ஐயப்பன்

ஐயப்பன்

மனித வாழ்வில் இறை வழிபாடு இன்றியமையாதது. ஒவ்வொரு ஊரிலும் ஒரு சிவன் கோவிலும், விஷ்ணு கோவிலும், ஊர்க் கோடியில் கிராமமானால் - கிராம சக்தியும் இருக்கும். இப்படி ஒரு கோடியில் சிவன் கோவிலும், இன்னொரு கோடியில் விஷ்ணு கோவிலும் இருக்கும் இடங்களைத்தான் அக்ரஹாரம் என்பார்கள். அக்ரேஹரிச்ய ஹரச்ய: அக்ரஹாரௌ: என்று சொல்வார்கள். ஆகவே, வழிபாட்டில் சிவன், விஷ்ணு இரு தெய்வங்களும் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்பதே பழங்காலம் தொட்டு, கடைப்பிடிக்கப்படும் நடைமுறை.

காலை எழுந்தவுடன் ஹரிநாமம் சொல்ல வேண்டும். மாலையில், சிவஸ்மரணை செய்ய வேண்டும், என்பது நியதி.

பரம்பொருள், மூன்று ரூபங்களிலே அருள் பாலிக்கின்றார். படைக்கும் பிரம்மனாக, காக்கும் விஷ்ணுவாக, நற்கதி அளிக்கும் சிவனாக, இப்படியிருந்தாலும், ஒவ்வொரு கிராமத்திலும், 'சாஸ்தா' என்று கிராம சக்தி ஒன்று இருக்கும். சாஸ்தா என்பது ஹரி - ஹரஸ்வரூபமாக பாகவதத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. அந்த ஹரி ஹர ஸ்வரூபத்தை நினைத்து விட்டால் வாழ்வில் கஷ்டம் என்பதே கிடையாது. ஹிந்து மதத்தின் ஒட்டுமொத்த இறைஉருவம் இந்த ஹரிஹர ஸ்வரூபத்தில் உள்ளது.

மேலும் எந்த தெய்வத்தை வழிபடுவதற்கும் நித்ய நியதிகள் இருக்கின்றன. ஆனால் ஐயப்பனை வழிபடுவதற்கு மட்டும் இந்த நியதிகள் கொஞ்சம் அதிகம்தான், நாற்பத்தெட்டு நாள் விரதம், இரண்டு வேளை ஸ்நானம், தவிர தீவிர பிரும்மசரியம் இன்னும் ஏராளம். தினசரி வாழ்க்கையில் எவையெல்லாம் நித்தியம் செய்கிறோமோ அவைகளெல்லாம் இந்த நாற்பத்தெட்டு நாட்களில் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவையாவும் நம் வாழ்வை தூய்மைப்படுத்துவதன் பொருட்டு ஏற்படுத்தப் பட்டவை.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஐயப்பன் அருவமும், உருவமுமான கடவுள். ஐயப்ப ஸ்வரூபமாகவும் காட்சியளிக்கிறார். ஜோதி வடிவமாகவும இருக்கிறார்.

கிராமங்களிலும், நகரங்களிலும் இன்னும் வீடுகளில் தீபம் ஏற்றி பூஜை செய்து 'சாஸ்தா ப்ரீதி' என்று செய்கிறார்கள்.

ஆகவே, ஹிந்து மதத்தின் மிக முக்கிய சிவ - விஷ்ணு வழிபாட்டின் பலனாக ஐயப்பனுடைய ஸ்வரூபம் நம்மிடையே சஞ்சரிக்கிறது. அந்த பக்தி இன்று நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. கார்த்திகை முதல் ஒரு மண்டல காலம், நியமத்துடன், கட்டுப்பாடுடன், ஆசாரத்துடன் வழிபடவேண்டும்.

ஐயப்பமலைக்குச் செல்லும் வழியில் - பலவிதமான - மாற்று முறைகளெல்லாம் சொல்கிறார்கள், இப்போது சிலர். ஆனால் அதெல்லாம் நமக்குத் தேவையில்லை. நம்முடைய வழிப்படி - நேர் வழிப்படி சென்று, வழிபட்டு, அருள் பெற்று வாழ்வில் கிடைக்கக் கூடிய அத்தனை வளங்களையும், நலன்களையும் அவர் அருளால் பெற்று சிறந்து விளங்க ஐயப்பனை வேண்டி ஆசீர்வதிக்கின்றோம்!


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is கந்தபிரான்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  சிவராத்திரி
Next