கல்வி முறையின் கோளாறு : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

கல்வியில் முதல் பிரயோஜனமாக விநயம் ஏற்பட வேண்டும். பழைய நாளில் மாணவனுக்கு ‘விநேயன்’ என்றே பெயர் இருந்தது. அடக்கம் இல்லாத படிப்பு படிப்பே ஆகாது. தன்னைத்தானே அடக்கிக் கொள்ளும்படியான நல்ல குணம் முதலில் வரவேண்டும். ஆனால், நடைமுறையிலோ படிப்பு இல்லாத மலைச்சாதி மக்களிடையே, நாகரிகம் இல்லாத ஜனங்களிடத்திலேதான் கெட்ட குணங்கள் அதிகம் இருப்பதாகக் காணவில்லை. அங்கே மாஜிஸ்டிரேட் கோர்ட்டு, ஹை கோர்ட்டு முதலியவை இல்லை; குற்றங்கள் இல்லை. நிறைய ஹைஸ்கூல், காலேஜ், யூனிவர்ஸிட்டி முதலியன எல்லாம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போகிற இடங்களில்தான் கோர்ட்டு வழக்குகள் கிரிமினல் குற்றங்கள் ஏமாற்றுவித்தை ஜேப்படித் திருட்டு முதலியன அதிகமாகிக்கொண்டிருக்கின்றன.

கல்வியின் பயன் மெய்யான பொருளாகிய ஆண்டவனைத் தெரிந்து கொள்வதுதான். ஆனால் இந்தக் காலத்தில் படிக்கிறவர்களில் அநேகருக்குத் தெய்வ பக்தியே இருப்பதில்லை.

இது வேடிக்கையாக இருக்கிறதல்லவா? படித்ததன் பிரயோஜனம் நல்ல குணம்; அடக்கம். இப்போது நாட்டில் முன்னைவிட நிறையப் படிப்பு இருக்கிறது; ஹைஸ்கூலில் இடமில்லாமல், ‘ஷிப்டு’ வைத்து வகுப்பு நடத்துகிறார்கள். இவ்வளவு இருந்தும் படிப்பின் பிரயோஜனமான விநயம் ஏற்படவில்லை. அதற்கு நேர் விரோதமான குணம் அல்லவா வளர்கிறது? படிக்கிற பையன்கள் இருக்கிற இடத்துக்குத்தான் போலீஸ், மிலிடெரி எல்லாம் அடிக்கடி வரவேண்டியிருக்கிறது.

நம் தேசப் பெண்களின் இயற்கையான குணம் அடக்கம். படிக்கிற பெண்களுக்கு ஸ்வபாவமான அடக்க குணத்தோடு, கல்வியின் பிரயோஜனமாகப் பின்னும் அதிக அடக்கம் வளரவேண்டும். ஆனால், ஸ்வபாவமாக அடங்கி நல்லவர்களாக உள்ள பெண்களின் குணத்தையுமல்லவா இந்தக் கல்வி போக்கிவிட்டது! குணத்தைக் கொடுக்கும்படியான படிப்பு, குணத்தைக் கெடுக்கும்படியாக இருக்கிறதே! ஏன்?

இதற்கெல்லாம் காரணம் என்ன என்பதை நாம் கொஞ்சம் ஆலோசித்துப் பார்ப்போம்.

‘படிப்பு என்றால் எப்படி இருக்க வேண்டும்? எப்படிப் படிக்க வேண்டும்? சிஷ்யர்கள் எப்படி இருக்க வேண்டும்? ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும்?’ என்பனவற்றை எல்லாம் விளக்கிச் சொல்கிற நீதி நூல்கள் இருக்கின்றன. அவற்றில் ‘இளமையிற் கல்!’ என்று சொல்லியிருக்கிறது. அதுவே பிரம்மச்சரிய ஆசிரமம். ஒருவனுக்கு விவாகம் ஆவதற்கு முந்தி, வினாத் தெரிந்த பிறகு இருக்கக்கூடிய காலம். அதற்குள் படிக்க வேண்டும். ஒரு குருவினிடத்தில் போய்ப்படிக்க வேண்டும் என்பது சாஸ்திரம். சிஷ்யன் பிச்சை எடுத்து வந்து குருவுக்கு தருவான். பிச்சை எடுப்பதால் அவனுக்கு அகங்காரம் கரைந்து விநயம் ஏற்பட்டது. ஆசிரியருடனேயே வசித்தால் அவரிடம் உண்மையான பிரியம் ஏற்பட்டது. அவருக்கும் இவனிடம் பிரியம் இருந்தது.

சிஷ்யர்களைக் கூடவே வைத்துக் கொண்டிருந்த குரு அவர்களுடைய மரியாதையைப் பெறுகிற விதத்தில், நல்ல ஒழுக்கங்களுடனேயே வாழ வேண்டியதாயிற்று. அவரிடம் இயல்பாகவே மாணவனுக்குப் பக்தி உண்டாயிற்று.

முன்பு நம் மாணவர்களுக்கு இருந்த குருபக்தி என்பதே இப்போது அடியோடு போய்விட்டது. பையன் வாத்தியாரைப் பார்த்து, ‘கேள்வித் தாளையே கொடுக்க வேண்டும்; இல்லாவிட்டால் அடிக்கிறேன்’ என்று சொல்லக்கூடிய நிலைமை வந்துவிட்டது.

முன்பு இருந்த பாடங்கள் இப்போதும் இருக்கின்றன. ஆனால் முறை மாறிவிட்டது. மருந்து ஒன்றாகவே இருந்தாலும், பத்தியம் மாறிவிட்டால் மருந்தே விஷமாகிவிடும் என்பது போல ஆகிவிட்டது இது. குருபக்தி போனதும் பத்தியம் போய்விட்டது.

‘சர்க்காவில் நூற்க வேண்டும்; கைகுத்தல் அரிசியைத்தான் சாப்பிட வேண்டும்’ என்றால் எல்லாராலும் அதைப் பின்பற்ற முடியவில்லை. ஆனாலும், இரண்டொருவர் இப்படி இருக்கத்தான் இருக்கிறார்கள். ‘நான் கதர்தான் உடுத்திக் கொள்வது’, ‘நான் கைக்குத்தல் அரிசியைத்தான் சாப்பிடுவது’ என்று சொல்கிறவர்களைப் பார்க்கிறோம். இதெல்லாம் பெருமைக்கு அடையாளங்களாக உள்ளன. அதுபோலவே, ‘குருகுலப் படிப்புதான் வேண்டும்’ என்று சொன்னால் அது இந்தக் காலத்தில் சிரமந்தான். இம்முறையைப் பூரணமாகக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையில் நான் சொல்லவில்லை. அப்படி வந்துவிட்டால் நல்லதுதான். ஆனாலும் அது சாத்தியம் என்று தோன்றவில்லை. இருந்தாலும்கூட, இது மாதிரியான ஒரு முறை இந்த நாட்டில் இருக்கிறது என்பதே தெரியாமல் அடியோடு அழிந்துபோக வேண்டாமே என்கிறேன். மியூஸியத்தில் வைக்கிற மாதிரியாவது ‘நான் குருகுல வாசம் செய்து படித்தேன்’ என்று வருங்காலத்தில் சொல்லிக் கொள்வதற்காவது சில பேர்கள் பழைய முறையில் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். விதை முதலையாவது ரக்ஷிக்க வேண்டும். ஏனென்றால் குருகுலவாசத்தில் ஏற்படுகிற குருபக்திதான் இன்றைய மாணவர்களின் கோளாற்றைத் தீர்க்கிற பெரிய மருந்து.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is உண்மைக் கல்வி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  வாழ்க்கைத் தரம்
Next