ஆயுர் வேதம் எதிரிடையான உணவும் நோய்ககளும் நகர வாழ்க்கையில் காலை வேளைகளில் எப்போதும் ஒரு பரபரப்பான சூழ்நிலையில் வீட்டிலிருக்கும் குழந்தைகள் முதல் பெ

ஆயுர் வேதம்

எதிரிடையான உணவும் நோய்ககளும்

நகர வாழ்க்கையில் காலை வேளைகளில் எப்போதும் ஒரு பரபரப்பான சூழ்நிலையில் வீட்டிலிருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பதட்டத்துடன் செயல்படுகின்றனர். குழந்தைகள் படுக்கையிலிருந்து எழுவதற்கு தாமதமானால் அம்மா சமையலறையிலிருந்து வீறிட்டு கத்துகிறார். அப்பா அவசர கதியில் பூஜை செய்கிறார். வயதான பெற்றோர் என்ன செய்வது என்ற குழப்பத்தில் தகப்பனார் பால் வாங்க ஓடுகிறார் தாயார் அடுப்படியில் நுழைந்து கொள்கிறார். ஒரு இனிமையான காலைப் பொழுதை (எவ்வளவு) முக மலர்ச்சியுடனும் நிம்மதியான மனதுடன் செயல்பட நம்மால் இன்று முடியாமல் போனதற்குக் காரணம் சீரான திட்டமிடாததே. பல தொலைக்காட்சி (T.V.) நாடகங்களை இரவு 11 மணி வரை விழித்திருந்து பார்த்துவிட்டு, உணவில் சிரத்தையில்லாமல் கண்டபடி சாப்பிட்டுவிட்டுப் படுத்தால் யார் தான் விடியற்காலையில் எழுவர்?மனதில் நிம்மதி குலைவதற்கு மட்டமான திரைப்படங்களும், உணவு வகைகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. உணவு வகைகளில் எதை எதனுடன் சேர்த்தால் விஷமாகும், அதை தவிர்ப்பது எவ்வாறு என்ற ஒரு துல்லிய நோட்டம் நம் முன்னோர்களுக்கு இருந்தது. இன்று அது முற்றிலும் மறந்து போய் உடல் மற்றும் மனநோய்களுக்கு ஆட்பட்டு மனிதன் டாக்டரை காண ஓட வேண்டியுள்ளது. ஒரு சில உதாரணங்களுடன் உணவு வகைகளின் சேர்க்கை விஷத் தன்மை அடைவது குறித்து பார்ப்போம்.

1. சர்வம் அம்லம் பயஸா ஏகத்யம் விருத்தம் - நீர்ப் பொருளோ அல்லது திடமானதோ அனைத்து புளிப்பு வஸ்துக்களும் பாலுடன் சேர்த்து சாப்பிடுதல் உடலுக்கு கெடுதலை விளைவிக்கும்.

2. தத : உத்தரம் வா பலம் ச விருத்தம் : புளிப்புச் சுவையுள்ள கனிகள் பாலுக்கு முன்பும் பின்பும் அருந்தக்கூடாது.

3. குலத்த மாஷ Gw பாவா : ச - கொள்ளு, உளுந்து, வரகு, மொச்சை இவைகளும் பாலுடன் சேரும் போது பகையானவை.

4. மூலகாதி ஹரிதகம் பக்ஷயித்வா குஷ்ட பாத பயாத் பய : நஸேவ்யம் - முள்ளங்கி, பட்டை, அவரைக்காய் முதலான பச்சைக் கறிகாய்களை புசித்து, பின்பால் அருந்துக் கூடாது. அப்படிப் பருகினால் குஷ்ட நோய் உண்டாகும்.

5. க்ஷீரேண லவணம், மூலகேன மாஷரூபம் -பாலுடன் உப்பையும், முள்ளங்கியுடன் உளுத்தம் பருப்பையும் புசிக்கலாகாது.

6. தத்னா தக்ரேண தாலபலேன வா கதலீபலம் -வாழைப்பழத்தை தயிர், மோர், பனம்பழம் இவற்றுடன் சேர்த்துப் புசிக்கலாகாது.

7. பிப்பலிமரிசாப்யாம் மதுனா குடேன வாகாகமாசீம் -மணத் தக்காளியை, திப்பிலி, மிளகு இவற்றுடனும், தேன், வெல்லம் இவற்றுடனும் சேர்த்துப் புசிக்கக்கூடாது.

8. காம்ஸ்ய பாஜனே தசராத்ரம் உஷிதம் சரிபி :- வெண்கலப் பாத்திரத்தில் பத்து இரவுகள் வைத்த நெய்யை பருக்கக்கூடாது.

9. ததி மது உஷ்ணம் ச ந அப்யவஹரேத் - தயிர், தேன் இவற்றுடன் சூடானதும், சூடான வீர்யமுள்ள பொருட்களையும் சேர்த்து உண்ணக்கூடாது.

10. மது ஸ சர்பி : தைல உதகானி ஸமத்ருதானி ஸமஸ்தானி வா ந - தேன், நெய், எண்ணெய், தண்ணீர் இவற்றில் ஏதேனும் இரண்டையோ, மூன்றையோ அல்லது அனைத்தையுமோ ஒரே அளவில் சேர்த்துப் பயன்படுத்துதல் ஒன்றுக்கொன்று பகையாகி தீங்கில் முடியும்.

11. உஷ்ணாபிதப்தஸ்ய ஸஹஸா ஸலிலாப்ய வகாஹ : த்வக் த்ருஷ்ட்யோ : உபகாதாய த்ருஷ்ணாபிவிருத்தயே ச பவதி, ததா ஏவ பய : பானம் ரக்த பித்தாய பவதி - வெயிலில் அலைந்து விட்டு வந்த பின் திடீரென்று குளிர்ந்த நீரில் நீராடுவது கண்களுக்கும் தோலுக்கும் கெடுதல்களை விளைவிக்கும். நா வறட்சியை தோற்றுவிக்கும். அதே நிலையில் பால் அருந்துவது இரத்த பித்தத்தை உண்டாக்கும்

12. சரீரேண ஆயஸ்தஸ்ய ஸஹஸா அப்யவஹார : சர்திஷே குல்மாய ச பவதி - வேலை செய்து உடலில் கடுமையான களைப்பு ஏற்பட்டவுடன் புசிப்பது வாந்தி மற்றும் குல்மம் என்ற நோய்க்குக் காரணமாகும்.

சுருக்கமாக கூறினால் உடலில் உள்ள வாத, பித்த கப தோஷங்களை இருக்கும் இடத்திலிருந்து நெகிழவைத்துக் கிளறிவிட்டு அதை முற்றிலும் வெளிப்படுத்தாமல் தேக்கி வைக்கும் பொருள்களே பகைப்பொருட்கள் எனப்படும். அந்தப் பொருட்கள் தாதுக்களுக்கு எதிரிடையானவை.

பாலும் கொள்ளும் எந்த ஒரு வகையிலும் பொருந்தாததால் பகையாகிறது. பால் பலாப் பழத்துடன் எல்லா வகையிலும் ஸமகுணங்களாவதால் பகையாகிறது.

தயிரை சூடாக்குவது செய்முறையால் பகை குணமாகும். சம அளவில் தேனும் நெய்யும் சேர்ப்பது (அளவில்) எதிரிடையானது.

உவர்ப்பு நிலமும் நீரும் தேசத்தால் ஒன்றுக்கொன்று ஒப்பாதவை. இரவில் நெல் பொரித் தூள் செய்த சத்துமாவை புசிப்பது காலத்தால் தீமையானது. இந்த சத்துமாவை இடை இடையே நீர் அருந்தி சாப்பிடுவது சேர்கக்கையினால் தீங்கானது. இயற்கையாகவே யவ தானியத்தைத் தனியாக புசித்தாலும் கேடு விளைவிக்கும்.

பகைமையுள்ள பொருட்களாலான உணவு வைசூரி, உடல்வீக்கம், வெறி, பெரியகட்டி, குன்மம், எலும்புருக்கி நோய், உடல் வலி, வலிமை, நினைவாற்றால், அறிவுப்புலன், மனோபலம், ஆகியவற்றின் அழிவு, மேலும் காய்ச்சல், இரத்தபித்தம், எண்வகை பெருநோய்களான வாத நோய், மூலம், குஷ்டம், நீரழிவு, பவுத்திரம், நீர்ப் பீலிகை, க்ரஹணி, நீரடைப்பு ஆகியவற்றை தோற்றுவிக்கும். நஞ்சைப் போல் உயிரையும் மாய்க்கும்.

தீங்கிழைக்கும் இயல்புள்ள பொருட்களை உண்ணும் பழக்கத்தை நீக்க, முன்பு உண்ட பொருளில் நாலில் ஒரு பங்கை அல்லது சிறிது சிறிதாகக் குறைத்து அதற்குப் பதிலாக நன்மை பயக்கும் பொருட்களை பயன்படுத்த வேண்டும். அப்படியே இடையில் ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள் என முறையே விட்டு விட்டு பழக்கப்படுத்திக் கொள்ளலாம்.

இம்முறையை கைகொள்வதால் தோஷங்கள் விலகி குணங்கள் வளர்கின்றன. தீங்கும் ஏற்படுவதில்லை. அவன் தன் உறுதியான நிலையை அடைகிறான்.

மேலும் விபரங்களுக்கு, தொடர்பு கொள்க:
- ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனை, நசரத்பேட்டை-602 103. Tel : (044) 26272162, 26491823, Email: sjcac@vsnl.net