சிங்கம் பூஜிக்கும் யானை! : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

ஹேரம்பருடைய ஸ்வரூபம் விசேஷமானது. அவருக்கு ஐந்து முகங்கள். ஐந்தும் யானை முகந்தான். ‘பஞ்ச மாதங்க முக’ என்று ஒருத்தர் கீர்த்தனம்கூட பாடினார். திருவாரூரிலுள்ள அநேக விக்நேச்வர மூர்த்திகளில் பஞ்சமுகராக இருக்கப்பட்டவரின் மீது தீக்ஷிதர் பாடியது என்று தெரிகிறது.

பரமசிவனுக்கு ஐந்து முகங்கள் உண்டு. சிவ பஞ்சாக்ஷரி த்யானத்தில் அப்படித்தான் இருக்கிறது. ஆசார்யாள் கூட அதை வைத்து வேடிக்கை பண்ணியிருக்கிறார்.

ஐந்து முகமிருப்பதால் ஈச்வரனுக்குப் ‘பஞ்சாஸ்யன்’ என்று பெயர். ‘பஞ்சாஸ்யம்’ என்று சிங்கத்திற்கும் பெயர். இந்த இடத்தில் ‘பஞ்ச’ என்றால் விரிந்த, பரவலான என்று அர்த்தம். ‘ப்ரபஞ்சம்’ என்றால் நன்றாக விரிந்து பரவியது என்று அர்த்தம். இங்கே ‘பஞ்ச’ என்றால் ஐந்து என்றும் அர்த்தம் பண்ணிக் கொண்டு ஐம்பூதங்களால் ஆனது ப்ரபஞ்சம் என்றும் சொல்லலாம். அது இருக்கட்டும் சிங்கம், சிவம் இரண்டுக்கும் பஞ்சாஸ்யப் பேர் இருக்கிறது. யானைக்கு சிங்கம் என்றால் ஒரு பயம். ‘ஸிம்ஹ ஸ்வப்னம்’ என்றே சொல்கிறோம். ஒரு யானை ஸொப்பனத்தில் சிங்கத்தைப் பார்த்தாலும் பயத்திலேயே ப்ராணனை விட்டுவிடுமாம். சிங்கத்துக்குத் தன்னைவிட உருவத்திலே ரொம்பப் பெரிசாக இருக்கும் யானையைத் தீர்த்துக் கட்டணும் என்று ரோஷம் பொங்கிக் கொண்டிருக்குமாம். ஒரு யானையைப் பார்த்துவிட்டால் தன் பலம் அத்தனையையும் திரட்டிக் கொண்டு அதன் மஸ்தகத்தைப் பேயறையாக அறைந்து பிளப்பதற்குப் பாயுமாம். இப்படிப் பட்ட பஞ்சாஸ்யம் [சிங்கம்] ஒரு யானையைப் பூஜை பண்ணினால் அது பெரிய ஆச்சர்யம்தானே? அந்த ஆச்சர்யத்தைத்தான் ஆசார்யாள் சொல்லியிருக்கிறார்.

மஹாதந்தி-வக்த்ராபி பஞ்சாஸ்ய மாந்யா

திருச்செந்தூரிலுள்ள ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியின் மேல் அவர் பாடிய புஜங்க ஸ்தோத்திரத்தில் முதல் ச்லோகமான விநாயக ஸ்துதியில் இப்படி வருகிறது.

ஸதா பாலரூபாபி விக்நாத்ரி – ஹந்த்ரீ
மஹா தந்தி வக்த்ராபி பஞ்சாஸ்ய மாந்யா*

விக்நேச்வரர் எப்போதும் குழந்தையாயிருப்பவர் – ஸதா பால ரூபர். ஆனாலும் – அபி என்றால் ஆனாலும்; ‘ஸதா பாலரூப அபி’; எப்போதும் குழந்தையாயிருந்தாலும், மலையாக இருக்கும் விக்னங்களையும் பிளந்து தள்ளுகிறார். ‘விக்நாத்ரி’ – விக்ன மலையை, ‘ஹந்த்ரீ’ – அழிக்கிறவர்.

அப்புறம்தான் அவர் யானையாக இருந்தும் சிங்கத்தால் பூஜிக்கப்படுவதாக வருகிறது.

மஹா தந்தி – வக்த்ராபி பஞ்சாஸ்ய மாந்யா

‘தந்தி’ [Danti] என்றால் யானை. தந்தத்தை உடையதாயிருப்பதால் தந்தி. கணபதி காயத்ரீயில் தந்தி என்ற பெயரைச் சொல்லியே நமக்கு நல்லறிவைத் தூண்டி விடுமாறு பிரார்த்தித்திருக்கிறது. பிள்ளையார் ‘மஹா தந்தி வக்த்ர அபி’; பெரிய யானையின் முகத்தைப் பெற்றிருந்த போதிலும், ‘பஞ்சாஸ்ய மாந்யா’ : சிங்கத்தால் பூஜிக்கப் படுபவர்.

நடக்கமுடியாத ஸமாசாரங்கள் பிள்ளையாரிடம் சேர்ந்திருப்பதாக கவி சமத்காரத்துடன் ஆசார்யாள் பாடியிருக்கிறார். சின்னக் குழந்தை விக்ன மலையையே பிளந்து தள்ளுகிறது என்று முதலில் சொல்லிவிட்டு, அதே ரீதியில் நடக்க முடியாதது நடக்கிறது என்று தொடர்ந்து காட்டுவதாக ‘யானையாயிருந்தும் பஞ்சாஸ்யத்தால் பூஜிக்கப்படுகிறது’ என்று அவர் சொல்லும்போது, ‘பஞ்சாஸ்யம்’ என்றால் சிங்கம் என்றே கேட்கிறவர்களுக்குச் சட்டென்று தோன்றும். சிங்கம் எங்கே பிள்ளையாரைப் பூஜித்தது என்று யோசிக்கும் போதுதான், ‘பஞ்சாஸ்யம்’ என்பதில் சிலேடை பண்ணியிருக்கிறாரென்று புரியும் இங்கே பஞ்சாஸ்ய என்பது சிங்கம் அல்ல சிவன் என்று புரியும். த்ரிபுர ஸம்ஹாரத்துக்குப் பரமசிவன் புறப்பட்டுத் தேரச்சு முறிந்தபோது விக்நேச்வர பூஜை பண்ணினாரல்லவா? அதைத்தான் பஞ்சாஸ்யமான்ய என்று சொல்லியிருக்கிறாரென்று புரியும்.


* இது ச்லோகத்தின் முன்பாதி. பின்பாதி வருமாறு:

விதீந்த்ராதி ம்ருக்யா கணேசாபிதா மே
விதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்தி:

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ஹேரம்பர்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ஐந்து முகம்கொண்ட ஸிம்ஹவாஹனர்
Next