எள்ளும் தண்ணீரும் எங்கே போயின? : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

மநுஷ்யராகப் பிறந்த எல்லோரும் தங்களுடைய முன்னோர்கள், தெய்வம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இதுவே பித்ரு கடன், தேவ காரியம் என்பவை. நம்முடைய சக ஜீவர்களுக்கு நம்மாலானதைச் செய்ய வேண்டும். ஆதித்யம் (ஓர் அதிதிக்காவது உணவு படைப்பது) அல்லது திருக்குறளிலே ‘விருந்து’ என்பது இதுதான். இது மனுஷ்ய யக்ஞம். பிரம்ம யக்ஞம் என்று இன்னொன்று. ‘பிரம்மம்’ என்றால் பல அர்த்தம். இந்த இடத்தில் ‘வேதம்’ என்று அர்த்தம். வேதம் ஓதுவதும், ஓதுவிப்பதுமே பிரம்ம யக்ஞம். இது ரிஷிகளின் திருப்திக்காக ஏற்பட்டது. இது எல்லோரும் செய்வதல்ல. எல்லோருக்காகவும் பிராமண ஜாதியினர் மட்டும் செய்வது. எல்லோரும் செய்வதற்காக ஏற்பட்ட இன்னொரு கர்மம் ‘பூத யக்ஞம்’. அதாவது மனுஷ்ய ஜீவனாக இல்லாத ஜீவராசிகளுக்குக்கூட நம் அன்பைத் தெரிவித்து உணவூட்டுகிற காரியம். பித்ரு யக்ஞம், தேவ யக்ஞம், மநுஷ்ய யக்ஞம், பூத யக்ஞம் இவற்றை எல்லோரும் ஏதோ ஒரு ரூபத்தில் செய்யக் கடமைப் பட்டிருக்கின்றோம். வைதிகத் தர்மப்படி அவரவரும் தங்களுக்கான தொழிலைச் செய்து ஈசுவரார்ப்பணம் பண்ணுவதே அவரவருக்கும் பிரம்ம யக்ஞம் என்று சொல்லலாம்.

வேத நெறியில் சொல்லப்பட்டதையே ஏறக்குறைய திருவள்ளுவரும்,

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

‘தென் புலத்தார்’ என்பது பித்ருக்கள். பித்ருக்களான தாய் தந்தையார்களுக்கும் மூதாதையர்களுக்கும் நமது கடமைகளை எல்லோரும் அவசியம் செய்தாக வேண்டும். ‘மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ’ என்று வேத மாதாவும், இங்கே நம் எல்லோருக்கும் வேத ஸாரத்தையே லகுவாகப் பிழிந்து கொடுத்த அவ்வை, ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்றும் சொல்லுகிறார்கள். தாய் தந்தையர் ஜீவிய வந்தர்களாக இருக்கையில், அவர்களிடம் பணிவுடன் நடந்து கொண்டு, அவர்களுக்கு நம்மால் இயன்ற சௌக்கியமெல்லாம் செய்து தரவேண்டும். தாய் தந்தையர் நமக்காக ஆதியில் செய்துள்ள தியாகங்களுக்கு நாம் பிரதியே செய்ய முடியாது. அவர்களது மனம் கோணாமல் அவர்களை வைத்துக் காக்க வேண்டும்.

அவர்கள் இந்த உலகத்தை விட்டுப்போன பிற்பாடும், அவர்களுக்காக சாஸ்திரப் பிரகாரம் தர்ப்பணம், சிரார்த்தம் (திதி) இவற்றை அனைவரும் தவறாமல் செய்ய வேண்டும்.

பெற்றோர் உயிரோடு இருக்கும் வரையில் அவர்களை வைத்துப் பராமரிக்க வேண்டும் என்பதை ‘சீர்திருத்த’க்காரர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் மரண மடைந்த பின் பித்ரு காரியம் செய்வது அவர்களுக்குப் பரிகாசமாக இருக்கிறது.

‘எள், தர்ப்பண ஜலம், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு எல்லாம் இங்கேயே இருக்கின்றன; அல்லது கண் முன்னாலேயே ஒருத்தன் எடுத்துப் போனான். அல்லது சாப்பிட்டுவிட்டான். பிதிரர்கள் எங்கேயோ மறு ஜன்மா எடுத்து விட்டார்கள் என்று நீரே சொல்கிறீர். அப்படியிருக்க இங்கே உள்ள வஸ்து அங்கே போய் அவர்களை சேருகிறது என்பது பைத்தியக்காரத்தனம் அல்லவா? என்று சீர்த்திருத்தக்காரர் கேட்கிறார். அவர் வாய்விட்டுக் கேட்கிறார்; உங்களில் பலருக்கும் மனசுக்குள் இப்படிச் சந்தேகம் இருக்கலாம்.

உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்:

ஒருவர் பையனைப் பட்டணத்தில் படிக்க வைத்திருந்தார். அவர் பரிட்சைக்குப் பணம் கட்டவேண்டியிருக்கிறது. அதுவும் மறுநாள் கட்ட வேண்டியிருந்தது. உடனே அப்பாவுக்கு, ‘தந்தி மணியார்டரில் பணம் அனுப்பு’ என்று எழுதினான். அப்பாவுக்குத் தந்தியும் மணியார்டரும் தனித்தனியாகத் தெரியும். பிள்ளையோ ‘தந்தி மணியார்டர்’ அனுப்பும்படி எழுதியிருந்தான். அப்பா தபாலாபீஸுக்குப் போனார். ரூபாயைக் கொடுத்துவிட்டுத் தந்தி மணியார்டர் பண்ண வேண்டும் என்றார். அவர், தபாலாபீஸ் குமாஸ்தா ரூபாயில் ஓட்டை பண்ணித் தந்திக் கம்பியில் கட்டி அனுப்புவார் என்று எண்ணினார். ஆனால் பணம் வாங்கிக் கொண்ட குமாஸ்தா ரசீது கொடுத்துவிட்டு, “சரி, உம்முடைய பணம் சேர்ந்துவிடும். அனுப்பியாகிவிட்டது” என்றார். குமாஸ்தா பணத்தை வாங்கி பெட்டியில் போட்டதையும், ஓட்டை பண்ணிக் கம்பியில் கோர்க்காமலிருப்பதையும் பார்த்த அப்பாக்காரர், “என் பணம் இங்கேதானே இருக்கிறது! அதில் ஓட்டை ஒன்றும் போட்டு அனுப்பவில்லையே! அது எப்படிப் போய்ச் சேரும்” என்று கேட்டார். “அது போய்ச் சேர்ந்துவிடும்” என்று மறுபடியும் குமாஸ்தா சொன்னார். “கட்டுக் கடகட” என்று தந்தியும் அடித்தார். ‘ஏதோ லொட்டு லொட்டென்று சப்தம் பண்ணுகிறான். சேர்ந்துவிடும் என்று சொல்கிறான். ரூபாய் இங்கே இருக்கிறது. லொட் லொட்டென்று கட்டையை இங்கே அடித்தால் அங்கே எப்படிப் போய்ச் சேரும்’ என்று அப்பாவுக்குச் சந்தேகம் வந்து விட்டது.

ஆனாலும் பணம் போய்ச் சேர்ந்து விட்டது. தர்ப்பணம் முதலியன பண்ணுவதும் அந்த மாதிரியே ஆகும். நாம் எதைக் கொடுத்தாலும் அதற்கான சட்டப்படி கொடுக்க வேண்டும். சாஸ்திரம் என்கிற சட்டம் விதித்தபடி நாம் கொடுப்பதைத் தெரிந்து கொள்கிற பிதுர் தேவதைகள் அது யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்குச் சேர்த்து விடுவார்கள். பிதிருக்கள் மாடாகப் பிறந்திருந்தால் வைக்கோலாக்கிப் போட்டுவிடுவார்கள். குதிரையாகப் பிறந்திருந்தால் புல்லாக்கிப் போடுவார்கள். பிதுர் தேவதைகளுக்கு பரமேசுவரன் இப்படி உத்தரவு பண்ணி, இதற்கான சக்தியும் தந்திருக்கிறார். ஆகையால் சிரார்த்தத்தன்று கொடுப்பதைப் பெற்றுக் கொள்ள அப்பா நேரில் வர வேண்டியதில்லை.

தந்தி மணியார்டர் செய்தவனுடைய பணமோ வாங்கிக் கொள்ளுகிறவனிடம் நேராகப் போவதில்லையல்லவா? மணியார்டர் பெறுகிறவன் வேறு தேசத்தில் இருந்தால் அங்கே நம் ரூபாய் நோட்டுச் செல்லவே செல்லாது. இங்கே ரூபாயைக் கட்டினாலும் வெளி தேசத்தில் டாலராகவோ, பவுனாகவோ மாற்றித்தரவும் ஏற்பாடு இருக்கிறது. ஆனால், நம் ஊரில் டாலரையோ பவுனையோ கட்ட முடியாது. இங்கே செல்லுபடியாகிற ரூபாயைத்தான் ஏற்றுக்கொள்ளுவார்கள். அப்படியே சாஸ்திரப் பிரகாரம் விதிக்கப்பட்ட எள், தண்ணீர், வாழைக்காய் இதுகளை இங்கே தந்தால், பிதிருக்கள் இருக்குமிடத்தில் அவர்களுக்கு ஏற்ற உணவாக மாற்றித் தரப்படும்.

பிதிருக்களிடம் நமக்குள்ள நன்றி மனோபாவமும், சாஸ்திரத்தில் நமக்குள்ள சிரத்தையுமே முக்கியம். “இன்னொருவனுடைய ஆரோக்கியத்துக்காக நான் ‘டோஸ்ட்’ சாப்பிடுகிறேன்” என்று பார்ட்டியில் வெள்ளைக்காரர்களும் வேறொருவன் பேரைச் சொல்லிக் கொண்டு தாங்களே போஜனம் செய்கிறார்கள். தங்களுடைய மனோபாவத்தின் சக்தியால் இன்னொருவனுக்கு ஆரோக்கியம் உண்டாகும் என்று நம்பி அப்படிச் செய்கிறார்கள். சிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம். சிரத்தை நமக்கு முக்கியம். ஒரு காரியம் என்று பண்ண ஆரம்பித்தால் அதற்குரிய சட்டப்படிதான் பண்ண வேண்டும். லெட்டர் எழுதினால், “இப்படித்தான் அட்ரஸ் எழுதுவேன்; அந்தத் தபால் பெட்டியில் போடுவானேன்? எங்களகத்தில் அதைவிட நல்ல பெட்டி செய்து அதில் போடுவேன்” என்று சொல்லலாமா? காரியமில்லாத மனோபாவமாக இருக்கிற வரையில் அன்பு, பக்தி, ஞானம் இவற்றைக் கட்டுப்பாடின்றிச் செலுத்தலாம். காரியம் என்று செய்கையில் அதற்காக ஏற்பட்ட விதியை விடவே கூடாது.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is சத்தியம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  பூஜை
Next