வேதத்தின் மூல வடிவம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

பாஷையை வைத்துக் கொண்டு, ‘இது என் பாஷை, அது உன் பாஷை, இந்த பாஷை தான் உயர்ந்தது. அந்த பாஷை தான் உயர்ந்தது’ என்று இப்போது பலர் சண்டை போடுவதைப் பார்த்தால் மிகவும் துக்கமாக இருக்கிறது. நாம் எல்லோரும் ஊமையாகப் போனால் தேவலை என்றுகூடத் தோன்றுகிறது. நம்முடைய அபிப்பிராயத்தைத் தெரிவிக்க இருக்கும் கருவி பாஷை. அது எல்லா ஊரிலும் ஒன்றாக இருக்க முடியாது. ஒவ்வொரு கூட்டம் ஒவ்வொரு பாஷையைப் பேசும். ஒவ்வொரு சீமையிலும் ஒரு பாஷை இருக்கும். எனவே, ‘இது என் பாஷை’ ‘அது உன் பாஷை’ என்பதும் ‘இது உசத்தி, அது தாழ்த்தி’ என்று சண்டை பிடிப்பதும் அர்த்தமில்லாத காரியம். ‘தெரிந்த பாஷை, தெரியாத பாஷை’ என்று வேண்டுமானால் சொல்லலாமே ஒழிய, ‘என் பாஷை, உன் பாஷை’ என்பதே தப்பு. பாஷையால் சண்டை என்பது பெரிய தப்பு. மதத்தைக் காட்டிலும் ஸ்வாமியைக் காட்டிலும் பாஷைதான் உயர்வென்று நினைப்பது மிகவும் தப்பு. பாஷை என்ற ஒரு காரணத்துக்காக மட்டும் ஸம்ஸ்கிருதம் வேண்டுமா என்றால் நான்கூட வேண்டாம் என்றே சொல்வேன். ஆனால் நம்முடைய மதத்துக்கு மூலமான வேதம், சாஸ்திரம் எல்லாம் அந்தப் பாஷையில் இருப்பதனால் வேதத்தையும் சாஸ்திரங்களையும் ரக்ஷிப்பதற்காக சம்ஸ்கிருத பாஷையையும் ரக்ஷிக்கத்தான் வேண்டும் என்கிறேன்.

திருவள்ளுவர் குறளை எழுதி அதை அரங்கேற்ற மதுரைக்கு வந்தார். பொற்றாமரைக் குளத்தில் சங்கப்பலகை இருந்தது. திருவள்ளுவர் தம் புத்தகத்தைக் கொண்டுபோய் சங்கப் பலகையில் வைத்தாராம். குட்டைப் புத்தகம் அது. அதுமாத்திரம் பலகையில் இருக்கப் புலவர்கள் எல்லோரும் குளத்தில் விழுந்து விட்டார்களாம். குறள் அங்கே அரங்கேற்றப்பட்டது. இந்தப் புத்தகத்தைப் இன்னார் பண்ணினார், இதில் இன்ன உயர்ந்த விஷயங்கள் இருக்கின்றன என்று அதைப் பற்றிப் பல புலவர்கள் பாடியிருக்கிறார்கள். “திருவள்ளுவ மாலை” என்று அதற்குப் பெயர். அதில் ஒருவர் பாடுகிறார்;

ஆரியமும் செந்தமிழும் ஆராயத் திதனினிது

சீரிய தென்றொன்றைச் செப்பரிதாம்-ஆரியம்

வேதம் உடைத்து தமிழ்திருவள்ளுவனார்

ஓது குறட்பா உடைத்து

 

“ஸம்ஸ்கிருதம் உயர்வா? தமிழ் உயர்வா?” என்று யோசனைப் பண்ணிப் பார்த்தேன். “ஸம்ஸ்கிருதமும் தமிழும் சமம்தான். ஒன்று உயர்வு, ஒன்று மட்டம் என்று சொல்ல முடியாது. எதனாலே என்றால், ஸம்ஸ்கிருதத்தில் வேதம் இருக்கிறது. தமிழில் இப்போது திருக்குறள் வந்துவிட்டது. இது தமிழ் மறை. வேதத்துக்குச் சமமான ஒன்று தமிழில் இல்லை என்றால் ஸம்ஸ்கிருதம் உயர்வாக இருக்கலாம்! திருக்குறள் வேதத்துக்குச் சமானமாக வந்திருக்கிறது. அதனாலே இப்போது இரு பாஷைகளும் சமமாயின” என்று இச்செய்யுளில் கவி சொல்லியிருக்கிறார்.

ஸம்ஸ்கிருதத்துக்கு எதனால் கௌரவம்? வேதம் அதில் இருபதனால்தான் என்பதை அந்தப் புலவர் சொல்லியிருக்கிறார்.

‘வேதம் ஸம்ஸ்கிருதத்தில் இருந்தால் என்ன மொழி பெயர்த்துவிடலாமே’ என்று நினைக்கலாம். பல நூல்கள் அப்படி இந்தக் காலத்தில் மூல பாஷையிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றின் மூலமே உருமாறிப் போவதுமுண்டு. ஒரு விஷயத்தை ஒரு மனிதன் சொன்னால், அது அவனிடமிருந்து எந்த வாக்கில் வருகிறதோ அதே வாக்கில் இருந்தால், ஒரு காலத்தில் இல்லாவிட்டாலும் மற்றொரு காலத்தில் அதன் உண்மைப் பொருளை முழுவதும் தெரிந்து கொள்ள முடியும். ஒரு பொருளைச் சொல்வதற்கு ஒரு பாஷையில் அழகான சொல் ஒன்று இருக்கும்.. அதை மொழி பெயர்க்கும்போது, அதற்கு ஏற்ற சொல் இதர பாஷையில் இருக்காது. சில சமயங்களில் நான்கைந்து வார்த்தைகளைப் போட்டுச் சுற்றிவளைத்துச் சொல்ல வேண்டியிருக்கும். அந்த வார்த்தை அந்த இடத்தில் எந்த அபிப்பிராயத்தை வெளிப்படுத்துகிறதோ, அதே அபிப்பிராயத்தை மொழி பெயர்ப்பில் காணமுடியாமல் போகலாம். இரண்டாவது, மொழி பெயர்க்கிறவன் தன்னுடைய ஞானத்துக்கு ஏற்றாற்போலத்தான் பொருள் பண்ணிக் கொண்டு சொல்ல முடியும். ஒருவன் பண்ணிய மொழி பெயர்ப்புச் சரி அல்ல என்று இன்னொருவன் எண்ணுவான். பண்ணுகிறவனுடைய அபிப்பிராயத்துக்கும் பாஷா ஞானத்துக்கும் ஏற்றபடி அந்த மொழி பெயர்ப்பு இருக்கும். இப்படியாக பல மொழிப்பெயர்ப்புகள் ஏற்பட்டு, அவற்றில் எதை எடுத்துக் கொள்வது என்ற சந்தேகம் வரும்போது, மூலம் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டிவரும்.

ஆகவேதான் மூலமாகிய வேதத்தை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும். மூலமாக இருக்கும் ஒரே வேதத்தைத் தங்கள் கருத்தின்படி பொருள் கொண்டு ஒவ்வோர் ஆசாரியரும் ஒவ்வொரு சித்தாந்தத்தை வெளியிட்டுள்ளனர். அந்த ஆசாரியர்கள் தத்தம் சித்தாந்தங்களையே ஆதாரமாகக் கொண்டு மூலவேதத்தை மாற்றி வெவ்வேறு மதங்களைச் செய்துவிடவில்லை. மூலம் ஒன்றாக இருக்கிறது. மூலம் மொழிபெயர்க்கப்படாமல் அப்படியே இருந்து கொண்டிருப்பதால்தான், அந்த அந்த ஆசாரிய புருஷருக்கு ஏற்றபடி காலத்துக் காலம் புது அபிப்பிராயம் சேர்த்து வந்திருக்கிறது. ஆதாரமான வேதத்தை மாற்றாமல் அப்படியே வைத்துக் கொண்டு, அதை ரக்ஷித்து வந்தால்தான் அந்தந்த ஆசாரியரின் புது அபிப்பிராயமானது இன்னொரு தனி மதமாகப் போகவேண்டிய அவசியம் ஏற்படாமல் இருந்து வந்திருக்கிறது. இந்த மதங்களுக்கெல்லாம் வைதிக மதம் என்ற பொதுப் பெயர் இருந்து கொண்டிருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is வைதிகமும் தமிழும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  சாஸ்திரமா? மனசாட்சியா?
Next