அனைத்து உயிரினங்களும் இணைந்தவர் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

எல்லா ஜீவ வர்க்கமும் அவரிடம் சேர்ந்திருப்பது எப்படியென்றொல்: அவர் தேவ வர்க்கம் என்று சொல்லவே வேண்டாம்! தெய்வங்களில் பிரதமமாகப் பூஜிக்கப்படுபவரல்லவா? அநுக்ரஹ சக்தி என்பது கொஞ்சங்கூட வற்றிப் போகாமல் பக்தர்களுக்கு சாச்வதமாக க்ருபை பண்ணுவதுதான் தெய்வம் என்பதற்கு முக்யமான லக்ஷணம். இந்த லக்ஷணம் பிள்ளையாரிடம் பூர்ணமாயிருக்கிறது.

பூத வர்க்கமாகவும் இருக்கிறார். எப்படியென்றால் தொப்பை, கட்டை, குட்டைக்கால் ஆகியன பூத ரூபத்திற்கு உரியதுதான்.

மநுஷ்ய வர்க்கமென்று அவரை எப்படிச் சொல்வது? மநுஷ்யர்தான் பக்வம் பண்ணின ஆஹாரம். அதாவது வேக வைத்துச் சமைத்த ஆஹாரம் சாப்பிடுவது. மிருகங்கள் பச்சைத் தாவரம் அல்லது பச்சை மாமிஸமே உண்பவை. அஸுர, ராக்ஷஸர்களும் பச்சை மாமிஸம் சாப்பிடுபவர்களே. ‘க்ரவ்யாதர்’ என்பார்கள். க்ரவ்யம் என்றால் பச்சை மாமிஸம்.

தேவர்களுக்கு நாம் நைவேத்யம், ஆஹுதி என்று அநேக ஆஹார வகைகளைக் கொடுத்தாலும் அவர்கள் அதன் ஆவியை மட்டும்தான் புஜிப்பார்கள். ஸ்தூல பதார்த்தம் வெந்ததாகவே சாப்பிடுவது மனுஷ ஜாதிதான். விக்நேச்வரர் ஒருவர்தான் ஒரு தரத்துக்கு இரண்டு தரம் வெந்த மோதகத்தைப் புஜிப்பவர். முதலில் அரிசி மாவை வேகவைத்துக் கிளறிச் சொப்புப் பண்ணி அப்புறம் அதற்குள் பூர்ணம் வைத்து மூடி மறுபடி ஆவியில் வேக வைப்பதால் மோதகம் இரண்டு தரம் வெந்தது. அது மடி தப்பு என்று, ஸோமாசி மாதிரி நெய்யில் பொறித்த மோதகங்கூடப் பண்ணுவதுண்டு. மற்ற தேவர்களைப் போல் ஆஹுதி ரூபத்தில் அவருக்குக் கணபதி ஹோமத்தில் மோதகம் போடும் போது பொறித்ததாகத்தான் செய்வது வழக்கம். ஆஹுதியிலும் நாம் என்ன பண்டம் ஹோமம் செய்தாலும் ஆவி பாகத்தைத்தான் தேவர்கள் எடுத்துக் கொள்வார்கள். ஆனாலும் நாம் கொடுக்கும் ஹோம வஸ்து இரண்டு தரம் வெந்ததாக இருக்கக்கூடாது என்று பொறித்த கொழுக்கட்டை போடுவது வழக்கம். ஹோமமாக இல்லாமல் பிள்ளையாரை ஒரு ரூபத்தில் வைத்துப் பூஜிக்கும்போதோ வெந்த கொழுக்கட்டைதான் யதேஷ்டமாக நைவேத்யம் செய்கிறோம். “மோதக ஹஸ்த” என்றே பேர் வாங்கியவராகக் கையிலேயே ஒரு சமைத்த பக்ஷணத்தை வைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஸ்வாமி அவர்தான்! கிருஷ்ணர் வெண்ணையை வைத்துக் கொண்டு, வெண்ணைய்த் தாழியை கட்டிக் கொண்டு இருக்கிறார் என்றால் அவர் நர ரூபத்தில் நமக்கு நடுவில் அவதாரம் பண்ணியவர். அதுவுமில்லாமல் வெண்ணைய் சமைத்த பண்டமும் இல்லை. இப்படியே ஸுப்ரம்மண்யருக்கு நைவேத்யம் பண்ணும் தேனும் தினைமாவும் சமைத்த பதார்த்தங்களில்லை. அன்னபூர்ணேச்வரி கையிலே பாயஸான்னம் வைத்து இருக்கிறாளென்றாலும், அது அவள் புஜிப்பதற்காக இல்லை; நமக்குப் போடுவதற்காகத்தான். நமக்குப் போடுவதோடு தாமும் பக்வ போஜ்யம் சாப்பிடுவது விக்நேச்வரர் ஒருத்தர்தான்.

இப்படி தேவ வர்க்கம், பூத வர்க்கம், மநுஷ்ய வர்க்கம் மூன்றும் சேர்ந்ததோடு, மிருக வர்க்கத்தையும் தம்மிடம் சேர்த்துக் காட்டணுமென்று நினைத்தார். மநுஷ்ய வர்க்கம் என்றால் அதைச் சேர்ந்த எல்லாருக்கும் ஒரே உருவ அமைப்புதான் இருக்கிறது. அப்படியே, தேவர், பூதர் என்றாலும் அததிலும் அத்தனைப் பேருக்கும் பொதுவாக ஒரு ரூப அமைப்புதான் இருக்கிறது. ஆனால் மிருகம் என்று எடுத்துக் கொண்டால், அந்த ஒரு வர்க்கத்திலேயே எத்தனை ப்ராணி ராசிகள் வேறு வேறு உருவ அமைப்பில் இருக்கின்றன? ஆடு, மாடு முதலிய ஸாது மிருகங்கள், புலி, சிங்கம் மாதிரி துஷ்ட மிருகங்கள் என்று எத்தனை தினுசு? இத்தனை இருக்கும்போது யானை ரூபத்தை ஏன் ஸெலக்ட் பண்ணினாரென்றால் அதற்கு காரணம் அதற்குத்தான் ஏகப்பட்ட சிறப்புக்கள் இருப்பதே.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is தெய்வத் தொடர்புள்ள விலங்கினம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ஆதி முதலின் வரிவடிவம்
Next