மாதங்களில் நான் மார்கழி என்பது ஜகத்குருவாம் ஸ்ரீ கிருஷ்ண பகவானின் வாக்கு. இதனை பீடுடை மாதம் என்று அழைப்பார்கள். இந்த சொல் நாளடைவில் திரிந்து பீடைமாதம் என்று வழக்கில் வந்துவிட்டது. பீடுடை மாதம் எனில் சிறந்த, பெருமைவாய்ந்த, மதிப்புள்ள மாதம் என்று பொருள். அதனால் அல்லவோ பகவான் ஸ்ரீகிருஷ்ணன் தான் அந்த மாதமாக இருப்பதாக பறைசாற்றியுள்ளார்.
காலத்தை கணக்கிடுவதற்கு என சில அளவு கோல்கள் உள்ளன. வருடம் அயனம், மாதம், பக்ஷம், FF, வாரம் என்பவை நடைமுறையில் உள்ளன. ஒரு வருடத்துக்கு 12 மாதங்கள் எனவும், இரண்டு அயனங்கள் எனவும் கணக்கிட்டுள்ளனர். இரண்டு அயனங்களும் முறையே உத்தராயணம், தக்ஷிணாயணம் என்று பெயர். தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய உள்ள ஆறு மாதங்களுக்கு உத்தராயணம் எனவும் ஆடி மாதம் முதல் மார்கழி முடிய உள்ள ஆறு மாதங்களுக்கு தக்ஷிணாயனம் எனவும் பெயர். மனித இனத்திற்கு கால அளவு உள்ளது போன்றே தேவர்களுக்கும் கால அளவு உண்டு. மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அதாவது ஒரு பகல் ஒரு இரவு. தை முதல் ஆனி மாதம் முடிய உள்ள உத்தராயணம் என்பது தேவர்களின் பகல். ஆடி முதல் மார்கழி முடிய உள்ள தக்ஷிணாயனம் என்பது தேவர்களின் இரவு. இரவின் கடைசீ பகுதியாகிய விடியற்காலை நேரமாக தேவர்கட்கு அமைவது மார்கழி மாதம். எந்த ஒரு காரியத்தையும் சிந்தித்து செயல்படுத்த் திட்டம் தீட்டும் நேரம் விடியற்காலையாக அமைந்தால் அமைதியாக சிந்திக்கவும் சிந்திப்பதற்கு ஏற்ப செயல் படுத்துவதற்குண்டான வழி முறைகளை அமைப்பதற்கும் நல்ல சூழ்நிலையாக இந்த விடியற்காலை அமையும். அதோடு மேற்கொள்ள இருக்கும் செயலுக்கு விடிவும் நன்கு புலப்படும். இந்த நேரத்தில்தான் சிறுவர்கள் படிப்பதற்கு ஏற்ற நேரம் என்பார்கள். அப்போது படித்தால் படித்தது மனதில் பசுமரத்தாணிபோல் நன்கு பதிந்து இருக்கும் என்பதை அநுபவ பூர்வமாக உணர்ந்து தெரிவித்துள்ளனர் நமது முன்னோர்கள்.
தூங்கி எழும்போது இறைவனின் நினைவோடு எழ வேண்டும் என்பது மறபு. "உத்திஷ்ட சிந்திய ஹரிம்"என்று ஒரு வாக்கு உள்ளது. மனிதனின் ஒரு நாள் துவக்கம் இறை சிந்தனையோடு துவங்கினால் அந்த நாள் முழுவதும் பயனுள்ளதாக அமையும்.
தேவர்களின் ஒரு நாளின் துவக்கம் மார்கழி மாதத்தில் அமைவதால் அந்த நேரத்தில் தேவதா சிந்தனையுடன் மனிதனும் தன் வாழ்நாளில் நாளினை துவக்க வேண்டும் என்று விதித்துள்ளனர். ஆகையினால்தான் பகவானும், மார்கழி மாதமாக நான் இருக்கிறேன் என்பதின் நோக்கம், அந்த மாதம் முழுதும் என் நினைவாக இருந்து உனது செயலை துவக்கினால் c எடுத்துக்கொண்ட செயல் யாவிலும் என் அருளால் வெற்றி பெற்று பயனுருவாய் என்று அருள்கின்றார்.
இந்த மாதத்தை நோன்பு மாதம் என்றும் சொல்வதுண்டு. பாவையர் நோன்பிலிருந்து நல்கணவனைப் பெறுவார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது முதுமொழி. மார்கழியில் பாவையர் நோன்பிருந்து வழிபட தை பிறந்தவுடன் அவர்களின் விரதத்தின் பயனாக நல்லதொரு வழி பிறந்து அவர்களின் நோக்கம் நிறைவேறும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை. ஆகவேதான் சைவ வைஷ்ணவர்கள் இந்த மாதத்தினை சிற்ப்பாக நோன்பிருந்து கொண்டாடி வழிபட என்று வகுத்துள்ளனர். வைணவ ஆழ்வார்களில் ஒரே பெண்மணியாக உள்ள ஆண்டாள் மார்கழி நோன்பிருக்க என திருப்பாவை பாடி அளித்துள்ளார். சைவக்குறவர்கள் நால்வரில் கடைசீயான மாணிக்கவாசகப் பெருந்தொகை திருவெம்பாவை எனவும் திருப்பள்ளி எழுச்சி எனவும் இந்த மார்கழி மாதத்திற்கு எனவே பாடி வழிபட அளித்துள்ளார்.
இந்த இருவரும் அளித்துள்ள பாடல்கள் யாவும் மிகச் சிறந்தவை. பாடி வழிபட, பலன் அளிக்கக்கூடியவை. இந்த இருவரும் அளித்துள்ள பாடல்கள் யாவும் மிகச் சிறந்தவை. பாடி வழிபட, பலன் அளிக்ககூடியவை. எவரையேனும் எதற்கும் ப்ரயோஜனம் இல்லாதவர்கள் என்று கருதினால் அவர்களை பூமிக்கு பாரம் என்று திட்டுவார்கள். ஆனால் உண்மையில் பூமிக்கு பாரம் ஆனவர்கள் யார் என்பதை குறிப்பிடும்போது கோதைத் தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு என்று கூறப்பட்டுள்ளது. கோதை எனறு பெயர் கொண்ட ஆண்டாள் நாச்சியார் பாடிக்கொடுத்த திருப்பாவை ஐஐந்தும் ஐந்தும் (5x5+5=30) அதாவது 30 பாடல்களையும் அறியாத மானிடர்களைத்தான் பூமிக்கு பாரம் என்று கணக்கிட்டுள்ளார்கள். நாம் எவரும் பூமிக்கு பாரமாக இருக்க விரும்ப மாட்டோம். நான்கு செயல்களை மனிதன் தினமும் தவறாமல் செய்ய வேண்டும். 1. துயிலெழும்போது ஹரி ஹரி என்று எழுந்திருக்கவேண்டும். ('உத்திஷ்ட சிந்தய ஹரிம்') 2. குளிக்கும்போது கேசவனின் நாமம் சொல்லி குளிக்க வேண்டும். ('வ்ரஜன் சிந்தய கேசவம்') 3. உண்ணும்போது கோவிந்தனை மனதில் நினைத்து உண்ணவேண்டும். ('புஞ்சன் சிந்தய கோவிந்தம்') 4. தூங்க போகும்முன் மாதவனை நினைக்க வேண்டும். ('ஸ்வபன் சிந்தய மாதவம்') . இந்த நான்கு செயல்களையும் செய்வதால் எவருக்கும் எந்தவிதமான கஷ்டமோ நஷ்டமோ கிடையாது. மாறாக அமைதியான வாழ்க்கை நிச்சயமாக கிட்டும். இந்த நான்கு செயல்களையும் மக்கள் முந்தய காலத்தில் தவறாமல் செய்துவந்தனர் என்பதை விளக்குமாப்போல ஆண்டாள் நாச்சியார் தனது திருப்பாவை பாசுரத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.
1.துயில் எழும்போது ஹரி ஹரி என்பது புள்ளும் சிலம்பின்காண் என்கிற பாசுரத்தில் உள்ளத்துக்கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து ஹரி என்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ என்கிறார்.
2. பெண்கள் எல்லாம் வந்து நாட்காலோ நீராடி வந்துவிட்டார்கள். தற்சமயம் தயிற்கடைந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கேவனைப் பாடுதல் உன்காதில் விழவில்லையா?
கேசவனைப் பாடவும் கேட்டே கிடத்தியோ?
3. பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார கூடியிருந்து உண்பவர்கள் கூடாரை வெல்பவராகிய கோவிந்தனைப் பாடுகிறார்கள்.
4. நன்கு தூங்க வேண்டுமானால் மாதவன் பெயரைச் சொல்லி இருப்பாள்போல் இருக்கிறது இந்தப் பெண். ஏமப் பெரும் துயில் மந்திரப் பட்டாளோ, மாமாயன் மாதவன் வைகுந்தாள் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோ.
மார்கழி மாதத்தில் இறைவனை வணங்கி வழிபட்டு நோன்பிருந்து பயன் பெற வேண்டி இந்த மதத்தை இறை உணர்விற்கும் பக்திக்கும் என ஒதுக்கியுள்ளார். ஆகையால்தான் இந்த மாதத்தில் திருமணங்கள் செய்வதில்லை. இந்த மாதத்திற்கு மற்றொரு ஏற்றம். மிகவும் பக்தி சிறோன்மணியாவும், தன் எஜமானனைத் தொழுபவர்கள் துன்பத்தை எல்லாம் துடைத்தருளும் வள்ளலாகவும் விளங்கும் ஆஞ்சநேய ஸ்வாமிகள் திரு அவதாரமும் இந்த மாதத்தில்தான்.
பக்தியோடு இறைவனைத் தொழுவதற்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ள இறைவனின் வடிவமாகிய இந்த மாதத்திலே யாவரும் நோன்பு இருந்து, பக்தி மார்கத்தை கடைபிடித்து, கோதைத் நாச்சியாரும், மாணிக்கவாசகரும் அருளிய பாடல்கள் அறிந்து பாடி, பூமிக்கு பாரமில்லாமல் இருப்போமாக!'இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே யாவோம் உமக்கே யாம் ஆட்செய்வோம் மற்றய காமங்கள் மாற்று'என வேண்டி, அவன் தான் வணங்கி, அருள் பெற்று இன்புறுவோமாக!
இராமாயணம்