வேதரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்? : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

“பாரம்பரியமாகத் தொழிலைப் பிரித்துக் கொண்டு செய்வதில் சமுதாயம் முழுவதற்கும் ரொம்பவும் அநுகூலம் இருப்பதாகவே தெரிகிறது. ஆனால், பிராமணன் என்று இருக்கிறவன் செய்ய வேண்டிய தொழில் வேத ரக்ஷணமென்றால் இதனால் சமூகத்துக்கு என்ன க்ஷேமம்?” என்ற கேள்வி எழுகிறது.

குயவன் பானை செய்கிறான்; வண்ணான் துணி தோய்க்கிறான்; நெசவாளன் துணி நெய்கிறான்; இடையன் பால் கொடுக்கிறான்; குடியானவன் உழுகிறான். இப்படி ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று செய்கிறார்கள். இந்தக் காரியங்கள் எல்லாம் ஜனங்களின் அன்றாட வாழ்வுக்கு அவசியமாகி இருக்கின்றன. இவற்றின் பலனை அவர்கள் பிரத்யக்ஷமாக அனுபவிக்கிறார்கள். உழுத நெல்லைச் சாப்பிடுகிறார்கள். பசி தீருவதற்கு அது அவசியமாக இருக்கிறது. நெய்த துணியை உடுத்திக் கொள்கிறார்கள். மானத்தைக் காப்பாற்ற, குளிர், வெயிலிருந்து சரீரத்தைக் காப்பாற்ற அது தேவையாக இருக்கிறது. பால் குடிக்கிறார்கள். மோராக்கிச் சேர்த்துக் கொள்கிறார்கள். பானையை அடுப்பில் ஏற்றிச் சமைக்கிறார்கள். இப்படியெல்லாம் நடைமுறைக்குப் பிரயோஜனமாகிற வஸ்துக்களை மற்ற ஜாதிக்காரர்கள் தருகிறார்கள். பிராம்மணன் என்ன தருகிறான்? வர்ண தர்மத்தை நிலைப்படுத்தியிருக்கிற சாஸ்திரங்கள் அவனுக்கு எந்தத் தொழிலைத் தந்திருக்கிறது?

பிராமணன் வேதத்தைக் காதால் கேட்டுப் பாடம் பண்ண வேண்டும். அதாவது அத்யயனம் செய்ய வேண்டும். அதேமாதிரி இன்னொருத்தனுக்கு அதை வாயால் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதாவது அத்யாபனம் செய்ய வேண்டும். அத்யயனம்: தான் வேதம் ஓதுவது. அத்யாபனம்: இன்னொருத்தனுக்கு வேதத்தை ஓதுவிப்பது; இதோடு பிராமணன் வேதத்தில் சொல்லியிருக்கிற நித்ய கர்மாநுஷ்டானங்களையும் யாக யக்ஞாதிகளையும் செய்ய வேண்டும் என்று சாஸ்திரத்தில் இவனுக்குரிய தொழிலை வகுத்துக் கொடுத்திருக்கிறது.

வேதத்தின் அர்த்தம் ரொம்ப உயர்வானது. அதைக் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னாலாவது நவீன காலத்தவர்களுக்கு ஒப்புக் கொள்ளலாம் என்று தோன்றும். ஜன சமூகத்துக்கு அறிவு, கலை எல்லாம் வேண்டும். வேதம் நிறைய அறிவைத் தருகிற வஸ்து என்பதால், அதன் அர்த்தத்தைச் சிலர் சமூகம் முழுவதற்கும் பிரசாரம் பண்ணிக் கொண்டிருந்துவிட்டுப் போகட்டும் என்று சொல்லத் தோன்றும். ஆனால், சாஸ்திரம் இப்படிச் சொல்லாமல் பிராமணனாகப்பட்டவன், “வேதத்தின் சப்தத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஜன சமூகம் முழுவதற்கும் அதைக் கொடுத்து ரக்ஷிக்க வேண்டும்” என்கிறது. அர்த்தத்தை எல்லோரும் அறியப் பண்ண வேண்டும் என்றால் அதில் லோகக்ஷேமம் தெரிகிறது. நேர்மாறாக சப்தத்தைச் சிலர் மட்டும் வைத்துக் கொள்வதால் லோகக்ஷேமம் என்றால் நம்பிக்கை வரமாட்டேன் என்கிறது.

மற்ற தொழில்கள் நின்று போனால் சமூகம் பாதிக்கப் படுவதுபோல், வேத அத்யயனம் நின்றால் எப்படிப் பாதிக்கப்படும் என்று தெரியவில்லை.

இது புரிய வேண்டுமென்றால் வேதம் என்பது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். இவ்விஷயத்தை முழுக்க அறிவினால் ஆராய்ந்து மட்டும் பிரயோஜனம் இல்லை. அநுபவஸ்தர்கள் சொல்வதை நம்பினால்தான் உண்டு.

இப்படிச் சொன்னவுடனேயே ஆக்ஷேபனை வந்துவிடக் கூடும். ‘அதெப்படி சார்? நாங்கள் பகுத்தறிவாளிகள் (rationalists). முழுக்க எங்கள் அறிவுக்குள் அகப்படுகிறது என்றால் தான் ஏற்றுக் கொள்வோம்’ என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது? எல்லா விஷயங்களுமே மனுஷ்ய அறிவுக்குள் அகப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்று எப்படி உரிமை கொண்டாடலாம்? எத்தனையோ ஜீவராசிகளில் இவன் ஒருத்தன். இவனுடைய லாபரட்டரியில் நடக்கிற காரியங்கள் ஒரு மாட்டின் அறிவுக்குப் புரியுமா? “என் புத்திக்குப் புரியாததால் இந்த பௌதிக விதிகள் (Laws) இருக்கவே முடியாது” என்று மாடு சொல்லலாமா? மாடு வரைக்கும் போக வேண்டாம்; மநுஷ்யர்களிலேயே ஃபிஸிக்ஸ் படிக்காதவர்களுக்கு அவை எப்படிப் புரியும்? ஆனால், அதை நன்றாகப் படிப்பவர்கள் சொல்வதால், படிக்காதவர்களும் நம்புகிறார்கள். அவர்கள் செய்கிற உபகாரணங்களால் பிரத்யக்ஷமாக நடக்கிற காரியங்களைப் பார்த்து விதிகளை எல்லாருமே ஒப்புக் கொள்கிறார்கள். அப்படியே சாஸ்திரத்தை அநுஷ்டித்தவர்கள் வேதத்தைப் பற்றிச் சொல்வதை நம்ப வேண்டும். இதுவரைக்கும் அது பிரத்யக்ஷமாகத் தந்திருக்கிற பலன்களிலிருந்து அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். பெரிய பிரத்யக்ஷ பலன் இதுவரை ஹிந்து சமூகம் எத்தனையோ எதிர்ப்புகளுக்கும் தாக்குப்பிடித்து விழாமலே இருக்கிற ஒரே பழைய மதம் என்பதும், இந்த மதத்தில்தான் லோகத்துக்குள்ளேயே, மிக அதிகமான மகாபுருஷர்கள் தோன்றியிருக்கிறார்கள் என்பதுமேயாகும். “எங்கள் அறிவுக்குள் வரவேண்டும்” என்று ஜனங்கள் சொல்லாமல் நம்பி ஏற்றதாலேயே, இதுவரை சிரேயஸை அடைந்து வந்திருக்கிறார்கள்.

“மனுஷ்ய அறிவின் எல்லையை மீறி அகண்டமாக ஆனவர்களே ரிஷிகள். அவர்களின் மூலமே வேத மந்திரங்கள் லோகத்துக்கு வந்திருக்கின்றன” என்பது அடிப்படைக் கொள்கை. அம்மாதிரி மனுஷ்யர்கள் ஆத்ம சக்தி பெறவே முடியாது என்று சொல்லிவிட்டால், ‘அப்புறம் பேச்சே இல்லை. பிரத்யக்ஷமாக இருக்கிற மகான்களையும், ஸித்திமான்களையும் வேண்டுமானால் சுட்டிக்காட்டி, இவர்களுக்கு மற்றவர்களுக்கு இல்லாத சக்திகள் இருக்கிறதே, இதைப் பார்த்தாவது நம்புங்கள்’ என்று சொல்லலாம். ‘அவர்கள் செய்வதெல்லாம் மோசம், ஏமாற்று வித்தை’ என்று பதில் சொல்லிவிட்டால் பிறகு பேச்சில்லை. இப்போது நாம் இருக்கிற நிலையில் நம் புத்திக்கு என்ன எட்டுகிறதோ அதற்கு மேற்பட்டதாக எதுவும் இருக்க முடியாது என்பதேதான் ரொம்பவும் பகுத்தறிவற்ற வாதமாயிருக்கிறது. இதை அப்படிச் சொல்பவர்களே புரிந்து கொண்டால்தான் உண்டு.

ஏதோ சுவாரஸ்யமாகப் பேச்சுக் கச்சேரி கேட்கலாம் என்ற அளவிலாவது, எத்தனையோ தினுசான அரசியல் (Political) மீட்டிங்குகள் இருக்கிறபோதுகூட, இங்கே என்னிடம் நீங்கள் வந்திருப்பதால் உங்களில் யாரும் இப்படித் தங்களை முழு rationalist ஆகச் (பகுத்தறிவாளர்) சொல்லிக் கொள்ள மாட்டீர்கள் என்று நினைத்து, வேதம் ஏன் சம்பிரதாயப்படி இனியும் இருக்க வேண்டும் என்பதற்குக் கூட காரணம் சொல்கிறேன். ஒரு வேளை அப்படியில்லாதவர்களுக்குச் “சாமியார் சொல்வதும் கொஞ்சம் சரியாக இருக்கும் போலிருக்கிறதே” என்று தோன்றினாலும் தோன்றலாம்.

* * * *

வேத சப்தம், வேத சப்தம் என்ற சப்தத்துக்கு முக்கியத்துவம் தருவதுதானே புரிபடாமல் இருக்கிறது? சரி, சப்தம் என்பது எப்படி உண்டாகிறது? எங்கே ஒரு அதிர்வு (vibration) சலனம் ( movement , motion ) இருந்தாலும் அங்கே சப்தம் உண்டாகி விடுகிறது. இது பகுத்தறிவு சாஸ்திரமான ஸயன்ஸே சொல்கிற விஷயம். தொனியில் சில விதமான சலனங்களை உண்டாக்கிப் பல தினுசான பேச்சுச் சப்தங்களை ஏற்படுத்தியிருக்கிறோம்.

சப்தங்கள் காதுக்குக் கேட்கிறவையாகவே தோன்றுகின்றன. ஆனால் சிலவற்றைக் காதுக்குக் கேட்க முடியாத மின்சார அலைகளாக மாற்ற முடியும் என்று ரேடியோ, டெலிபோன் முதலியவற்றைப் பார்த்தால் தெரிகிறது. நாம் பார்ப்பது, கேட்பது எல்லாமே இந்த மின்சார அலைகள்தான்; பார்க்கிறவனும் கேட்கிறவனும், அவனுடைய மூளையும்கூடத்தான் என்று சொல்கிற அளவுக்கு ஸயன்ஸ் கொண்டுவந்துவிட்டிருக்கிறது. இது இருக்கட்டும்.

லோகத்தில் இத்தனை கோடி ஜட வஸ்துகள் மலையும், பூமியும், ஆறும், சமுத்திரமும் உண்டாயிருக்கின்றன. ஜீவராசிகள் விதவிதமாக உண்டாயிருக்கின்றன. இத்தனையும் எதிலிருந்தோதான் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றன. அந்த ஏதோ ஒன்று இப்படி சிருஷ்டிக்கிறபோது பல தினுசாக அசைந்து கொடுத்து, எத்தனையோ சலனங்களின் மீதுதான் இத்தனையும் தோன்றியிருக்க வேண்டும். சலனத்துக்கெல்லாம் சப்தம் உண்டு என்றால், சிருஷ்டி முழுவதற்கும் முந்திப் பலவித சப்தங்கள் உண்டாயிருக்க வேண்டும். இந்த சிருஷ்டியில் ஒன்றுக்கொன்று வாழ்வளித்துக் கொள்கிறது. இப்படிப் பரஸ்பரம் போஷித்துக் கொள்கிறபோது பலவிதமான சலனங்கள் அல்லது சப்தங்கள் உண்டாகத்தான் வேண்டும். ஸ்தூலமான காரியங்களில்தான் சலனம் இருக்கிறதென்று இல்லை. நாம் நினைக்கிறதும்கூட ஒருவிதமான மின்சார கரெண்டின் ஓட்டம்தான் என்று ஸயன்ஸில் கண்டு பிடித்திருக்கிறார்கள். இதனால் நம்முடைய எண்ணம் ஒவ்வொன்றுக்கும்கூட ஒரு சலனமும் ஆனபடியால் சப்தமும் இருந்தாக வேண்டும். இந்த சப்தங்கள் ரொம்ப ரொம்ப சூக்ஷ்மமாக இருப்பதால் நம் காதுகளுக்குக் கேட்கவில்லை. பாக்டீரியா கிருமி நம் கண்ணுக்குத் தெரியவில்லை. மைக்ராஸ்கோப்பினால் பார்த்தால் அது தெரிகிறது. அப்படியே நம் காதுகளுக்குக் கேட்காத சூக்ஷ்ம சப்தங்கள் நிறைய இருக்கின்றன. பௌதிகமாகவோ (Physical), மானஸிகமாகவோ (Mental) ஒரு அசைவு என்று வந்துவிட்டால் அங்கே ஸயன்ஸ்படி சப்தமும் உண்டாகித்தான் ஆகவேண்டும்.

ஒவ்வொரு அசைவுக்கும் தனியாக ஒவ்வொரு சப்தம் இருக்கிறது. இதையே மாற்றிச் சொல்வதானால், ஒவ்வொரு விதமான சப்தத்தை உண்டாக்க வேண்டுமானால், அதற்கு ஒவ்வொரு விதமான அசைவை உண்டாக்கித்தான் ஆக வேண்டும். ஒரு வித்வான் பாடுகிறார். அவர் பாடுகிற மாதிரியே நாம் பாட வேண்டும். அதே மாதிரியே புரட்ட வேண்டும் என்றால், அவர் தொண்டையில் என்னென்ன சலனங்களை உண்டாக்குகிறாரோ அவற்றையே நாமும் பண்ணத்தான் வேண்டும்.

சப்தமும் அசைவும் சேர்ந்து சேர்ந்தே, ஒன்றாகவே உண்டாகின்றன. இப்படி உண்டான அப்புறம் அந்த அசைவுகளிலிருந்து ஒரு ஸ்தூலமான வஸ்து அல்லது மனோபாவம் உண்டாகிறது. ஆகக்கூடி சப்தத்திலிருந்தே சிருஷ்டி ஏற்படுகிறது. இந்தப் பிராசீனமான தத்துவம் ஸயன்ஸ் பகுத்தறிவுப்படியும் கூட சரியானதுதான் என்று தெரிகிறது.

சிருஷ்டி, அதிலே நடக்கிற பல காரியங்கள் எண்ணங்கள் இவற்றின் மூலமாக சப்தங்கள் ஆகாசத்தில் (Space) அப்படியே நிறைந்துதான் இருக்கின்றன. நாம் கையைத் தட்டினவுடன் ஒரு சப்தம் உண்டாகிறது என்றால் அது என்ன ஆகிறது? அது அப்படியே ஆகாசத்தில்தான் தங்கி விடுகிறது. நல்ல காரியங்கள், கெட்ட காரியங்கள் எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு சலனம், சப்தம் இருக்கிறது. இந்த சப்தத்தை உண்டாக்கி விட்டால் அந்த நல்லது அல்லது கெட்டதும் வந்துதான் ஆக வேண்டும். நல்லெண்ணங்கள் ஜனங்களுக்கு உண்டாகிறது என்றால் அப்படி உண்டாக்குகிற சலனங்கள் இருக்க வேண்டும்; அவற்றிற்கான சப்தங்கள் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சப்தங்களை நாம் உண்டாக்க முடியுமானால் லோகத்தில் ஜனங்களுக்கு நல்ல எண்ணங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். ஜனங்களுக்கு உயர்ந்த எண்ணங்கள் இருப்பதைவிட லோகத்துக்குப் பெரிய க்ஷேமம் என்ன இருக்கிறது? அப்படி எண்ணுவதற்கு அவர்களைத் தூண்டுகிற சக்தியைப் பெற்ற சப்தங்கள்தான் வேத மந்த்ரங்கள்.

அது மட்டுமில்லை. ஜனங்கள் ஜீவிப்பதற்கு ஆகாரம் அவசியம். ஆகாரத்துக்கு மழை அவசியம். லோகத்தில் ஒரு மேகம் உண்டாகிறது. அது மழையாகப் பெய்கிறது என்றால், இந்தக் காரியங்கள் அநேக விதமான சலனங்களின் மீதே நடந்திருக்கிறது. எனவே, சில சப்தங்களை உண்டாக்கி அதன் மூலம் இப்படிப்பட்ட சலனங்களை ஏற்படுத்தி விட்டால் மழை பெய்யத்தான் வேண்டும். இப்படியே வாழ்க்கைக்கு அவசியமானவற்றையெல்லாம், நல்லவற்றையெல்லாம் சப்தங்கள் மூலம் உண்டாக்கிக் கொள்ளலாம். அநாவசியமானவை, கெட்டவை இவைகளையும் சிற்சில சப்தங்களால் பண்ணிக் கொள்ளலாம்தான். ஆனால், வேதத்தில் இருக்கப்பட்ட சப்தங்கள் லோக க்ஷேமார்த்தம் ஒன்றையே குறிக்கோளாக உடையவை.

கடைசியில் பார்க்கும்போது, இப்படி சலனம், சப்தம் உண்டாகிறது என்றால் அதுவும் என்னவோ தானாக ஏற்பட்டதா? இல்லை. தானாகப் பலவித சலனங்கள் ஏற்பட்டால் எல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் கோணாமாணா என்றுதானே இருக்கும்? ஆனால் பிரபஞ்சத்தில் எத்தனை கிரமமும், ஒழுங்கும், பரஸ்பர சம்பந்தமும் இருக்கிறது? இதைப் பார்த்ததில் ஒரு பேரறிவுதான் திட்டம் போட்டு இப்படி எல்லாம் அசைந்து கொடுத்து சிருஷ்டியை உண்டாக்கியிருக்கிறது என்று தெரிகிறது. அந்த அறிவின் அசைவில் ஏற்பட்ட சப்தங்களைத்தான் வேதம் என்பது. வேத மந்த்ரங்கள் சாட்சாத் பரமாத்மாவிடம் உண்டானவை என்பது இதனால்தான். அப்படிப்பட்ட சப்தங்களை இப்போதும் நாம் ரக்ஷித்து லோகத்துக்கு நல்லது செய்ய வேண்டும். இப்படிப்பட்ட லோகக்ஷேமார்த்தமான சப்தக் கோவைகள்தான் வேத மந்த்ரங்கள்.

‘அதெப்படி? வேத மந்த்ரங்கள் நம் காதுக்கே நன்றாகக் கேட்கின்றன. சிருஷ்டியில், பிரபஞ்சம் வெளி (space) யில் உண்டாகிற சப்தங்கள் காதுகளுக்குக் கேட்கவில்லையே. அதுவும் இதுவும் ஒன்று என்றால் எப்படி?’ என்ற கேள்வி தோன்றுகிறது.

பிரபஞ்சத்தில் இருக்கிறதெல்லாம் ஜீவனிடமும் இருக்கிறது. “அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்”. இதனால் மந்திர சப்தங்களை ஸ்வரம் தப்பாமல் எழுப்புவதால் ஒரு ஜீவ சரீரத்தில் ஏற்படும் நாடி சலனங்களைக் கொண்டே ஆகாச வெளியில் லோக க்ஷேமார்த்தமான சலனங்களைப் பிடித்துக் கொடுத்துவிடலாம். இது அறிவுக்கு ஒத்துக் கொள்ள முடியாததாக தோன்றலாம். ஆனால், அண்டத்தில் உள்ள பல சமாசாரங்களைக் கிரகித்துக் கொள்வதற்கு இந்த மனித பிண்டத்தில் கருவிகள் (இந்திரியங்கள்) இருக்கின்றன என்பது நாஸ்திகர் உள்பட எல்லோரும் ஒத்துக் கொள்ளும் விஷயம். அண்டத்திலே ஒரு சூரியன் இருந்தால், அதனுடைய உஷ்ணத்தை நம் தேகம் தெரிந்து கொள்கிறது. வெளியிலே ஒரு பூ இருந்தால், அதனுடைய வாசனை இங்கே நம் மூக்குக்குத் தெரிகிறது. வெளியில் கரும்பு என்று ஒன்று இருந்தால் அதன் ருசியைத் தெரிந்து கொள்ள இங்கே வாய் இருக்கிறது. ஒன்று சிவப்பாய் இருக்கிறது, இன்னொன்று மஞ்சளாக இருக்கிறது என்று நம் கண் தெரிந்து கொள்கிறது. ஒரே சரக்கு அண்டத்தையும் பிண்டத்தையும் பண்ணியிருந்தாலொழிய இதில் ஒன்று இன்னொன்றைப் பற்றித் தெரிந்து கொள்ளவோ, அதிலிருந்தே வாழ்க்கையை நடத்திக் கொள்ளவோ முடியாது. இன்னும் ஒரு படி மேலே போனால் ஒரே சரக்குதான் அண்டத்தைப் பண்ணிற்று, பிண்டத்தைப் பண்ணிற்று என்று மட்டுமின்றி, அதுவேதான் அண்டமும் ஆகிறது பிண்டமும் ஆகிறது என்று தெரியும். யோகிகள் இதைப் பிரத்யக்ஷமாக அறிந்திருக்கிறார்கள். “அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்” என்று அப்போது நிதர்சனமாகத் தெரியும்.

அகண்ட ஆகாசத்தில் என்னென்ன இருக்கின்றனவோ அதெல்லாம் ஜீவனிடமும் இருக்கின்றன. மனுஷ்ய சரீரத்தில் அவையெல்லாம் இந்த ஜீவனுடைய இந்திரியங்களுக்கு எட்டுகிற மாதிரி வேறுவிதமாக இருந்து கொண்டிருக்கின்றன. இவன் தொண்டையிலே ஒரு விதமான சப்தங்களை உண்டாக்குகின்றான் என்றால், ஆகாசத்திலும் அதற்கு மூலமாக நம் காதுகளுக்குக் கேட்க முடியாததாக சில வித சப்தங்கள் இருக்கின்றன. ரேடியோ மின்சார அலையை கிரகித்து சப்த அலையாக மாற்றுகிறதுபோல், இவனும் அந்த ஆகாச சப்தங்களைக் கிரகித்து அவற்றை ஜீவனுடைய இந்திரியங்களுக்கு, காதுக்கு, கேட்கக்கூடிய சப்தங்களாக மாற்றித்தர முடியுமானால் லோகக்ஷேமத்திற்கு என்ன வேண்டுமோ அதை சப்தத்தாலேயே சாதித்துக் கொண்டு விடலாம். இதைப் பண்ணிக் கொடுக்கிற ஸயன்ஸ்தான் யோகம். நாடி சலனங்களால் தன்னொருத்தனுக்குத் சித்த சுத்தியை உண்டாக்கித் தருகிற அதே யோகம், ரேடியோவில் இன்ன இடத்தில் முள்ளைத் திருப்பினால் இன்ன ஸ்டேஷனில் பாட்டைப் பிடிப்பது போல், இன்னின்ன விதமான சப்தங்களின் நாடி சலனத்தால் இன்னின்ன லோக க்ஷேமார்த்தமான விச்வ சக்திகளை ஆகர்ஷிப்பதற்கும் வழி செய்கிறது. யோக சாதனை மூலமாக அண்டத்திலிருப்பதை எல்லாம் பிண்டத்தில் தெரிந்து கொண்டு, பிண்டத்துக்குக் கொண்டு வரவும் முடிகிறது.

இப்படி நான் சொல்வதற்கு அறிவுக்கு ஏற்றுக் கொள்கிற மாதிரி, யுக்திக்குப் பொருந்துகிற மாதிரி நிரூபணம் (proof) தரவேண்டுமென்று கேட்டால் முடியாத காரியம். நாம் இருக்கிற ஸ்திதியில் இந்த மனுஷ்ய யுக்திக்கு மேற்பட்ட நிலையில் இருக்கிறது தான் யோகம். நம்முடைய அல்ப மனசின் யுக்திக்கு அப்பாற்பட்டவற்றைச் சொல்வதற்காக இருப்பதே வேதம். இப்படியிருக்க, யுக்திக்கு அதீதமானதை ஏற்றுக் கொள்வதற்கு யுக்தி மூலமே ப்ரூஃப் காட்டுங்கள் என்றால் அது அசம்பாவிதம். பெரியவர்கள் சொல்வதை நம்பினால்தான் உண்டு. யோக சாஸ்திர விதிகளைத் தவறாமல் அவரவரும் கடைப்பிடித்தால்தானே உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். கேள்வி கேட்கிற எல்லோரும் இப்படி யோக சாதனை செய்வார்கள் என்பது நிச்சயமாக நடக்கிற காரியம் இல்லை. அல்லது ஒரு உண்மை யோகியின் சக்தியைப் பார்த்து ஏற்றுக் கொள்ளலாம் என்றாலும், அவர் உண்மை யோகிதான் என்று முதலில் எப்படி நம்ப வைப்பது? அவர் செய்கிற காரியம் ஏமாற்று வித்தை இல்லை என்று எப்படி நம்ப வைப்பது? ஆகக்கூடி எங்கேயோ ஓரிடத்தில் நம்பிக்கை என்று ஒன்று வந்துதான் ஆகவேண்டும். அப்புறம் அநுமானங்கள், சொந்த சாதனை, அதிலிருந்து வரும் அநுபவம் எல்லாம் நம்பிக்கையைக் கெட்டிப்படுத்தி இது சத்தியம்தான் என்று உறுதி தருகின்றன. நம்பவும் மாட்டேன், நானும் செய்து பார்க்க மாட்டேன் என்பவனிடம் ஒன்றும் செய்து கொள்வதற்கில்லை.

‘அண்டத்தையும் பிண்டத்தையும் ஒன்றாக இணைத்துக் காணக்கூடிய ஒரு நிலை உண்டு. அதை அடைந்தவர்கள் உண்டு. அவர்களால் இதில் ஒன்றில் சூக்ஷ்மமாக இருப்பதை இன்னொன்றில் ஸ்தூலமாக மாற்றிக் கொடுக்க முடியும்’ என்று நம்பக்கூடியவர்களுக்குத்தான் சொல்கிறேன்.

எத்தனையோ கிரமத்துடன் இயங்கிவரும் இந்தப் பிரபஞ்சத்தைப் பார்க்கும் போது இதையெல்லாம் செய்கிற பேரறிவு ஒன்று இருக்க வேண்டும் என்று தெரிகிறது. அந்தப் பரமாத்மாவிடம்தான் நாம் பார்க்கிற சகல வஸ்துக்களும் நாம் கேட்கிற இத்தனை சப்தங்களும் உண்டாயிருக்கின்றன. முதலில் சப்தப் பிரபஞ்சம் ஆகாயத்தில் உண்டான பின்தான் நாம் கண்களால் பார்க்கிற பிரபஞ்சம் உண்டாயிற்று. ஆகாயத்தில் இந்த சப்தங்கள் அனைத்தும் இருக்கின்றன. வெளிப் பிரபஞ்சத்திலிருப்பதெல்லாம் மனிதனின் உடலிலும் இருக்கின்றன. வெளியிலிருக்கிற ஆகாயம் ஜீவனின் இருதயத்திலும் இருக்கிறது. யோகிகள் சமாதி நிலையில் இந்த ஹிருதயாகாசத்தை அநுபவிக்கிறார்கள். அப்போது உள், வெளி என்ற பேதம் நீங்கி, சகலமும் ஒன்றாகி விடுகின்றன. இதய ஆகாசமும் வெளி ஆகாசமும் ஒன்றாகிவிடுகின்றன. இந்த நிலையில் யோகிகளுக்கு ஆகாசத்திலுள்ள சப்தங்களைக் கிரகித்து லோகத்துக்குத் தர முடிகிறது. லோக க்ஷேமார்த்தமான இந்த சப்த கோவைகளே வேத மந்திரங்களாகும். இவற்றை யாரும் உண்டாக்கவில்லை. ஒவ்வொரு வேத மந்திரமும் ஒரு ரிஷியின் பேரில் இருந்தாலும், உண்மையில் அந்த ரிஷி அந்த மந்திரத்தை இயற்றவில்லை. ஒரு மந்திரத்துக்கு இன்னார் ரிஷி என்கிறபோது, ஆகாசத்தில் அநாதியாக உள்ள அந்த ரிஷியே முதலில் கண்டு கொண்டு உலகுக்கு வெளியிட்டார் என்றே அர்த்தம். ‘ரிஷி’ என்றால் ‘மந்த்ர த்ரஷ்டா’ (மந்திரத்தைக் கண்டுபிடித்தவர்) என்றுதான் அர்த்தம் சொல்லியிருக்கிறது. ‘மந்த்ரகர்த்தா’ (மந்த்ரத்தைச் செய்தவர்) என்றல்ல. நம் உடம்புக்குள் சுவாஸம் பலவிதமாக அசைந்து கொடுத்தே நம் வாழ்க்கை நடப்பதுபோல், இந்த சப்த அசைவுகளாலேயே பிரபஞ்ச வாழ்க்கை நடப்பதால் பரமாத்மாவின் மூச்சே வேத மந்திரங்கள். எனவே, இவையன்றி பரமாத்மா இல்லை. அதாவது, பரமாத்மாவைப் போலவே இவையும் அநாதியானவை.

இந்த வேத மந்திரங்களில் விசேஷம் என்னவென்றால், அர்த்தம் இல்லாமல் வெறும் சப்த ரூபத்திலேயே அவை லோக க்ஷேமத்தைச் செய்கின்றன. ஆனால் இதுமட்டுமில்லை. அவற்றுக்கு உயர்ந்த அர்த்தமும் இருக்கிறது. சகல வேதங்களும் பரம தாத்பரியமாக, ஒரே சத்தியம்தான் இத்தனையாகவும் தோன்றியிருக்கிறது என்று சொல்கின்றன. இது தவிர அவை சப்தங்களாக இருக்கிறபோதே அந்தந்த சப்தத்துக்குரிய தேவதா ரூபங்களாகவும் இருந்து அந்த தேவதையின் சாக்ஷாத்காரத்தையும் அநுக்கிரகத்தையும் நமக்கு ஏற்படுத்தி வைக்கின்றன.

சப்தம் தானாகப் பலனைத் தரவில்லை. சகல பலனையும் தருகிற பலதாதா ஈசுவரன்தான். அப்படியிருந்தும், அவனே நேராக ஒவ்வொரு பலனையும் தராமல், ராஜா (ராஷ்டிரபதி) பல அதிகாரிகளை வைத்துக் கொண்டு ராஜாங்கம் நடத்துவதுபோல், ஒவ்வொரு பலனைத் தரும் அதிகாரிகளாக ஒவ்வொரு தேவதையை வைத்திருக்கிறான். அந்த தேவதையின் சப்த ரூபமே அதற்கான மந்திரம். சப்த ரூபமான மந்திரத்தை உருவேற்றி ஸித்தியடைந்தால் தேவதையின் அவயவங்கள் கொண்ட ரூபத்தையும் கண்ணால் காணலாம். இப்படி உள்ள தேவதா சரீரத்துக்கு, குறிப்பிட்ட மந்திரங்களைச் சொல்லி அக்கினியில் ஆஹுதி செய்தால் அதுவே ஆகாரமும் ஆகிறது.

இவ்விதம் யக்ஞம் செய்தால் அந்த தேவதைகள் விசேஷமாகப் பலனைத் தருகின்றன. நாம், வரியை நேரே ராஜாவுக்கா (ராஷ்ட்ரபதிக்கா) செலுத்துகிறோம்! அதிகாரிகளுக்குத் தானே செலுத்துகிறோம்! அது மாதிரி, பரமாத்மாவின் சிப்பந்திகளாக லோக க்ஷேமமான பயன்களைத் தருகிற தேவதைகளுக்கு வேத அத்யயனத்தாலும், யக்ஞத்தாலும் வரி செலுத்துகிறோம். வேத சப்தங்கள் அவர்களுடைய ஸ்வரூபமாகவே இருப்பதுதான் அவற்றின் பெருமை. வேத அத்யயனமானது நம் நாட்டுக்கு மட்டுமின்றி லோகம் முழுவதற்கும் சுபிக்ஷம், சாந்தி முதலியவற்றைத் தரும் பிரபஞ்ச சக்திகளின் அநுக்கிரகத்தை வாங்கிக் கொடுக்கிறது.

காவிய திருஷ்டியில் (literary point of view) பார்த்தாலே, “வேதம் நாகரிகம் தெரியாத பழங்குடிகளின் வார்த்தையாக இல்லை. அதில் அத்தனை ரஸங்களும் இருக்கின்றன” என்று பல மேல் நாட்டுக்காரர்களே கொண்டாடுகிறார்கள். இதற்கு மேலே அது பல தேவதைகளின் தரிசனத்தையும் அநுக்கிரகத்தையும் செய்து வைக்கிறது. அதற்குமேல், முக்கியமாக உபநிஷதங்களில், பரம ஞானமான ஆத்ம தத்துவத்தை உபதேசிக்கிறது. இப்படிப்பட்ட அர்த்த கெளரவம் வேதத்துக்கு இருந்தாலும் அதைவிடக் குறைந்ததில்லை அதன் சப்த கெளரவம். இன்னும் சொல்லப்போனால், சப்தமே தனிப்பட்ட சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. வேத மந்திரங்கள்தான் என்றில்லை, எந்த மந்திரத்துக்குமே பொதுவான உண்மை இது.

பல மந்திரங்களில் அர்த்தத்தைவிடக்கூட சப்தத்துக்கு முக்கியத்துவம் அதிகம்! அவற்றின் அக்ஷரத்துக்கும் அவற்றைச் சொல்ல வேண்டிய ஸ்வரத்துக்குமே விசேஷ சக்தி உண்டு. அர்த்தத்துக்கு அந்த அளவு விசேஷமில்லை. உதாரணமாக, தேள் கொட்டு மந்திரத்தை எடுத்துக் கொண்டால், அதற்கு அர்த்தம் என்று ஒன்றும் விசேஷமாக இராது. அர்த்தத்தைச் சொல்லக் கூடாது என்றும் சொல்வார்கள். ஆனாலும் அந்த சப்தக் கோவையை ஜபித்தால், அதனால் ஆகாசத்தில் ஏற்படுகிற ஒலி அதிர்வுகளாலேயே (Vibration) அதாவது, அக்ஷரங்களின் சக்தியினாலேயே விஷம் இறங்கி விடுகிறது. ஒவ்வொரு விதமான சப்தத்துக்கு ஒவ்வொரு விதமான சக்தி உண்டு. ‘ஆபிசாரம்’ என்று பிறருக்குக் கெடுதல் செய்யக் கூட மந்திரம் இருக்கிறது. அந்த சப்தங்களுக்குக் கெடுதல் செய்யும் சக்தி இருக்கிறது. இவற்றில் எல்லாமே அக்ஷர சுத்தம், ஸ்வர சுத்தத்தில்தான் சக்தி. பில்லி, சூனியம் வைக்கிறவர்களின் பல்லைத் தட்டிவிடுவதுண்டு. ஏனென்றால் பல் போனால் சொல்லும் மாறுபடும். அவர்கள் ஜபிக்கிற மந்திரங்களில் சப்த தோஷம் உண்டாகும். அதனால் அவை பலன் தராமல் போகும். உச்சாரணம் சுத்தமாக இருந்தால்தான் அக்ஷரங்கள் பலன் தரும். சப்தங்களுக்கே இப்படி சக்தி இருப்பதை புரிந்து கொண்டோமானால், அப்புறம் எந்த மந்திரம் எந்த பாஷையில் இருக்கிறது, பாஷையை மாற்றலாமா என்ற யோசனைகள் எழும்பாது. திவஸ மந்திரத்தை இங்கிலீஷில் மொழி பெயர்க்கலாம், தமிழில் சொன்னால்தானே நம் அப்பாவுக்கு புரியும் என்றெல்லாம் கேட்காமலிருப்போம்.

எந்த சப்தங்கள் சகல பிராணிகளுக்கும் இகபர நலன்களைத் தருமோ, அவையே வேதங்களில் உள்ள மந்திரங்கள். இதை நம்பினால்தான் உண்டு. நம் காதுகளுக்கும் கேட்காதது ரிஷிகளுக்கும் கேட்குமா என்று கேட்கலாகாது. நமக்குத் தெரியாததைக் காண்கிற திவ்விய திருஷ்டி, நமக்குக் கேளாததைக் கேட்கும் திவ்விய சுரோத்தரம் எல்லாமே உண்டு. இப்போது நம் பார்வை, நம் கண்ணிலுள்ள லென்ஸைக் கொண்டு நடைபெறுகிறது. இந்த ஸென்ஸ் வேறுவிதமாக இருந்தால், நாம் பார்ப்பதெல்லாம் வேறு விதமாகத் தெரியும். யோக சாதனையினால் இந்த திவ்விய சக்திகளைப் பெற முடியும்.

வேதத்தில் இருப்பவற்றை நம் கண்ணாலும், காதாலும், யுக்தியாலும், புத்தியாலும் பரீட்சிப்பது சரியல்ல. வாஸ்தவத்தில் நம் கண்ணுக்கும், காதுக்கும், புத்திக்கும், யுக்திக்கும் எட்டாததைச் சொல்லவே வேதம் இருக்கிறது. நமக்கு நேரில் தெரிவதை நாமே தெரிந்து கொள்கிறோம். அதற்கு வேதம் என்று ஒன்று வேண்டியதே இல்லை. எதை ருசுவினால் நிரூபிக்க முடியாதோ, எங்கே புத்தி எட்டாதோ, அப்படிப்பட்ட பரம சத்தியங்களை திவ்விய சிருஷ்டி உள்ள முனிவர்கள் அறிந்து வேதமாகத் தந்திருக்கிறார்கள். அந்நிய தேச விவகாரங்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அங்கிருந்து வருகிற பத்திரிக்கைகளிலிருந்து தெரிந்து கொள்கிறோம். உடனே நம்பி விடுகிறோம். லோகத்திலுள்ள கருவி எதனாலுமே தெரிந்து கொள்ள முடியாத விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக வேத மந்திரங்கள் என்ற பத்திரிக்கையை ரிஷிகள் தந்திருக்கிறார்கள்.

அவற்றை நம்பிக்கையின் மேல்தான் ஏற்க வேண்டும். கொஞ்சம் நம்பி ஏற்றுக் கொண்டால், தானே அதன் பலன் தெரிந்து, போகப்போக இதுவே சத்தியம் என்று நிச்சயமாக அறிந்து கொள்வோம்.

பிரத்யக்ஷமாக மந்திர சக்தியால் அங்கங்கே கொஞ்சம் இப்போதும் நடந்து வருகிறது. இதில் நல்லதைவிட கெட்டதுதான் இப்போது அதிகமாக இருக்கிறது—ஏவல், பில்லி, சூனியம் இது மாதிரி ‘மாந்த்ரிகம்’ என்றாலே பயப்படுகிற மாதிரி இருக்கிறது. ஆனால் இதிலிருந்தேகூட, கெட்டதைச் செய்ய ஒரு சில சப்தக் கூட்டங்களுக்கு சக்தி இருக்குமானால், நல்லதைச் செய்யவும் ஏன் இப்படிச் சில சப்தக் கூட்டங்களான மந்திரங்கள் இருக்கக்கூடாது என்று யோசித்துத் தெரிந்து கொள்ளலாம். நல்லதாகவும் அவ்வப்போது எங்கேயோ கேள்விப்படுகிறோம். ‘வருண ஜபம் செய்தார்கள், மழை பெய்தது’ என்று படிக்கிறோம். நம் ஊரிலேயே எப்போதாவது இந்த மாதிரி நேரில் பார்க்கிறோம்.

இன்னோரிடத்தில் வருண ஜபம் பண்ணியும் மழை பெய்யாமலிருக்கலாம். அதனால், மந்திரத்தையே சக்தியில்லாததென்று தள்ளிவிடக்கூடாது. மருந்துகளைச் சாப்பிட்டு உடம்பு சரியாகிறவர்களும் இருக்கிறார்கள்! குணமாகாமல் சாகிறவர்களும் இருக்கிறார்கள். அதனால் மருந்தே தப்பு என்போமா? மருந்து பலிக்காவிட்டால் வியாதி முற்றியிருக்க வேண்டும் என்கிறோம். அதுபோல் கர்மா ரொம்பப் பலமாக இருந்தால், எந்த மந்திரமும் பலன் தராமல் போகலாம். இன்னொரு காரணமும் உண்டு. பத்தியம் தப்பினால் மருந்து பலிக்காது. அந்த மாதிரி மந்திர சக்தி ஸித்திப்பதற்குச் சில நியமங்களைப் பத்தியம் போல் வைத்திருக்கிறது. இந்த நியமங்களில் தப்பு வந்தால் மந்திரங்களிலிருந்து உத்தேச பலன் கிடைக்காது. யோக சாஸ்திரம் ஒரு ஸயன்ஸ். ஸயன்ஸ் பரிசோதனை செய்கிற லாபரட்டரியில் இப்படி இப்படி இருக்க வேண்டும் என்ற ரூலை மீறினால் நிஷ்பலனாகும் அல்லது விபரீதமாகும். மின்சாரத்தில் வேலை செய்யும் போது, ‘மரத்தில் நிற்கமாட்டேன்’, ‘ரப்பர் உறை (gloves) போட்டுக் கொள்ள மாட்டேன்’ என்றால் என்ன ஆவது? அப்படித்தான், யோக சாஸ்திரம் ஒரு ஸயன்ஸ் என்றால் அதன் விதிகளின்படி கேட்டுத்தான் ஆக வேண்டும். வருண ஜபம் பலிக்காத பல இடங்களில் நான் விசாரித்ததில் அலவண நியமம் அதாவது ஜபம் செய்கிறவர்கள் உப்பே சேர்த்துக் கொள்ளக்கூடாது என்கிற விதி—சரியாக அநுஷ்டிக்கப்படவில்லை என்று தெரிந்து கொண்டிருக்கிறேன்.

மந்திர மகிமையில் பட்ட மரம்கூடத் துளிர்க்கும் என்பதைத் திருவானைக்காவில் பிரத்தியட்சமாகப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். ‘ஜம்பு’ என்கிற வெண் நாவல் மரம்தான் அங்கே ஸ்தல விருட்சம். அதனாலேயே அந்த ஊருக்கு ஜம்புகேசுவரம் என்று பெயர் இருக்கிறது. அங்கேயிருந்த ஸ்தல விருட்சம் பட்டுப்போய் ஒரே ஒரு பட்டைதான் ஏதோ கொஞ்சம் உயிரை வைத்துக்கொண்டிருந்த ஒரு சமயத்தில், கானாடுகாத்தான் செட்டியார்கள் திருப்பணி செய்தார்கள். அப்போது இந்தப் பட்ட மரத்துக்கு ஏகாதச ருத்ராபிஷேகம் பண்ணினார்கள். மந்திர சக்தியால் அப்போழுதே அது தளிர்த்தது.

ஒவ்வொரு சப்தத்தால் ஒவ்வொரு விளைவு வெளி உலகில் உண்டாகிறது. ஆராய்ச்சியாளர்கள் சிலவிதமான சப்தங்களை ஸ்வரஸ்தானங்களில் அமைத்து ஓர் ஏரிக்குப் பக்கத்தில் திரும்பத் திரும்ப வாசித்தபோது, அதிலிருந்து உண்டான அதிர்வுகளால் (Vibration) ஜலத்தின் மேலே ஒளியானது தூள் தூளாகப் பிரசாசித்துக் கொண்டு, அப்புறம் அந்த ஒளித் தூள்கள் எல்லாம் (light particle) ஒழுங்கான வடிவத்தில் (specific shape) அமைந்தன. ஒவ்வொரு விதமான ஸ்வர வரிசைக்கும் இப்படி ஓர் ஒளி உருவம் உண்டாயிற்று. இந்த Scientific proof லிருந்து வேத மந்திர சப்தங்களால் தேவதா ரூபங்களின் தரிசனம் கிடைக்க முடியும் என்பதை நம்ப முடிகிறது.

ஒலியானது ஒளியாக மட்டும்தான் வெளி உலகில் மாறுகிறது என்றில்லை. அது வேறு பல விதங்களில் வெளியே வியாபித்துப் பலவிதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. வேத சப்தங்கள் வெளிச் சூழலில் (atmosphere) பரவிக் கொண்டிருப்பதாலேயே லோகத்தில் பரம மங்களம் உண்டாகும். அப்படிப்பட்ட சக்தி அந்த மந்திரங்களுக்கு இருக்கிறது. சப்தம் மட்டுமில்லாமல், அதன் ஸ்வரஸ்தானத்துக்கும் சக்தி உண்டு. ஓர் ஒலியை எப்படிச் சொன்னாலும் பலன் தந்துவிடாது. சிலவற்றை உயர்த்த வேண்டும். சிலவற்றைத் தாழ்த்த வேண்டும். சிலவற்றைச் சமமாக சொல்ல வேண்டும். அப்போதுதான் பலன் கிடைக்கும். வேதத்தைப் இப்படி மூன்று வித ஸ்வரங்களில் சொன்னாலே பலிதமாகும். இவற்றை உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம் என்று சொல்வார்கள். சப்தம், ஸ்வரம் இரண்டுமாகச் சேர்ந்து பிரபஞ்ச சக்திகளை நமக்கு அநுகூலமாக்கித் தருகின்றன.

* * * *

‘சரி, வேதமந்திரங்களின் சக்தியை நம்புகிறோம். ஆனால் இதற்கு ஏன் தனி ஜாதி வேண்டும்?’ என்றால் பல காரணம் உண்டு.

முதலில் வேதத்தை எழுதிப் படிக்கக்கூடாது. காதால் கேட்டுக் கேட்டு வாயால் உருப்போட்டுத்தான் மனப்பாடம் பண்ண வேண்டும். அப்புறம், இம்மாதிரி தான் கற்றுக் கொண்டதை அடுத்த சந்ததிக்கு வாயால் சொல்லிக் தரவேண்டும். வேறு காரியம், வேறு தொழில் என்று வைத்துக் கொண்டால் இது முடியாது. இது அத்தனை காலம், அத்தனை பொழுது தேவையாயிருக்கிற பெரிய சமாச்சாரம்.

வேதம் மட்டுமில்லை! மற்ற சாஸ்திரங்கள், கலைகள் எல்லாவற்றையுமே ரக்ஷித்து அந்தந்தக் கலையைத் தொழிலாகக் கொண்ட பிற ஜாதியாருக்குப் போதிக்க வேண்டியது பிராம்மணனுக்கான தொழில். சமுதாயத்தின் அறிவை, பண்பாட்டைக் வளர்க்கிற இந்தப் பொறுப்பும் அவனுக்கு இருக்கிறது. யுத்த சாஸ்திரமாகிய தனுர்வேதம் உள்பட எல்லாவற்றையும் அவன் கற்று, அந்தந்தத் தொழிலைப் பாரம்பரியமாகப் பெற்றிருப்பவர்களுக்கு போதிக்க வேண்டும். இப்படி சகல தொழில்களும் இவனுக்குத் தெரிந்திருந்தும்கூட இவன் அவற்றில் எதையும் தானே செய்து அதனால் ஜீவனோபாயத்துக்கு வழி பண்ணிக் கொள்ளக்கூடாது என்பது சாஸ்திரம். இவன் அவற்றைப் பிறருக்குத்தான் உபதேசிக்க வேண்டும்; தானே செய்யக்கூடாது என்று விதி. எத்தனை லாபம் தருகிற தொழிலானாலும், சௌகரியமான தொழிலானாலும் இவன் அவற்றைச் செய்யக்கூடாது! வேத அத்யயனமும் (தான் படிப்பது; ஓதுவது) அத்யாபனமும் (பிறருக்கு படிப்பிப்பது; ஓதுவிப்பது) தான் இவனுடைய தொழில். மந்திர சித்திக்கு வேண்டிய மகா கடுமையான விதிகளை, விரதங்களை உபவாசங்களை அநுசரித்துக் கொண்டு இவன் ஜீவனை ரக்ஷித்துக்கொள்கிற அளவுக்கு மட்டுமே ஆஹார விஹாரங்களைச் சுருக்கிக்கொண்டு குடிசையில்தான் வாழ வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லியிருக்கிறது. இவன் வேறு தொழில் செய்து பணம் சம்பாதித்து, இந்திரிய சுகங்களில் விழுந்துவிடக்கூடாது. பணம் சம்பாதிக்கிற லட்சியம் இவனுக்கு இருக்கக்கூடாது. பரம தியாகியாக லோக க்ஷேமார்த்தமாக, வேத ரக்ஷணம், கர்மாநுஷ்டானங்கள் செய்து கொண்டே காலம் கழிக்க வேண்டும்.

இவன் பட்டினி கிடந்து சாகாமல் மற்றவர்கள் இவனை ரக்ஷிக்க வேண்டும். அத்யாவசியமாக உயிர் வாழ்வதற்கு என்ன அவசியமோ, அவற்றை இவனுக்குத் தந்து காப்பாற்ற வேண்டும். யக்ஞாதிகளுக்கு வேண்டிய திரவியங்கள் இவனுக்குத் தட்டில்லாமல் கிடைப்பதற்கு வசதி செய்து தர வேண்டும். மற்ற தொழில்களில் சம்பளம் கொடுக்கிறோம். ஒரு பண்டத்தை வாங்கினால் அதற்கு விலை கொடுக்கிறோம். அந்தந்தத் தொழில்களால், பண்டங்களால், நமக்கு ஒரு சௌகரியம் கிடைப்பதால் இப்படிச் செய்கிறோம். அதேபோல் சமூகம் முழுவதற்கும் மந்திர சப்தங்களாலும் யக்ஞ கர்மாநுஷ்டானங்களாலும் க்ஷேமம் ஏற்படுத்துகிறவர்களுக்கும் பிரதியாக, அவர்களுடைய, ஜீவனோபாயத்துக்கானதைச் செய்யத்தானே வேண்டும்? இதிலே சாஸ்திரங்கள், ‘பிராம்மணனுக்கு அரண்மனைக் கட்டிக்கொடு, பவுன் பவுனாக வாரிக்கொடு’ என்று சொல்லவில்லை. யக்ஞங்களில் திரவிய லோபம் இல்லாமலிருக்க அவனுக்கு வேண்டிய செல்வத்தையும் தர வேண்டியதாயிருக்கும். ஆனால் அவனுடைய தனி வாழ்க்கையில் துளிக்கூட ஆடம்பரமே இருக்கக்கூடாது! அவன் இந்திரியங்களை வாட வாட வைத்து, அதனால் கிடைக்கிற மந்திர ஸித்தியால்தான் லோக க்ஷேமத்தை உண்டு பண்ண வேண்டும்.

நடுநடுவே வேதத்தை எழுதிப் படிக்காமல், கேட்டுத்தான் பாடம் பண்ண வேண்டும் என்றேனல்லவா? அதற்குக் காரணம் சொல்கிறேன். வேதங்களின் சப்தம் லோகத்தில் இருக்க வேண்டியது முக்கியமாதலால் அது எழுத்தில் புஸ்தகமாக இருக்க வேண்டியதில்லை. இருக்கக்கூடாது. அது புஸ்தகமாக வந்துவிட்டதோ, அப்புறம் அதை மனப்பாடம் பண்ணி தினமும் ஓதுகிற காரியம் போயே போய்விடும்—இதில் கொஞ்சம்கூட சந்தேகம் இல்லை. ‘விஷயம்தான் புஸ்தகத்தில் இருக்கிறதே! அவசியமேற்படுகிறபோது அதைப் பார்த்துக் கொண்டால் போச்சு. பொழுதைச் செலவழித்து மனப்பாடம் பண்ணுவானேன்?’ என்கிற அசிரத்தை வந்து விடும். இதற்கு சமீப காலத்தில் கிடைத்திருக்கிற ஓர் உதாரணத்தைச் சொல்கிறேன். இப்போது ‘பஞ்சாங்காரன்’ (பஞ்சாங்கக்காரன்) என்று சிலரைச் சொல்கிறோம். ‘நான்காம் வர்ணத்தவர்களுக்கு அநுஷ்டானங்களைப் பண்ணி வைப்பதுதான் இவனுடைய தொழில்’ என்று நடைமுறையைப் பார்த்து நினைக்கிறோம். ஆனால், ‘பஞ்சாங்கக்காரன்’ என்ற பெயரைப் பார்த்தால், இது அவனுடைய முக்கியமான தொழில் இல்லை என்று தெரிகிறது. பஞ்சாங்கம் கணிக்கிறவன் எவனோ, அவனே உண்மையில் பஞ்சாங்கக்காரன். பஞ்சாங்கம் என்றால் என்ன? ஒரு நாளுக்குப் பஞ்ச (ஐந்து) அங்கங்கள் இருக்கின்றன. திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம், கரணம் என்று. ஒரு நாள் நல்ல நாளா இல்லையா, அன்றைக்கு என்னன்ன காரியம் செய்யலாம், செய்யக்கூடாது என்று தீர்மானிப்பதற்கு இந்த ஐந்தும் தெரிந்திருக்க வேண்டும். இந்த நாளில் கிரீன்விச் லாபரட்டரியில் பெரிய அஸ்ட்ரானமர்கள் உட்கார்ந்து கொண்டு, சூரியன், சந்திரன், நக்ஷத்திரங்களின் உதய அஸ்தமனங்களைக் கணக்குப் போடுகிறார்கள் என்றால், மூன்று நாலு தலைமுறைக்கு முன்வரையில் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்த பஞ்சாங்கக்காரனுக்கு இந்தக் கணக்கெல்லாம் அத்துப்படியாகியிருந்தது. கிரகணம் எப்போது பிடிக்கிறது, விடுகிறது என்பதை அஸ்ட்ரானமர்களுக்குக் கொஞ்சம்கூடச் சளைக்காமல் கணனம் செய்கிற சாமர்த்தியம் இந்தப் பஞ்சாங்கக்காரனுக்கு இருந்தது. ஜோதிஷ சாஸ்திரத்தின் மூலம் இவன் இந்தக் காரியத்தைச் செய்தான். இவன் அன்றாடம் ஒரு சிறிய ஓலையில்—பஞ்சாங்கக்காரனுக்கு ‘குட்டைச் சுவடி’ என்றே இன்னொரு பெயர் இருந்திருக்கிறது—அன்றைய தினத்தின் பஞ்ச அங்கங்களையும் எழுதிக் கொண்டு வீடு வீடாகப்போய் அதைப் படிக்க வேண்டும். அதிலிருந்து ஜனங்கள் லௌகிக காரியம், மதாநுஷ்டானம் இரண்டுக்குமே அவசியமாக இருக்கிற திதி, வார, நக்ஷத்திர, யோக, காரணங்களைத் தெரிந்து கொண்டு பயனடைவார்கள். பஞ்ச அங்கங்களைக் கணித்து, வீடு வீடாகச் சொன்னதாலேயே ‘பஞ்சாங்காரன்’ என்ற பெயரும் ஏற்பட்டது.

இப்போது பஞ்சாங்காரர்கள் இந்தப் பெரிய சாஸ்திரத்தை அடியோடு மறந்து விட்டிருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் என்ன? அச்சுக் கூடம் (Printing press) வந்தது. “பஞ்சாங்கம்” என்று ஒரு நாளுக்கு மட்டுமில்லாமல் வருஷம் முழுவதற்குமாகச் சேர்த்து புஸ்தகமாகவே அச்சுப் போட ஆரம்பித்தார்கள். புஸ்தகத்தில் வந்து விட்டது என்றவுடன், அதற்கு மூலமான சாஸ்திரத்தை மனப்பாடம் பண்ணி அப்பியாசம் செய்ய வேண்டும் என்ற எண்ணமே போய்விட்டது. ஆகக்கூடி இன்று பெயரளவில் மட்டும் பஞ்சாங்கக்காரர்கள் இருந்துகொண்டு, அவர்கள் தங்களுக்கு இந்தப் பெயர் ஏன் உண்டாயிற்று என்றுகூடத் தெரிந்துகொள்ளாத நிலையில் இருக்கிறதைப் பார்க்கிறோம். ஜோதிஷத்தில் ஒரு பாகமான பஞ்சாங்கம் என்ற பெரிய புராதன சாஸ்திரமே உதாசீனம் செய்யப்பட்டு, மறைந்து போகிற ஸ்திதி ஏற்பட்டிருக்கிறது.

வேதங்களை மட்டும் புஸ்தகத்தில் எழுதி வைத்துக் கற்றுக் கொடுக்கலாம் என்று வைத்திருந்தார்களோ, அதற்கும் இதே கதிதான் உண்டாகியிருக்கும். வேத சப்தங்கள் லோகத்தில் இருந்துகொண்டு, சமஸ்த ஜீவராசிகளுக்கு க்ஷேமத்தைக் கொடுப்பதற்கு இடமே இல்லாமல் போயிருக்கும்.

எழுதி வைத்துவிட்டால் அசிரத்தை வந்துவிடும் என்று நம் முன்னோர்கள் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். வேதத்தை எழுதிப் படிப்பவன் (லிகித பாடகன்) அதமன் என்று வைத்தார்கள். தமிழிலோ வேதத்துக்கு ‘எழுதாக் கிளவி’ என்றே பெயர். ஸம்ஸ்கிருதத்தில் வேதத்துக்கு ‘ச்ருதி’ என்று ஒரு பெயர். ‘ச்ருதி’ என்றாலும் காதால் கேட்கப்பட்ட வேண்டியது, அதாவது எழுத்தில் படிக்கக்கூடாதது என்றே அர்த்தம். வாயால் சொல்லி, காதால் கேட்டு மனப்பாடம் பண்ணுவது என்பதால்தான் இது பகுதி நேர (part-time) வேலையில்லாமல் முழு நேர (whole-time) வேலையாயிற்று. ஒருத்தர் பாதம் பாதமாக சொல்லிக் கொடுப்பதும், சிஷ்யர்கள் ஒவ்வொரு பாதத்தையும் இரண்டு முறை ஸந்தை சொல்லுவதுமாக, வேத சப்தமானது சூழல் முழுதும் நிரம்பப் பரவிவந்தது. இப்படி எத்தனையோ ஆயிரம் தலைமுறைகள் பெரிய சமுத்திரமாக விரிந்து கிடக்கிற வேத சாகைகளை வாய்மொழியாகவே வாழ வைத்து இந்த நூற்றாண்டு ஆரம்பம் வரை கொண்டு வந்துவிட்டார்கள். இந்த லக்ஷம் காலப் பயிரை—நமக்கு பகவதாக்ஞையாக வந்த கடமையை—நாம் நாசம் செய்துவிட்டால் அதைவிடப் பாபம் வேறில்லை.

வேதம் போய்விட்டால், அதற்கப்புறம் பிராம்மணன் என்று தனி ஜாதியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. இப்போது, ‘பார்ப்பானே வெளியே போ’ என்று சொல்கிற மாதிரி எங்கேயாவது, ‘குயவனே வெளியே போ; வண்ணானே வெளியே போ’ என்கிற வார்த்தைகளைக் கேட்டிருக்கிறோமா? மாறாகக் குயவர்களோ வண்ணார்களோ திடீரென்று ஓர் ஊரைவிட்டுப் போகிறார்கள் என்றால், மற்றவர்கள் அவர்களைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தாவது இருத்தி வைத்துக் கொள்வார்கள். காரணம் என்ன? குயவனால், வண்ணானால் சமூகத்திற்குப் பிரயோஜனம் இருக்கிறது.

வேத ரக்ஷணத்தைச் செய்துகொண்டு, ஸத்வ குணத்தோடு படாடோபமில்லாமல் பிராம்மணன் இருந்து கொண்டிருந்த வரையில், மற்றவர்கள் இவனால் சமூகத்துக்குப் பெரிய பிரயோஜனம் இருக்கிறது என்று கண்டார்கள். இவனிடம் நிறைந்த அன்பும், மரியாதையும், விசுவாசமும் காட்டி வந்தார்கள். இன்று உள்ள மாதிரி துர்பிக்ஷமும் வியாதிகளும் இல்லாமல் அப்போதெல்லாம் சமூகம் சௌக்கியமாகவே இருந்தது என்றால், அதற்குக் காரணம் வேத சப்தமும் யக்ஞாதி கர்மங்களும்தான் என்பதை மற்ற ஜனங்கள் உணர்த்திருந்தார்கள்.

இப்படி ஒரு சமூகப் பிரயோஜனம் இவனுடைய கர்மாவிலிருந்து கிடைத்ததோடு மட்டுமில்லாமல், இன்னொரு பெரிய பிரயோஜனம் இவனுடைய வாழ்க்கையின் உதாரணத்திலேயே (personal example) அவர்களுக்கு உண்டாயிற்று. ஆசைகளைக் குறைத்து, சாந்தர்களாக, சகல ஜீவராசிகளிடமும் தயையோடு, ஸதா பகவத் ஸ்மரணையோடு, தங்களுக்கு உடனடியாக ஒரு லாபமும் தராமலிருந்தும், கர்மாக்களை ஏகப்பட்ட நியமங்களோடு அநுஷ்டிக்கிற தியாக சீலர்களாக, இப்படி ஒரு ஜாதி இருக்கிறதைப் பார்த்துப் பார்த்தே மற்றவர்களுக்கு இப்படிப்பட்ட பண்புகளிலும், ஆத்ம குணங்களுக்கும் ஸ்வபாவமாக இருந்த ஈடுபாடு அதிக மாயிற்று. தங்களால் முடிந்த அளவில், தங்கள் தொழில் இடம் கொடுக்கிற அளவில், அவர்களும் பல நியமங்களை, விரத உபவாஸங்களை மேற்கொண்டார்கள். பிராம்மணன் மற்ற ஜாதிக்காரர்களை எழும்பவொட்டாமல் அமுக்கி வைத்தான் என்றால் அது முழுத் தப்பு. தன் personal example-ஆல் இவன் மற்றவர்களும் தாங்களாகவே எழும்பி உயர்வை அடையச் செய்ய வேண்டும் என்பதுதான் சாஸ்திரம் இவனுக்கு அமைத்துக் தந்திருக்கிற வாழ்க்கை முறை.

வேதத்தை மற்றவர்கள் அத்யயனம் செய்யக்கூடாது என்று வைத்தால், அவர்களை இவன் அழுத்தி வைத்து விட்டான் என்று நினைப்பது சுத்தப் பிசுகு. வேத ரக்ஷணம் ஒரு (Life-time) ஆயுட்கால தொழிலானதைச் சொன்னேன். எந்தத் தொழிலையுமே அந்தப் பரம்பரையில் வந்தவன் மட்டுமே அநுஷ்டிக்க வேண்டும். இல்லாவிட்டால், போட்டி – பொறாமை வரும் என்பதுதானே விதி! – வேத ரக்ஷணம் ஒரு தொழில் ஆனபின் இதில் இன்னொருவரை விட்டால் தொழிலாக பங்கீட்டில் குளறுபடியும் கோளாறுகளும் தானே உண்டாகும்? இதனால் சமூகப் சீரமைப்பு குலையத்தானே செய்யும்? அந்தந்தத் தொழிலுக்கும் உயர்த்திதான். தன் தொழிலைவிட வேத ரக்ஷணம் உயர்ந்தது என்று ஏன் இன்னொருவன் நினைத்து இதற்கு வரவேண்டும்?

மற்றவர்கள் வேதத்தை அத்யயனம்தான் செய்யக்கூடாதே தவிர, அதிலுள்ள தத்துவங்களைத் தெரிந்து கொள்வதில் ஒரு தடையுமில்லை. ஆத்மாபிவிருத்திக்கு வேண்டியது இதுதான். லோகக்ஷேமத்துக்கு வேண்டிய வேத சப்த ரக்ஷணத்தை ஒரு தொழிலாக வைத்துக் கொண்டு, சிலர் மட்டுமே இருந்தால் போதும். ஆத்மாபிவிருத்திக்கான அதிலுள்ள அபிப்பிராயங்களை சகலரும் தெரிந்து கொள்ளலாம். அப்பர் ஸ்வாமிகள், நம்மாழ்வார் போன்ற பிராம்மணரல்லாதாரின் பாடல்களில் வேத வேதாந்த தத்துவங்கள் நிறைய இருப்பதைப் பார்க்கவில்லையா!

பிராம்மணர்கள் ஞானம், பக்தி இவற்றை ஏகபோக்கியம் (monopolise) பண்ணிக் கொண்டு மற்றவர்களை கீழே அமுக்கி வைத்திருந்தால் ஒரு அப்பர் ஒரு நம்மாழ்வார் மட்டுமில்லை, இன்னும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முக்கால்வாசிப் பேரும், ஆழ்வார்களில் பலரும் தோன்றியிருக்க முடியுமா? பறக்குலத்திலிருந்து, குயவரிலிருந்து இப்படியே சகல ஜாதியிலிருந்தும் நாயன்மார்கள் தோன்றியிருக்கிறார்கள். தாயுமானவர், பட்டினத்தார் மாதிரி ஞானிகளை எங்கே பார்க்க முடியும்? ஸமீபத்திலேயே ராமலிங்க ஸ்வாமிகள் இருந்திருக்கிறார்கள். பக்தியிலும் ஞானத்திலும் இப்படி பிராம்மணர்களும் ஸ்தோத்திரம் செய்கிற மாதிரி மற்ற வர்கத்தார் உயர்வாக வந்தது மட்டுமில்லை; சிவாஜி போன்று பெரிய சாம்ராஜ்யத்தையே ஸ்தாபித்து வேத தர்மத்துக்குப் புத்துயிர் ஊட்டிய ராஜாதி ராஜர்கள் நாலாம் வர்ணத்திலிருந்தே தோன்றியிருக்கிறார்கள். எனவே அமுக்கி வைப்பது, சுரண்டுவது (exploitation) என்பதெல்லாம் புதிதாகக் கட்டிவிட்ட கதைதான்.

பிசகே இருந்திருக்காது என்று நான் சொல்லவில்லை. ஆனால் தப்பிதங்கள் நடப்பது எதிலுமே சகஜம்தான். பொதுவாக பிராம்மணன் சமூகநலனுக்காக நல்ல காரியங்களைச் செய்து கொண்டு, நல்லவனாக வாழ்ந்து, மற்றவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக (guide) இருந்தால்தான் இத்தனை யுகங்களாக மற்றவர்கள் எல்லோரும் இவனை மதிப்புடன் வாழ வைத்திருக்கிறார்கள்.

அந்தப் பிரயோஜனம் இவனால் இல்லை என்றவுடன் ‘பார்ப்பானே, வெளியேறு’ என்கிறார்கள்.

ஒரு நோக்கம் (purpose) இல்லாமல், வெறுமே மற்றவர்களுக்குப் போட்டியாக இவனும் பணத்தைத் தேடிப் பறந்து கொண்டிருக்கிறான் என்றால், அப்புறம் இவன் பிராம்மணன் என்று தனியாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இப்படி ‘பர்பஸ்’ இல்லாமல் பிராம்மண ஜாதி இருந்தால், அதை மற்றவர்கள் அழிப்பதற்கு முன்னால் நானே அழித்துவிட வேண்டும் போலிருக்கிறது. பிரயோஜனம் (utility) இல்லாமல் ஒரு வஸ்துவும் இருப்பதற்கு உரிமையில்லை. லோகத்துக்குப் பயன் இல்லாவிடில் பிராம்மண ஜாதி வேண்டியதே இல்லைதான்.

இப்போது ‘டோல்-கேட்’ என்று பல இடங்களில் சொல்கிறார்களே, இங்கே அநேகமாக ‘கேட்’ இருப்பதில்லை. பின் இந்தப் பெயர் ஏன் வந்தது என்றால், முன்பெல்லாம் அந்த எல்லையைத் தாண்டிப் போகிறபோது சுங்கம் வசூலித்து வந்தார்கள். அதற்காக ‘கேட்’ போட்டு வசூலிக்க வேண்டியவர்களை நிறுத்தி வைத்தார்கள். அப்புறம் இந்தச் ‘சுங்க’ வசூல் நின்று விட்டது. அது நின்ற பிற்பாடு ‘கேட்’ எதற்கு? ‘கேட்’டும் போய்விட்டது. பயன் (purpose) இல்லாமல் எதுவும் இருக்காது, இருக்கவும் கூடாது. இப்போது வேதம் இல்லாத பிராம்மணன் சுங்கம் இல்லாத டோல்கேட்டாகி விட்டான் என்றால், அப்புறம் இவனைத் தூக்கி எறியக்கூடாது என்று எப்படி நியாயம் கேட்கமுடியும்?

இப்போதிருக்கிற பிராம்மணன், தனக்கு ஏதோ தனி மரியாதை எதிர்பார்த்தானானால், இவனை துவேஷிக்கத்தான் வேண்டும்; இவனைத் தூஷிக்கத்தான் வேண்டும். ஆனால், துவேஷமும் தூஷணையும் நியாயமானதாக இருக்கவேண்டும். இவன் தன் தர்மத்தை விட்டதற்காகத் தூஷிக்க வேண்டுமே ஒழிய வேத தர்மமே தப்பு என்று அந்த பெரிய மூலதனத்தையே தூஷிக்கக்கூடாது. அந்த தர்மத்தை பிராம்மணன் மேற்கொண்டு நடத்துவதற்குத்தான், மற்றவர்கள் சகாயம் செய்ய வேண்டும். லோகம் நன்றாக இருக்க வேண்டுமானால், வேத ரக்ஷணம் நடக்கத்தான் வேண்டும்; இதையே பாரம்பரியத் தொழிலாகக் கொண்டவர்களும் இருக்கத்தான் வேண்டும் என்ற மனப்பான்மையை மற்றவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். பிராம்மணன் வேதத்தை விட்டதுபோல் மற்றவர்களும் வைதிக மதத்தில் நம்பிக்கையை விட்டுவிட்டால், அப்புறம் இவனை அவர்கள் துவேஷிப்பது நியாயமே இல்லை. வேதம் வேண்டாம் என்றால் அப்போது இவன் தன் தர்மத்தை-குலத் தொழிலை விட்டதுதான் சரி என்றாகி விடுகிறது. அந்தத் தொழில் போனபின் இவன் ஜீவனோபாயத்துக்கு வேறு தொழில் செய்துதானே ஆக வேண்டும். எனவே, இவன் மற்றவர்களுக்குப் போட்டியாக வந்துதான் ஆக வேண்டும்! ஆகையால், ‘வேத தர்மமும் கூடாது; ஆனால் பிராம்மணன் வேறு தொழிலுக்கும் வரக்கூடாது; இரண்டையும் எதிர்ப்போம்’ என்றால் அது பகுத்தறிவு இல்லை. வேதம் தப்பானது; வேதத்தைவிட வேண்டும் என்று சொன்னால் அதை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு வருகிறவனை வெறுப்பது நியாயமே இல்லை. ஒரு நாய் நரிகூட பட்டினி கிடந்து பார்க்கக் கூடாது என்பதுதான் மனுஷ்ய தர்மம். எல்லா மதங்களும் சொல்கிற தர்மம் இது. ஒரு மதமும் வேண்டாம் என்பவர்களும்கூட இப்படிப்பட்ட அன்பையும் தியாகத்தையும் சொல்லாமலிருக்கமாட்டார்கள். எனவே ஒருத்தனுக்குப் பாரம்பரியத் தொழிலும் கூடாது; அவன் வேறு தொழிலுக்கும் வரக்கூடாது, அவன் பட்டினி கிடந்து சாக வேண்டும் என்று நினைப்பது நியாயமில்லை.

பிராம்மணனை உண்மையான பிராம்மணனாக வேதத்தை ரக்ஷித்துக் கொண்டிருக்கப் பண்ணுவதே மற்றவர்கள் செய்ய வேண்டிய பெரிய உபகாரம். முன்பெல்லாம் நானே கேள்விப்பட்டிருக்கிறேன்; சில பிராம்மணர்கள், ‘நானும் நீயும் ஒன்றாகி விடலாம்’ என்று சொல்லிக் கொண்டு சேரிக்குப் போவார்கள். சேரி ஜனங்களோ, ‘வேண்டாம், வேண்டாம்! நீ உன் காரியத்தையே செய்து கொண்டிரு. அதுதான் உனக்கும் எனக்கும் நல்லது, இங்கே வராதே’ என்று சொல்லித் தங்கள் ஆஸ்தியான பானைகளைப் போட்டு உடைத்து அவர்களை வரமுடியாதபடி பண்ணுவார்களாம். காரியத்தில் பிரிந்திருந்தாலும், சமூகத்தில் கலந்து பழகாவிட்டாலும், மனசில் அன்புடன் அவரவரும் தங்கள் தொழிலைச் செய்து கொண்டு, பொது நலனைப் பேணவேண்டும் என்ற உணர்வு இந்த அளவுக்கு அதி சாமானியமான ஜனங்களுக்குக்கூட இருந்திருக்கிறது.

இப்போதும்கூட பொது ஜனங்கள் எல்லோருக்கும் உள்ளூற வைதிக சிரத்தையும் ஆஸ்திக்ய புத்தியும் போகவே இல்லை – அது போகவே முடியாது – என்பதுதான் என் அபிப்பிராயம். துவேஷப் பிரச்சாரம் இருக்கிறதே என்றால் அது ஏதோ அரசியல் (political) காரணத்துக்காக நடக்கிறது. உள்ளுக்குள் பார்த்தால், வேதம், அதன் சடங்குகள் வைதிக ஆச்சாரங்கள் எல்லாவற்றிலும் மக்களுக்குப் பயபக்தியும் விசுவாசமும் இருக்கவே செய்கின்றன. பிராம்மணன் மட்டும் கொஞ்சம் நேராகிவிட்டால் போதும். எல்லாத் துவேஷமும் போயே போய்விடும். மற்றவர்கள் தன்னை ஆதரிக்கவேண்டும் என்று எதிர்பார்க்காமல் இவன் ஸ்வதர்ம உணர்ச்சியுடன் சாகவும் துணிய வேண்டும் என்று சொன்னேன். ஆனால் வாஸ்தவத்தில் இவன் எதிர்பார்க்காவிட்டாலும் அப்படிப்பட்ட துர்க்கதிக்கு இவனை நம் சமூகம் ஒரு நாளும் விடாது என்பதுதான் என் நம்பிக்கை. விட்டாலும் பரவாயில்லை என்று இவன் நம் தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதே என் கட்சி. மற்றவர்கள் எப்படி நினைத்தாலும் சரி, உபசரித்தாலும் சரி, கரித்துக் கொட்டினாலும் சரி, அவர்கள் நலனுக்காக இவன் வேதத்தைக் காப்பாற்றத்தான் வேண்டும்.

இத்தனை நாள் பிராம்மண சமூகத்துக்குச் சொல்கிறேனே இது மற்ற சமுதாயத்தாரையும் உத்தேசித்துத்தான். அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தர்மங்கள் எத்தனையோ இருக்கின்றன. அவர்களும் தெரிந்து கொள்ள ஆசையோடு இருக்கிறார்கள். விளக்கிச் சொன்னால் நம்பிக்கையோடு எடுத்துச் கொண்டு நன்றாக அநுஷ்டிப்பார்கள். ஆனால், அவர்களுக்கு உபதேசிப்பதற்கு முன் எனக்கு நானே அதற்கான யோக்கிதையை நிச்சயப்படுத்திக் கொள்ள நினைக்கிறேன். பிராமண சமூகம் எனக்கு விசேஷமாக கட்டுப்பட்டிருக்கிறது என்று பொதுவாக ஒரு அபிப்பிராயம் இருக்கிறது. மடத்தில் வைதிக அநுஷ்டானங்கள் நிறைய இருப்பதால் வேதத்துக்காக என்றே ஏற்பட்ட ஜாதியிடம் எனக்கு நிறைய பாத்தியதை இருப்பதாக – தப்பாகவோ, சரியாகவோ – ஒரு அபிப்பிராயம் பொதுவாக உண்டாகியிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் நான் மற்றவர்களுக்கு தர்மோபதேசம் செய்ய ஆரம்பித்தால், அவர்கள் அன்போடு பணிவோடு சிரத்தையோடு அதை எடுத்துக் கொள்வார்கள் என்றே வைத்துக் கொண்டாலும்கூட, இன்னொரு கேள்வியும் அவர்களுடைய மனசுக்குள் தோன்றலாம். “இவரை ரொம்பவும் ஆசிரயிக்கப்பட்ட பிராம்மணர்கள் ஒருவிதத்திலும் திருந்தக்காணோமே! இதே நிலையில் நமக்கு உபதேசம் பண்ண வந்துவிட்டாரே!” என்று தோன்றலாம். வாஸ்தவத்தில் எனக்கு எல்லாரும் ஒன்றுதான். பார்க்கப்போனால், பரம ஸ்ரேயஸ்கரமான வேதத்தை விட்டுவிட்ட பிராம்மணனிடம்தான் எனக்கு அதிருப்தி ஜாஸ்தி. இருந்தாலும், லோக அபிப்பிராயப்படி பிராம்மணர்கள் ஏதோ எனக்கு விசேஷமாக கட்டுப்பட்டிருப்பதாக ஏற்பட்டிருப்பதால், அவர்களிடம், ‘வேத ரக்ஷணத்தை மறுபடி முழு மூச்சோடு ஆரம்பியுங்கள்’ என்று ஓயாமல் ஒழியாமல் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இதில் கொஞ்சத்தில் கொஞ்சமாவது பிராம்மணர்களான நீங்கள் நடைமுறைக்குக் கொண்டு வந்தால்தான், மற்றவர்களிடம் அவரவருக்கான தர்மங்களைச் சொல்வதற்கு எனக்கு வாய் இருக்கும். நல்லவைகளைத் தெரிந்து கொண்டு செய்வதற்கு ஆசையாக இருக்கிற மற்ற சமூகத்தார்களுக்கு நான் எனக்குத் தெரிந்த தர்மங்களைச் சொல்வதற்கு பிராம்மணர்கள்தான் சகாயம் செய்ய வேண்டும்-கூடிய மட்டும் நான் சொல்கிற வேத ரக்ஷணம்-கர்மாநுஷ்டானம் இவற்றை அநுசரிப்பதால்.

சகல ஜனங்களும்-ஜீவ ஜந்துக்கள் அத்தனையும் க்ஷேமமாக இருக்க வேண்டும். பரஸ்பர சகாயத்துக்காகவே ஜனங்கள் அவரவருக்கு ஏற்பட்ட தர்மங்களை உயர்வு தாழ்வு எண்ணமேயில்லாமல் பின்பற்ற வேண்டும். எல்லோருக்கும் தனதான்ய ஸம்ருத்தி, ஆத்ம க்ஷேமம் கிடைப்பதற்காகச் சிலரிடம் வேத சப்தம் இருந்தே ஆக வேண்டும். ‘மற்ற தொழில்கள் பாரம்பரியமாக வருவதில் நன்மையிருப்பதாகவே வைத்துக் கொள்வோம். ஆனால் இந்த வேதரக்ஷணம் என்று தனி ஜீவிய காலத் தொழில் ஒன்று எதற்காக இருக்க வேண்டும்?’ என்ற கேள்வியை ஆரம்பத்தில் எழுப்பினேன். இப்போது, முடிக்கிறபோது, மற்ற எந்தத் தொழில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவை ஒன்றுக்கொன்று கலந்தாலும் கலக்காவிட்டாலும் வேதரக்ஷணம் என்பதுதான் நிச்சயமாக ஒரு தனித் தொழிலாக இருக்க வேண்டும் என்று ஏற்பட்டிருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is அதம பட்சப் பரிகாரம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  என் காரியம்
Next