அஹிம்சை : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

எல்லா மக்களுக்கும் பொதுவான சாமானிய தர்மங்களில் அஹிம்சையே முதலானது என மனு தர்ம சாஸ்திரம் விதிக்கிறது. மனஸை ஸ்வாதீனப்படுத்திக் கொள்ளும் யோகத்துக்கு ஓர் அங்கமாக அஹிம்சை கருதப்படுகிறது.

சரீரத்தால் ஹிம்சை செய்யக்கூடாது என்பது மட்டும் அஹிம்சையல்ல; யாருக்கும் எவ்விதக் கஷ்டமும் ஏற்படவேண்டுமென்று மனஸாலும் நாம் எண்ணக்கூடாது. வாயால் பிறருக்குக் கஷ்டம் தருகிற பேச்சைப் பேசக்கூடாது.

சுபாவத்தில் நம்மில் யாருக்கும் பிறரை ஹிம்சித்துப் பார்க்க வேண்டும் என்று ஆசையில்லை. ஆனாலும் பிறர் ஏதாவது குற்றம் செய்வதாக நமக்குத் தோன்றினால், அல்லது நமக்கு அவர்கள் கெடுதல் செய்வதாகத் தோன்றினால், அவர்களுக்குப் பலவிதத்தில் ஹிம்சை தர எண்ணுகிறோம். நம்முடைய சின்னஞ்சிறு குழந்தை தெரியாத்தனத்தால் நம் வீட்டில் நெருப்பை வைத்து விட்டால் குழந்தையை ஹிம்சிக்கிறோமா? அப்படிச் செய்யமாட்டோம். நெருப்பை அணைக்கவே முற்படுவோம். மறுநாள் முதல் அந்தக் குழந்தை நெருப்பண்டை போகாமல் ரக்ஷிப்போம். நமக்குத் துன்பம் தருவதாகத் தோன்றுகிற எவரையும், அந்தக் குழந்தையாகவே பாவிக்க வேண்டும். மறுபடியும் தவறு செய்யாமல் அவரை அன்புடன் தடுத்து ரக்ஷிக்க வேண்டும். அவர்மீது துவேஷம் பாராட்டி, பதிலுக்கு ஹிம்சை தரக்கூடாது. இதுதான் உண்மையான அஹிம்சை.

இது நம் மனத்தை வசப்படுத்திக்கொள்ளும் யோகத்துக்கு மிகவும் பிரயோஜனமாகிறது. மனம் பூதம் போன்றது. ஆனால், பூதத்தை – வேதாளத்தை – விக்கிரமாதித்தன் வசப்படுத்தியபின், அது அவனுக்காக எவ்வளவு காரியம் செய்தது! அப்படியே வசப்பட்ட மனம் எவ்வளவோ நல்லதைச் செய்யும்.

யானை கட்டுப்படாவிட்டால் உலகுக்கு உபத்திரவம்தான்; ஆனால் கட்டுப்பட்டுவிட்டால் எத்தனை நல்ல காரியங்களை அதன் மூலம் சாதிக்க முடிகிறது! யானை பலம் கொண்ட மனஸைக் கட்டுப்படுத்தினால் எத்தனையோ நல்லதைச் செய்யலாம். ஆஞ்சநேய ஸ்வாமி மனோஜயம் செய்ததால்தான் அவ்வளவு சக்தி பெற்றிருந்து அத்தனை ஸத்காரியங்களை செய்தார். மனத்தின் சக்தி அபரிமிதமானது. இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் பராசக்தியின் ஒரு மனம்தான் சிருஷ்டித்திருக்கிறது. இந்த சிருஷ்டியில் இருக்கிற ஒரு சிறிய எறும்பின் சின்ன மனமோ, இந்தப் பிரபஞ்சம் முழுவதிலும் பாய்ந்தோடுகிறது.

‘அஹிம்சையை அநுசரித்தேன், மனம் வசப்பட்டது’ என்று எத்தனையோ மகான்களும் யோகிகளும் சொல்லியிருக்கிறார்கள். அஹிம்சையினால் கோபம்போய் மனசானது அன்பில் தெளிந்து விடுவதால், அப்புறம் அதை வசப்படுத்துவது சுலபமாகி விடுகிறது.

அஹிம்சையின் முக்கிய பிரயோஜனம் சித்தம் அடங்குவதே. ஆனால், அஹிம்சையை அப்பியசிப்பதால், நாம் உத்தேசிக்காமலே வேறொரு பலனும் ஏற்படும். இதற்கு ‘அவாந்தரப் பிரயோஜனம்’ என்று பெயர். நீங்கள் எல்லோரும் இந்த மடத்துக்குப் பூஜை பார்க்கத்தான் வந்திருக்கிறீர்கள். அதுதான் உங்கள் உத்தேசம். அதோடுகூட மேளம் கேட்கிறீர்கள்; ரொம்ப நாளாக பார்க்காத பலரை இங்கு பார்த்தீர்கள்; இப்போது உபந்யாஸம் கேட்கிறீர்கள் – இதெல்லாம் உத்தேசிக்காமலே கிடைக்கும் அவாந்தரப் பிரயோஜனம்.

இவ்வாறே ஒருவன் மனம், வாக்கு, காயம், என்ற திரிகரணங்களாலும் அஹிம்ஸையைப் பூரணமாகச் சாதித்து விட்டால், அவனுடைய சங்கற்பமின்றியே – அதாவது அவாந்தரப் பிரயோஜனமாக – அவனுடைய சந்நிதானத்துக்கு வருகிற எல்லாப் பிராணிகளும் தாமாகவே தங்கள் பகைகளை மறந்து அஹிம்ஸா மயமாகிவிடும்.

அஹிம்ஸா ப்ரதிஷ்டாயாம்
தத்ஸந்நிதௌ வைரத்யாக:
– யோக சூத்திரம்.

அஹிம்ஸையைப் பூரணமாக அநுஷ்டித்தவன் இருக்குமிடத்தில் குரூரமானவர் மனத்திலும் சாந்தம் உண்டாகும். எனவே, தான் அன்போடு இருப்பதே இவனது சங்கற்பமானாலும், மற்றவர்களையும் அன்பாக ஆக்கும் அவாந்தரப் பிரயோஜனமும் கிடைக்கிறது.

சந்நியாசி பூரண அஹிம்சையை அநுஷ்டிக்க வேண்டும். அவன் இலையைக் கூட கிள்ளக்கூடாது. தாவரங்களைச் சமைத்து ஹிம்சிக்கக்கூடாது. அஹிம்ஸை காரணமாகத்தான் அவனுக்கு அக்னிகாரியமே விதிக்கப்படவில்லை. அக்னி என்று இருந்துவிட்டால், அதில் தவறிப்போய் ஏதாவது பூச்சி பொட்டு விழுந்து சாகக்கூடும். நெருப்பிலே விழுந்ததை எடுத்துக் காப்பாற்றுவது கஷ்டமல்லவா? இதனால்தான் துறவிக்கு ஹோமம், யாகம் எதுவும் இல்லை. அவன் அக்னி காரியமே செய்யாததால் அவனுக்கும் கடைசியில் தகனம் என்ற அக்னி காரியம் இல்லை. அவனுடைய சரீரத்தை பூமியில் அடக்கம் செய்கிறார்கள். ‘சகல பிராணிகளுக்கும் என்னால் பயம் இல்லாமல் போகட்டும்’ என்று சந்நியாஸம் வாங்கிக் கொள்ளும்போது அவன் பிரதிக்ஞை செய்கிறான். அதன்படி, எந்தப் பிராணிக்கும் தாவரத்துக்கும் ஹிம்ஸை இல்லாமல் வாழவேண்டியது அவனுக்கே பூரணமாக விதிக்கப்பட்ட தர்மம்.

‘அஹிம்ஸா பரமோ தர்ம:’ என்று ஜைன, பௌத்த மதங்கள் எல்லோருக்கும் பூரண அஹிம்ஸையை விதித்ததுபோல் நம் மதம் செய்யவில்லை. சன்னியாசிகளுக்கே இதை அதி தீவிரமாக விதித்திருக்கிறது. மற்றவர்களுக்கு இத்தனை கட்டுப்பாடு இல்லை. தர்மயுத்தத்திலும், யக்ஞத்தில் பலி தருவதிலும் நம் மதம் அஹிம்ஸையை விலக்கியிருக்கிறது. லோக க்ஷேமத்துக்காகவே சில தேவ சக்திகளை திருப்திப்படுத்துவதற்காக யாகத்தில் பசு (பிராணி) பலி தரப்படுகிறது. யக்ஞத்தில், பலியாகிற பிராணி, இதனால் தானாக சம்பாதித்துக்கொள்ள முடியாத பரமோத்தமமான கதியை அடைகிறது என்பது நம் நம்பிக்கை. ஆக அந்தப் பிராணிக்கும் சிரேயஸ், அது செய்த தியாகத்தால் லோகத்துக்கும் நல்லது என்றாகி விடுகிறது.

இப்படியே யுத்தத்தில் தேசத்துக்குத் தியாகமாக ஸேனா வீரர்கள் பலி ஆகிறார்கள்.

வெறுமே தின்று தின்று தன்னையே போஷித்துக் கொண்டு உயிர் வாழ்வதைவிட, பர நலனுக்காக பிராணத் தியாகம் செய்வது சிரேஷ்டமானது என்பதால் இப்படி அஹிம்ஸைக்கு விலக்கு வைத்திருக்கிறார்கள்.

பூரண அஹிம்ஸா – லட்சியத்தை வாயளவில் பிரமாதமாகப் பேசிவிடலாமே தவிர, காரியத்தில் நடக்காது. குற்றம் குறைகள், அடிதடி, சண்டைகள் எல்லாம் நடைமுறையில் இருக்கத்தான் செய்யும். அப்போது அவற்றைக் குறைப்பதற்காக எடுக்கிற எதிர் நடவடிக்கையில் ஹிம்ஸை இருப்பதாகத் தோன்றினாலும் உண்மையில் அது ஹிம்ஸையாகாது. ஏனென்றால், செய்கையைவிட எண்ணம், நோக்கம்தான் முக்கியம். ஹிம்ஸிப்பதிலேயே சந்தோஷப்படுகிற நோக்கமில்லாமல், ஒரு பொது நலத்தை உத்தேசித்து, ஒரு பிராணியை யக்ஞத்தில் பலி தருகிறபோதோ அல்லது ஒரு கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கிற போதோ அல்லது யுத்தத்தில் விரோதிகளை வதைக்கிற போதோ, காரியத்தில் ஹிம்சை தெரிந்தாலும் அது பாபமாகாது; தோஷமாகாது—இதுதான் நம் சாஸ்திரம்.

காரிய சாத்தியமில்லாத பூரண அஹிம்ஸையை பூரண நடைமுறையில் எல்லோருக்கும் விதித்தால், இந்த விதியை மீறிய பாபம், தோஷம்தான் ஜனங்களுக்கும் உண்டாகும். யதார்த்த நிலையை மறக்காத நம் மதம் நமது ஜனங்களுக்கு இந்தப் பாபத்தை உண்டாக்கவில்லை.

மாறாக பௌத்த மதம் எல்லோருக்கும் பூரண அஹிம்ஸை என்று விதி செய்த போதிலும் இன்று நாம் பார்ப்பது என்ன? பௌத்தத்தைத் தழுவிய அத்தனை நாடுகளிலும் சைன்னியம், சண்டை எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன. அது மட்டுமில்லை, அந்தத் தேசங்களில் மிச்சம் மீதியில்லாமல் சகல ஜனங்களுக்கும் மாமிஸம் உண்பவர்களாகவே இருக்கிறார்கள்.

பெரிய தர்மம் ஒன்றை அத்தனை பேருக்கும் பொதுவாக வைத்தால், முடிவில் எவருமே அதை அநுஷ்டிக்காத நிலைமையைத்தான் பார்க்கிறோம். நம் தேசத்தில் இப்படிச் செய்யாமல் சன்னியாசிகளுக்கு மட்டும் பூரண அஹிம்ஸையை விதித்தார்கள். அதைப் பார்த்து பிராம்மணர்கள், வட தேசத்தில் குஜராத் முதலான பகுதிகளில் உள்ள வைஷ்ணவர்கள், தென்னாட்டில் சைவ வேளாளர்கள், கோமுட்டிச் செட்டிமார்கள் போன்றவர்களும் இதைப் பின்பற்றி வந்திருக்கிறார்கள். எனவே ‘விதி’ என்று போட்டுக் கட்டுப்படுத்தாததாலேயே தாங்களாகப் பிரியப்பட்டு, அதிலே நிஜமான ஈடுபாட்டோடு தலைமுறை தத்வமாக இப்படிச் செய்து வந்திருக்கிறார்கள். சந்நியாஸிகளின் ஸத்வ குணத்தைப் பார்த்து, அதன் பொருட்டுத் தாங்களும் இந்த சாகபட்சணத்தையே (Vegetarianism) விரும்பி ஏற்று அநுஷ்டித்து வந்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து, வெளியிலிருந்து யாரும் கட்டுப்படுத்தாமலே மற்ற வகுப்பாரும், ஒரு அமாவாஸை. ஒரு திதி, திவஸம், ஷஷ்டி இம்மாதிரி தினங்களில் மாமிஸ போஜனத்தை விலக்கி விடுகிறார்கள். நடைமுறையில் (Practical) எல்லோருக்கும் இயலாத ஒன்றை சகலர் மீதும் கட்டாயமாக திணிக்காமல், பக்குவிகளான சிலருக்கு மட்டுமே விதிப்பதால், அதுவே மற்றவர்களுக்கும் ஒரு உத்தம லட்சியமாகி (ideal) அதை ஓரளவுக்காவது அவர்களும் பின்பற்றுகிறார்கள். மாறாக எல்லோருக்கும் இதை விதியாக்கிய இடங்களிலோ, எவருமே அதை அநுசரிக்காமல் ஹிம்ஸை அதிகரிப்பதோடு, அவர்கள் விதியை மீறிய தோஷத்துக்கு ஆளாகும்படி வேறு நேர்ந்திருக்கிறது! அஹிம்ஸை என்கிற தத்வம் ஒரு லட்சியமாகவாவது எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பதால் அது சாமானிய தர்மங்களில் சேர்க்கப்பட்டிருக்கிறது. காரியம் எப்படி இருந்தாலும் மனசிலே துவேஷம் இருக்ககூடாது என்பதுதான் நம் வைதிக தர்மப்படி அஹிம்ஸையின் லட்சணம் (definition).

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is சாமானிய தர்மங்கள் அனைவருக்கும் பொதுவானவை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  சத்தியம்
Next