மிளகு English : Black pepper, Common pepper, pepper Sanskrit : Maricam Tamil : மிளகு, மரிசம் தென்னிந்தியாவில் கேரளம், குடகு, மைசூர் பிரதேசங்களில் அதிகம் விளைகின்றது மலேசியா, சிங்கப்பூர், அஸ்ஸாம், கூச

மிளகு

English : Black pepper, Common pepper, pepper
Sanskrit : Maricam
Tamil : மிளகு, மரிசம்

தென்னிந்தியாவில் கேரளம், குடகு, மைசூர் பிரதேசங்களில் அதிகம் விளைகின்றது. மலேசியா, சிங்கப்பூர், அஸ்ஸாம், கூச் பீஹார் பிரதேசங்களிலும் விளைகிறது. மலபார், தலைச்சேரி ஆகிய கேரள இடங்களில் விளையும் மிளகிற்கு மதிப்பு அதிகம்.
மிளகு, வெள்ளை மிளகு, வால் மிளகு என மூன்று வகைப்படும். மிளகை ஜலத்தில் ஊரவைத்துத் தேய்த்து மேல் தோலை நீக்கி உலர்த்தி எடுப்பது வெள்ளை மிளகாகும். மிளகிலுள்ள காரம் பெரும்பாலும் அதன் தோலிலுள்ளது. அதை நீக்குவதால் அதன் காரம் குறைந்துவிடுகிறது. ஆகவே குறிப்பிட்ட நோய்களில் மிளகைவிட இதுவே ஏற்றதாகிறது. வால் மிளகு மைசூரிலும், ஜாவா ஸுமத்ரா தீவுகளிலும் அதிகம் பயிராகின்றது. இதுவும் மிளகைப் போல கொடி இனம் தான். காயின் காம்பு அதனுடன் சிறிதளவு ஒட்டிக்கொண்டு வால் போல் அமைந்துள்ளதால் வால்மிளகு என்று பெயர் ஏற்பட்டது. இதற்கு மெல்லிய தோல், தைலப்பசை அதிகம். இதன் உலர்ந்த முதிராத காய் வால் மிளகாக நமக்குக் கிடைக்கிறது.
மிளகின் கொடி தென்னை பாக்கு முதலிய மரங்களில் படர்ந்து வளர்கிறது. வெற்றிலை போன்ற இலை. இதன் காய் பச்சை நிறம். பழுத்ததும் சிவந்தும், காய்ந்ததும் கருத்தும் காண்கிறது. ஆனி ஆடியில் பூத்துப் புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மாதங்களில் காய்கிறது.
சுவையில் காரமானது, எளிதில் ஜீர்ணமாகிவிடும். ஊடுருவிச் செல்லும் தன்மையுடையது. ஜீர்ணமான பிறகும் காரமான சுவையுடன் கூடியது. நல்ல சூட்டை தரக்கூடியது. பச்சைக்காய் ஜீரணமாகும் போது இனிப்பாக மாறுகிறது. அதனால் உஷ்ண குணம் குறைவு.

மிளகின் செயல்பாடுகள்
1. மிளகின் உஷ்ணமான வீர்யத்தினால் வாத தோஷத்தையும், காரம், உலர்த்தும் தன்மை மற்றும் ஊடுருவிச் செல்லும் தன்மையால் கபத்தையும் குறைக்கக் கூடியது.
2. வெளிப்புற உபயோகம்: தோல் நீக்கிய மிளகை பாலுடன் அரைத்து உடலில் தேய்த்து ஸ்நானம் செய்தால் தோலின் அரிப்பு குறைந்து விடும். நீர் கோர்வை, முன் மண்டைத் தலைவலி, மூக்கின் மேற் பகுதியில் அரிப்பது போன்ற உணர்ச்சி முதலியவைகளில் மிளகைப் போட்டுக் காய்ச்சிய எண்ணெய்யைத் தேய்த்து வெயில் ஏறுவதற்கு முன் ஸ்நானம் செய்து புளியில்லாப் பத்தியத்துடன் வெய்யில் கொள்ளாமலிருக்க குணம் கிடைக்கும். பல்கூச்சம், எகிர் வேக்காளம், சீழ், வலி இவைகளில் மிளகுத்தூள், வெங்காயம், உப்பு இம்மூன்றையும் அரைத்துத் தலையில் புழுவெட்டுள்ள இடத்தில் பூசிவர அங்கு முடிமுளைக்கும். வெள்ளை மிளகை பால்விட்டரைத்துச் சுடவைத்துத் தலையில் தேய்த்து வருவதுண்டு. எண்ணை தேய்த்துக் கொள்ளமுடியாதவர், கடும் நோய்வாய்ப்பட்டு எழுந்தவர், எண்ணெய் ஒத்துக் கொள்ளாதவர் இவ்விதம் பால் மிளகு தேய்த்து ஸ்நானம் செய்வது வழக்கம். வால்மிளகைப் பன்னீரில் அரைத்துத் தலையில் மெல்லிய தாய்ப் பத்துப்போட தலைவேதனை குறையும். பல்வலி குறைய இதன் தூளும் தைலமும் சிறந்தது. வாய் நாற்றம், பற்களில் சீழ்ரத்தம் வடிதல், எகிர் வீக்கம் இவைகளில் வால் மிளகுத்தூள் சேர்ந்த பற்பொடி நல்ல குணம் தரும்.
3. நாடி நரம்புகளில்: மிளகுத்தூளை சாப்படுவதால் நாடி நரம்புகளில் சுறுசுறுப்பைக் கூட்டி பலத்தையும் தரும்


4. ஜீரண உறுப்புகளில்: காரம், உஷ்ணம், தீக்ஷ்ண குணங்கள் காரணமாக உணவில் சேரும் போது நல்ல பசியைத் தூண்டி, உணவை ஜீரணிக்கச் செய்வதும், ருசியைத் தூண்டுவதும் இதன் முக்கியச் செயலாகிறது. உமிழ்நீரை அதிகம் பெருக்குவதால் சுவை உணர்வு அதிகமாகிறது. கல்லீரல் குடல் சுறுசுறுப்புடன் இயங்கும். ஜீரகமும் மிளகும் உப்பும் சேர்ந்து பொடித்துச் சாதத்துடன் சாப்பிடவதுண்டு. வயிற்றில் அஜீர்ணம் மிக்க நிலையில் வயிற்றுக்கனம் குறையும் ஜீர்ணசக்தி பெருகவும் இதன் உபயோகம் வயிற்றில் ஜீரணமில்லாமல் போக்கு அதிகமாக இருக்கும்போது மிளகை நல்லெண்ணெய்யில் பொரித்து வெல்லம் சேர்த்துச் சாப்பிடுவதும், சாதத்தில் போட்டுப் HCP நல்லெண்ணெய் கலந்து சாப்பிடுவதும் உண்டு.
மிளகு 25 கிராம் சோம்பு 50 கிராம் இரண்டையும் தூள் செய்து வெல்லம் 150 கிராம் சேர்த்து இடித்து வைத்துக் கொண்டு தினம் இருவேளை சாப்பிட்டு வர வயதானவர்களுக்கும் இளைத்தவர்களுக்கும் ஏற்படும் மூலம் குணமாகும்
5. ரத்த ஓட்டத்தில்: இருதயம் பழுதடைந்து மெதுவாக வேலை செய்கையில் மிளகுத்தூள் உணவில் சேர்ப்பதன் மூலம் இருதயம் சுறு சுறுப்படைந்து ரத்த ஓட்டத்தை உடலெங்கும் சீராக்குகிறது.
6. சுவாஸ நாளத்தில்: தொண்டை மூக்கு சதை வளர்ச்சியில் மிளகைத்தூள் செய்து தேனில் குழைத்து நடுவிரலில் தோய்த்து தொண்டையினுள் தடவ உள்நாக்கு தொங்குதல் குறையும். அதனால் ஏற்படும் இருமல் கமறல் குறையும். டான்ஸில் சதை வளர்ச்சியில் இதைத் தடவி வரலாம். மூக்குச் சதை அடைப்பு, கட்டிச்சளி அடைப்பு, முன் மண்டை வேக்காளம், நீர்க்கோவை, தலைவலி இவைகளில் ஊசி முனையில் மிளகைக் குத்தி அனலில் காட்டி அதன் புகையை மூக்கினுள் செலுத்தி உறிஞ்ச அடைப்பு நீங்கும், வலி குறையும். வால் மிளகு நல்ல மனமுள்ளது. பக்ஷணங்கள், தொண்டை மருந்துகள் இவைகளில் இதற்கு அதிகம் உபயோகம். தொண்டை வரண்டோ, வெந்தோ, அடைபட்டோ, குரல் கம்மி வந்தபோது நல்ல நெய்யில் பொறித்த வால்மிளகுடன் பனங்கற்கண்டு, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கத்தக்காம்பு, இவை சேர்த்து மாத்திரை செய்து சாப்பிடுவதுண்டு.
7. சிறுநீர்ப் பாதையில்: சிறுநீர் தடங்கலில் மிளகை உணவில் சேர்ப்பதால் தடங்கல் இல்லாமல் பெருகுமாதலால் உடம்பில் மப்பாலும் சுறுசுறுப்பின்மையாலும் ஏற்படும் கனம் அசதி குறைந்து லேசாக இருக்கும் உணர்வு காணும். வால் மிளகைப் பசுவின் பாலில் ஊற வைத்து அரைத்துக் கலக்கிச் சாப்பிட்டுவர சிறுநீர் எரிச்சல், சிறுநீருடன் சீழ் விழுதல், நீர்த்துவார வேக்காளம் குறையும். இளநீரில் கலந்தும் சாப்பிடுவதுண்டு. வெள்ளை வெட்டை நோயுள்ளவர் இத்துடன் படிக்காரத்தைப் பொரித்துச் சேர்த்துச் சாப்பிடுவர்.
8. பிறப்பு உறுப்புகளில்: ஆண்மையை தூண்டிவிடும் சக்தி உடையது. மாதவிடாய் கோளாறுகளில் எள்ளு கஷாயத்தில் மிளகை தூள் செய்து வெல்லம், நெய்யுடன் கலந்து சாப்பிட மாதவிடாய் சீராகி சரியான சமயத்தில் உதிர போக்கு ஏற்படும்.
9. தோல் வியாதியில்: காணாக்கடி போன்று உடலில் தடிப்புடன் வரும் பல அலர்ஜித் தடிப்புகளில் வேளைக்கு 5-7-9-11-13 என்று கிரமமாக எண்ணிக்கையை அதிகமாக்கி மிளகைச் சாப்பிட்ட வர பித்தம் சீரடைந்து தடிப்பு குறைந்துவிடும். காணாக்கடிக்கு மந்திரிப்பவர்களும் மிளகையே மந்திரித்துக் கொடுப்பர். எல்லா விஷயங்களையும் முறிக்கும் சக்தி இதற்கு உண்டு. விஷ மாற்று மருந்துகளில் முக்கியமானது.
10. ஜ்வரத்தில்: மிளகையும் துளசியையும் கடித்துமென்று சாப்பிடக் குளிருடன் வரும் முறை ஜ்வரத்தில் உடன் நிற்கும்.
உடலில் உள்ள நாளங்களில் உள்ளே படிந்திருக்க அழுக்குகளில், மிளகை உணவாக உட்கொள்வதின் மூலம் அதன் ஊடுருவும் தன்மையால் இவ்வகை அழுக்குகள் உடைத்து வெளியேற்றுகிறது. இன்று மருத்துவ உலகம் கூறி வரும் கொலஸ்ட்ரால், ரத்தக்கட்டிகள், கொழுப்புக்கட்டிகள் ஆகியவைகளால் ஏற்படும் அடைப்புகளை நீக்க மிளகு பெரும் பங்காற்றுகிறது. குடல் கிருமிகளில் மிளகுத்தூள் வாய்விளங்கம் கஷாயத்துடன் சாப்பிட ஏற்றது.

- எஸ். சுவாமிநாதன்,பேராசிரியர்,ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி ஆயுர்வதே கல்லூரி.