தலைவலிக்குப் பரிகாரம் சிரச்சேதமா ? : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

இப்போது பெரிய பெரிய தலைவர்களிலிருந்து ஆரம்பித்து தெருவில் போகின்றவன் வரை அத்தனை பேரும் ஜாதி எதற்கு என்கிறார்கள். நாமும்தான் இதைப் பற்றி பேசலாமே என்று ஆரம்பித்தேன். நன்றாக ஆலோசனைப் பண்ணிப் பார்த்தால், இப்படிப்பட்ட ஒரு பாகுபாடு இருப்பதுதான் எல்லாருக்கும் க்ஷேமம் என்று தெரிகிறது. சமூகம் முழுவதும் முன்னேறுவதற்கும் சரி, அவரவரும் சித்த சுத்தியடைந்து ஆத்மாவைக் கடைத்தேற்றிக் கொள்வதற்கும் சரி, இந்த ஏற்பாடே நிரம்ப சகாயம் செய்கிறது என்று தெரிகிறது.

இதை நான் சொல்கிறேன் என்பதற்காக ஒப்புக்கொள்ள வேண்டியதில்லை; சாஸ்திரங்கள் சொல்கின்றன என்பதற்காக ஒப்புக்கொள்ள வேண்டியதில்லை. “முன்னேற்றத்”துக்கு விரோதிகளான பிற்போக்குக்காரர்கள் என்றே எங்களை வைத்துவிட்டாலும் சரி, ஆனால் இந்தத் தேசம் எப்படியும் முன்னேற வேண்டும் என்பதுதான் ஒருத்தருக்கு லட்சியமாக இருந்தது என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள். தேசத்தில் இருந்த பேதங்களை, மூட நம்பிக்கையை எல்லாம் நீக்கி, பிற்பட்டவர்களை மற்றவர்களுக்குச் சமமாக ஆக்குவதற்காகவே அவர் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார் என்று எல்லோரும் நம்புகிறார்கள். அப்படிப்பட்ட அந்த ஒருத்தரான காந்தி இந்த வர்ணாசிரம தர்மத்தை மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு ரொம்பவும் சிலாகித்திருக்கிறார். இதைத் சொன்னாலாவது எல்லோரும் இந்த ஏற்பாட்டில் இருக்கிற நல்லதை எடுத்துக் கொள்வீர்களோ என்பதால் சொல்கிறேன். My Varnashrama Dharma (என் வர்ணாசிரம தர்மம்) என்றே காந்தி ஒரு வியாஸம் எழுதியிருக்கிறார். அதிலே,1 ‘இந்த வர்ணாசிரமம் என்பது மநுஷ்யனுக்குத் தானாக ஏற்பட்டது. ஸ்வாபாவிகமானது, இயல்பானது, ஒருத்தனுக்குப் பிறப்பாலேயே அமைந்துவிட்ட விஷயம் அது. இந்த இயற்கை விதியை ஹிந்து மதம் ஒரு ஸயன்ஸாக, சாஸ்திரமாக ஒழுங்குபடுத்தித் தந்திருக்கிறது’ என்றார். ‘இந்த ஏற்பாடு, தொழிலை நாலாகப் பிரித்துக் கடமைகளைத்தான் தருகிறதே தவிரச் சலுகைகளைத் தரவில்லை. ஒருத்தன் தனக்கு உசத்தி கொண்டாடிக் கொள்வதோ, இன்னொருத்தனை மட்டம் தட்டி வைப்பதோ ஹிந்து மதத்தின் உயிர்ப் பண்புக்கே விரோதமானது. அவரவரும் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொண்டு வாழவும், சமுதாயத்தின் சக்தியை விரயமாக்காமல் சிக்கனமாக காக்கவுமே வர்ணாசிரமம் இருக்கிறது’ என்றெல்லாம் ரொம்பவும் சிலாகித்துக் சொல்லியிருக்கிறார். ‘தீண்டாமையைத்தான் நான் தீமை என்று சண்டை போடுகிறேனே ஒழிய, வர்ணாசிரமம் என்பது சயன்ஸ் மாதிரி ஒரு சத்தியத்தையே சொல்கிறது என்பதால் அதை ஆதரிக்கவே செய்கிறேன். ஒருத்தனுடைய பிறப்பை அடிப்படையாக வைத்துத் தொழில்களைப் பிரித்துக் கொடுக்கிற வர்ணாசிரம தர்மம் சமுதாய வாழ்வுக்கு ரொம்பவும் ஆரோக்கியமூட்டுவது என்பதே என் அபிப்பிராயம். இது ஏதோ குறுகிய புத்தியால் செய்த ஏற்பாடில்லை. இந்த ஏற்பாடு ஒரு தொழிலாளிக்குக்கூட பெரிய அறிவாளிக்குள்ள அந்தஸ்தைத் தருகிற அமைப்பு என்பதே என் அபிப்பிராயம்’2 என்றெல்லாம் சநாதனிகளைவிடப் பெரிதாக ஆதரித்துப் பேசுகிறார்.

‘ஆனாலும் அவர் செய்த பல காரியங்கள் ஆசார அநுஷ்டானங்களில் உள்ள வித்தியாசங்களைப் புறக்கணிப்பதாகவே இருந்தனவே; கலப்பு மணத்தைக்கூட அவர் ஆதரித்தாரே’ என்றால் அதற்குக் காரணம், ‘வர்ண தர்மம் ரொம்ப நல்லதுதான் என்றாலும் தற்போது அது சீர் குலைந்து போயாகிவிட்டது. இனிமேல் அதை மறுபடி புத்துயிர் கொடுத்துப் பழையபடி எழுப்ப முடியாது. சாரம் போனபின் சக்கையைப் பிடித்துக் கொண்டிருக்கிற மாதிரி, வர்ண தர்மப் படியான தொழில் பங்கீடு சிதறிப் போய்விட்ட இன்றைக்கு, வெளி வித்தியாசங்களை மட்டும் பிடித்து வைத்துக் கொள்வது மகா தப்பு’ என்று அவர் நினைத்துவிட்டார்.

நான் அப்படி நினைக்கவில்லை. நம்முடைய மதத்துக்கு முதுகெலும்பு மாதிரி இருக்கும் ஒரு ஏற்பாடு சொஸ்தப்படுத்த முடியாதபடி பாழாகிவிட்டது என்று விட்டுவிடுவதானால் மடமும் வேண்டியதில்லை, மடாதிபதியும் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆணி வேரான தர்மம் போகவிட்டு, மதாசாரியன் என்று சொல்லிக் கொண்டு ஒரு ஸ்தாபனத்தை நடத்துவது சமூகத்தைப் பிடுங்கித்தின்கிற காரியம்தான். வாஸ்தவமாகவே பழைய ஏற்பாடு போயே போய்விட்டது என்றால் மடம் வேண்டியதில்லை! கலைத்துவிட வேண்டியதுதான். ஆனால் இன்னமும் அப்படி ஆகிவிடவில்லை என்றே நம்பிக்கொண்டிருக்கிறேன். அல்லது இன்னும் கொஞ்சம் நாளில் அது அடியோடு அழிந்துபோகிறதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் நான் நினைத்துவிடவில்லை. இப்போதாவது நாம் விழித்துக்கொண்டு செய்ய வேண்டியதை முழு மூச்சோடு செய்தால் அதை புது தெம்போடு எழுந்திருக்கப் பண்ணலாம் என்றே நம்புகிறேன். மற்றத் தொழில் பிரிவினைகள் எப்படிக் கலந்து போனாலும் போகட்டும். எல்லாவற்றுக்கும் உயிர் நாடியாக இருக்கப்பட்ட வேதாத்யயனம் இன்னமும் அங்கங்கே ஒரொரு பாடசாலையில் பழைய வழி தப்பாமலே இருந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போது கணிசமான வசதிகளை செய்து கொடுத்து வேத வித்தைப் பரப்புவதற்காக எடுத்திருக்கிற பிரயத்தனங்களுக்கும் உற்சாகமான வரவேற்பு இருக்கிறது. நிறைய வித்யார்த்திகள் சேருகிறார்கள். அடுத்த தலைமுறையில் வேதம் என்று ஒன்று இருக்கப் பண்ணுவதற்கு ஒரு சின்னக் கூட்டமாவது நிச்சயமாக இருக்கிறது. இதை இருக்கப் பண்ணுவதும் மேலும் விருத்திப் பண்ணப் பாடுபடுவதும்தான் என் கடமை. இது ஒன்று இருந்துவிட்டால் மற்ற வர்ணங்களில் ஏற்படுகிற குழறுபடிகளால் உண்டாகும் தோஷங்களுக்கும் நிவிருத்தியாக வழி பிறக்கும். ஓர் உதாரணமாக (example), வழிகாட்டிகளாக (guide) பிராம்மணம்-அத்தனை பிராம்மணர்களும் இப்படி செய்யாவிட்டாலும், ஒரு சிலராவது–தன் பிராசீன வழியிலேயே உறுதியாக இருந்து கொண்டிருந்தால், இதுவே மற்றவர்களையும் அவரவர்களுக்கான தர்மத்தில் திருப்பி விடுகிற சக்தியாக (influence) இருக்கும்.

காந்தியும் என்னைப் போலவே வர்ணாசிரம தர்மத்தை ஆதரித்தவர்தான். ஆனால் அது, யதார்த்தத்தில் கெட்டுப்போய் விட்டது. அதை சீர்திருத்த முடியாது என்று நினைத்து அவர் நினைத்துக் கொண்டிருந்தார். நானோ இந்தத் தர்மம் மங்கிததான் போய்க் கொண்டிருக்கிறது என்றாலும், அடியோடு அணைந்துவிடவில்லை, இருக்கிற பொறிகளை ஊதி ஊதி நன்றாக மூட்டிவிட முடியும், என்று நினைக்கிறேன். ஏனென்றால் இதை விட்டால் சமுதாயத்துக்கு மகத்தான கஷ்டம்தான் வருகிறது என்பது நம் தேசத்தின் கடைசி ஐம்பது வருஷ சரித்திரத்தைப் பார்த்தாலே தெரிகிறது, வர்ண தர்மம் இல்லாத மற்றத் தேசங்களின் பெரிய நாகரிகங்களுக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்தாலும் தெரிகிறது.

மெஷின்கள், பெரிய ஆலைகள் வந்ததுதான் பழைய பாரம்பரியத் தொழில்கள் நலிவதற்கு முக்கியமான காரணம். எளிய வாழ்க்கையில் மெஷினுக்கு அதிக இடமில்லை. கைத்தொழில்களே செய்து எல்லோரும் எளிமையாக வாழ்ந்தால் பழைய ஏற்பாடுகளைக் காப்பாற்றி விடலாம். ‘மநுஷ சக்தியைக் கொண்டுதான் காரியங்கள் நடக்க வேண்டும். ராக்ஷஸ மெஷின்கள் கூடாது; வாழ்க்கையே ரொம்ப எளிமையாக இருக்க வேண்டும்; அத்யாவசியத் தேவைக்கு அதிகமாகத் துளிக்கூட டாம்பிகமே உதவாது’ என்றெல்லாம் காந்தியும்தான் ஓயாமல் சொல்லி வந்தார். இப்படி அவர் சொன்னதெல்லாம் வர்ண தர்மத்தை நிலைப்படுத்துவதற்கு அநுகூலம்தான்.

ஆனால் இப்போது சர்க்கார் திட்டங்கள், ஜனங்களின் மனப்பான்மை எல்லாமே இந்த எளிய வாழ்க்கை, கைத்தொழில்கள் இவற்றுக்கு வித்தியாசமாக ஆகியிருக்கின்றன. ஆனால் இன்னமும் வாயால் ‘காந்தி’ ‘காந்தி’ என்று ஸ்தோத்திரம் பண்ணிக் கொண்டிருப்பதை மட்டும் விடக்காணோம். ஏனென்றால் அவர் நிச்சயமாகவே சமுதாயத்துக்கு நல்லதை நினைத்து, சமத்துவத்துக்காகப் பாடுபட்ட சீர்திருத்தவாதிதானே தவிர, பழசு என்பதற்காகவே சாஸ்திரங்களைப் பிடித்துக் கொண்டிருக்கிற ‘முரட்டு ஸநாதனி’ அல்ல என்பதில் எல்லோருக்கும் நம்பிக்கையிருக்கிறது. அதனால்தான் இப்படி நடுநிலையிலிருந்து பார்க்கப்பட்டவர் வர்ணாசிரமத்தைப் பற்றி என்ன சொல்கிறார் என்று எடுத்துச்சொன்னால், அது உங்களுக்கு மனஸில் கொஞ்சம் அழுத்தமாகவே பதியக்கூடும் என்று நினைத்தேன்.

இப்போது பொதுவாக ஜாதி வேண்டாம் என்று ஏன் சொல்கிறார்கள் என்றால் இதனால் உசத்த -தாழ்த்தி உண்டாகி, சண்டை ஏற்பட்டு விடுகிறது எனறு நினைப்பதால்தான். வாஸ்தவத்தில் உயர்த்தி-தாழ்த்தியே இல்லை என்பதாகச் சொல்கிறேன்.

‘வாஸ்தவத்தில் இருக்கிறதோ இல்லையோ, இப்படி ஒரு அபிப்ராயம் வந்துவிட்டதால் சண்டைகள் ஏற்பட்டிருப்பது நன்றாகத் தெரிகிறதோ, இல்லையோ? இந்தச் சண்டைகள் வேண்டாம் என்கிறோம்’ என்கிறார்கள்.

ஆனால் இப்படிச் சொல்வது, தலையை வலிக்கிறது என்பதற்காகச் சிரச்சேதம் பண்ணிக் கொள்கிற மாதிரிதான். பழைய தர்மத்துக்கு ஒரு தலைவலி மாதிரி சண்டை வருகிறது என்றால், உண்மையை எடுத்துச் சொல்லி, பக்குவமாக, ஹிதமாக, சாந்தமாக, விடாமல் விளக்கிச் சொல்லி – அதைப் போக்கடித்து, பழைய தர்மத்தை ஆரோக்கியமாக வைப்பது தான் சிகித்ஸை முறை, சண்டை வந்திருக்கிறதே, அதனால் மூலதர்மத்தையே கொன்றுவிடலாம் என்றால், அது அஸம்பாவிதம்.

ஒருவிஷயம் சண்டைக்கு ஆஸ்பதமாக இருக்கிறது என்ற ஒரு காரணத்துக்காக, அந்த விஷயத்தையே அழித்துவிட வேண்டும் என்றால் லோகமே நடக்க முடியாது. லோகத்தில் எதையெடுத்தாலும் கட்சி – பிரதி கட்சி இருக்கத்தான் செய்யும்; அபிப்பிராய பேதம் வரத்தான் செய்யும். அப்படியானால் ஒவ்வொரு விஷயமாக அழித்துக் கொண்டே போவதா?

இப்போது குறிப்பாக இரண்டு சமாச்சாரங்களால் ஏகப்பட்ட சண்டை உண்டாகி வருகிறது. ஒன்று, பாக்ஷை; இன்னொன்று, கொள்கை (ideology) இதற்காக பாக்ஷையே வேண்டாம், கொள்கையே வேண்டும் என்று ஆக்கிவிடுவதா?

இப்போது இந்தத் தேசத்தில் வந்திருக்கிற பாஷைச் சண்டை மாதிரி எங்கேயும் பார்த்ததில்லை. ஜாதிச் சண்டையெல்லாம் இதனிடம் உறைபோடக் காணாது என்கிறமாதிரி அங்கங்கேயும் வெறிக் கூத்தாகப் பார்த்துவிட்டோம். தமிழனுக்கும் தெலுங்கனுக்கும் சண்டை, ஹிந்திக்காரனோடு ‘உரிமைப்போர்’. பெங்காலிக்கும் பீகாரிக்கும் சண்டை, கன்னடியனுக்கும் மராட்டியக்காரனுக்கும் சண்டை, ஹிந்திக்கும் இங்கிலீஷுக்கும் சண்டை என்று தேசம் முழுவதும் கசாமுசா என்று ஆனதைப் பார்க்கிறோம். பாஷை விஷயம் வாய்ச்சண்டையாக இல்லாமல் கையும் ஓங்கி அசல் சண்டையாகவே ஆகியிருக்கிறது. ‘பல பாஷைகள் இருப்பதால்தான் இப்படிச் சண்டைகள் வருகின்றன. பாஷைகளையே அழித்து விடலாம், ஊமையாகி விடலாம்’ என்றால் இதற்குப் பரிகாரமாகுமா?

இன்னொன்று; எந்தக் கொள்கை (ஐடியாலஜி)யின் பேரில் ஆட்சி இருக்க வேண்டும். ராஜாங்கம் அமைக்க வேண்டும் என்பதற்காக நடக்கிற சண்டைகள் கொஞ்சமல்ல. இதிலே கம்யூனிஸம், காபிடலிஸம் என்பது பெரிய பிரிவு – பெரிய சண்டைக்கு இடமாகி, லோகம் முழுக்க கண்டத்துக்குக் கண்டம் பரவியிருக்கிறது. தினம் பேப்பரைப் பார்த்தால் சின்னச் சின்ன தேசங்களையும் இந்தச் சண்டை விட்டு வைக்கவில்லை என்று தெரிகிறது. உலக யுத்தம் என்று மூளாமலே, எத்தனையோ தேசங்களில் அன்றன்றும் ஆயிரக்கணக்கான ஜனங்கள் அநியாயமாகச் செத்துக் கொண்டிருக்கிறார்கள். கம்யூனிஸ-காபிலிடசச் சண்டை தவிர அங்கங்கே மானார்கி (முடியரசு) விழுந்து குடியரசு வருவதும், மிலிடரி ஆட்சி, டிக்டேடர்ஷிப் (சர்வாதிகாரம்) என்று வருவதும், அவைகளுக்காகப் பலபேர் பலியாவதும், இந்த ‘ஐடியாலஜி’யால்தான். எல்லோரும் பொதுவாகத் தங்கள் கொள்கையை ஜனநாயகப் பண்பு (டெமாக்ரஸி) என்று மட்டும் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் உள்ளூற இருக்கிற வித்தியாசங்களோ பெரிதாக இருப்பதால்தான் இத்தனை சண்டை ஏற்படுகிறது.

சண்டையிருக்கிறதே என்பதற்காக ஒரு ‘ஐடியாலஜி’யும் வேண்டாம் என்றால், ராஜாங்கம் என்பதே ஒவ்வொரு கொள்கையை உடையவர்களால் ஏற்படுவதுதானே? அரசியல் கொள்கை ஒன்றுமே வேண்டாம் என்றால், சர்க்காரே வேண்டாம். என்றல்லவா ஆகும்? அப்படியானால் சர்க்கார் என்ற அமைப்பையே அடித்துவிட்டு மிருகங்கள் மாதிரி ஆகிவிடுவதா? பாக்ஷைச் சண்டையிருப்பதால் பாஷையே வேண்டாம், கொள்கைச் சண்டையிருப்பதால் கவர்மெண்டே வேண்டாம் என்று ஒப்புக் கொண்டால், ஜாதிச் சண்டை – மதச் சண்டைகள் இருப்பதால் ஜாதி மதமும் வேண்டாம்தான். ஆனால் அப்போது இன்னொரு படி மேலே போய்ப் பார்த்தால், நாம் எல்லோரும் இருப்பதால்தானே சண்டை போட்டுக் கொள்ள முடிகிறது. அதனால் நாமே… (பேசவொண்ணாமல் ஸ்ரீ பெரியவர்கள் சிரித்து விடுகிறார்கள்).

ஆக, பரிகாரம் என்னவென்றால் சண்டைகளைத் தீர்ப்பதுதானே தவிர, மூல தத்துவத்தையே தீர்த்துக் கட்டி விடுவதல்ல.

இப்போது ஜாதியே கூடாது என்று பெரிதாகச் சொல்கிறார்களே தவிர, ‘எலெக்ஷன்’ என்று வந்துவிட்டால் அங்கே ஜாதிதான் முக்கியமாகி விடுகிறது. சகல கட்சிகளும் ஜாதியை வைத்துதான் ‘வோட்’ வாங்கக் காரியம் நடந்துகின்றன. ‘ஜாதியே வேண்டாம்’ என்பது உண்மையில் ‘ஒரு ஜாதி மட்டும் வேண்டாம்’ என்பதற்காகத்தான் இருக்கிறது.

வாஸ்தவத்தில் தனக்கென ஒரு சமூகப் பொறுப்பு இல்லாமலே பெயரளவில் மட்டும் இருக்கிற ஜாதிகளை வெறும் சுயாபிமானத்துக்காக வளர்ப்பது நியாயமே இல்லை. சமூக க்ஷேமத்துக்காகவே ஒவ்வொரு கூட்டத்தாரிடம் பாரம்பரியமாக ஒவ்வொரு காரியத்தைக் கொடுத்து வளர்ப்பதுதான் எல்லோருக்கும் நல்லது. முக்கியமாக சப்த விசேஷம், தத்வார்த்தம் இரண்டாலும் உயிர்க்குலம் முழுவதற்கும் நன்மை செய்கிற வேதத்தை ஓதிக்கொண்டு, அதிலிருக்கும் கர்மாநுஷ்டானங்களைச் செய்வதையே, வாழ்க்கைப் பணியாக (life work) கொண்ட ஒரு கூட்டம் இந்தத் தேசத்தில் இருந்து கொண்டேயிருக்க வேண்டும்.

ஜாதியிருப்பதால்தான் உயர்த்தி-தாழ்த்திச் சண்டை என்று புது நாகரிகக்காரர்கள் நினைத்தாலும், இந்த உயர்த்தி தாழ்த்தி அபிப்ராயம் அடியோடு போக வேண்டும் என்பதற்காகவே நான் இந்தத் தர்மம் இருந்தாக வேண்டும் என்கிறேன். ‘நாம் இப்படிப் பிறந்தோமா? சரி, இது ஈசுவரச் சித்தம். ஈஸ்வராக்ஞையால் நமக்கு இந்தக் காரியம் லபித்திருக்கிறது. இதைச் செய்து நம்மாலான சமூக க்ஷேமத்தைச் செய்வோம். இன்னொருத்தனுக்கு இன்னொரு காரியம் பாரம்பரியமாக வந்திருக்கிறது என்றால், அது அவனுக்கு ஏற்பட்ட ஈசுவர ஆக்ஞை. அவரவரும் அதைச் செய்து ஈச்வரார்ப்பணம் பண்ணுவோம்’ என்ற மனோபாவம் ஏற்பட்டுவிட்டால், அப்புறம் ஒரு காரியம் உசத்தி, இன்னொன்று தாழ்த்தி என்று நினைப்பதற்கு இடமேயில்லை அல்லவா? இந்த மனோபாவம் உண்டாகத்தான் நாம் பிரயத்தனம் செய்ய வேண்டும். பிரசாரம் செய்ய வேண்டும்.

பெரிய பிரயத்தனம் முதலான பிரசாரம் என்னவென்றால் நாமே அப்படி வாழ்ந்து காட்டுவதுதான். அப்போது வாய்ப்பிரசாரமே தேவைக்கூட இல்லை. ஏற்கெனவே ஜாதி முறையால் உயர்வு-தாழ்வு வந்திருந்தால் அது மூல தத்துவத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாததன் கோளாறுதான். இந்தக் கோளாறுகூடப் போகிற மாதிரி இப்போது நாம் இந்த தர்மத்தைக் குற்றமில்லாமல் அநுஷ்டித்து வளர்க்கச் சங்கற்பம் செய்து கொள்ள வேண்டும்.

‘ஜீவனம், ஜீவனம்’ என்று எப்போது பார்த்தாலும் பணத்தின் ஞாபகமாகவே இருப்பதுதான் இப்போது ஜாதி தர்மம் போனபின் நாம் பார்க்கிற நிலை. 70, 75 வருஷம் முந்தி வரைக்கும் எவனுக்குமே இப்படி ஜீவனத்தின் ஞாபகம் இருக்கவில்லை. கடமையின் ஞாபகம்தான் இருந்தது. ஜீவனமே குறி என்றால் யார் யாரிடம் அதிகப் பணமோ, பெரிய பதவியோ போகிறதோ அவர்களைப் பார்த்து மற்றவர்கள் அசூயைப் படவேண்டியதுதான்; சண்டை போட வேண்டியதுதான். அவனவனுக்கும் அதது கடமை என்கிறபோது, அதில் உயர்வு-தாழ்வு இல்லவே இல்லை. ஆனால் பணம் குறிக்கோள், பதவி குறிக்கோள் என்றால் அதிகப் பணம் சேர்க்கிறவன் உசத்தி, மற்றவன் தாழ்த்தி; பெரிய பதவியில் வருகிறவன் உயர்த்தி, மற்றவன் தாழ்த்தி, என்ற பேத அபிப்ராயங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். அதாவது வர்ண தர்மத்தில் வாஸ்தவத்தில் இல்லாத ஏற்றத் தாழ்வு, அது எடுபட்டு போனால்தான் உண்டாகிறது. அதனால் ஜாதிகள் எல்லாமே போய் ஜாதிச் சண்டை போய்விட்டாலும் வேறுவிதத்தில் வகுப்புப் பூசல் (Class conflict) ஏற்படத்தான் செய்யும். இதைத்தான் பிரத்யக்ஷமாகவே நன்றாக அனுபவித்து வருகிறோம்.

உயர்த்தி – தாழ்த்தியே இல்லாமல், சண்டையே இல்லாமல் எல்லோரும் அரன்குடி மக்களாக அன்போடு, ஐக்கியத்தோடு, சௌஜன்யத்தோடு, பரஸ்பர விசுவாசத்தோடு, பரஸ்பர சகாயம் செய்துகொண்டு எங்கேயும் சாந்தியும் சந்தோஷத்தையும் உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே பழைய தர்மங்களை நலியாமல் காப்பாற்றும்படி சொல்கிறேன். இந்த லட்சியத்தில் நாம் கொஞ்சம் அடி எடுத்து வைத்தால் ஸ்வாமி கை கொடுப்பார். அவரைத்தான் பிரார்த்தனை பண்ணுகிறேன்.


1 Varnashrama is, in my opinion inherent in human nature and Hinduism has simply (reduced) it to a science. It does attach to birth. The division defines duties; they confer no privileges. Varnashrma is self-restraint and conservation and economy of energy. (Mahatma Gandhi: My Varnashrama Dharma):

2I have often shown the distinction between Varnashrama and untouchability. I have defended the one as a rational scientific fact and condemned the other as an excrescence and unmitigated evil… I do regard Varnashrama as a healthy division of work based on birth. Varnashrama, in my opinion, was not conceived in any narrow spirit. On the contrary, it gave the labourer the same status as the thinker. Ibid

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is சமயமும் சமூகமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  மூலமாகிய வேதம்
Next