‘அமர’த்தில் பிள்ளையார்ப் பெயர்கள் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

அமர[கோச]த்தில் விக்நேச்வரரின் பெயர்களைச் சொல்லும்போது ‘விநாயக’ என்றுதான் ஆரம்பித்திருக்கிறது. [மனத்திற்குள் அந்தப் பெயர்களைச் சொல்லிக்கொண்டு, விரல் விட்டு எண்ணியபடி] நம்முடைய சாஸ்திரங்களில் பதினாறு நாமாக்களை முக்யமாகச் சொல்லியிருக்கிறதென்றால், ஜைனனான அமரஸிம்ஹன் எழுதிய அந்தக் கோசத்தில் இதில் பேர் பாதி – எட்டுப் பெயர்கள் – சொல்லியிருக்கிறது.

விநாயகோ, விக்நராஜ, த்வைமாதுர, கணாதிபா: |
அப்-யேகதந்த, ஹேரம்ப, லம்போதர, கஜாநநா: ||

இதிலே விநாயக, விக்னராஜ, ஏகதந்த, ஹேரம்ப, லம்போதர, கஜானன என்ற ஆறு பெயர்கள் நம்முடைய ஷோடசநாமாவிலும் இருக்கின்றன. ‘கணாதிப’ என்ற பெயர் ‘கணாத்யக்ஷ’ என்பதாக ஷோடச நாமாவில் இருக்கிறது. இதில் இல்லாமல் ‘அமர’த்தில் இருக்கும் ஒரே பெயர் ‘த்வைமாதுர’ என்பது. அப்படியென்றால் ‘இரண்டு தாயார்களை உடையவர்’. அம்பாள் ஒரு தாயார். கங்கை இன்னொரு தாயார். கங்கையிலுள்ள சரவணப் பொய்கையைச் சேர்ந்தே சிவநேத்ரத்தின் அக்னிப் பொறி ஸுப்ரஹ்மண்ய ஸ்வரூபமாக உத்பவித்ததால் ஸுப்ரஹ்மண்யருக்கு கங்கை நேர் தாயார் மாதிரி. அதனால்தான் அவரை ‘காங்கேயன்’ என்பது. பிள்ளையாருக்கு அத்தனை நேர் ஸம்பந்தமில்லாவிட்டாலும், அவருடைய தகப்பனாருடைய சிரஸில் கங்கை பத்னி ஸ்தானத்திலிருப்பதால், ஒளபசாரிகமாக [உபசாரமாக] அவளையும் ஒரு தாயாராகச் சொல்வது.

விநாயக நாமா ‘அமர’த்தில் பிள்ளையாரின் முதல் பெயராயிருக்கிறதென்று சொல்ல வந்தேன். ஒரு நிகண்டுவில் [அகராதியில்] ஒரு தெய்வத்தைப் பற்றிய பெயர் வரிசையில் முதலாக வருவதென்றால் அது முக்கியத்வம் வாய்ந்த நாமா என்று அர்த்தம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is இருபொருளிலும் வி-நாயகர்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  தூமகேது
Next