சிவன் – சக்தி : உயிர் – உடல் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

உயிருள்ளவரைதான் நாம் ஜபமோ ஜல்பமோ, முத்ரையோ சில்பமோ, வெறும் நடையோ ப்ரதக்ஷிணமோ, சாப்பிடுவதோ ஹோமம் செய்வதோ, படுத்துக் கொள்வதோ நமஸ்காரம் பண்ணுவதோ – எதுவுமே செய்ய முடியும். இந்த ஜீவ உயிருக்கு உயிராக அம்பாள் இருந்துதான் இதை இத்தனையும் செய்விக்கிறாள் என்று ஆத்மார்ப்பண புத்தியினால் தெரிந்து கொள்ளும்போது ஜல்பமே ஜபமாக, எந்த சில்பமும் முத்ரையாக, இதேபோல மற்றக் கார்யங்களும் பூஜாங்கங்களாகின்றன. பல காரியங்களைச் செய்யும் சரீரத்திற்குச் செய்விக்கும் உயிர் மாதிரி, இந்த ஜீவ உயிர் இத்தனை செய்விப்பதாகத் தோன்றுவதையும் இந்த உயிரையே சரீரம் மாதிரிக் கொண்ட பேருயிரான அம்பாள்தான் வாஸ்தவத்தில் செய்விக்கிறாள் என்ற பாவனை ஏற்பட வேண்டும். இதேபோல, நம் ஒருத்தரின் உயிரை மட்டுமில்லாமல் லோகம் முழுதையும் தன் சரீரமாக கொண்டு அந்த பேருயிர்தான் உயிர் கொடுத்து வருகிறது என்று தெரிகிறபோது லோகத்தில் நடக்கும் ஸகல காரியமுமே அதனால்தான் ஆகிறது – “அவனன்றி அணுவும் அசையாது” – என்று புரிந்துகொண்டு அதனிடம் அடங்கி ஸர்வ ஸமர்ப்பணம் பண்ணும் புத்தி நன்றாக உறுதிப்படும். இப்படி அம்பாள் விச்வாகாரமாக இருப்பதை அடுத்தடுத்து இரண்டு ச்லோகங்களில் [34,35] சொல்கிறார். முதலாவது:

சரீரம் த்வம் சம்போ: சசி – மிஹிர – வக்ஷோருஹ – யுகம்

தவாத்மாநம் மந்யே பகவதி நவாத்மாநம் அநகம் |

அத: சேஷ: சேஷீத்யயம் – உபய – ஸாதாரணதயா

ஸ்தித: ஸம்பந்தோ வாம் ஸமரஸ – பராநந்த – பரயோ: ||

[ (பகவதி) இறைவியே! (சசி மிஹிர வக்ஷோருஹயுகம்) சந்திரனையும் ஸூரியனையும் இரு நகில்களாகக் கொண்ட (த்வம்) நீ (சம்போ:) சிவபெருமானுக்கு (சரீரம்) உடல் எனவும் (அநகம்) குற்றமற்ற (நவாத்மானம்) ஒன்பது வ்யூஹ வடிவனான [ஆனந்தபைரவன்] எனப்படும் அவன் (தவ) உனது (ஆத்மானம்) ஆத்மா1 எனவும் (மன்யே) கருதுகிறேன். (அத:) இதனால் (சேஷ: சேஷீ இதி) உடைமை – உடைமையாளரெனும் (அயம் ஸம்பந்த:) இத்தொடர்பு (ஸமரஸ பரானந்த பரயோ:) ஸமமான ஆனந்த ரஸத்தை அநுபவிக்கும் பரனும் பரை2யுமாகிய (வாம்) உங்களிடையே (உபய ஸாதாரணதயா) பரஸ்பரம் பொதுமையாக (ஸ்தித:) நிலைபெற்றுள்ளது.]

‘சம்போ:’ – பரமேச்வரனுடைய’; ‘சரீரம் த்வம்’ – ‘சரீரமாக இருப்பது நீயே’ என்று ஆரம்பிக்கிறார். ஈச்வரனுடைய சரீரம் அம்பாள் என்கிறார். அவனுடைய முழு ரூபத்தையும் இவள் திருடிக்கொண்டு விட்டாள் என்று முன்னால் சொன்னதற்குப் பொருத்தமாக அர்த்த சரீரம் என்காமல் பூர்ண சரீரமாகவே சொல்கிறார். ஆனால் இங்கே சொல்கிற இந்த சரீரம் அருண வர்ணமும், ஸ்த்ரீ சரீரமும், பிறைச் சந்திரனும் நெற்றிக் கண்ணும் உள்ளதல்ல. அகிலாண்ட கோடி பிரம்மாண்டங்களையே ஈச்வரனுடைய சரீரமாக இருக்கும் அம்பிகை என்று இங்கே சொல்கிறார். அதாவது விராட் ஸ்வரூபம் என்கிறார்களே, அதாகச் சொல்கிறார்.

பரமாத்மாவுக்கு ஸர்வப் பிரபஞ்சங்களுமே சரீரமாக இருக்கிறது. அந்த உடலுள் உயிராக, தேஹத்துக்குள் ஆத்மாவாகப் பிரபஞ்சத்துக்கு உயிரையும், அறிவையும், ஸத்யத்வத்தையும், காரியங்களையும் கொடுத்துச் செய்வித்துக் கொண்டிருப்பது பரப்பிரம்ம தத்வமே.

இங்கே சொல்வது “ஸெளந்தர்ய லஹரி”யின் ஆரம்ப ச்லோகத்தில் சொன்னதற்கு வித்யாஸமாகத் தோன்றுகிறது. அங்கே சக்தியில்லாவிட்டால் சிவன் அசையக்கூட மாட்டான் என்றார். அதனால் சிவன் ஜட சரீரம் என்றும் அம்பாள்தான் அதை இயக்குகிற சைதன்யமான உயிர் என்றும் ஆயிற்று. சக்தியில்லாத சிவம் சவமே என்கிறபோது உயிரில்லாத உடம்பைச் சொல்வதாகத்தானே ஆகிறது? இங்கேயோ அதை மாற்றி “அம்மா, நீதான் சம்புவுக்கு சரீரம்” என்கிறாரே, என்றால் –

இரண்டும் வெவ்வேறு view point-ல் (காட்சிக் கோணத்தில்) சொன்னது. நன்றாக ஊன்றிக் கவனித்தால் முதல் ச்லோகத்தில் ஆசார்யாள் சக்தி இல்லாத சிவனை சவத்தின் ஸ்தானத்தில் வைக்கவில்லை என்று புரியும். அம்பாளுக்கு உத்கர்ஷம் கொடுப்பதற்காகவே அவள்தான் ஜீவ சைதன்யம், அவர் அது இல்லாது போனால் சவம் என்று அதை அர்த்தம் பண்ணினாலும் – அந்த இடத்தில் நானே அப்படித்தான் பண்ணினேன் – அது அப்படியே ஸத்யமில்லைதான்! அங்கே ஸ்வாமியை ஜடம், அதாவது சைதன்ய ரஹிதமான ஒன்று என்று சொல்லியிருப்பதாகக் காட்ட ஆதாரமில்லை. அத்வைதத்தில் ஆசார்யாள் சொன்ன குணம் குறியற்ற, செயலற்ற நிர்குணப் பிரம்மமாகத்தான் அங்கே சிவனைச் சொன்னார். அந்தப் பூர்ண நிலை ஒருநாளும் சைதன்ய விலாஸமில்லாத உயிரற்ற நிலையாகாது. ஆனால் பூர்ணநிலையில் இருப்பதாக அதற்கே தெரியாவிட்டால் அது இருந்தும் இல்லாத மாதிரிதான் – செத்துப்போனாற்போலத்தான். ‘மாதிரி’, ‘போல’ – தானே ஒழிய வாஸ்தவத்தில் அது செத்த நிலையுமில்லை, சாகாத நிலையுமில்லை, ஒரு நிலையுமில்லை! அப்படிப்பட்ட தன்னையுமறியாத நிலையில் பிரம்மம் இல்லாமல் தன்னை அறிந்திருக்கிற நிலையில் இருப்பதற்குக் காரணமான ஞான சக்தியை அம்பாள் என்றார். அதோடு அப்புறம் ஞான சக்தியே இச்சா-கிரியா சக்திகளோடு ஈச்வரனை ஸம்பந்தப்படுத்தி, காரியமற்றவனைக் காரியம் பண்ணுவிப்பதாகச் சொன்னார். நிர்குணப் பிரம்மத்துக்குத் தன்னையே அறிவதுதான் உயிர் மாதிரி என்கிற அர்த்தத்தில் அங்கே சிவனுக்கு அம்பாள் உயிராக இருப்பதாகச் சொன்னார்.

இங்கே சொல்வது காரியப் பிரம்மத்தை; ஸகுண பிரம்மம் என்கிற ஈச்வரனை காமேச்வரி தூண்டி வைக்கிறபடி ஈச்வரனே காரியப் பிரம்மமமாக ஜகத்வியவஹாரம் பண்ணுகிறான் என்னும்போது, ஜகத்தெல்லாம் அவனுடைய சரீரமாகவும், அதற்குள் இருக்கிற காரிய சக்தியான உயிர் ஈச்வரனாகவும் ஆகின்றன.

காமேச்வரி என்று ஒரு இச்சா சக்தி; அது மூல ஸத்யமான ப்ரஹ்மத்தைத் தூண்டுகிறது….. என்கிற மாதிரி விஸ்தாரம் பண்ணாமல், ‘ப்ரஹ்மமேதான் மாயையால் ஈச்வரன் என்று ஸகுணமாக ஆகி ஜகத் வ்யாபாரம் செய்கிறது. அந்த மாயைக்குத் தனியாக சைதன்யம் – உயிர் – கிடையாது. அது ஜடந்தான். ப்ரஹ்மத்திடமிருந்தே சைதன்யம் பெற்று அந்த ப்ரஹ்மத்தையே இந்த மாயை மறைத்து அதனிடத்தில் ஜகத்தைக் காட்டுகிறது. இந்த ஜகத்தை அந்த ப்ரஹ்மமே மாயா ஸஹிதமான ஈச்வரனாக இருந்து கொண்டு நிர்வாஹம் பண்ணுகிறது’ என்று அத்வைத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. ப்ரஹ்மம் என்றால் சிவன், அம்பாள் மாயைஎன்றே சொல்வது – என்ற விஷயங்கள் முன்னாடியே சொல்லியிருக்கிறேன். மாயையினால்தான் ஜகத் தோன்றுகிறது என்பதால் ஜகத்தையே மாயையாக, அதாவது அம்பாள் ரூபமாகச் சொல்லலாந்தான். அந்த மாயை ஜடம்; ப்ரஹ்ம சைதன்யத்தாலேயே அது ப்ரகாசிக்கிறது என்கிறபோது அதை, அதாவது அம்பாளை, உடம்பு என்றும் ப்ரஹ்மத்தின் ஸ்தானத்திலுள்ள சிவனை உயிர் என்றும் சொல்லலொமென்று தெரிகிறது. இதுதான் “சரீரம் த்வம் சம்போ:” – “நீ ஈச்வரனுக்கு உடம்பாயிருக்கிறாய்” – என்பது.

ஸாங்க்ய மதத்திலும் கிட்டத்தட்ட இதே அபிப்ராயந்தான். ‘புருஷன்’ என்ற ஜீவ ஆதாரமான ஸத்யமும். ஜகத்துத் தோற்றத்தின் காரணமான ‘ப்ரக்ருதி’ என்பதும் உயிரும் உடம்பும் மாதிரி என்று அந்த மதப்படி ஆகும். ஒருத்தர் சொன்னார்: “ப்ரஹ்மத்தை மறைப்பது, அதை ஜகத்தாகத் தோன்றும்படிச் செய்வது என்ற இரண்டு கார்யம் இருப்பதில், ‘மாயை’ என்கிறபோது மறைப்பதற்குதான் அழுத்தம் கொடுக்கிறோம். பேச்சில்கூட ‘மாயமா மறைஞ்சு போச்சு’ என்கிறோம். ப்ரக்ருதி என்பதோ வெறுமே மறைக்காமல் ஒரு கார்யம் செய்யப்படுவதற்கு அழுத்தம் கொடுக்கிறது. ப்ரக்ருதி என்பது இயற்கை, Nature என்றெல்லாம் அர்த்தம் கொடுப்பதைப் பார்த்தாலும் மூல ஸத்யத்தின் இடத்தில் ஜகத் என்பது கார்ய ரூபத்திலே கல்பிக்கப்பட்டிருப்பதற்கே முக்யத்வம் தெரிகிறது. பஞ்சபூதம், பஞ்ச தன்மாத்ரை, ஜீவாத்மாவின் இந்திரியாதிகள் என்றெல்லாம் இருபத்துநாலு தத்வங்களை முக்யம் கொடுத்து அந்த சாஸ்திரத்தில் விளக்குவதும் ஜகத் க்ருத்யத்திற்கு ஜாஸ்தி இடம் கொடுத்திருப்பதைத்தான் காட்டுகிறது. அறிவாளிகள் ஸமூஹத்திலே அந்த சாஸ்த்ரத்திற்கு பெரிய ஸ்தானம் கிடைத்துவிட்டதே என்பதால்தான் அத்வைதத்திலும் இந்த இருபத்துநாலை அப்படியே திருப்பிச் சொல்லியிருக்கிறதே தவிர, ஸாதனா க்ரமம் என்று எடுத்துக் கொண்டால் இதுகளைத் தெரிந்து கொள்வதால் அத்வைதிக்கு ஒரு லாபமுமில்லை; தெரியாததால் நஷ்டமுமில்லை. மொத்தத்தில் ப்ரக்ருதி ஜீவ ஜகத்தாகப் பரிணமித்திருப்பதற்கு ஸாங்க்யத்தில்தான் இம்பார்டன்ஸ்” – இப்படி அவர் சொல்லி, இன்னும் அநேக காரணமும் சொல்லி, அம்பாளை ஈச்வரனுடைய சரீரமாகவும் அப்புறம் அவளை ‘சசி மிஹிர வக்ஷோருஹ யுகம்’ என்று ஜகத் ஸ்வரூபமாகவும் வர்ணிப்பது அத்வைதத்தை விடவும் ஸாங்க்யத்தைத் தான் ஆதரிக்கிறது என்றார்.

இந்த ச்லோக ஆரம்பத்தில் இப்படி அத்வைத, ஸாங்க்ய சாஸ்த்ரங்களின் அடிப்படைப்படி அர்த்தம் செய்யும்படி வந்தாலும் பின்னாடி வருகிற ஸமாசாரங்களெல்லாம் சாக்தத்திலேயே கௌலம், ஸமயம் என்று இருக்கும் இரண்டு ஸம்ப்ரதாயங்களில் வருகிறவையாகத் தானிருக்கின்றன. இந்த ஆரம்ப அபிப்ராயத்திற்கும் – (ஸ்வாமிக்கு அம்பாள் சரீரம் என்பதற்கும், அவளே ஜகத் ஸ்வரூபம் என்பதற்கும்) சாக்த ஆதாரமுண்டு. பாஹ்ய பூஜை என்று வெளியிலே யந்த்ரம், மூர்த்தி வைத்துப் பூஜிப்பது கௌலம். தனக்குள்ளேயே ஹ்ருதயாகாசத்தில் தத்வார்த்தமாகப் பூஜை பண்ணிக் கொள்வது ஸமயம். ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் ஐந்து இனங்களில் ஸமத்வம் கொடுக்கிற உபாஸனையை அது சொல்வதால் ‘ஸமயம்’ என்று பெயர்.


1உடலையே ஆத்மா எனக் குறிப்பதுண்டு. இப்பொருள்தான் ச்லோகக்கருத்திற்குப் பொருந்தும் என்று உரைகாரர் கருதுகின்றனர்.

2 இப்பரனையும் பரையையும் முறையே ஆனந்தபைரவன், ஆனந்தபைரவி என்பர்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ஸர்வ ஸமர்ப்பணம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ஸ¨ர்ய சந்திரரைக் கொண்டு பாலூட்டும் தாய்
Next