ஆடியின் சிறப்பு

ஆடியின் சிறப்பு

பொதுவாக ஆடி மாதம், மார்கழி மாதம், புரட்டாசி மாதம் இம்மூன்றிலும் மங்களகரமான காரியங்கள் பண்ணுவது மிகக் குறைவு. மார்கழி மாதத்தில் இறை வழிபாடு மட்டுமே செய்ய வேண்டும். 'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என்று பகாவனே சொல்கிறார். அதனால் அக்காலத்தில் பகவானின் வழிபாடு மட்டும் செய்வது, கல்யாணம் போன்ற காரியங்கள் செய்ய மாட்டார்கள். புரட்டாசி மாதத்தில் நவராத்திரி வரும். அம்பாளுக்கு பூஜை செய்வார்கள். அது தவிர பித்ரு தர்ப்பணங்கள் செய்யப்படும். இது தவிர விசேஷமாக இம்மாதத்தில் ஏதும் செய்வதில்லை. ஆடிமாதத்தில் எந்த நல்ல காரியங்களும் செய்யப்படுவதில்லை. ஆனால் கிராமங்களில் - கிராம தேவதைகளுக்கு விசேஷமாகத் திருவிழாக்களெல்லாம் எடுப்பார்கள். காவேரிக்கு விசேஷ பூஜை செய்து, 'ஆடிப்பெருக்கு' என்று காவேரி அம்மனுக்கு பூஜை செய்வது வழக்கம்.

இது ஒன்றும் அறநூல்களில் கூறப்பட்ட வழி முறை அல்ல. நம் பழக்கம் காரணமாக தொடர்ந்து வருவது. ஆடி அமாவாசை மிக விசேஷமாக சொல்லக் கூடியது. அன்று சமுத்திர ஸ்நானம் மிகவும் நல்லதென்று சொல்வார்கள். சாமான்ய நாட்களில் சமுத்திர ஸ்நானம் செய்தாலே புண்ணியம் உண்டு. ஆடி அமாவாசை போன்ற தினங்களில் செய்தால், அதற்கு ஆயிரம் மடங்கு புண்ணியம் உண்டு என்று சொல்லியிருக்கிறார்கள்.

காவேரியானது, தலைக்காவேரியில் உற்பத்தியாகி பலவிசேஷ ஷேத்திரங்கள் வழியாகப் பாய்ந்து வருகிறது. அந்த காவேரியின் ஜலம் ஆடியில் பயிர்களுக்குப் பாயந்தால் மிகச் செழுமையாக, சிறப்பாக இருக்கும். அப்படி வளமை சேர்க்கும் காவேரிக்கு - காவேரி அம்மன் என்று அதற்கு பூஜைகளெல்லாம் செய்து, பயிர் செழிக்க காவேரித் தாயை வேண்டிய 'ஆடிப்பெருக்கு' என்று கொண்டாடுவார்கள் தஞ்சை ஜில்லாவில் மட்டும் இப் பண்டிகை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

காவேரிக்கு பூஜை என்பது, ரவிக்கைத் துண்டு, குந்து மணி, கருக மணி எல்லாம் கொண்டு அம்மனுக்கு சாற்றி, நைவேத்தியம் செய்து வணங்கி வழிபடுவது. தஞ்சை ஜில்லாவில் ஒவ்வொரு வீட்டிலும் இதைச் செய்வார்கள்.

ஆடி மாசத்தில்தான் சாதுர்மாஸ்யம் தொடங்கி விடும். இக்காலத்தில்தான் துறவிகள் சன்யாசிகள் எல்லாம் சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பிப்பார்கள். முதல் மாதம் பால் உண்ணக் கூடாது. இரண்டாம் மாதம் தயிர் உண்ணக்கூடாது. மூன்றாம் மாதம், இரண்டாய்ப் பிளக்கக் கூடிய பருப்புகளை உண்ணக் கூடாது. நான்காம் மாதம் கறிகாய்களை உண்ணக்கூடாது என்று நியமம் அனுஷ்டிப்பார்கள். இது ஆஷாட ஏகாதசி முதல் கார்த்திகை ஏகாதசி முடிய நான்கு மாதம் வரை சாதுக்கள் இதை வைத்துக் கொள்வார்கள்.

இப்படி ஆடி மாதத்தில் பல பண்டிகைகளும் விரதங்களும் வருகிறது? கிராம சக்திகளுக்கு மிக விசேஷ மாதம் இது. கிராம தேவதைகளின் பூஜைக்கு விசேஷமானது.

கல்யாண காரியங்கள ஏதும் செய்யாமல், தெய்வகாரியங்கள் மட்டுமே இம்மாதத்தில் செய்து பயனடைய வேண்டும்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is கோகுலாஷ்டமி
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  ஆவணியின் அருமை
Next