காலம் செல்வதாயினும் முயற்சி தொடங்க வேண்டியதே : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

ஞானவான், ஞானி என்று இரண்டு பேர். ஞானவான் என்பவன் ஜீவாத்மா எனப்படுபவனின் ஆத்மா வாஸ்தவ்யத்தில் ப்ரஹ்மமேதான் என்று படிப்பறிவாலும், கேள்வியறிவாலும் நன்றாகத் தெரிந்து கொண்டு அதை ஸொந்த அநுபவமாக்கிக் கொள்ள முயற்சி பண்ணுகிறவன். ஸாதாரண ஜனங்களின் நிலைக்கு மேலே போன ஸாதகன். ஞானி என்பவன் அந்த ஸொந்த அநுபவத்தைப் பெற்றே விட்டவன்; உச்சி சிகரத்தையே பிடித்து விட்டவன். கீதையில் பகவான் சொல்கிறபோது, ப்ரஹ்ம ஞானத்திற்கு முயற்சி பண்ணுபவனான அந்த ஞானவான்கூட அநேக ஜன்மாக்களுக்கு அப்புறமே தன்னை வந்தடைகிறான்; அதாவது தனக்கும் ஆத்மாவாக உள்ள ப்ரஹ்மமாக ஸித்தி பெறுகிறான் என்று சொல்கிறார்:

பஹூநாம் ஜன்மநாம் அந்தே ஞானவான் மாம் ப்ரபத்யதே1

“பஹூநாம் ஜன்மநாம் அந்தே” என்றால் ‘அநேகம் பிறவிகளின் முடிவில்’ என்று அர்த்தம். இன்னோரிடத்திலும்2அநேக ஜன்ம ஸம்ஸித்தஸ் – ததோ யாதி பராங்கிதம்” என்று சொல்லியிருக்கிறார். அநேகம் பிறவிகளில் கொஞ்சங் கொஞ்சமாக ஸித்தி பெற்றே பரகதி பெறமுடியும் என்று அர்த்தம். இப்படி எத்தனையோ பிறவிகளுக்குப் பின்னர்தான் ஸாக்ஷாத்காரம் பெறுவது என்பதுங்கூட அவன் கருணையால் நம்மை ஓரளவுக்குத் தூக்கிவிடுவதால்தான். இல்லாவிட்டால் அந்த ‘பஹு’வும் ‘அநேக’வும் இன்னம் பல மடங்கு ஜாஸ்தியாயிருக்கும்!

ஏனென்றால், முன்னேயே சொன்னாற்போல் லக்ஷ்யம் மஹாபெரிசாக இருக்கிறது. “ப்ரஹ்மமாகவே ஆவது” என்றால் ஸாதாரண சமாசாரமா? அந்த லக்ஷி்யத்திற்காக முயற்சி செய்பவனோ மஹா சின்னவனாக இருக்கிறான்! அப்போது பஹு பஹு ஜன்ம காலம் பிடிக்குந்தானே? ஒரு பெரிய ராஜா இன்னொரு ராஜ்யத்தை ஜயிப்பதென்றாலே எத்தனையோ யுத்த முஸ்தீபு பண்ண வேண்டியிருக்கிறது. அப்படியிருக்கும் போது ஸாதாரணமான ஒரு தனி ஆள் ஒரு ராஜ்யத்தைப் பிடிக்கிறேன் என்று புறப்பட்டால் எத்தனை ப்ரயத்னம் பண்ணனும்? அகண்டமான ஆத்ம ஸாம்ராஜ்யத்தை ஒரு ஜீவன் பிடிக்கப் புறப்படுவதும் அப்படித்தான்.

விஷயம் ஒரு பக்கம் பார்த்தால் ரொம்பவும் ஸிம்பிளாக இருக்கிறது. நாம் எங்கேயோ வைகுண்டத்தில் கைலாஸத்தில் இருக்கும் ஒரு ஸ்வாமியிடம் போக முயற்சி எடுக்கணும் என்றில்லாமல் ஸ்வயம் ஸித்தமாக, இப்பவே நம்மிடம் இருக்கிற நம்மையே தெரிந்து கொள்வதுதான் லக்ஷ்யம் என்றால், இத்தனை ஸிம்பிளாகயிருக்கிறதே என்று தோன்றுகிறது. நாம் நாமாக இருப்பது என்ன கஷ்டம் என்று தோன்றுகிறது. ஆனாலும் கார்யத்தில் பண்ணிப் பார்த்தாலோ இதை விட கஷ்டமான ஸாதனை எதுவுமிருக்க முடியாதென்று தெரிகிறது. கத்திமுனை நடை மாதிரியாக்கும் இந்த ஸாதனை என்றே கடோபநிஷத்தில் சொல்லயிருக்கிறது3. ‘ஆனாலும் அதற்காகப் பின் வாங்கப்படாது. [அதட்டுவது போல் வெகு கம்பீரமாக] எழுந்திருடா! முழிச்சுக்கோடா! [வெகு கனிவாக] உசந்த ஆசார்யர்கள் இருக்கா! அவாளைப் போய்ப் பிடிச்சுண்டு வழி தெரிஞ்சுக்கோப்பா! கத்தி முனையிலேயும் ஜோரா நடந்து பாஸ் பண்ணிடலாம்!’ என்று கஷ்டத்தையும் சொல்லி, அந்த கஷ்டத்தை ஸாதித்து ஜயிக்கிற வழியையும் சொல்லியிருக்கிறது. ஆகக்கூடி கடின ஸாதனைதான் என்று தெரிகிறது. ஆசார்யாளின் குருவுக்கு குருவான கௌடபாதாச்சார்யாளும் நன்றாகப் பயமுறுத்திச் சொல்லியிருக்கிறார். ‘அத்வைதந்தான் அபய நிலை. ஆனால் அதை ஸாதிக்கவே யோகிகளில் பல பேர்கூட பயப்படுகிறார்கள். ஏனென்றால் ஒரு தர்ப்பை நுனியாலே தோய்த்துத் தோய்த்து உதறியே ஸமுத்ர ஜலம் அவ்வளவையும் காலி பண்ணுகிற அளவுக்கு விடாமுயற்சியோடு பிரயாஸை பண்ணினால்தான் மனஸிலிருந்து எண்ணத்தையெல்லாம் உதறிவிட்டு ஆத்மாவாக இருக்க முடியும்’ என்று அவர் எழுதி வைத்திருக்கிறார்4. ஆனாலும் எழுதி வைத்ததற்கு காரணம் அப்படி உதறவும் முடியும் என்பதுதான்! அதே ஸமயம் இதிலிருந்தெல்லாம் என்ன தெரிகிறதென்றால், பொய் நானைப் போகப்பண்ணி நிஜ நானாக இருப்பது ரொம்ப ரொம்ப சிரம ஸாத்யம் என்பதே. பொய் நான்தான் மாயா ஸ்ருஷ்டியான மனஸ். நிஜ நான் ஸத்யமான ப்ரஹ்மம்.

எத்தனை கஷ்டமானாலும், எத்தனை ஜன்மா பிடித்தாலும் அந்த முயற்சிக்கு நாம் இன்றைக்கே பிள்ளையார் சுழி போடவேண்டும். தள்ளிப்போடப் போட ஜன்மாக்களும் நீண்டு கொண்டேதான் போகும்? ஆத்ம விஷயமான முயற்சியில் இப்பவும் நாம் இறங்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது என்ன பண்ணுவோம்? இன்னும் நிறைய தப்புத் தண்டாக்கள் பண்ணுவோம். புதுசாகப் பண்ணுகிற இந்த கர்மாக்களினால் உள்ளுக்குள்ளே மனஸின் சிக்கு இன்னும் அடை அடையாய் ஏறி, ஜன்மாக்களும் மேலே மேலே குட்டி போட்டுக் கொண்டுதான் போகும். அதனால் தப்பிப்பதற்கான பிரயாஸையை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவில் ஆரம்பிப்பதுதான் புத்திசாலித்தனம்.

‘தப்பிப்பதற்கான ப்ரயாஸை’ என்று ஒரு வார்த்தை சொன்னேன்; முயற்சி பண்ணனும்’ என்றும் நடுநடுவே சொன்னேன். இந்த இரண்டையும் தான் ‘ஸாதனை’ ‘ஸாதனை’ என்பது. என்ன பண்ணுவது என்று ஸரியாகத் தெரியாமல், புரியாமல் நாமாக ஏதேதோ ப்ரயாஸை, முயற்சி பண்ணித் திண்டாடுவதாக இல்லாமல், லக்ஷயத்தை அடைந்த பெரியவர்கள் க்ரமமாக ‘இப்படியிப்படிப் பண்ணப்பா!’ என்று போட்டுக் கொடுத்திருக்கும் வழிமுறைப்படி முயற்சி பண்ணுவதற்குத்தான் ஸாதனை என்று பேர்.


1 vii. 19

2 கீதை vi. 45

3 1. 3. 14

4 மாண்டூக்யோபநிஷத் காரிகை III. 39, 41

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ஈச்வராநுக்ரஹத்தினால் மோக்ஷம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ஸாதன சதுஷ்டயம் : வேத வழியில் ஆசார்யாள் வகுத்த முறை
Next