குற்றத்தைக் குறைக்கும் வழி : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

ராஜாங்கம் எதற்காக இருக்கிறது? ஒரு தேசத்தில் அதிக பலம் உள்ளவர்கள், குறைந்த பலம் உள்ளவரை ஹிம்ஸிக்கலாம். பெரிய கூட்டத்தார் சிறிய கூட்டத்தாரை கஷ்டப்படுத்தலாம். பலர் சேர்ந்து ஒருவனை நிர்பந்தப்படுத்தி அவனது சொத்து, வீடு முதலியவற்றை ஆக்கிரமித்துக் கொள்ளலாம். இப்படி எல்லாம் நேராமல் தேசத்தில் ஒழுங்கு இருக்கச் செய்வதற்கு ஏற்பட்டதே ராஜாங்கம்.

தப்புச் செய்பவர்களை அவ்விதம் செய்யாமல் தடுப்பதற்காக ராஜாங்கம் என்ன செய்கிறது? தண்டனை தருகிறது. தண்டனை உண்டு என்ற பயம் இருப்பதாலேயே பலர் தப்புச் செய்யாமல் தடுக்கப்படுகிறார்கள்.

ஹிம்ஸை செய்த ஒருவனுக்கு அவன் செய்ததைக்காட்டிலும் ராஜாங்கம் அதிக ஹிம்ஸை தருகிறது. பத்து ரூபாயை அவன் திருடுவதால், திருட்டுக் கொடுத்தவருக்கு சிறிது கஷ்டம் உண்டாகிறது. திருடியவனுக்கோ அதைவிடப் பெரிய கஷ்டமாகப் பல நாட்கள் சிறைவாசம் விதிக்கப்படுகிறது. இப்படிச் செய்தால்தான் அவன் மீண்டும் அந்தத் தப்பு பண்ணமாட்டான். மற்றவர்களும் அந்தத் தப்பைப் பண்ணப் பயப்படுவார்கள் என்கிற அடிப்படையில் தண்ட நீதி அமைந்திருக்கிறது. மனித இயல்புப்படி (Psychology) பார்க்கும் போது இதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

ஆனால் இதனிலும் சிலாக்கியமான ஓர் உபாயத்தையும் அரசாங்கம் அதே சமயத்தில் விருத்தி செய்யவேண்டும். குற்றம் இழைத்த பின் ஒருவரைத் தண்டிப்பதும், ஒருவர் சுபாவமான தர்ம உணர்ச்சி இல்லாமல் தண்டனைக்காகப் பயந்தே குற்றம் செய்யாமல் இருக்கச் செய்வதும் இரண்டாம் பட்சம்தான். குற்றம் செய்கிற எண்ணமே தோன்றாமல் இருக்கச் செய்வதுதான் சிலாக்கியமானது.

முதலில் ஒருவன் ஹிம்ஸை தருவது, பிறகு அரசாங்கம் அவனுக்கு அதைவிட அதிக ஹிம்ஸை தருவது என்கிற ‘அர்த்த சாஸ்திர’ நீதியையே நடைமுறையில் கடைபிடிக்க வேண்டியிருந்தாலும், இந்த அர்த்த சாஸ்திரமும், தர்ம சாஸ்திரத்தின் காலில் விழுந்து கிடக்க வேண்டியதுதான் என்பதை ராஜாங்கம் ஒரு லட்சிய நிலையாகவாவது (Ideal) புரிந்து கொள்ள வேண்டும்.

தர்ம சாஸ்திரப்படி நடக்கும் ஸத்துக்கள் உருவாவதற்கு உரிய சூழ்நிலையை அரசாங்கம் காப்பாற்றிக் கொடுத்தால், ஜனங்களுக்கு குற்றம் செய்கிற உணர்வே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும். தர்மம் அறிந்தவர்கள், தர்மத்தை அநுஷ்டிப்பவர்கள் விருந்தியாவதற்கு வசதி இருந்தால் அவர்கள் மற்றவர்களிடமும் தங்கள் வாழ்க்கை உதாரணத்தாலேயே சாந்தத்தையும் ஒழுக்கத்தையும் பரப்புவார்கள். சண்டை, பூசல், குற்றம் எல்லாம் குறையும்.

முதலில் ராஜாங்கப் பதவியில் உள்ளவர்கள் தர்ம சீலர்களாய் இருக்க வேண்டும். ‘இவர்கள் செய்வதும் சொல்வதும் சொந்த நன்மைக்காக அல்ல; நம் நன்மைக்காகத்தான்’ என்று ஜனங்கள் நம்பிக்கை வரக்கூடிய தர்மிஷ்டர்கள் தர்மப்படியே ராஜாங்கம் நடத்த வேண்டும். தர்மிஷ்டர்கள் தர்மங்களை சாந்தமாக எடுத்துச் சொன்னால் ஜனங்கள் அதன்படியே நடப்பார்கள்.

இப்படிக் குற்றமே இல்லாமல் ஆக்குகிற காரியத்தை ராஜாங்கத்தார் மட்டும் செய்ய முடியாது. தர்மசீலர்களான மற்றவர்களும் சேர்ந்து இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும். இவ்வாறு தர்மிஷ்டர்கள் கைங்கரியம் செய்வதற்கு அநுகூலமான சூழ்நிலையை ராஜாங்கம் ஏற்படுத்தித் தரவேண்டும்.

போலீசையும் கோர்ட்டையும் விருத்தி செய்வதைவிட தர்மக்ஞர்களை விருத்தி பண்ணுவதில் ராஜாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும். சொந்த நலனைக் கருதாமல், உபதேசத்தைப் பணம் பண்ணும் தொழிலாக்காமல், பரோபகாரமே லக்ஷியமாகக் கொண்டு சாந்தமாகத் தர்மங்களை எடுத்துச் சொல்கிறவர்களுக்கு ராஜாங்கம் உற்சாகம் தரவேண்டும். இந்த உற்சாகத்தாலேயே மேலும் பலர் அவ்விதம் உருவாவார்கள். எடுத்துச் சொல்வதைவிட எடுத்துக்காட்டாகத் தாங்களே இருப்பதுதான் அதிக சக்தி வாய்ந்தது.

கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்றே அர்த்தம். இதற்குப் பதில் கோயில்கள் அதிகமானால் எங்கும் சாந்தம் பரவும். பழைய கால ராஜாக்கள் கோர்ட்டுகளுக்குப் பதிலாகக் கோயில்களைக் கட்டி வந்தார்கள். பழைய கோயில்களைப் புதுப்பித்தார்கள். அந்தக் கோயில்களிலேயே பொழுது போக்குக்கான சகல கலைகளும் கூடத் தெய்வீகமாக்கப்பட்டு அர்ப்பணமாயின. ஜனங்களும் ஆலய வழிபாடு செய்து சாந்தர்களாக இருந்தார்கள். இப்போதுள்ளது போலச் சமூகச் சச்சரவு, பூசல் எல்லாம் அப்போது இல்லை.

சட்டம் போட்டுக் குற்றம் செய்யாமல் தடுப்பதைவிட, ஒரு நல்ல மார்க்கத்தைக் காட்டி, அதில் ஜனங்களைத் திருப்பித் தப்பைப் பண்ணவும் செய்யவும் அவகாசத்தைக் குறைக்க வேண்டும். இப்படி தண்டத்தைக் காட்டாமல் நல்லதைக் காட்டித் தேசத்தில் சாந்தியை உண்டாக்குவதுதான் சிலாக்கியம். இந்த சாந்திதான் நிலைத்து நிற்கும். சாந்தர்களுக்கும், ஸத்துக்களுக்கும், தர்மிஷ்டர்களுக்கும் ராஜாங்கம் மதிப்புத் தந்தாலே தேசத்திலும் ஜனங்களிடையே இந்த நல்ல பண்புகள் விருத்தியாகும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is அறமும் அன்பும் அரசாங்கமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  உண்மைக் கல்வி
Next