மதத்தின் பயன் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

தர்ம-அர்த்த-காம-மோக்ஷங்களுக்கு ஸாதனமாக இருப்பது மதம். இந்த நான்கையும் புருஷார்த்தங்கள் என்பார்கள்.

‘தர்மம்’ என்பதைப் தமிழில் ‘அறம்’ என்பார்கள். ‘அர்த்தம்’ என்பதைப் ‘பொருள்’ என்று சொல்லுவார்கள். ‘காமம்’, ‘மோக்ஷம்’ என்பவைகளை முறையே ‘இன்பம்’, ‘வீடு’ என்பார்கள். “புருஷார்த்தம்” என்பதில் ‘அர்த்தம்’ என்னும் வார்த்தை இருக்கிறது. முன்பு சொன்ன நான்கிலும் தர்மத்துக்கு அடுத்ததாக ஓர் ‘அர்த்தம்’ இருக்கிறது. ‘அர்த்தத்தில்’ என்றால், ‘வேண்டுமென்று நினைத்தல்’. புருஷன், அதாவது மனிதர்களாகப் பிறந்தவர்கள், தமக்கு வேண்டுமென்று எவைகளை நினைக்கிறார்களோ அவைகள்தாம் புருஷார்த்தங்கள். எதை மனிதன் வேண்டுமென்று நினைக்கிறான்? பொதுவாக, நாம் உள்ள பக்குவக் குறைவான நிலையில் பணமும் பொருளும்தான் வேண்டுமென்று நினைப்பதால், இதற்கே ‘அர்த்தம்’ என்ற பெயர் வந்துவிட்டது. பொருளாதார நூலை ‘அர்த்தசாஸ்திரம்’ என்கிறோம். ஆனால் நம் ஆச்சார்யாளோ இந்த அர்த்தம்தான் பெரிய அனர்த்தம் என்று “பஜகோவிந்த”த்தில் சொல்லிவிட்டார் ஏனென்றால், ரொம்பவும் தற்காலிகமான நிறைவை அல்பாயுஸான ஸந்தோஷத்தை மட்டுமே இந்தப் பொருளானது நமக்குக் கொடுத்து, சாசுவத நிறைவான மோக்ஷத்தைப் பறித்து விடுகிறது என்பதால் அப்படிச் சொன்னார்.

உண்மையில், எப்போதும் குறைவில்லாமல் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றுதான் மனிதன் நினைக்கிறான். சந்தோஷம் என்பது இரண்டுவிதம். கொஞ்ச நாழிகை இருப்பது ஒரு விதம்; எப்பொழுதும் குறையாமல் இருப்பது மற்றொரு வகை. கொஞ்ச நாழிகை சந்தோஷம் உண்டாக்குவதுதான் இன்பம் அல்லது காமம். காமம் என்பது எல்லா வித உலக ஆசைகளையும் குறிக்கும். இப்படிக் கொஞ்ச காலம் இருந்துவிட்டுப் போய்விடாமல், ஒருமுறை வந்துவிட்டால், எந்தக் காலத்திலும் போகாமல் நிலைத்திருக்கிற பேரின்பமே மோக்ஷம்—வீடு. அந்தப் பேரின்பத்தின் பெருமை தெரியாததால்தான் காமம் என்ற சிற்றின்பம் வேண்டுமென்று மனிதர்கள் நினைக்கிறார்கள்.

ஆகவே, நாம் உண்மையில் வேண்டுமென்று நினைக்க வேண்டியது நான்காவதாகிய வீடு. இப்பொழுது நடைமுறையில் வேண்டுமென்பதோ மூன்றாவதாகிய இன்பம். நாம் விருந்து சாப்பிடுவதனால் ஆனந்தம் உண்டாகிறது. அது ஓர் இன்பம். ஹைகோர்ட் ஜட்ஜ் ஆக இருந்தால் அதுவும் ஒரு வகை இன்பம். நமக்கு நல்வரவு பத்திரம் (Welcome address) வாசித்துக் கொடுத்தால் ஓர் ஆனந்தம்; அதுவும் இன்பந்தான். இந்த இன்பங்கள் சாசுவதமல்ல. இந்தச் சில்லறை இன்பத்தை எதனால் சம்பாதிக்கிறோமோ அது பொருள். அது தானியமாக இருக்கலாம், பணமாக இருக்கலாம், வீடாக இருக்கலாம், மனிதர்களாக இருக்கலாம். பொருளே இன்பத்துக்குச் சாதனம். இந்த இன்பத்தைச் சிறிது பொழுதில் அநுபவித்துத் தீர்த்து விடுகிறோம். மறுபடி இன்பம் வேண்டும் என்ற தவிப்புத் தொடங்குகிறது.

இதற்கு மேல் ஒன்று வேண்டும் என்று தோன்றச் செய்யாத நிலைத்த பேரின்பமே மோக்ஷம். அதுதான் வீடு. நாம் ஊரெல்லாம் சுற்றுகிறோம். அலைந்து கஷ்டப்படுகிறோம். நாம் வந்து அடைய வேண்டியது சொந்தவீடு. ஜெயிலில் ஒருவன் இருக்கிறான். அதிலிருந்து அவன் வெளியே வந்தால் வீட்டுக்குப் போகிறான். ‘வீடு’ என்பதற்கே விடுதலை என்று அர்த்தம். இப்பொழுது மாம்ஸமாகிய ஜெயிலுக்குள் இருக்கிறோம். இந்த உடம்பேதான் நாம் என்று எண்ணி இருக்கிறோம். அது சரியில்லை. உடம்பு நமக்கு ஜெயில். நம் நிஜமான வீடு ஆனந்தமான மோக்ஷம்தான். நாம் ஜெயிலை விட்டுச் சொந்த இடத்தில் இருக்க வேண்டும். பாபகர்மா என்ற குற்றத்துக்கு தண்டனையாக நம்மை உடம்பு ஜெயிலில் போட்டுவிட்டார் ஸ்வாமி. புண்ணியகர்மா செய்தால் அவர் சிக்ஷைக் காலத்தைக் குறைத்து (Condone பண்ணி) வெளியே அனுப்பிவிடுவார். ஜெயிலிலிருந்து கொண்டு புது பாபத்தைப் பண்ணித் தண்டனைக் காலத்தை நாம் ஜாஸ்தியாக்கிக் கொள்ளக்கூடாது; விடுதலையாகி ஸ்வாமிக்குள் போய் இருக்கிற நம் நிஜ வீட்டை அடைய முயல வேண்டும். அந்த வீடுதான் எல்லையற்ற இன்பம். உலகிலே காலம், தேசம், வஸ்து—இந்த மூன்றிலும் குறையாமல் நிறைந்து இருக்கும் பேரின்பம்.

புருஷார்த்தங்களில் முதலாவதாக ‘தர்மம்’ என்பதைப் பற்றிக் கடைசியில் சொல்கிறேன். எந்தக் காரியம் செய்தால் நல்லதோ அது தர்மம். தமிழில் ‘அறம் செய விரும்பு’ என்று முதலில் சொன்னார்கள். நல்லதாகச் செய்வதெல்லாமே தர்மம் என்றாலும், பொதுவிலே தர்மம் என்பது ஈகைக்கே வார்த்தையாக இருக்கிறது. ‘தர்மம் போடப்பா, தர்மத்தாயே’ என்றுதான் பிச்சைக்காரர்கள் யாசிக்கிறார்கள். தான-தர்மம் என்று சேர்த்தே சொல்கிறோம். தமிழிலும் தான சாஸனங்களை அறக்கட்டளை என்றே சொல்லுகிறார்கள். இப்படிப் பார்த்தால் நம் ‘பொருளை’, ‘அர்த்தத்தை’ இன்னொருத்தருக்குக் கொடுப்பது தர்மம். ஆனால் இப்படிக் கொடுப்பதற்கு வேண்டிய பொருள் நமக்கு எப்படிக் கிடைக்கும்? முன் ஜென்மத்தில் நாம் அர்த்தத்தை (பொருளை) மற்றவருக்குக் கொடுத்து தர்மம் செய்திருந்தால்தான் அது மறு ஜென்மத்தில் குட்டி போட்டுக் கொண்டு நமக்குக் கிடைக்கும். தர்மத்தினுடைய பிரயோஜனமே பொருள். இன்பத்துக்குப் பொருள் ஸாதனமாக இருப்பதுபோல் பொருளுக்குத் தர்மம் ஸாதனமாக இருக்கிறது. ஈகை மட்டுமல்ல! எவ்விதமான தர்மம் செய்தாலும், அதாவது பிறருக்கு என்ன நல்லது செய்தாலும் பலனாகப் பொருள் கிடைக்கும்.

நாம் செய்யும் தர்மத்தை ‘இதனால் எனக்குப் பொருள் வேண்டாம்; ஈசுவரன் நினைத்ததைக் கொடுக்கட்டும்’ என்று பலனை எதிர்பாராமல் அர்ப்பணம் பண்ணிவிட்டால், அப்போது நம்மிடத்தில் உள்ள அழுக்கு போய் பேரின்பம் கிடைக்கும். பொருளைத் தரும் தர்மமே அப்பொழுது பரம்பொருளைத் தரும் வீட்டுக்கு ஸாதனமாகிவிடும். இப்படி தர்மமானது பொருளுக்கு ஸாதனமாகவும், அதன் மூலம் இன்பத்துக்கு ஸாதனமாகவும், பற்றின்றி நிஷ்காம்யமாகச் செய்யப்பட்டால் வீட்டுக்கு ஸாதனமாகவும் ஆகிறது. தர்மம் செய்தால் பிரதியாகப் பொருள் கிடைக்கிறது. அந்தப் பொருளைக் கொண்டே மறுபடியும் தருமம் செய்யலாம். இப்போது அர்த்தமே தர்மம் செய்ய ஸாதனமாக இருக்கிறது. இன்பம் ஒன்று தான் தன்னாலும் நிறைவுபடுவதில்லை; பிறவற்றுக்கும் ஸாதனமாக இருப்பதில்லை. கொதிக்கிற மணலில் விட்ட ஜலம் உடனே சுவறிப்போவதுபோல் ‘இன்பம்’ என்பது, தன்னாலும் நிறைவின்றி, வேறெதற்கும் ஸாதனமாகவும் இன்றி, தர்ம சிந்தனை, பொருள், மோக்ஷம் எல்லாவற்றையும் நாசம் பண்ணிவிட்டுத் தானும் நசித்துப் போகிறது. ஆனாலும், இந்த இன்பத்தை இப்போதே விட்டு விடுவோம் என்றால் முடிய மாட்டேன் என்கிறது. அதை அடியோடு விடாமல் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்பபடுத்தித் தரவும், பிறகு படிப்படியாக இந்தச் சிற்றின்பத்திலிருந்து பேரின்பத்துக்கு அழைத்துச் செல்லவுமே மதம் என்பது ஏற்பட்டிருக்கிறது. முதலில் இதுதான் அறம் என்று சொல்லி, அதைத் செய்வதற்காகவே எப்படிப் பொருள் ஈட்ட வேண்டுமோ அந்த நியாயமான முறையைச் சொல்லி, அதனால் இன்னின்ன இன்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று பக்குவம் வருகிற வரையில் கிரமப்படுத்திக் கொடுத்து, அப்புறம் இந்தச் சின்ன இன்பங்களை எல்லாம் தொலைத்து, நிரந்தர இன்பமான வீடு என்கிற மோக்ஷத்தைக் காட்டுவதே மதம்.

பந்தத்திலிருந்து விடுதலை பெற்று, ஆத்மா பூரண சுதந்திரத்துடன் எந்நாளும் ஆனந்தமாக இருக்கிற நிலையே மோக்ஷம். இதை நமக்குக் கிட்டச் செய்வதற்கே மதம் என்பது ஏற்பட்டிருக்கிறது.

மநுஷ்யர்கள் இப்போது சாசுவதமான சுகத்தைப் பெறவில்லை என்று நிச்சயமாகத் தெரிகிறது. இவர்களை அப்படிப்பட்ட சுகத்தில் சேர்க்கவே எல்லா மதங்களும் தோன்றியிருக்கின்றன. இந்த சாசுவத சௌக்கிய நிலைக்குத் தான் மோக்ஷம் என்று பெயர். இந்திரியங்களால் பெறும் அர்த்தசௌக்கியத்தைத் தேடிப்போகிறதைத் தொலைத்தால்தான் சாசுவத சௌக்கியம் கிடைக்கும். இம்மாதிரி இந்திரிய சுகத்தைத் தொலைக்கவும், சாசுவத சௌக்கியம் கிடைக்கிற வரைக்கும் அதற்கு அநுகூலமாக சமூக வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்குமே தர்ம நியதிகள் எல்லாம் வேண்டியிருக்கின்றன. மோக்ஷத்தை லட்சியமாகக் கொண்ட மதமே இந்த தர்மங்களையும் ஏற்படுத்தித் தர வேண்டியதாகிறது. இதனால்தான் தர்மம் என்றாலே அதற்கு மதம் என்றுதான் பெரியோர்கள் பொருள் கொண்டார்கள்.

ஏதோ ஒரு மாயா சக்தியால் இப்படி மநுஷ்யர்களாகியிருக்கிற நாம் பொருளையும், சிற்றன்பங்களையுமே வேண்டுமென்று நினைக்கிறோம். எதை வேண்டுமென்று நினைக்கிறோமோ அதுதான் அர்த்தம். வாஸ்தவத்தில் நம் நிறைவான நல்லதற்குப் பொருளும் காமமும் வேண்டாதவை என்றாலும் மநுஷ்ய ஸ்வபாவத்துக்கு (Human nature- க்கு) விட்டுக் கொடுத்து இவற்றையும் நம் பெரியவர்கள் புருஷார்த்தங்களில் சேர்த்தார்கள். ஆரம்பத்திலேயே, எல்லாக் காரியங்களுக்கும் அடிப்படையாக தர்ம உணர்ச்சியை உண்டாக்கிக் கொண்டு விட்டால், அப்புறம் பொருளும் காமமும்கூட நம்மை ஒரேயடியாகப் கெடுத்துவிடாதபடி, இவற்றைக் கட்டுப்பாட்டில் அளவறிந்து வைத்திருக்கும் என்பதால் தர்மத்தை முதல் புருஷார்த்தமாகச் சொன்னார்கள். பொருளையும் காமத்தையும் நாம் அர்த்திப்பது (வேண்டுமென்று நினைப்பது) போலவே தர்மத்தையும் அர்த்திக்க வேண்டும். அப்போது அது பொருள், இன்பம் இவற்றின் விஷப் பல்லைப் பிடுங்கி விடும்; முடிந்த முடிவாக நாம் அர்த்திக்க வேண்டிய வீட்டில் நம்மைச் சேர்த்துவிடும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is பாப புண்ணியங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  மனிதனும் மிருகமும்
Next