மகாமகம்

மகாமகம்

மகாமகத்தை, கும்பகோணத்தின் "கும்பமேளா" என்று சொல்லுவார்கள். கும்பமேளா என்பது வடநாட்டிலே ஒரு தீர்த்தஸ்நான விழா. அது போல் இங்கே தமிழ்நாட்டில் 12 ஆண்டுக்கு ஒரு முறை கிரக ராசிகளை வைத்து மாசி மாதத்தில் வரக்கூடியது.

மகாமகக் குளத்தில் அன்று எல்லாவித தீர்த்தங்களும் வருவதாகப் புராணங்கள் கூறுகின்றன. பொதுவாக நம்முடைய வீட்டிலேயே குளிக்கும் தண்ணிரில் எல்லா தீர்த்தங்களையும் பாவனை செய்து கொள்ளும் போது எல்லா தீர்த்தங்களுடைய ஸ்நான பலன் கிடைக்கும் என்பார்கள். மகாமகக் குளத்தில் அன்றைய தினம் எல்லாப் புண்ணிய தீர்த்தங்களுமே வருவதாகச் சொல்லுவது புராண வரலாறுகள்.

கும்பகோணம் என்பது சிருஷ்டி காலத்திலிருந்தே மாபெரும் ஷேத்திரம். அங்குதான் பிரும்ம தேவர் சிருஷ்டியைத் தொடங்கியதாகச் சொல்லுவார்கள். அதனால் கும்பம், கலசம் - அதில்தான் எல்லா ஜீவராசிகளும் அடங்கியிருந்தன. அங்கிருந்துதான் வெளிவந்தன. அந்தக்கும்பத்தின் மேல் ஒரு பாணத்தை எடுத்துவிட, கட்டை வழியாக வெளியே வந்தன. அதை வைத்துத்தான் கும்பேஸ்வர ஸ்வாமி, கோணேஸ்வர ஸ்வாமி என்றும் பக்கத்திலுள்ள ஷேத்திரங்களும் விளங்குகின்றன.

கும்ப கோணத்தில் பலவிதமான கோயில்கள் நிறைய இருக்கின்றன. சிவ கோயில்களும் விஷ்ணு கோயில்களும் இருக்கின்றன. காஞ்சி காமகோடி பீடத்தினுடைய கிளை மடமும் இங்கே இருக்கிறது அனேகமாக எல்லா மதங்களுடைய மடங்களும் இருக்கின்றன. புண்ணிய தீர்த்தங்களில் விசேஷமான மகாமகக் குளமும் அங்கே இருக்கிறது. ஆகவே காசியைக் காட்டிலும் ஒரு விசேஷமான ஷேத்திரமாக கும்பகோண மகாமகத்தைப் பற்றிக் கூறுகிறார்கள்.

அந்ய ஷேத்ரே க்ருதம் பாபம் புண்ய ஷேத்ரே விநச்யதி -

மற்ற சாமான்ய ஷேத்திரத்தில் செய்யும் பாவங்கள் எல்லாம் புண்ணிய ஷேத்திரங்களுக்குச் செல்லும் போது விலகுகின்றன.

புண்ய ஷேத்ரே க்ருதம்பாபம் வாராணஸ்யாம் விநச்யதி -

புண்ணிய ஷேத்திரத்தில் செய்த பாவம் எல்லாம் காசிக்குச் சென்று கங்கா ஸ்நானம் செய்து விசுவநாத்தை தரிசனம் செய்தால் விலகுகிறது.

வாரணஸ்யம் க்ருதம்பாபம் கும்பகோணே விநச்யதி -

காசியில் செய்த பாவமெல்லாம் கும்பகோணத்துக்குச் சென்று மகாமகஸ்நானம் செய்வதால் எல்லா பாவமும் போய்விடும் என்று கும்பகோணம் மகாத்மியத்தில் கூறப்பட்டிருக்கிறது.

பெரிய ஒரு புண்ணிய ஷேத்திரம் கும்பகோணம். அதைச் சுற்றியும் சிவ ஷேத்திரங்களும், விஷ்ணு ஷேத்திரங்களும் நிறைய இருக்கின்றன. இதைச் சுற்றிப்பாடல் பெற்ற ஷேத்திரங்களும் நிறைய இருக்கின்றன.

வைஷ்ணவ ஆழ்வார்களாலும், சைவ நாயன்மார்களாலும் பாடப்பட்ட ஷேத்திரங்களும் நிறைய இருக்கின்றன. இப்படி சமயத்துறையின் களஞ்சியமாக விளங்குவது கும்பகோணம், நெல்களஞ்சியம் எனப்படும் தஞ்சை, சமயக்

களஞ்சியமாகவும் விளங்குவது.

தஞ்சை ஜில்லா என்றவுடன் பிருகதீச்வரர் கோயில் ஞாபகம் வரும். அப்படி ராஜ ராஜ சோழனால் நிர்மாணிக்கப்பட்ட தஞ்சை ஜில்லாவில் கும்பகோணம் திருவையாறு, திருவாரூர் என்றும் மிகப் பவித்ரமான ஷேத்திரங்களைக் கொண்டது. திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, நந்திபுரம் இப்படி கும்பகோனத்தை மையமாககக் கொண்டு பல புண்ணிய ஷேத்திரங்கள் இருக்கின்றன.

நம்முடைய இந்து சமயத்துக்கு தலைவர்கள் எல்லாம் மிகக்குறைவு. நதிகள், புண்ணிய ஷேத்திரங்கள், பகவான் இவர்கள்தாம் தலைவர்களாயிருந்து எல்லா மக்களையும் அழைத்துச் செல்லுகிறார்கள். திருப்பதி வேங்கடாசலபதி ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்களை தம் வசம் இழுத்து பக்தி மார்க்கத்தை வளர்த்துக் கொள்கிறார்.

கும்பமேளா போன்ற புண்ணிய தீர்த்த காலங்களில் புண்ணிய தீர்த்தமே லட்சக்கணக்கான ஜனங்களையும் இழுத்து ஹிந்து மதத்தை மறுமலர்ச்சியுடன் வளர்த்துக் கொண்டு வருகிறது. இந்து மதத்துக்கு தலைவர்களைக் காட்டிலும், தெய்வீகமான உள்ள புண்ணிய தீர்த்தங்களும், பகவானுமேதான், பெரிய தலைவர்களாயிருந்து எல்லா மக்களையும் நல்வழிப்படுத்துவது கண்கூடாக உள்ளது. அப்படிப்பட்ட மகாமகப் புண்ணிய ஷேத்திரம் கும்பகோணம். அனைவரும் புண்ணிய ஸ்நானம் செய்து தங்கள் உடல் அழுக்கைப் போக்குவதோடு உள்ளத்தில் தூய்மையும், புனிதத்தையும் பெற வேண்டும் உள்ளத்தின் அழுக்கைப் போக்கிக் கொள்ளுவதுதான் ஸ்நானத்தினுடைய முக்கிய விசேஷம்.

அந்த வகையில் மகாகமக புண்ணிய காலத்தில் ஸ்நானம் செய்வதால் எல்லா விதமான பாவங்களையும் நீக்கும். தேசம், காலம், சத்பாத்திரம் எல்லாம் எங்கே ஒன்றாக கூடுகிறதோ அங்கே தானம் ஸ்நானம் எல்லாம் விசேஷமாகச் சொல்ப்பட்டிருக்கிறது.

தேசம் - கும்பகோண பிரதேசம் பவித்ர ஷேத்திரம்

காலம் - மகாமகப் புண்ணியகாலம்

பாத்திரம் - எல்லா பண்டிதர்களும், சத்பாத்திரங்களும் இத்தனையும் அமைவது அபூர்வம் அப்படிப்பட்ட சந்தர்பப்தை எல்லாரும் பயன்படுத்திக் கொண்டு தங்களுடைய வாழ்க்கையில் எல்லா தலங்களையும் அடைவதற்கு மகாமகத் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தும் பகவானுடைய அனுக்ரஹத்தை அடைய வேண்டிமென்று ஆசீர்வத்திகின்றோம்!


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is பொங்கல் நன்னாள் வாழ்த்து
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  சாதுர்மாஸ்யம்
Next