கண்டமும் அகண்டமும் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

ஒரே ஒரு சூரியன்தான் உள்ளது; கையிலே கொஞ்சம் ஜலத்தை எடுத்துக் கொண்டு நல்ல வழுவழுப்பான தரையில் அதைத் தெளித்தால் ஒவ்வொரு முத்து ஜலத்திலும் பிரதி ரூபமாக ஒரு சூரியன் தெரிகிறது. அவை எல்லாம் பிரிந்து பிரிந்து காணப்பட்டாலும் அநேக சூரியன்கள் இருப்பதாக ஆகாது. சூரியன் ஒன்றுதான். அவ்வாறே, உலகில் காணும் இத்தனை ஜீவராசிகளுக்குள் சிறியதாக மினு மினுக்கின்ற அறிவொளி அனைத்தும் ஒரே பிரம்மத்தின் பிரதிபலிப்புத்தான். இதைத்தான் ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யரவர்கள் ப்ரம்ம ஸூத்ர பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மூலமாக இருக்கும் அகண்டமான ஒரே சக்தி எதுவோ, அறிவு எதுவோ, அந்த எல்லை கடந்த சக்திதான், அறிவுதான் நம்மிடத்தில் ஓர் எல்லைக்குள் பிரிந்து கண்டம் கண்டமாகத் தோன்றுகிறது. அந்த ஒரே வஸ்துதான் வேதத்தின் அந்தத்தில் இருக்கும்படியான தத் (அது) என்பது. ‘தத்’ என்றால் தூரத்தில் எல்லாவற்றுக்கும் மேலே இருக்கிறது என்று அர்த்தம். நாம் இப்போதிருக்கும் நிலையில் அது தூரத்தில் இருப்பதாகத் தோன்றினாலும், உண்மையில் தூரத்தில் கிட்டத்தில் எல்லாமுமாய் இருப்பது அதுதான். ‘அது நீயேதான்’ – ‘தத்-த்வம்’ என்கிறது வேதம்.

இப்படி நான் சொல்லுகிற க்ஷண காலம் நமக்கு எல்லாம் புரிந்து விட்டதுபோல் இருக்கிறது. இந்த ஒரு க்ஷணத்தில் எப்படி இருக்கிறாமோ அப்படியே எப்போதும் இருந்தால் துக்கம் இல்லை. ஆனால் அடுத்த க்ஷணமே நமக்கு இந்த சத்தியமான பார்வை போய்விடுகிறது. நாம் பல விதமான பொய்களாலேயே கஷ்டங்களுக்காளாகிறோம். பொய்யினால் பெறும் ஆனந்தமும் விரைவில் பொய்யாகிவிடும். உண்மையில் எப்போதும் ஆனந்தமாக இருப்பதற்கு எப்போதும் உண்மையாக இருக்கிறவனைப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். உண்மையாக இருக்கிறவன் ஸ்வாமி ஒருத்தன்தான். ஆசாமிகளாகிய நாம் அந்த ஸ்வாமியைத்தான் பற்றிக் கொள்ள வேண்டும். கண்டம் கண்டமாக நாம் இருக்கிறோம். கண்டம் கண்டமாக இருப்பது எல்லாம் முடிவில் அகண்டத்தோடு ஒன்றுபடும்போது அகண்டமாக ஆகி, நிரந்தர ஆனந்தமாகி விடுகிறது.

அகண்டமாக இருப்பவன் ஒருவன்தான் இருப்பு. கண்டமாக இருப்பது வெறும் நினைவுதான். நினைவு, கனவு எல்லாம் சாசுவத உண்மை அல்ல.

அகண்டமாக இருக்கிற பரமாத்மாவைக் கண்டம் கண்டமாக உருவமும் குணமும் உள்ளவனாக தியானம் பண்ணிக் கடைசி நிலையாக நிர்குணத் தியானம் செய்ய ஆரம்பித்தால், சண்டை, பூசல் ஒன்றுமே வராது. துக்கம், பயம் எதுவுமே இராது. பரம சாந்திதான் இருக்கும். இதுதான் ஸ்ரீ சங்கர பகவத்பாதர்கள் உபநிஷத மரத்திலிருந்து நமக்குப் பறித்துக் கொடுத்த பழம்.

இந்தப் பழுத்த நிலையை அடைவதற்குமுன், மொட்டாக, பூவாக, பிஞ்சாக, காயாக இருந்துதான் முதிர வேண்டும். பழுக்கும் நிலைவரைக்கும் பொறுமையாகத்தான் இருக்க வேண்டும். காயாக இருக்கும்போதே பழமாவதற்கு அவசரம் காட்டி, வெம்பி விழுந்துவிட்டால் பயன் இல்லை. ‘வெம்பி விழுந்திடுமோ?’ என்று ராமலிங்கர் சொல்லுகிறார். நமக்கும் அந்தக் கவலை இருக்க வேண்டும். கனிந்த பழம் ஆகும் வரையில் பூஜை, ஜபம், தபம் எல்லாம் இருக்கவேண்டும். வேதத்தின் அந்தத்தில் இருக்கும்படியாக தத்-தத்வம் என்கிற உண்மை நிலைக்கு நாம் வரும் வரையில் அவை வேண்டும். அப்போதுதான் வெம்பாது பழுக்கும். கடைசியில் அந்த தத்வம்—மூலம்—எங்கே இருக்கிறது. ‘தன்னிடத்திலேயேதான் இருக்கிறது; எந்த அறிவு தத்துவத்தை ஆராய்கிறதோ, அந்த அறிவுக்குள்ளேயே இருக்கிறது’ என்பதை அநுபவத்தில் உணரலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is அழுக்கு நீங்க வழி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  நிறைந்த ஆனந்தம்
Next