காலை முதல் இரவு வரை - Part III மனிதனின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் விடிகாலை முதல் இரவு வரை எவ்வாறு அமைய வேண்டும் என்று ஆயுர்வேதம் மிகச் சிறப்பாக எடுத்துக்கூறுகிறது மிகு

காலை முதல் இரவு வரை - Part III

மனிதனின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் விடிகாலை முதல் இரவு வரை எவ்வாறு அமைய வேண்டும் என்று ஆயுர்வேதம் மிகச் சிறப்பாக எடுத்துக்கூறுகிறது. மிகுந்த கவனத்துடன் ஆயுர்வேத உபதேசங்களை வாழ்நாளில் கடைபிடிப்பதன் மூலம் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் தனது நீண்ட ஆயுளின் மூலமாக மனிதன் பெற முடியும்.

சூர்யன் உதிக்கும் நேரத்திற்கு முன்னுள்ள இரண்டு மணி நேரம் ப்ராம்ஹ முகூர்த்தம் எனப்படும். அருணோதய வேளை என்பது சூர்ய உதயத்திலிருந்து ஒரு மணி நேரம் முன்னதாக உள்ள நேரம். சூர்யோதயம் 6 மணி எனக்கொண்டால் 4 முதல் 5மணிக்குள் எழுவது மிகவும் நல்லது. வைகறைத் துயிலெழுவதால் மனம் தெளிந்து விருப்பு வெறுப்பு முதலியவற்றால் கலக்கமில்லாமல் அமைதியுடன் இருக்கும். இரவின் அமைதியான தன்மையால் முன்நாளின் கொந்தளிப்பு அடங்கி களைப்பு அகன்று விடிகாலை புலன்களும், மனமும் சுறுசுறுப்புடன் விழித்தெழும். முதலில் சில நாட்கள் எழுவதற்கு கடினமாக இருந்தாலும் பழகிக் கொண்டால் எளிதாகி விடும். எழுந்தவுடன் மறுபடியும் குட்டி தூக்கம் போட ஆசை வரும். ஆனால் விடாப்பிடியாக மறுத்து எழுந்து கொள்ளுதல் நலம். விழித்தெழும் போது முதல்நாள் இரவு உண்ட உணவு நன்கு ஜெரித்திருந்தால் மட்டுமே விடிகாலையில் எழுவதற்கு தகுதி உடையவராக கருதப்படுவர். ஏப்பம் சுத்தமாக இருத்தல், சுறுசுறுப்பு, மலம் மற்றும் சிறுநீர் தங்கு தடையின்றி தானாகவே வெளியேறுதல், உடல் லேசானது போன்ற உணர்ச்சி, பசிதாகம் நன்கு ஏற்படுதல் ஆகிய குறிகள் இரவு உண்ட உணவு துல்லிய ஜீரணத்திற்கான அறிகுறிகள். ஆயுஸ் ர¬க்ஷக்கு விடிகாலையில் எழுதல் என்பது முக்கிய பங்கை அளிக்கிறது.

மலம் சிறுநீர் கழிக்கும் உணர்ச்சி தோன்றியவும் வடக்கு நோக்கி இருந்து அவைகளை கழிக்க வேண்டும். இரவில் மலம் சிறுநீர் கழிக்க தெற்கு நோக்கி அமர்ந்து அவைகளை கழிக்க வேண்டும். மலம் கழிக்கும் போது அதில் சிரத்தையுடன், உடலை துணியால் மூடிக் கொண்டு, தலை, காது ஆகிய வற்றையும் துணியால் மூடி மௌனத்துடன், நெகிழ்ந்து வரக்கூடிய மலத்தை அடக்காமல் வெளியேறுவதற்கு அனுமதிக்க வேண்டும். முக்கி மலத்தை வெளியேற்றக்கூடாது. மட்டமான இடம், வழி, மண், சாம்பல், பசுக்கள் கிடந்துறங்குமிடம், குப்பைக்கூளம், சாணி, படுக்கை அறை அருகில், நெருப்பினருகில் பாம்புப்புத்து, பூந்தோட்டம், உழுத நிலம், யாகசாலை, மரத்தினடியில் மலம் கழிக்கலாகாது. மேலும் பெண், மரியாதைக்குரியவர், பசு, சூர்யன், சந்திரன், காற்று, b, தண்ணீர் ஆகியவை முன்பிருந்து மலம் கழிக்கக் கூடாது. பயம், உடல் பலமில்லாதிருத்தல் ஆகிய நிலையில் மலம் வரும். உணர்ச்சி தோன்றினால் ஒன்றையும் பாராமல் உடன் மலத்தை கழிப்பதே நலம். மலம் நெகிழும் உணர்ச்சி தோன்றினால் வேறு ஒரு காரியத்தையும் செய்யாமல் அதை வெளியேற்றுவதையே முதலில் செய்ய வேண்டும். சிறுநீர், மலம் நன்கு கழித்தபிறகு தண்ணீர்துளிகள் சிதறாமல் ஆசனவாயில் உள்ள மலப் பிசுபிசுப்பு, நாற்றம் ஆகியவை நன்கு சுத்தமாகும் வரை அலம்ப வேண்டும். சிறுநீர் துவாரத்தையும் நன்கு அலம்ப வேண்டும்.

ஆசமனம் : உடலிலிருந்து ரக்தம், மலம், கண்ணீர், தலைமுடி, நகம், வெட்டும்போது இவைகளை தொட நேரிட்டால், குளித்தவுடன், சாப்பிடுவதற்கு முன்னால், சாப்பிட்ட பிறகு, தூங்கி எழும் போது, தும்மியவுடன், பூஜையை தொடங்கும் முன், வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் ஆசமனம் செய்ய வேண்டும். வடக்கு அல்லது கிழக்கு முகமாக அமர்ந்து, தனியாக, இரண்டு கால் முட்டிகளுக்கு உள்ளே கைகளை வைத்து, வேறு எங்கும் பாராமல், மௌனத்துடன், அங்க வஸ்திரத்துடன், மிகவும் குனிந்தோ, நிமிர்ந்தோ பாராமல், சுத்தமான வலது கட்டை விரல் அடியில் ஊற்றப்பட்ட, வெந்நீரல்லாத, துர்நாற்றமில்லாத, நுரையும், பதையுமில்லாத ஜலத்தை, சுத்தமான கைகளால், உறிஞ்சாமல் ஆசமனம் செய்ய வேண்டும்.

பல் தேய்த்தல் : ஆலங்குச்சி, வேலம்குச்சி, மருதங்குச்சி, கருங்காலி போன்றவை துவர்ப்பு, காரம், கசப்பு ஆகிய சுவையுடையவை. குச்சி எந்த வகை மரத்தைச் சேர்ந்தது என்பதை அறிய வேண்டும். நல்ல நிலத்தில் விளைந்ததும், நேரான குச்சிகள், முடிச்சுகள் இல்லாததும், அவருவருடை சுண்டு விரல் நுனி அளவு தடிமனான குச்சி;அடி பெருத்து நுனி சிருத்ததும், 12 அங்குலம் நீளமுள்ளதும், நுனியை நசுக்கி மிருதுவாகச் செய்து, காலையிலும், சாப்பிட்ட பிறகும் பேசாமல், பல் துலக்க வேண்டும். பல் தேய்த்த பிறகு கொட்டம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், லவங்கம், பச்சிலை, கடுக்காய், நெல்லிக்காய், தானிக்காய் ஆகிவற்றை நன்கு தூள் செய்து தேனில் குழைத்து பல் ஈறுகளில் படாமல், மெதுவாக பற்களின் மீது தேய்க்க வேண்டும். மேற் குறிப்பிட்ட மூன்று சுவைகளும் வாய்ப்புண் ஆறுவதிலும், வாயை சுத்தமாக வைப்பதிலும், கபத்தை குறைப்பதிலும் சிறந்தவை. உணவுக்குழாயின் ஆரம்ப நிலையாகிய வாயை சுத்தமாக வைத்திருத்தல் மூலம், உணவுக்குழாய் மற்றும் உடல் சுத்திக்கு அதுவே வழி வகுக்கிறது.

பல் தேய்த்த பிறகு நாக்கு வழிக்கும் கருவியால் (தென்னங்குச்சி, steel tongue cleaner) மெதுவாக நாக்கில் மேல் படர்ந்திருக்கும் அழுக்கை வழிக்க வேண்டும். இதனால் துர்நாற்றம் நீங்கி ருசி, வாய் சுத்தம் மற்றும் வாயில் லேசானது போலுள்ள உணர்ச்சி மேலிடும்.

அஜீர்ணம், வாந்தி, ஆஸ்த்மா, இருமல், காய்ச்சல், வாய்கோணிப்போகுதல், தண்ணீர்தாகம், வாய்ப்புண், இருதய நோய், கண் நோய், தலை நோய், காது நோய் உள்ள நிலைகளில் பல் தேய்த்தல் கூடாது.

வேப்பங்குச்சி, வில்வம், முருங்கை, அரசமரக்குச்சி, புளியங்குச்சி, இலவம்குச்சி, இனிப்பு, புளிப்பு, உப்பு, காய்ந்துபோன குச்சி, பூச்சிகளால் துளையிடப்பட்டகுச்சி, கெட்ட நாற்றமடிக்கும் குச்சி, கொழகொழப்புள்ளதுமான குச்சிகளை பல் தேய்க்க பயன்படுத்தக் கூடாது.

பல் தேய்க்கும் போது முதலில் கீழ் பற்களை தேய்க்க வேண்டும். பிறகுதான் மேல் பற்களை தேய்க்க வேண்டும்.

கோடைக்காலத்திலும், இலையுதிர்காலத்திலும் உடல் மற்றும் கண்களில் சூடு அதிகரிப்பதால் காலை வேளைகளில் வாய் நிறைய தண்ணீர் நிரப்பி குளிர்ந்த தண்ணீரால் கண்களை அலம்பவேண்டும். இதனால் கண்கள் குளிர்ச்சியடைகின்றன.

அதற்குப் பிறகு ஸ்வாமியையும், வீட்டிலுள்ள பெரியவர்களையும் நமஸ்கரிக்க வேண்டும். நல்ல வார்ர்த்தைகளை கேட்டுக்கொண்டு ஸ்வர்ணபாத்திரத்தில் வைக்கப்பட்டுள்ள நெய்யில் முகத்தை பார்க்க வேண்டும்.

பிறகு ஸெளவீரம் என்னும் பெயருள்ள அஞ்சனத்தை (மை) கண்ணில் எழுத வேண்டும். தினமும் கண்மை இடுவதால் கண்கள் பார்ப்பதற்கு அழகாகவும், நுண்ணிய பொருட்களைக் கூட பார்க்கும் சக்தியும், கண்ணிலுள்ள மூவர்ணங்களாகிய கருப்பு, வெள்ளை, கண்மூடியின் கீழுள்ள சிகப்பு நிறமும் நல்ல நிறங்களாகவும், கண்ணில் அழுக்கு படியாமலும், பளபளப்பாகவும், அடர்த்தியான கண் ரோமங்களும் ஏற்படுகின்றன.

கண்கள் தேஜோமயமானவை அதாவது 'ஆலோசக'பித்தம் கண்களில் இருப்பதால் சூடாகவே இருக்கும். கண்சூட்டினால் அங்குள்ள கபம் உருகி விடுவதற்கான அபாயமுள்ளது. பித்தத்தினால் கபம் உருகினால் பலவித கண்நோய்கள் ஏற்படும். அதனால் கபத்தை உருக்கி வெளியேற்ற வாரத்திற்கு ஒரு முறை 'ஏஸாஞ்சனம்'என்னும் கண்மையை கண்ணில் விட வேண்டும். இப்படியாக கண் பாதுகாப்பிற்காக தினமும் ஸெளவீராஞ்சனமும் வாரத்திற்கு ஒரு முறை 'ஏஸாஞ்சனம்' உபயோகிக்க வேண்டும்.

பிறகு 'அனுதைலம்'என்னும் எண்ணையை இரண்டு சொட்டு ஒவ்வொரு மூக்கின் துவாரத்திலும் விட வேண்டும். பிறகு வெந்நீரை வாயில் விட்டு நிரப்பி சிறிது நேரத்திற்குப் பிறகு துப்ப வேண்டும்.

மூக்கில் தினமும் 'அனுதைலம்'என்னும் எண்ணையை விடுவதால் தோள்பட்டை பலமும், உயர்ந்தும், கழுத்து, வாய் மற்றும் மார்பு பகுதி நல்ல பலமும், தோல் நிறம் மற்றும் மினுமினுப்பும் பெருகின்றன. வாய் துர்நாற்றம் நீங்கி நறுமணம் வீசும். குரல் இனிமையாக இருக்கும். புலன்கள் தெளிவுபெறும். தோல் சுருக்கம், முடி நரைத்தல், முகத்தில் கரும்புள்ளி படருதல் ஆகியவை ஏதுமில்லாமல் 'அனுதைலம்'பாதுகாக்கும்.

நல்லெண்ணை, நெய் இவையில் ஏதேனும் ஒன்றை வாயில் நிரப்புவதால் உதடு வெடிப்பு, வாய் வறட்சி, பல் நோய், குரல் அடைப்பு ஆகியன ஏற்படாது.

கருகாலிப்பட்டை, ஆலம்பட்டை, அரசம்பட்டை, அத்திப்பட்டை, இத்திப்பட்டை, வேலம்பட்டை ஆகியவற்றை 60கிராம் மொத்தமாக எடுத்து, 1லிட்டர் தண்ணீரில் கொதிக்க விட்டு, 250IL ஆகும் வரை குறுக்கி, அந்க கஷாய ஜலத்தினால் வாய் நிறைய வைத்து சிறிது நேரம் கழித்து துப்புவதன் மூலமாக ருசியின்மை கோளாறு, கெட்ட சுவை, வாய் அழுக்கு, துர்நாற்றத்துடன் வடியும் உமிழ்நீர் ஆகியவை அகன்று விடும். இளம் சூடாக வெந்நீரை வாயில் நிரப்பி பிறகு துப்புவதால் வாய் லேசானது போல இருக்கும்.

-சுபம்-

மேலும் விபரங்களுக்கு, தொடர்பு கொள்க:
- ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனை, நசரத்பேட்டை-602 103.
Tel : (044) 26272162, 26491823, Email: sjcac@vsnl.net