முருகன் திருமணத்தில் மூத்தவர் பங்கு : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

அடுத்தாற்போல் தம்பி ஸ்வாமியுடைய விவாஹம். வள்ளி கல்யாணம் என்று உத்ஸவமாகப் பண்ணும் விவாஹம். கதை, உபந்நியாஸம், ட்ராமா, ஸினிமா, டான்ஸ்-ட்ராமா என்றெல்லாம் அமர்க்களமாகப் பண்ணுகிறதற்கு இடம் கொடுக்கிற விவாஹம்.

அநேகமாக எல்லாருக்கும் தெரிந்திருக்கும்-விக்நேச்வரர் மதயானையாக வள்ளியைத் துரத்திக் கொண்டு வந்ததால் தான் அவள் ஸுப்ரம்மண்யரிடம் சேர்ந்தாள் என்ற கதை. இந்த இடத்திலே மூத்தது மோழையில்லை, காளைக்கு மேலே, மத்த கஜமே என்று அண்ணா ஸ்வாமி காட்டினார். வள்ளி சேரமாட்டேன் என்கிறாளே என்று தம்பிதான் அப்போது செயலில்லாமல் நின்றார். அப்புறம் தமையனாரைப் பிரார்த்தித்துக் கொண்டால்தான் இடையூறு நீங்கும் என்று அந்த மஹாசக்திமானான தேவஸேனாநாயகர் புரிந்து கொண்டார்; விக்நேச்வரரை ஸ்மரித்து வேண்டிக்கொண்டார். அவரும் உடனே தம்பிக்கு ஸஹாயம் செய்வதற்காக மத யானையாக வந்து வள்ளியை துரத்தியடித்து, தம்பியை அவள் சேரும்படிப் பண்ணினார். “கைத்தலம் நிறைகனி” என்ற பிள்ளையார் வணக்கத் திருப்புகழில் இதைச் சொல்லித்தான் முடித்திருக்கிறது.* அதிலே “சிறு முருகன்” என்று சொல்லியிருக்கிறது. இதற்கும் முந்தி சின்னஞ்சிறு முருகனாக இருந்தபோதுதான் அவர் சூர ஸம்ஹாரமே பண்ணி, பிற்காலத்தில் “ஸேநாநீநாம் அஹம் ஸ்கந்த:” [படைத்தலைவர்களில் நான் முருகன்] என்று கீதையில் கிருஷ்ணர்கூட சொல்லும்படியான கீர்த்தியடைந்தது. அப்படிப்பட்டவர் இப்போது நல்ல கட்டிளம் காளைப் பருவத்திலே ஒரு ஸாதாரண வேடப் பெண்ணை அடைய முடியாமல் செயலற்றுப் போயிருந்தார். அந்த அசக்த நிலையை வைத்துத்தான் – வயஸை வைத்தல்ல – “சிறு” முருகன் என்று அருணகிரிநாதர் போட்டிருக்கிறார். அப்போது அவருக்குக் கார்யஸித்தி ஏற்படச் செய்த “பெரும்” ஆள் – பெருமாள் – விக்நேச்வரர்தான்.

அதனால்தான் திருப்புகழ்களின் முடிவில் ஸுப்ரம்மண்யருக்கே உரியதாக: வருகிற “பெருமாளே” என்ற வார்த்தையை இந்தத் திருப்புகழில் மட்டும் விக்நேச்வரருக்குச் சூட்டி முடித்திருக்கிறார். தம்பியையே இஷ்ட தெய்வமாகக் கொண்ட அருணகிரிநாதர் அவரைச் “சிறு”வராக்கி அண்ணாவைப் “பெருமாள்” என்று பெருமைப்படுத்துவது விசேஷம்!

ஆக, ஸுப்ரமண்ய ஸ்வாமியின் விவாஹத்தில் நேராகவே விக்நேச்வரருக்குப் ‘பார்ட்’ இருக்கிறது. Key role என்றே சொல்லும்படியாக இருக்கிறது.


* அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்

அப்புன மதனிடை இபமாகி

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை

அக்கண மணமருள் பெருமாளே!

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is முருகன் ஜனனத்தில் மூத்தவர் பங்கு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  முருகன் துறவில் மூத்தவர் பங்கு
Next