்குச் சிலை வைக்கிறோம். படத்திறப்பு விழாக்கள் செய்கிறோம். எனக்கு ஆசை, வருஷத்துக்கு ஒரு நாளாவது ஒவ்வொரு பேட்டையிலும் இருப்பவர்கள் வியாஸாசாரியாளின் படத்தை ஐக்கியமாகக் கூடி ஊர்வலமாக எடுத்து வந்து, ஓரிடத்தில் எழுந்தருளப் பண்ணி, அங்கே சகலருக்கும் பொதுவான வேத தர்மங்களைப்பற்றி சம்மேளனம் நடத்த வேண்டும் என்பது. இதுவரை இப்படி செய்யாத அபராதத்துக்குப் பிராயச்சித்தமாகச் சேர்த்து வைத்து இனிமேலாவது இப்படி வியாஸாசாரியாளுக்கு உத்ஸவம் செய்ய வேண்டும். ‘ஹிந்து’ என்ற பேரில் உள்ள நம் எல்லோரின் நமஸ்காரங்களுக்கும் பாத்திரராக இருக்கிறவர் அவர்.

அவர் இன்றைக்கும் சிரஞ்ஜீவியாக இருக்கிறவர். ஆஞ்சநேயர், அசுவத்தாமா, மகாபலி இவர்கள் மாதிரி இப்போதும் சிரஞ்ஜீவியாக அநுக்கிரகம் பண்ணி வருகிறார்.

வைதிக தர்மத்துக்குப் பல விதங்களில் உறுதி தந்து ஆதாரஸ்தம்பம் போல் நிற்கிற ஸ்ரீ வேத வியாஸ மஹரிஷி ஒருத்தர் இல்லாவிட்டால் நம் மதமே இல்லை. அந்த மகா புருஷரை ஹிந்துவாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஸ்மரிக்க வேண்டும். நமக்கு சாசுவத செளக்கியத்துக்கான வழியைக் காட்டித் கொடுத்திருக்கிற வேத வியாஸருக்கு நம் நன்றியைக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

பிரம்மச்சாரிகளும் கிருஹஸ்தர்களும் ஆவணி அவிட்டத்தின் போது புதுப் பூணூல் போட்டுக் கொள்ளுமுன், வேத வியாஸரைக் கும்பத்தில் ஆவாஹனம் செய்து பூஜை செய்கிறார்கள். சந்நியாசிகளில் பூணூல் போட்டுக் கொள்கிற பிரிவினர் இருந்தாலும், பெரும்பாலும் பூணூலை அறுத்துப் போட்ட சந்நியாசிகளே இருக்கிறார்கள். மற்ற ஆசிரமக்காரர்கள் உபாகர்மத்தின்போது வியாஸருக்குப் பூஜை, தர்ப்பணம், ஹோமம் செய்து நன்றி செலுத்தி விடுகிறார்கள் என்றால் சந்நியாசிகள் மட்டுமே அப்படிச் செய்யாமலிருக்கலாமா? பிரம்ம ஸூத்திரம் என்ற வேதாந்தப் பிரமாண நூலே இவர் செய்ததுதானே? இப்படி நன்றி தெரிவித்து செய்வதுதான் சாதுர்மாஸ்ய விரத ஆரம்பத்தில் சந்நியாசி செய்யும் வியாஸ பூஜை.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is மனிதப் பிறவியும் வேண்டுவதே
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  கண்ணன் பிறந்த தினம்
Next