கேலிக் கவிதைகள் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

தான் மற்றவர்களிடம் விகடம் செய்வது மட்டுமில்லை. தன்னை வைத்தும் பக்தர்களான கவிகள் விகடம் பண்ணுவதற்கென்று நிறைய இடம் கொடுத்திருப்பவர் அவர். சந்திரன் நிஜமாகவே அவரைப் பரிஹாஸம் பண்ணி தண்டனைக்கு ஆளான மாதிரியில்லாமல்1, “நம்ப பிள்ளையார்” என்று ஸ்வாதீன ப்ரியத்தின் பேரில் நிந்தா ஸ்துதியாகக் கேலி பண்ணினால் ரஸித்துக் கேட்டுக் கொள்வார்.

காளமேகப் புலவர் இப்படி நிறைய விகடமான சிலேடைக் கவிகள் பாடியிருக்கிறார். ஒரு பாட்டில்2 அம்பாள் விக்நேச்வரரைப் பெற்றதைக் “கோட்டானையும் பெற்றாள்” என்கிறார். “என்னது? பிள்ளையாரையா இப்படி தூக்கி வாரிப் போடுகிறாற்போலக் கோட்டான் என்கிறார்?” என்றால் இங்கே, ‘கோட்டானை’ என்றால் ‘கோட்டு யானை’, அதாவது ‘தந்தமுடைய யானை’ என்று அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். இன்னொரு பாட்டில் அவர் விக்நேச்வரர் மூஷிக வாஹனராக இருப்பதைப் பரிஹாஸம் பண்ணி “ஆனையை எலி இழுத்துக்கொண்டு போகிறதே” எனறு பாடியிருக்கிறார்.3

ஒளவையுங்கூடத் தனக்குப் பிள்ளையார் கொடுப்பதை விட, தான் அவருக்குக் கொடுக்கிறதுதான் ஜாஸ்தி என்று த்வனிக்கிற விதத்திலேயே, தான் நாலு கொடுக்கிறதற்கு ப்ரதியாக அவர் மூன்று கொடுத்தால் போதும் என்று பரிஹாஸமாகச் சொல்கிற விதத்திலேயே,

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் –
………………… நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா

என்று பாடியிருக்கிறாள்.

அவருக்காக நாம் தலையில் குட்டிக் கொள்வது, தோப்புக்கரணம் போடுவது, சிதறுகாய் போட்டு ‘லபோ லபோ’ என்று பல பேர் பொறுக்கப் போய் அதிலே சில பேர் ஏமாந்து போவது முதலிய எல்லாவற்றிலுமே ஒரு விகட அம்சம் இருக்கிறது.


1 இதே உரையில் ‘பிள்ளையாரும் சந்திரனும்’ என்னும் பிரிவு பார்க்க.

2 “மாட்டுக்கோன் தங்கை” எனத் தொடங்குவது.

3 “வாரணத்தை ஐயோ எலியிழுத்துப் போகின்றதே!” (மூப்பான் மழுவும்” எனும் பாடல்)

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is திருத்தலங்களில் விகட விநாயகர்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  விகட சக்ர விநாயகர்
Next