ஆலயமும் தெய்வீகக் கலைகளும் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் இந்தியாவுக்கு வந்த மெகஸ்தனிஸ் அப்போது நம் ஜனங்கள் எவ்வளவு ஸத்துக்களாக வாழ்ந்தார்கள் என்பதைத் கூறியிருக்கிறான். ‘இந்திய மக்களுக்குப் பொய்யே சொல்லத் தெரியாது; தெருவில் போட்டுக் கிடக்கிற பணத்தைக்கூட எடுத்துச் செல்ல மாட்டார்கள்’ என்றெல்லாம் மெகஸ்தனிஸ் சொல்லியிருக்கிறான். அந்தக் காலத்து ஜனங்களின் மனசு மாதிரியே இப்போதும் இருக்கக்கூடாதா என்று ஆசையாக இருக்கிறது.

அன்றைக்கு அவர்கள் அவ்வளவு உயர்வாக இருந்ததற்குக் காரணம் என்ன? இன்று நாம் இவ்வளவு தாழ்ந்து போய்விட்டதற்கு காரணம் என்ன? அந்தந்தக் காலத்தின் சூழ்நிலையே அந்தந்த மனப்பான்மைக்கும் காரணமாக இருக்கிறது. பழங்காலத்தில் பொது ஜனங்கள் எல்லோரும் கோயிலுக்குப் போனார்கள். அங்கே அவர்களுக்கு நல்வழி கூறுவதற்காக மகாபாரதம் முதலிய ஸத் கதைகள் நடைபெற்றன. இதற்காகவே ராஜாங்கத்தில் மானியம் தரப்பட்டு வந்தது. நாடகம், கூத்து எல்லாமும்கூடத் தெய்வ சம்பந்தமாகவே இருந்தன. தங்கள் தொழிலைச் செய்வது, ஆலய தரிசனம், ஸத் கதை சிரவணம் இவற்றுக்கே மக்களின் பொழுது சரியாக இருந்தது. இதனால் யோக்கியர்களாகவே இருந்தார்கள். இப்போது ஜனங்களைக் கவர்ந்திழுப்பதற்கு என்ன என்னவோ ஆபத்துக்கள் எல்லாம் வந்து விட்டன. தர்மத்துக்கு விரோதமான படக்காட்சிகள், கதைப் புஸ்தகங்கள் எல்லாம் அதிகமாகி விட்டன. ஜனங்கள் இதற்கிடையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது பலவிதமான அரசியல் கட்சிகள் வேறு அவர்கள் புத்தியைக் கலக்கிக் கொண்டிருக்கின்றன. எங்கேயும் சஞ்சலம், அதிருப்தி, யோக்கியதைக் குறைவு, லஞ்சம் இவை அதிகரித்துவிட்டன.

பழைய காலத்தில் ராஜாவின் மானியத்துடன், பாரதம் முதலான ஸத் கதை நடந்தபோது, தலைமுறை தத்துவமாக அது செழித்து வளர்ந்தது. இப்போது ஹரிகதை, உபந்நியாசம் செய்கிறவர்கள் தங்கள் தலைமுறையோடு அது போகட்டும் என்று நினைக்கிறார்கள். அதேபோல் அர்ச்சகர்கள் தங்கள் தலைமுறையோடு அர்ச்சனைத் தொழில் போகட்டும் என்று எண்ணுகிறார்கள். முன்பு அரசர்கள் தெய்வ பக்தியை வளர்த்து எங்கு பார்த்தாலும் சாஸ்திரோக்தமாக ஆலயங்கள் கட்டியதால் ஆகம சாஸ்திர வித்வான்கள், சிற்பிகள், ஸ்தபதிகள் ஆகியோர் வம்சாவளியாக சுபிட்சமாக வாழ்ந்தனர். இன்றைய சூழ்நிலையிலோ இவர்கள் யாவரும் தங்களோடு இந்தத் தொழில் தொலையட்டும் என்று நினைக்கும்படியாகி விட்டது. ஈசுவர சம்பந்தத்துடனேயே ஆயிரம் காலப் பயிராக வளர்ந்த நாட்டுக்கலைகளும் இப்போது மங்குகின்றன. துரௌபதி அம்மன் கோயிலில் உடுக்கடித்து பாரதம் சொல்கிறவன், கரகம் ஆடுகிறவன், அரிச்சந்திரன் கூத்துப் போடுபவன் எல்லோரும் அடுத்த தலைமுறையை இந்தத் தொழிலில் பழக்கவில்லை. நாட்டுக் கலைஞர்களுக்கு, முன்பு ராஜாங்க மானியம் கிடைத்து வந்தது. இப்போது ‘பழைய கிராமப் பண்பாடு’ (Folk Culture) என்று பெரிதாகப் பேசினாலும், ஏதோ அவ்வப்போது மந்திரிமார்களே அந்த மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு கிராமிய நடனக்காரர்களோடு ஃபோட்டோ எடுத்துக்கொண்டு பத்திரிக்கையில் பிரசுரமாகிறது தவிர, இந்தக் கலைஞர்களுக்கு மானியம் மாதிரி எதுவும் இல்லாமல் இந்தக் கலைகளும் நசிகின்றன.

கோயில்களும் அவற்றைச் சேர்ந்த இந்தக் கலைகளும் ஓங்கி வளர்ந்த நாளில் தேசம் எப்படி இருந்தது என்று மெகஸ்தனிஸ் ‘சர்டிஃபிகேட்’ கொடுத்திருக்கிறான். இவை எல்லாம் மங்கிப்போயிருக்கிற இன்றைக்குத் தேசம் எப்படி இருக்கிறது என்பதையோ பிரத்யக்ஷமாகவே பார்க்கிறோம். எங்கே பார்த்தாலும் பொய்யும், சஞ்சலமும், கலப்படமும், அதர்மமும் மிகுந்துவிட்டன.

இவை நிவிருத்தியாக வழி ஒன்றுதான்; பழைய காலத்தைப்போலக் கோயில்களைச் சமூக வாழ்வின் மத்திய ஸ்தானமாக்கிவிட வேண்டும். அன்றுபோல் இப்போதும் தெய்வ சம்பந்தமான பழங் கலைகளை வளர்க்க வேண்டும்.

க்ஷேத்திரங்களில் மகா புருஷர்கள் உண்டாக்கிய சாந்நித்யத்தை மந்திரங்களாலும் ஆகம சாஸ்திர விதிகளாலும் ரட்சித்து வரவேண்டும். ஆலயங்களில் சாந்நித்தியம், அங்கு ஆகம சாஸ்திரமறிந்த ஸ்தபதிகள் மூலம் திருப்பணி, கோயிலில் எப்போதும் ஸத்கதா சிரவணம், கிராம தேவதைக் கோயில்களில் பூசாரியின் பாரதக் கதை இவற்றை ஏற்படுத்தி விட்டால் அர்ச்சகர்களுக்கும் சிற்பிகளுக்கும் மற்றக் கலைஞர்களுக்கும் வாழ்வு தருவதோடு, தேசத்துக்கே நல்ல வாழ்வு தந்ததாகும். நம் தேசம் ஒன்று நன்றாய் இருந்து விட்டால் போதும். லோகம் முழுதும் அதனிடமிருந்து சகல க்ஷேமங்களையும் பெற்றுக் கொண்டு விடும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is ஆலயங்களின் தூய்மை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  ஆலயமும் ஆஸ்பத்திரியும்
Next