அத்வைதம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

‘அத்வைதம்’ என்பதே ஆதி சங்கர பகவத் பாதர்கள் நிலைநாட்டிய சித்தாந்தம் என்று எல்லோருக்கும் தெரியும். ‘அத்வைதம்’ என்றால் என்ன? ‘த்வி’ என்றால் இரண்டு. two என்பது அதிலிருந்து வந்ததுதான். ‘த்வி’யிலுள்ள த் (d) என்பதே ‘டூ’ வில் ‘ட்’ (t) ஆகிவிட்டது. உச்சரிப்பில் ‘டூ’ என்று சொன்னாலும், ஸ்பெல்லிங்கில் t-க்கு அப்புறம் w வருகிறது w- வுக்கு ‘வ’ சப்தமே உண்டு. ‘த்வி’யில் உள்ள ‘வ’ தான் இங்கே w – ஆகிவிட்டது. ‘த்வி’தான் two – இரண்டு. ‘த்வைதம்’ என்றால் இரண்டு உண்டு என்று நினைப்பது. ‘அ-த்வைதம்’ என்றால் ‘இரண்டு இல்லை’ என்று அர்த்தம்.

எந்த இரண்டு இல்லை? இப்போது ஸ்வாமி என்று ஒருத்தர் இருக்கிறார். அவருக்கு இரண்டாவதாக ஜீவர்கள் என்ற நாம் இருக்கிறோம் என்று நினைக்கிறோம் அல்லவா! இப்படி இரண்டு இல்லவே இல்லை. ஸ்வாமி (பிரம்மம்) என்கிற ஒரே சத்திய வஸ்துக்குப் புறம்பாக எதுவுமே இல்லை. அது தவிர, இரண்டாவது வஸ்து எதுவுமே இல்லை. அந்த ஒன்றேதான் மாயா சக்தியினால் இத்தனை ஜீவர்கள் மாதிரியும் தோன்றுகிறது. இதெல்லாம் வெறும் வேஷம்தான். ஒரு நடிகன் பல வேஷம் போட்டாலும் உள்ளேயிருக்கிற ஆள் ஒருத்தன்தான் என்பதுபோல் இத்தனை ஜீவராசிகள் இருந்தாலும் அவற்றுக்கு உள்ளேயிருக்கிற ஆள் ஸ்வாமி ஒருத்தன்தான். ஜீவாத்மா பரமாத்மா என்று விவகார தசையில் பிரித்துச் சொன்னாலும் வாஸ்தவத்தில் உள்ளது ஒரே ஆத்மாதான். ‘நாம் மாயையைத் தாண்டி இந்த ஞானத்தை அநுபவத்தில் அடைந்துவிட்டால், அப்புறம் எத்தனையோ குறைபாடுகள் உள்ள ஜீவர்களாக இருக்கமாட்டோம்; ஒரு குறையுமில்லாத, நிறைந்த நிறைவான சத்தியமாகவே ஆகிவிடுவோம்’ என்பதுதான் ஆசாரியாள் உபதேசித்த அத்வைத தத்துவம்.

இந்த அநுபவத்தை அடைந்துவிட்டால், அப்புறம் கஷ்டம், பயம், காமம், துவேஷம், எதுவும் நம்மைக் கட்டுப்படுத்தாது. நமக்குப் புறம்பாக எதுவோயிருப்பதாக நினைப்பதால்தானே அதனிடமிருந்து கஷ்டம், பயம், காமம், குரோதம், இத்யாதிகள் நம்மைக் கட்டிப் போடுகின்றன! இது தானே சம்ஸார பந்தம்? நம்மைத் தவிர இன்னொன்றே இல்லாதபோது எவன் கட்டப்படுவான், எது கட்டுப்படுத்தும்? கட்டு என்பதுதான் ஏது? இரண்டாவது வஸ்துவேதான் கிடையாதே! கட்டு என்றும் கட்டுகிற வஸ்து என்றும் நமக்கு வெளி வஸ்து எப்படியிருக்க முடியும்? கட்டிலிருந்து விடுபட்ட (முச்-விடுபடுதல்) இந்த நிலைதான் முக்தி அல்லது மோக்ஷம்.

‘இந்த நிலையை எங்கேயோ வைகுண்டத்தில், அல்லது கைலாசத்தில் என்றைக்கோ போய்ப் பெற வேண்டியதில்லை. இதை இங்கேயே இப்போதே அநுபவித்து விடலாம். வாஸ்தவத்தில் இந்த மோக்ஷத்தை நாம் ஒன்றும் புதிதாக அடைவதும் இல்லை. பிரம்மம் என்கிற எல்லையற்ற சத்தியம் எப்போதுமே கட்டுப்படாத மோக்ஷமாக இருந்து கொண்டேதான் இருக்கிறது — பிரபஞ்சத்தில் ஆகாயம் (space) எங்கு பார்த்தாலும் கட்டுப்படாமல் இருக்கிற மாதிரி இந்தப் பிரபஞ்சத்திலேயே பல பானைகளை வைத்திருக்கிறோம் என்றால், அவற்றுக்குள் இருக்கிற காலியிடத்திலும் எப்போதும் அந்த ஆகாசம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஒன்று எங்கும் பரந்து விரிந்த மஹாகாசம், மற்றது பானைக்குள் (கடத்துக்குள்) உள்ள கடாகாசம் என்று நம் பார்வையில் வேண்டுமானால் பிரித்துச் சொல்லலாமே தவிர, இரண்டு ஆகாசமும் வாஸ்தவத்தில் ஒன்றேதான். பானை என்கிற ரூபத்தை உடைத்துப் போட்டுவிட்டால் நம் பார்வைக்குக்கூட இரண்டும் ஒன்றாகவே ஆகிவிடுகிறது. இப்படியே பிரம்மத்தில் தனித்தனி பானைகள் மாதிரி நாம் மாயாசக்தியால் தோன்றியிருக்கிறோம். ஆனாலும் நாம் பிரம்மமேதான். மாயையின் பந்தத்தால் இது நமக்குத் தெரியவில்லை. அதை உடைத்து விட்டால் நாமும் அகண்டமான பிரம்மமே என்ற அநுபவம் வந்துவிடும்.

அந்த அநுபவம் சித்திப்பதற்குப் படிகளாக கர்மம், உபாஸனை இப்படிப் பல இருக்கின்றன. ஆசாரியாள் நாம் எல்லோரும் ஏறிப்போவதற்கு சௌகரியமாகப் படிக்கட்டுப் போட்டுக் கொடுத்திருக்கிறார். இந்த உபாயங்களை அநுஷ்டிக்கிற போதே, நாம் பார்ப்பவை யாவும் ஒன்றுதான் என்ற நினைப்பும் நமக்கு உள்ளூர இருந்துகொண்டே இருக்க வேண்டும். ‘எல்லாம் ஒன்று’ என்பது பிரத்தியட்ச அநுபவமாக வருகிறபோது வரட்டும். ஆனால், இதுதான் உண்மை என்ற நினைப்பை இப்போதிலிருந்தே அடிக்கடி உண்டாக்கிக் கொள்ள வேண்டும்.

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்கள் எல்லாவற்றையும் ஒன்றாகப் பார்க்க வேண்டும் என்று சொல்லி விட்டார். ஆனால் உலகத்தில் வேறு வேறாகத் தெரிகிற எல்லாப் பிராணிகளையும் ‘நாமாக’ எப்படிப் பார்ப்பது என்று குழப்பமாக இருக்கிறது.

ஜாக்ரத், ஸ்வப்னம், ஸுஷுப்தி என்று மூன்று அவஸ்தை (நிலை)களுண்டு. சாதாரணமாக விழித்துக் கொண்டிருப்பது ஜாக்ரம்; கனாக் காண்பது ஸ்வப்னம்; ஒன்றும் தெரியாமல் தூங்குவது ஸுஷுப்தி. இந்த மூன்று அவஸ்தைகளிலும் ஒருவனேதான் இருக்கிறான். கனாக் கண்டவனும் விழித்துக் கொண்டவனும் ஒருவனே. ஆனால், கனாக் கண்ட பொழுது நடக்கிறவைகளுக்கும், விழித்துக் கொண்டபின் நடக்கிறவைகளுக்கும் முன்னுக்குப் பின் சம்பந்தமே இல்லை. கனவில் வேற விதமான நடவடிக்கைகள் இருக்கின்றன. விழித்துக்கொண்டபோது வேறே விதமான நடவடிக்கைகள் இருக்கின்றன. அவஸ்தை வேறுபட்ட போதிலும், மனோபாவம் வேறுபட்ட போதிலும் இரண்டிலும் ஒருவனே இருப்பதுபோல, வேறு வேறு மனோபாவம் கொண்ட பல பிராணிகளிடத்திலும் இருப்பவன் ஒருவனே: அவனே நாம் என்று தெளிய வேண்டும்.

ஒரு காலத்தில் நமக்குச் சாந்த குணம் இருக்கிறது. மற்றொரு சமயத்தில் கோபம் இருக்கிறது. ஆனாலும் இரண்டு அவஸ்தையிலும் இருப்பவன் ஒருவனே என்பது அநுபவத்தில் தெரிகிறது. அவஸ்தா பேதங்களில் நம் முகம், கைகால் எல்லாவற்றின் போக்கும் மாறுகின்றன. காலபேதத்தால் குழந்தை கிழமாகிறபோது தேகங்கூட வேறாக மாறுகிறது. இது விவகார உலகத்தில், ஸ்வப்பன உலகத்திலே கேட்கவே வேண்டாம். நம் ஒருவருடைய மனஸிலிருந்தே பல பேருடைய ரூபங்கள், பல வேறு இடங்கள் பல வேறு காலங்கள் எல்லாம் கனவில் உண்டாகின்றன. நாம் செய்யக்கூடாதென்று நினைக்கிற காரியங்களையெல்லாம் கனவில் செய்வதாகக் காண்கிறோம். இம்மாதிரி அவஸ்தா பேதங்களில் ஒன்றுக்கொன்று விரோதமான காரியங்களைச் செய்தாலும் வேறு வேறு விதமான தேகமும் மனஸும் இருந்தாலும், எல்லா அவஸ்தைகளிலும் இருப்பவன் ஒருவனே என்பது தெரிகிறது. நமக்கு ஜன்னி பிறந்தால் அதற்கு முன் நாம் செய்த காரியங்களுக்கு விரோதமாகச் செய்கிறோம். நாம் முன்பு ஒரு புஸ்தகம் எழுதியிருந்தால் இப்போது அதை நாமே கிழித்து விடுகிறோம். எழுதியவனும் கிழித்தவனும் ஒரே பேர்வழி.

இந்த உலகமும் ஒரு கனவுதான். உலக வாழ்வும் மாயா ஜுரத்தில் வந்த ஜன்னி என்று தெரிந்து கொண்டால், உண்மையில் எல்லாம் ஒன்று என்று உணர்வோம். நம் கனவில், நம் ஒருத்தரின் மனமே இத்தனை பேரை சிருஷ்டித்த மாதிரி, மகா பெரிய மனசு ஒன்றின் எண்ணங்கள்தான் இத்தனை ஜீவராசிகளும் என்று தெரியும். மற்றொருவன் நாம் எழுதிய புஸ்தகத்தைக் கிழித்தால் அவனும் நாம்தான் என்று உணர்வோம். விவகார உலகத்தில் எழுதியவனும் கிழிப்பவனும் வெவ்வெறு தேகத்தில் இருப்பதனால் வாஸ்தவத்தில் உள்ளேயிருப்பவன் வேறாகி விடமாட்டான். எல்லாவற்றுக்குள்ளேயும் இருப்பது ஒன்றுதான். ஒருவன் நம்மை அடித்தால் வேறொருவன் நம்மை அடிப்பதாக நினைப்பது தப்பு. நாமே நம்மை அடித்துக்கொள்கிறோம் என்பதுதான் சத்தியம்.

இது சத்தியமில்லை என்றால், ஸ்வாமி அல்லது பிரம்மத்துக்குப் புறம்பாக இன்னொன்று இருக்கவேண்டும். அப்படியானால் அது எங்கிருந்து வந்தது, அது எதைக்கொண்டு பண்ணப்பட்டது, அப்படிப் பண்ணினவன் யார் என்ற கேள்வி வருகிறது.

இப்போது நாம் அறிவுள்ள (சைதன்யமுள்ள) ஜீவர்கள் என்றும், அறிவில்லாத ஜடப்பிரபஞ்சம் என்றும் இருக்கிறோம். ஜடப்பிரபஞ்சத்தை நாம் உண்டு பண்ணவில்லை. அதே மாதிரி ஜடப்பிரபஞ்சமும் நம்மை உண்டு பண்ணவில்லை—அறிவில்லாத அது எப்படி, தானாக ஒரு காரியத்தைப் பண்ண முடியும்? அதிலும் அறிவில்லாத ஜடம் எப்படி அறிவுள்ள ஜீவனை உண்டாக்க முடியும்? அறிவில்லாத ஜடப் பிரபஞ்சம் அநாதி காலமாக ரொம்பவும் கிரமத்தோடு நடந்து வருகிறது என்றால், அதை ஒரு பேரறிவுதான் படைத்து நடத்தி வர வேண்டும். அப்பேரறிவு வேறு ஏதோ வஸ்துவைக் கொண்டு பிரபஞ்சத்தைப் படைத்தது என்றால், அந்த வேறொரு வஸ்து எப்படித் தானே வந்தது என்று கேள்வி வருகிறது. எனவே, பேரறிவேதான் இப்படித் தன்னைத் தானே ஜடப் பிரபஞ்சமாகக் காட்டிக் கொள்கிறது என்றாகிறது. அப்புறம், இந்த ஜீவர்கள் இருக்கிறோமே! நாம் நாமாகவா உண்டானோம்? ஜீவ ராசிகளில் ஒவ்வொரு இனமும் ஒரேவிதமான சுபாவங்கள், குண விசேஷங்கள், சரீர அமைப்பு ஆகியவற்றோடு இருப்பதைப் பார்த்தால் அது அதுவும் தனித்தனியாக இப்படி உண்டாகியிருக்க முடியாது என்று நிச்சயமாகிறது. ஆனபடியால், இந்த ஜீவ சமூகம் முழுவதையும் ஒரு பேரறிவுதான் படைத்திருக்கிறது என்றாகிறது. ஜீவனுடைய அறிவு வேறெங்கிருந்தோ வரவில்லை; அந்தப் பேரறிவின் வேலைதான் என்று தெரிகிறது.

இந்த ஜீவர்களுக்கு உணவு, உடுப்பு முதலியன ஜடப் பிரபஞ்சத்திலிருந்து கிடைக்க வேண்டியிருக்கிறது. ஜடத்தில் உள்ளவற்றை—வாசனை, சுவை, சீதம் உஷ்ணம் முதலியவற்றை—அநுபவிக்க ஜீவனுக்கு இந்திரியங்கள் இருக்கின்றன. இப்படி ஜடப் பிரபஞ்சமும் ஜீவப்பிரபஞ்சமும் ஒன்றுக்கொன்று நெருங்கிச் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இது ஜீவனாக ஏற்படுத்திக் கொண்ட சம்பந்தம் அல்ல, இவன் ஜடப்பிரபஞ்சத்திலிருந்துதான் சாப்பாடு, துணி, வீடு, எல்லாம் பெற வேண்டும் என்று இவனா திட்டம் போட்டான்? இவன் போட்டால்தான் அது கட்டுப்படுமா? எனவே அந்தப் பேரறிவுதான் இப்படி சங்கற்பம் செய்து, இவனை அதோடு சம்பந்தப்படுத்தி வைத்திருக்கிறது என்று தெரிகிறது. ஜடப் பிரபஞ்சத்தை ஏதோ ஒரு சக்தி படைத்தது. ஜீவப் பிரபஞ்சத்தை வேறொரு சக்தி படைத்தது என்றால் இவை இரண்டையும் இப்படிச் சேர்த்துப் பிடித்துச் சம்பந்தப்படுத்தி வைக்க முடியாது. எனவே ஜடம், சைதன்யம், இரண்டுக்குமே மூலம் அந்தப் பேரறிவுதான் என்றாகிறது. அது ‘படைத்தது’ என்று சொன்னாலும் வெளி வஸ்துவைக் கொண்டு படைக்கவில்லை என்று பார்த்தோம். எனவே, அதுவேதான் இத்தனை போலவும் தோன்றுகிறது என்பதே பரம சத்தியம். ஆக, இருப்பது ஒன்றுதான். ஒன்றே பலவிதமாகத் தோன்றுகிறது. இப்படிப் பலவகையாகத் தோன்றுவதற்குரிய சக்தி அதற்கு இருக்கிறது. அதைத்தான் மாயை என்பது. ஒரே பிரம்மம் மாயா சக்தியால் பலவற்றைப்போல் தெரிகிறது என்பதுதான் அத்வைதம்.

ஜகத் முழுவதையும் இந்த மாதிரி ஒன்றாகப் பார்க்கும் மனோபாவத்தைப் பழகிக் கொள்ள வேண்டும். எல்லாம் ஒன்றானால் தானும் பிறரும் வேறு வேறாக இருக்க முடியாது. இந்நிலையில் ஜகத்தும்கூட அறியப்படுகின்ற வஸ்துவன்று. அறிபவனாகிய தானே அது என்ற அநுபவம் வந்து விடும். இப்பொழுது கை நாமாகத் தோன்றுகிறது. கால் நாமாகத் தோன்றுகிறது. உடம்பு நாமாகத் தோன்றுகிறது. இதுபோல் உலகனைத்தும் நாமாகிவிட வேண்டும். அப்படிப்பட்ட ஞானம் ஒருவனுக்கு அநுபவத்தில் வந்தால், அவன் சண்டாளனாயிருந்தாலும் அவன்தான் பண்டிதன். ஆசார்யாள் இதை “மனீஷா பஞ்சக”த்தில் எடுத்துச் சொல்கிறார். இந்த ஞானம்தான் மாறாத ஆனந்தமான மோக்ஷம்; இந்தச் சரீரத்தில் இருக்கும்போதே அநுபவிக்கக் கூடிய மோக்ஷம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is ஸ்வாமி நாமா? இல்லை என்றால்?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  அதுவேதான் இது!
Next