காரணமில்லாத பக்தி : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

பல காரணங்களுக்காகப் பக்தி புரிந்தாலும், முக்தியை வேண்டிப் பக்தி செய்வதே இவற்றில் சிரேஷ்டமாகும். ‘ஞானத்தினால்தான் நேரடியாக முக்தி கிடைக்கும்; ஈசுவர உபாஸனையாகிய பக்தியால் அல்ல’ என்பதே ஸ்ரீ சங்கரர் முதலிய அத்வைத ஆசாரியார்களின் கருத்து. முக்தி என்றால் என்ன? ‘விடுபடுவது’ என்று அர்த்தம். விடுபடுவதைத்தான் தமிழிலும் ‘வீடு’ என்று சுருக்கிச் சொல்கிறார்கள், எதிலிருந்து விடுபடுவது? சம்சாரத்திலிருந்து விடுபடுவதுதான் முக்தி. மறுபடி மறுபடி பிறந்து கொண்டும் செத்துக்கொண்டும் இல்லாமல், நித்தியமான சத்ய நிலையை அடைவதுதான் முக்தி. மனசு என்று ஒன்று இருப்பதால்தான் சம்ஸாரபந்தம் தெரிகிறது. மனசு மறைந்தால்தான் பந்தத்திலிருந்து விடுதலை. ரூபம், குணம் இவை இருக்கிற வரையில் இவற்றை அநுபவிக்கிற மனசும் இருக்கத்தான் செய்யும். பக்தி செலுத்துகிறபோது ஈசுவரனுடைய ரூபம், குணம் எல்லாவற்றையும் மனஸினால் அநுபவிக்கிறோம். பக்தி நிலையிலும் பலவிதமான உணர்ச்சிகள், பரவசம், ஆனந்தம், அழுகை எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன. மனசு அதற்கு ஆதாரமான வஸ்துவில் கரைந்துபோய் அந்த ஆதார வஸ்துமட்டும் நிற்கும்போது தான் எந்த மாறுதலும் இல்லாத சாந்த நிலை – முக்தி அல்லது மோக்ஷ நிலை சித்திக்கிறது. இந்த மனசுக்கு ஆதாரமாக இருக்கிற ஆத்மா என்பது என்ன என்று அனவரதமும் விசாரம் செய்துகொண்டே இருப்பதுதான் ஞான மார்க்கம் என்பது. இதே விசாரத்தில் மனஸை முழுக்கினால், கடைசியில் ஈசுவராநுக்கிரகத்தினால் மனசு மறைந்து ஆத்மா இன்னதென்று தெரிந்துவிடுகிறது. ஆத்ம ஸாக்ஷாத்காரம் என்கிற அந்த நிலையே விடுதலை அல்லது முக்தி என்று தெரிகிறது.

ஆனால் கோபாலகிருஷ்ண பாரதியார், ‘பக்தி பண்ணிக் கொண்டிருந்தால் முக்தி பெறலாமே’ என்று பாடுகிறார். வைகுண்டத்துக்குப் போவதுதான் முக்தி, கைலாசத்துக்குப் போவதுதான் முக்தி என்பவர்களைப்போல் இவர் சொல்லவில்லை. அந்தந்த தேவதைகளிடம் பக்தி செலுத்தினால், அதற்கு உரிய லோகத்துக்கு – வைகுண்டம், கைலாசம் போன்றவற்றுக்கு – செல்லலாம். த்வைதிகளும் விசிஷ்டாத்வைதிகளும் இதையே முக்தி என்பார்கள். ஆனால் இங்கேயும் ஈஸ்வரன் – பக்தன் என்கிற பேதமும் அதை அநுபவிக்கிற மனஸின் ஆட்டமும் இருக்கத்தான் செய்யும். எல்லாம் ஒன்று பட்டுப்போகிற அத்வைத முக்தி இதற்கு வேறானது. கோபாலகிருஷ்ண பாரதியார் அத்வைதியாக இருந்தும் இப்படிப் பாடுகிறார்.

அவர் மட்டுமில்லை, ஞானம்தான் முக்திக்கு நேர் சாதனம் என்று சொன்ன அத்வைத பரமாசாரியரான சங்கரரே நிறைய பக்தி ஸ்தோத்திரம் செய்திருக்கிறார். க்ஷேத்திராடனமும் தீர்த்தாடனமும் செய்திருக்கிறார்; ஷண்மத ஸ்தாபனம் என்று ஆறுவித மூர்த்திகளின் வழிபாட்டை நிலை நாட்டியிருக்கிறார். அவருடைய மடத்தில் வந்துள்ள நாங்களும் மணிக்கணக்காக மூர்த்தி பூஜை பண்ணுகிறோம். இது ஏன்?

ஆத்மா எப்படி இருக்கும் என்று மனசுக்குத் தெரியாது. மனஸே ஆத்மாவிலிருந்துதான் முளைத்திருக்கிறது. எனவே, இந்த மனஸால் ஆத்மாவை எப்படி அளக்க முடியும்? மனசு மறைந்தால்தான் ஆத்ம ஸ்வரூபம் பளீரென்று பிரகாசிக்கிறது. ஆனால் நம் மனஸோ அலைபாய்ந்தபடிதான் இருக்கிறது. எனவே முதலில் பல திசைகளில் போகிற சிந்தனையை ஒருமுகப்படுத்த வேண்டும். இதற்குத்தான் பக்தியை வழியாக வைத்திருக்கிறார்கள். உலக விஷயங்கள் மனஸை நானாதிசையிலும் சிதற அடிப்பவை. ஆனால் ஈஸ்வரனையே சிந்திக்கச் சிந்திக்க மனசு அவன் ஒருவனிடமே குவிந்து, தைல தாரையாக – அதாவது எண்ணெய் பிசிர் இல்லாமல் கம்பியாய் ஒழுகுவதுபோல், அவனிடமே ஒருமுகப்படுகிறது. மனசு ஒருமுகப்படுகிற இந்த நிலை முற்ற முற்ற மனஸே மறைந்துபோகத் தொடங்கும். இவ்விதமாக ஞானத்துக்கு பக்தியே துணைபுரியும். இதனால்தான் ஸ்ரீ சங்கர பகவத்பாதர்கள் பக்தியை ஞானத்துக்குப் படியாக வைத்தார்.

ஆத்ம ஸாக்ஷாத்காரம் என்கிற முக்தி, செத்துப்போனபின் எங்கேயோ போய் அடைகிற நிலை இல்லை. எப்போதுமே ஆத்மா இருந்துகொண்டேதானே இருக்கிறது? அது இல்லாவிட்டால் நம் சரீர யாத்திரை ஏது? ஆகையால் இந்த சரீரம் இருக்கிறபோதே ஆத்மாவை அநுபவிப்பதான முக்தி நிலை சாத்தியம்தான். இம்மாதிரி முக்தி அடைந்த பின்னும் நம்முடன் உயிர் வாழ்கிற பிரம்ம ஞானியைத்தான் ஜீவன் முக்தன் என்கிறோம்.

இப்படிப்பட்ட பிரம்ம ஞானிகளும் சிலர் பக்தர்களாக இருந்திருக்கிறார்கள். அதாவது பிரம்மத்தின் ஏதோ ஒரு தேவதா ரூபத்தில் எல்லை இல்லாத அன்பை வைத்திருக்கிறார்கள். இவர்களுடைய பக்திதான் காரணமில்லாத பக்தி. பக்தி செய்வதால் இவர்கள் பெறக்கூடிய பயன் ஏதும் இல்லை. ஏனெனில் வாழ்க்கைப் பயன்களில் எதற்கு மேலாக ஏதுமில்லையோ அந்த முக்தி நிலையே யை இவர்களுக்கு ஸித்தித்து விட்டது. அதற்கு மேலாக அடைய வேண்டியது என்ன இருக்கிறது? இருந்தாலும் ஈசுவரனாகத் தோன்றுகிற பிரம்மத்தின் லீலா சக்தியை இவர்கள் ரஸித்துக்கொண்டு, அற்புத லீலை செய்கிற அந்த ஈஸ்வரனை ஒர் இஷ்டமூர்த்தியாகக் கண்டு, அதனிடம் காரணமே இல்லாத – பிரதிப் பிரயோஜனமே எதிர்பாராத – உத்தமமான அன்பைப் பொழிகிறார்கள். மோக்ஷம் வேண்டும் என்ற பிரயோஜனத்தைக்கூட ஜீவன் முக்தன் எதிர்ப்பார்க்க அவசியமில்லையே! இந்த பக்தியைத்தான், பிறவியிலிருந்தே பிரம்ம நிஷ்டரான சுகர், “அஹைதுகீ பக்தி” என்கிறார். ஹேது என்றால் காரணம், காரணமே இல்லாதது அ-ஹைதுகீ. இது முக்தி வந்ததற்குப் பிந்தைய நிலையிலுள்ள பக்தி.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is பக்தி செய்வது எதற்காக ?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  முக்திக்கு முந்தைய நிலையில் பக்தி
Next