அம்பாளுடைய திருட்டு : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

‘சிவா தநு’ என்பதாக ஸ்வாமிக்குள்ள இரண்டு சரீரங்களில் ஒன்று முழுசாகவே அம்பிகையுடையதாக இருக்கிறதென்று வேதம் சொன்னது; அர்த்த நாரீச்வர ஸ்வரூபத்தில் அவர்கள் ஏக சரீரத்தில் பப்பாதியாக இருப்பது – ஆகிய இரண்டு அபிப்ராயங்களையும் சேர்த்து ஆசார்யாள் அம்பாளுக்குத் திருட்டுப் பட்டம் கொடுத்து ஒரு ச்லோகம் பண்ணியிருக்கிறார்! சிவனும் சக்தியும் பிரிந்திருக்கிற மாதிரியும் சேர்ந்திருக்கிற மாதிரியும், தனித்தனி சரீரங்களிலும் ஒரே சரீரத்திலும் அவஸரங்கள் [திருக்கோலங்கள்] இருந்தாலும் பரம ஸத்யம் என்னவென்றால் இரண்டும் அபின்னமாகச் சேர்ந்து ஏகம் ஸத்தாக, ஏக சைதன்யமாக இருக்கிறது என்பதுதான். தனித்தனியாக இரண்டு பேர், பப்பாதி சேர்ந்து ஒரே சரீரம், லிங்கரூபமாக அவர் இருக்கும்போது நாகர் ஸ்வரூபமாக அவள் சுற்றிக் கொண்டிருப்பது, அவளை வெளியிலே காட்டாமல் உள்ளுக்குள்ளே வைத்துக் கொண்டு அவர் மாத்திரமாக தக்ஷிணாமூர்த்தி என்று இருப்பது, இதற்கு எதிர்வெட்டாக துர்கா ஸ்வரூபம் – என்றெல்லாம் அவர்கள் இருப்பது ஒவ்வொன்றும் தத்வார்த்தமாக ஏற்பட்டதாகும். தத்வத்தையே கதையாகச் சொல்வதுமுண்டு. கவிகள் அதை வைத்தே விளையாட்டு, பரிஹாஸம் பண்ணுவார்கள். அப்படித்தான் அம்பாளைத் திருடியாக ஆசார்யாள் பாடியிருப்பது.

மஹாபெரிய திருட்டு! ‘பதியுடைய சரீரத்தையே முழுக்கத் திருடிக் கொண்டு விட்டாள்! திருட்டுச் சொத்தை ஒளித்துத் தானே வைப்பார்கள்? அப்படி இவள் அந்த சரீரத்தைத் தனக்குள்ளேயே ஒளித்துக் கொண்டு விட்டாள்! திருடினது மட்டுமில்லை, முழுங்கியேவிட்டாள்!’ என்று கோடி காட்டுகிற அளவுக்குக் கொண்டுபோய் நிறுத்தி ச்லோகம் செய்திருக்கிறார். [ச்லோ-23]

த்வயா ஹ்ருத்வா வாமம் வபு-ரபரித்ருப்தேந மநஸா

சரீரார்தம் சம்போ-ரபரம் அபி சங்கே ஹ்ருதம் அபூத் |

யத் ஏதத் த்வத்ரூபம் ஸகலம் அருணாபம் த்ரிநயநம்

குசாப்யாம் ஆநம்ரம் குடில-சசி-சூடால-மகுடம் ||

[ (யத்) எக்காரணம் பற்றி (ஏதத் த்வத் ரூபம்) இந்த உனது உருவம் (ஸகலம் அருணாபம்) முழுதும் செவ்வொளியுடனும் (த்ரிநயனம்) முக்கண்ணுடனும் (குசாப்யாம் ஆநம்ரம்) நகில்களால் வளைந்தும் (குடில சசி சூடால மகுடம்) பிறை மதியைக் கொண்ட கேச மகுடத்துடனும் [உள்ளதெனில்,] (சம்போ:) சிவபெருமானுடைய (வாமம்வபு:) இடப்பக்கச் சரீரம் (த்வயா) உன்னால் (ஹ்ருத்வா) அபஹரிக்கப்பட்டு (அபரித்ருப்பதேன) [அப்படியும்] பூர்ண திருப்தி காணாத (மநஸா) [உன்] மனத்தினால் (அபரம்) மற்ற (சரீரார்தம் அபி) பாதி சரீரமுங்கூட (ஹ்ருதம்) அபஹரிக்கப்பட்டதாக (அபூத்) ஆனதால்தான் [என்று] (சங்கே) ஐயுகிறேன்.]

“த்வயா ஹ்ருத்வா” என்று ஆரம்பிக்கிறபோதே அம்பாளுக்குத் திருட்டுப் பட்டம் கட்டிவிடுகிறார்!

‘த்வயா’ – உன்னால்; “வாமம் வபு:” – ஸ்வாமியுடைய சரீரத்தின் இடது பக்கம்; “ஹ்ருத்வா” – திருடப்பட்டு. “திருடப்பட்ட பின்னும்” என்று ஸந்தர்பத்தைப் பொறுத்து அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். “அம்மா! உன்னால் பரமேச்வரனின் இடது பாகம் திருடப் பட்டதற்குப் பின்னும்”. பின்னும் என்ன? “அபரித்ருப்தேன மநஸா”: பரிபூர்ணா திருப்தி ஏற்படாத மனஸினால்; ஸ்வாமியுடைய வாமபாகத்தைத் திருடியதோடு உன் மனஸ் முழு த்ருப்தி அடையாததால்; “சம்போ: அபரம் சரீரார்தம் அபிஹ்ருதம் அபூத்” – சம்புவின் மறு சரீரப் பாதியும், சரீரத்தின் மறு பாதியும், திருடப்பட்டதாக ஆயிற்று. ஒரு பாதியைத் திருடியதில் த்ருப்தி அடையாத நீ மறு பாதியையும் திருடி விட்டாய்.

வார்த்தை விளையாட்டு ஆசார்யாள் ஸ்தோத்ரங்களில் நிறைய இருக்கும். இங்கே முதல் வரியில் ‘அபரித்ருப்தேன’, என்கிறபோது ஒரு ‘அபரி’ வருகிறது. ‘வபு’+’அபரி த்ருப்தேந’ என்பது ‘வபுரபரித்ருப்தேந’ என்றாயிருக்கிறது. அடுத்த வரியில் ‘சம்போரபரம்’ என்று வரும் ‘சம்போ: அபர’த்திலும் ஒரு ‘அபரம்’ இருக்கிறது. ஆனால் அந்த ‘அபரி’க்கும் இந்த ‘அபர’வுக்கும் வெவ்வேறே அர்த்தம்! பூர்ணம்-‘பரி’பூர்ணம், த்யாகம் – ‘பரி’த்யாகம் என்கிற மாதிரி ஒன்றுக்கு முழு நிறைவைத் தரும் முன்னடையாக, prefix-ஆக, ‘பரி’ என்பது வருவதுண்டு. அப்படி ‘த்ருப்தி’யை ‘முழு த்ருப்தி’யாக்குவதற்குப் ‘பரித்ருப்தி’ என்று சொல்வது. ‘பரித்ருப்தி’க்கு எதிர்பதம் ‘அபரித்ருப்தி’. அந்த அர்த்தத்தில்தான், ‘பாதி உடம்பைத் திருடி எப்படி முழு த்ருப்தி உண்டாகும்? பாதி த்ருப்திதான் உண்டாச்சு’ என்ற உள்ளர்த்தத்தில் ‘முழு த்ருப்தி அடையாத மனஸால்’ என்பதற்கு ‘அபரித்ருப்தேந மநஸா’ என்று போட்டார். ‘சரீரார்தம் அபரம்’ என்கிற இடத்தில் ‘அபரம்’ என்றால் ‘மற்ற’ என்று அர்த்தம். ‘சரீரத்தின் மற்ற பாதி’ என்று இங்கே அர்த்தம்.

ஸ்வாமிக்கு வாமபாகம் மட்டுமே அம்பாள் என்பது பிரஸித்தி. அப்படித்தான் நினைத்து ஆசார்யாள் தர்சனம் பண்ணப் போனார். அர்த்தநாரீச்வரராகப் பார்ப்போமாக்கும் என்று நினைத்துக் கொண்டுப் போனார். ஆனால் அவர் பார்த்தது என்ன? மாதா-பிதாக்களைச் சேர்த்துப் பார்க்கப் போகிறோம், இதிலே பாதியும் அதிலே பாதியுமாக ஒன்று சேர்ந்த ரூபத்திலே, என்று நினைத்துப் போனார். ஆனால் முழுவதுமே மாதா ஸ்வரூபமாகத்தான் இருந்தது! தக்ஷிண பாகம் என்கிற வலது பக்கமுந்தான்!பிதா ஒரே வெளுப்பு (ஸ்படிக ஸங்காசம்) , அம்மா சிவப்பு என்று அவர் கேள்விப்பட்டிருக்கிறார். அப்போது பாதி பாதி அந்தக் கலர்களாக இருக்க வேண்டும். இவள் அர்த்தங்கானா என்றால் அப்படித்தான் இருக்கணும். ஆனால் அவர் பார்த்த ரூபத்திலோ அப்படியில்லை. அதைத்தான் “ஸகலம் அருணாபம்”, ‘முழுக்கவும் சிவப்பாக பிரகாசிப்பது”என்று சொல்லியிருக்கிறார். புருஷ சரீரமாக ஒரு பக்கம் வக்ஷஸ்தலம் ஸமனாயிருக்கிறதா என்றால் அதுவுமில்லை. “குசாப்யாம் ஆநம்ரம்”என்று அதைத்தான் சொல்கிறார். அம்மாதான் இருக்கிறாள். அப்பா காணோம்!அப்பாப் பக்கமும் அம்மாவாகவே இருக்கிறது.

அர்த்தநாரீச்வரர் என்பது அநேக திவ்ய ரூபங்களில் ஒன்றுதானே? அப்படியில்லாமல் பரமசிவன்-பார்வதி, நடராஜா-சிவகாமசுந்தரி, நம் விஷயமான ஸ்ரீவித்யையையே எடுத்துக்கொண்டால் காமேச்வர-காமேச்வரி என்று தனித்தனியாகவும் அவர்களுக்கு ரூபம் உண்டு. காமேச்வர-காமேச்வரிகளாக ஜோடி தர்சனம் என்றால் அதில் அவளுடைய முக்யத்வம் அமுங்கிப் போய்விடுகிறதென்பதால் (முன்னேயே அந்த விஷயம் சொன்னேன்) அவள் மாத்திரம் தனியாக தரிசனம் தருவதே அதிகம். காஞ்சிபுரத்திலேயே அப்படித்தான் இருக்கிறாள். ஆனால் இதெல்லாம் தமக்குத் தெரியாத மாதிரி ஆசார்யாள் நடிக்கிறார்! அப்பா பாதி, அம்மா பாதி என்று சேர்ந்த ஒரு ரூபந்தான் தமக்குத் தெரியும் என்கிற மாதிரி நடிக்கிறார் – அம்பாளை நிந்தா ஸ்துதி பண்ணணும், திருட்டுப் பட்டம் கட்டிக் கவி பாடணும் என்பதற்காக!

தக்ஷிண பாகமும் அம்மாவுடையதாக இருப்பதைப் பார்த்தார். பாதி ராஜ்யம் பெற்றவன் அதோடு த்ருப்திப் பட்டுவிட மாட்டான். மற்றப் பாதியையும் பிடிக்கத்தான் பார்ப்பான். ஒன்றுமே இல்லாதவன் அவன் பாட்டுக்கு இருந்துவிடுவான். ஆனால் ஒரு ராஜ்யத்தில் ஒருத்தனுக்கு எப்படியோ பாதி கிடைத்துவிட்டால் அவனைச் சும்மாயிருக்க விடாது. பாக்கியையும் பிடிக்கவே பார்ப்பான். அப்படித்தான் பரம உதாரமாக ஸ்வாமி எங்கேயும் இல்லாத தாராள மனஸோடு அர்த்த சரீரத்தையே பத்னியான அம்பாளுக்குக் கொடுத்ததன் வினை, பாக்கி பாதியையும் அவளே பிடித்துக் கொண்டுவிட்டாள் என்று ஆச்சார்யாளுக்குத் தோன்றி விட்டது. வாஸ்தவத்தில் தோன்றிற்றா என்ன? வேடிக்கை, கேலி செய்து பாடுவதற்காக அப்படித் தோன்றிய மாதிரி காட்டுகிறார்!

அரைத் திருடன், முக்கால் திருடன், முழுத் திருடன் என்பதுபோல அரைத் திருடி முழுத் திருடியாகி விட்டாள் – ஸாதாரணத் திருட்டில்லை; பதியும் பரமேச்வரனுமாக இருப்பவனின் சரீரத்தையே திருட்டுப் பண்ணி விட்டாள் – என்று நினைத்து விடுகிறார்.

‘தஸ்கராணாம் பதி’ [திருடர் தலைவன்] என்பது வேதமே ஸ்வாமிக்குக் கொடுத்த பெயர்1. என்ன தஸ்கரம் பண்ணுகிறான் என்பதை ஸம்மந்தக் குழந்தை முதல் பாட்டிலேயே சொல்லிவிட்டது: “உள்ளங் கவர் கள்வன்”! அந்த உள்ளங் கவர் கள்வனுடைய உடலை அப்படியே கவர்ந்த திருடி அம்பாள் என்று ஆசார்யாள் பாடிவிட்டார்!

ஆனால் திருடியதாகத் தாம் ஜட்ஜ்மென்டாகவே சொல்லிவிட வேண்டாம்….. “ரொம்ப ரொம்பப் பெரிய இடத்து ஸமாசாரம். அதனால் நாம் ஜட்ஜ்மென்டாகச் சொல்லி மாட்டிக்க வேண்டாம்! எதை வேணாலும் சொல்லலாமென்றிருக்கிற அரசியல் தலைவர்களே பல ஸமயங்களில் பத்திரிக்கைகாரன் கேள்வி கேட்டால் எப்படிச் சொல்கிறார்கள்? ‘நாம ஏன் மாட்டிக்கணும்?’ என்று மழுப்பத்தானே செய்கிறார்கள்? ‘question-ஐ parry பண்ணி விட்டார்’ என்றே பேப்பரில் போடுகிறான்! குற்றவாளி என்று நன்றாகத் தெரிந்தவனைக்கூட கோர்ட்டிலே அப்படித் தீர்ப்பு பண்ணும்வரை ‘குற்றவாளி என்கப்பட்ட’, ‘alleged’ என்று தானே போடுகிறான்? அதனால் நாமும் ஜாக்ரதையாகவே சொல்வோம்” என்று ஆசார்யாள் நினைத்து,

“சரீரார்தம் சம்போரபரமபி ஹ்ருதமபூத்” – ‘ஸ்வாமியின் மறு பாதி சரீரமும் உன்னால் திருடப்பட்டது’ என்று தீர்மானமாக முடிவு பண்ணிச் சொல்லாமல், “சரீரார்தம் சம்போரபரமபி சங்கே ஹ்ருதமபூத்” என்று ஒரு ‘சங்கே’யை நடுப்புற சேர்த்திருக்கிறார். “சங்கே” என்றால் “ஸந்தேஹிக்கிறேன்” என்று அர்த்தம். “அந்தப் பாதியும் உன்னால் தஸ்கரம் பண்ணப்பட்டதோ என்று எனக்கு ஒரு சந்தேஹம்” என்று ஸாமர்த்தியமாகப் போட்டிருக்கிறார். இப்படி ஒரு ஸந்தேஹத்தைக் கிளப்பினாலே போதும், அது ஜட்ஜ்மென்டையே விடக்கூட நன்றாகக் கேட்பவர்கள் மனஸில் பதிந்துவிடும் என்பதால் அப்படிப் போட்டிருக்கிறார்! குற்றவாளி என்றே கன்ஃபர்ம் பண்ணி ஒருத்தனைக் காட்டினால் அதோடு போய்விடும்; அது மனஸிலே நின்று வேலை செய்யாது. ஆனால் ‘ஸந்தேஹாஸ்பதமான நபர்’ என்ற அளவோடு நிறுத்திக் கொண்டால், அப்போதுதான் ஒவ்வொருத்தரும் அதைப் பற்றியே நினைத்து ஆஸாமி அப்படித்தான் இருக்கணும் என்று ஸ்வய முடிவாகவே கன்ஃபர்ம் பண்ணிக் கொள்வார்கள். தானே எடுத்த முடிவு என்பதால் இதுவே மனஸில் நன்றாக நிற்கும்! அம்பாளைத் திருடி என்று ஜட்ஜ் பண்ணி அபசாரம், கிபசாரம் தமக்கு வராமல் அதே ஸமயம் கேட்கிறவர்கள் ‘அப்படித்தான்’ [அம்பாள் திருடிதான்] என்று தீர்மானமாக அபிப்ராயப்படத் தூண்டியும் கொடுத்து ஆசார்யாள் ஸாமர்த்தியம் செய்திருக்கிறார்! கவிதையென்று எடுத்தாலும் fact-ஆக அப்படியே சொல்லாமல் பூடகமாக ஏதாவது வைக்க வேண்டும். அதனாலும் ‘சங்கே’ போட்டிருப்பார்.

“சங்கே”-“ஸந்தேஹப்படுகிறேன்” – என்றால் அதற்குக் காரணம் சொல்ல வேண்டுமல்லவா? போதுமான முகாந்தரமில்லாமல் ஸந்தேஹப்பட்டு விடலாமா? அதுவும் ஸாக்ஷாத் பராசக்தியைப் பற்றி, திருடி என்று?

நிறையக் காரணமும் சொல்லியிருக்கிறார். முழு ஸ்வரூபமும் சிவப்பு, வக்ஷத்தின் அமைப்பு இரண்டு பக்கமும் ஸ்திரீயுடையதாக இருக்கிறது என்று காரணம் காட்டியதைப் பார்த்தோம். ஆனால் அது மாத்திரம் எப்படிப் போதும்? சிவனைத் திருடினாள் என்றால் அவன் ஸமாசாரமாக ஏதாவது இவளிடத்தில் இருந்தால்தானே அப்படி ஸந்தேஹப்படுவது நியாயம்? திருட்டுப்போன பண்டத்தில் கொஞ்சமாவது ஒருத்தனிடமிருந்தால்தானே அவனை சார்ஜ்-ஷீட் பண்ணலாம்? அம்பாளே முழு ஸ்வரூபமாயிருக்கிறாளென்றால், ஒருவேளை அவளுடையதான இடது பக்கமே எப்படியோ வலது பக்கமும் வ்ருத்தியாகி முழு ஸ்த்ரி ரூபமாய் ஆகியுமிருக்கலாம். அப்படியே வலது பக்க ஸ்வாமியின் சரீரமும் இன்னொரு பக்கம் வளர்ந்து முழு புருஷ ஸமாசாரமாயிருக்கலாம். ஆசார்யாள் தரிசன பண்ணப் போன ஸமயம் அந்த ஸ்வாமி எங்கேயாவது வெளியிலே போயிருக்கலாம். இவள் மாத்திரம் இருந்திருக்கலாம். ஆகையினாலே ஸ்வாமி ஸமாசாரமான திருட்டு ஸொத்து ஏதாவது இவளிடம் இருந்தாலொழிய இவளைக் குற்றம் சொல்லக் கூடாது தானே?

அந்த ந்யாயம் ஆசார்யாளுக்குத் தெரியாததில்லை. சிவ சரீரத்தைச் சேர்ந்த இரண்டு அம்சங்களை அம்பாளிடம் ப்ரத்யக்ஷமாகப் பார்த்துவிட்டுத்தான் அவர் ஸந்தேஹப்பட்டிருக்கிறார். என்ன இரண்டு? ஒன்று: “த்ரிநயநம்”; இரண்டு: “குடில சசி சூடால மகுடம்”. “த்ரிநயநம்” என்றால் தெரிந்திருக்கும்; ‘முக்கண்’. ‘குடில சசி சூடால மகுடம்’ என்றால் ‘சந்திரப் பிறையுடன் கூடிய மகுடம்’. முக்கண்ணன், சந்த்ரமெளீச்வரன் ஸ்வாமி தானே? அந்த இரண்டும் அவனுக்குரியவைதானே? ‘த்ரயம்பகன்’ என்று வேதமே அவனுக்குப் பேர் சொல்லியிருப்பதற்கு ‘முக்கண்ணன்’ என்றுதான் அர்த்தம். ருத்ராபிஷேகத்தில் சொல்லும் த்யான ச்லோகத்தில்2 “ஜ்யோதி ஸ்பாடிக லிங்க மௌளி விலஸத் பூர்ணேந்து” என்று வருவது அவன் சிரஸில் சந்திரன் இருப்பதைத் தெரிவிக்கிறது. இங்கே சொல்வது ஸ்படிக லிங்காகாரமான ஸ்வரூபம். அப்படியிருக்கும்போது லிங்கத்தின் உச்சியில் பூர்ண சந்திரனே இருக்கிறான்; ‘பூர்ணேந்து’ என்று அதையே ச்லோகம் சொல்கிறது. அதே ஸ்வாமிக்கு முகம், கண், காது என்று அவயவங்களோடு உள்ள ரூபத்திலேயோ உச்சியில் பூர்ண சந்திரனாக இல்லாமல் பிறையாக இருக்கும்.

ஆக, முக்கண்ணும் சந்த்ர கலையும் ஸ்வாமியைச் சேர்ந்தவை. ஆனால் ஆசார்யாள் தர்சனம் பண்ணியபோது அம்பாளிடமே இந்த இரண்டையும் அவர் பார்த்து விட்டார்! இது ஸர்வ நிச்சயமாக ஸ்வாமியை அபேஸ் அடித்ததுதானே? இதை வைத்தே ‘சார்ஜ் ஷீட்’ கூடக் கொடுக்கலாமாயினும் ‘ஸந்தேஹம்’ என்று லைட்டாகச் சொல்லியே திருடித்தான் என்று நாம் ஜட்ஜ்மென்ட் கொடுக்கிற அளவுக்கு உறுதி பண்ணிவிடுகிறார்!

இவர் போனபோது அவள் ஸெளந்தர்யலஹரிக்கு தேவதையான காமேச்வரியாகவே இருந்தாள். காமேச்வரிக்கு லலாட நேத்ரம் (நெற்றிக் கண்) உண்டு; அதாவது அவளுக்கு மொத்தம் மூன்று நேத்ரங்கள். லலிதா ஸஹஸ்ரநாம ஆரம்பத்தில் சொல்லும் “ஸிந்தூராருண விக்ரஹாம்” ச்லோகத்தில் வரும் ஸிந்தூர அருண விக்ரஹந்தான் இங்கே சொல்லும் “ஸகலம் அருணாபம்” என்று முழுச் சிவப்பு ரூபம். “ஸிந்தூராருண விக்ரஹாம் த்ரிநயநம்” என்று அங்கே வருவதையே இங்கே “ஸகல மருணாபம் த்ரிநயநம்” என்று கொடுத்திருக்கிறார். அதாவது காமேச்வரிக்கு உரியதாகவே அங்கே சொன்ன சிவப்பு ரூபம், முக்கண் இரண்டையும் இங்கே ஆசார்யாளும் சொன்னாலும் முன்னது மட்டும் அவளுக்கு ஸொந்தமாகச் சேர்ந்தது என்றும் பின்னது பதியிடமிருந்து தஸ்கரம் பண்ணினது என்றும் வைத்து வேடிக்கை செய்திருக்கிறார்! அதற்கப்புறம் அந்த த்யான ச்லோகத்திலே “தாராநாயக-சேகராம் ஸ்மிதமுகீம் ஆபீந – வக்ஷோருஹாம்” என்று வருகிறது. “தாராநாயக சேகரா” என்றால் சந்த்ரசேகரி என்றே அர்த்தம். ஸாக்ஷாத் அம்பாளுக்கே முக்கண்ணைப் போலவே இதுவும் உரியதானதால்தான் த்யான ச்லோகத்தில் இப்படி லக்ஷணம் கொடுத்திருக்கிறது. அந்தத் ‘தாராநாயக சேகரா’மையே தம்முடைய ச்லோக முடிவில் ஆசார்யாள் “குடில-சசி-சூடால மகுடம்” என்று போட்டிருந்தாலும் இங்கே அதையும் திருடிச் சேர்த்துக் கொண்டதாகப் பட்டம் கொடுத்துவிடுகிறார் – அல்லது, ஜாக்ரதையாக அப்படி “ஸந்தேஹிக்கிறார்”! “ஆபீந வக்ஷோருஹாம்” என்று அங்கே ஸ்த்ரீ சரீரமாகச் சொன்னதையே இங்கே “குசாப்யாம் ஆநம்ரம்” என்று சொல்லி இது அம்பாளுக்கே உரித்தானதுதான் என்று வைத்துவிடுகிறார்.

ஆக அம்பாளைச் சேர்ந்ததாகவே அங்கே சிவப்பு ரூபம், முக்கண், சிரஸில் சந்த்ரகலை, ஸ்த்ரீ சரீரம் என்று நாலு சொல்லியிருப்பதில் நாலையுமே ஆசார்யாளும் இங்கே சொன்னாலும் இரண்டுதான் அவளைச் சேர்ந்தது, இரண்டு பதியிடமிருந்து அபஹரித்தது என்று திருட்டுச் சொத்தாக ஸாக்ஷியம் காட்டி நிந்தா ஸ்துதி செய்திருக்கிறார். அவள் பாதிக்கு மேலேயும் பதி சரீரத்தை அபஹரித்து விட்டாள் என்று குற்றப் பத்திரிக்கை எடுக்கிற ஆசார்யாள்தான் அவளுக்கு உடைமையான நாலில் பாதியை அவளிடமிருந்து அபஹரித்திருக்கிறார்!

“தேஜோவதீ, த்ரிநயநா” என்று ஸஹஸ்ரநாமத்திற்குள்ளேயே அம்பாளுக்குப் பேர் சொல்லியிருக்கிறது. “சாருசந்த்ரகலாதரா” என்பதாகவும் அவளை சந்த்ரசேகரியாக வர்ணித்து ஒரு நாமா வருகிறது. ச்யாமளா தண்டகத்தில் ஸ்ரீ மடம் ஸமஸ்தானம் ஸ்ரீவித்யாதி தேவதையாக அம்பாளைச் சொல்லும் ச்லோகத்திலும் “சதுர்புஜே சந்த்ரகலாவதம்ஸே” என்று வருகிறது; சந்த்ரகலையை சிரோபூஷணமாகக் கொண்டவள் என்று அர்த்தம்.

அதாவது அம்பாளுக்கே சந்த்ரகலை, த்ரிநேத்ரம் உண்டுதான். சாஸ்த்ரம் அப்படித்தான் வர்ணித்திருக்கிறது. பழைய காலச் சித்ரங்களில்கூட அப்படிப் போட்டுப் பார்த்திருக்கிறேன். ஆனாலும் ஸர்வஜ்ஞரான ஆசார்யாள், “ஸர்வஜ்ஞத்வம் கிடக்கட்டம். அம்மாவை ஸ்தோத்ரம் செய்கிறோம்; ஸ்வாதீனம் எடுத்துக் கொள்ளாமல், அந்த ஸ்வாதீனத்தில் நிந்தா ஸ்துதி செய்யாமல் என்ன அம்மா – ஸ்தோத்ரம்?” என்றுதான் இந்த விஷயம் தமக்குத் தெரியாதமாதிரி அந்த இரண்டும் அப்பாவையே சேர்ந்தது. அவரிடமிருந்தே இவள் திருடியிருக்க வேண்டும் என்று தாம் ஸந்தேஹப்படுவதாகப் பாடிவிட்டார். லோகத்துப் பொது ஜனங்கள் முக்கண், சந்த்ரகலை என்றால் சிவனுடையது என்றுதானே நினைத்துக கொண்டிருக்கிறார்கள்? ஸர்வஜ்ஞரான தாமும் அந்தக் கோஷ்டியோடு சேர்ந்ததுபோல இப்படிப் பாடியிருக்கிறார்.

ஸ்வாமியின் சரீரத்தைத் திருடியவள் திருட்டு ஸொத்தை ஒளித்து வைக்கிற ரீதியில் அதை ஒளிக்கப் பார்த்திருக்கிறாள். எங்கே ஒளிப்பது? தனக்குள்ளேதான், [மீண்டும் சுவைத்துக் கூறுகிறார்கள்:] தனக்குள்ளேயேதான் ஒளித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கிறாள். சிவத்துக்குள்ளே சக்தி என்கிற மாதிரி சக்திக்குள்ளேயும் சிவந்தான்! அப்படி ஆக்க வேண்டுமென்பதற்காகத்தான் ஒரு பாதியை அவள் முழுங்கியே விட்டதுதான் அர்த்த நாரீச்வர அவஸரம். கோபாலகிருஷ்ண பாரதிகூட,

பார்வதியென்றொரு சீமாட்டி – அதில்

பாதியைத் தின்றதுண்டு

என்றே பாடிவிட்டிருக்கிறார்! “யானாகிய என்னை விழுங்கி” என்று அருணகிரிநாதர் வாக்கும் இருக்கிறது. யாரைவிட ப்ரியம் செய்கிறவர்கள் இல்லையோ, அப்படிப்பட்ட அம்மாமார்களே குழந்தையை “கடிச்சுத் தின்னுடணும் போலிருக்கு” என்று கொஞ்சுகிறார்கள். அன்பு வேகத்தில் திருட்டு மட்டுமில்லாமல் ‘மர்டர் கேஸ்’ வரை போய்விடுகிறது. ஆசார்யாள் திருட்டுக் கேஸாக சொன்னதை, அதைக்கூட doubtful-ஆக “சங்கே” போட்டே சொன்னதை நான் மர்டர் கேஸாகவே கொண்டுவந்து விட்டேன்! அவரே “சிவானந்த லஹரி”யில் (“கரலக்ந ம்ருக:” எனத் தொடங்கும் 44-வது ச்லோகம்.) சொல்லியிருக்கும் ஒரு மர்டர் கேஸின் ஞாபகத்தில், அதன் அடிப்படையில் தான், இப்படிப் பண்ணுகிறேன்! அதென்ன மர்டர் என்றால், ஒரு மர்டரில்லை; அநேக மர்டர்கள். அத்தனையும் ஸம்ஹார மூர்த்தியான சிவன் பண்ணின மர்டர்கள்; ஆனையை வதம் பண்ணி மேலே போர்த்திக் கொண்டு கஜ ஸம்ஹார மூர்த்தியானது ஒன்று – ‘கரீந்திர பங்க’ என்று அதைச் சொல்லியிருக்கிறார். புலித்தோலை உரித்து இடுப்பிலே கட்டிக் கொண்டது இன்னொன்று – ‘கந சார்தூல விகண்டந’ என்கிறார். இன்னும், கிராத ரூபத்தில் வந்தபோது காட்டுப் பன்றியை! ஸம்ஹார காலத்தில் அத்தனை ஜந்துக்களையும் வதைக்கிறார்! “அஸ்த ஜந்து:” என்று அதை ஜெனரலாகச் சொல்கிறார். உத்தரீயமாக யானைத்தோலும், இடுப்பு வஸ்திரமாக புலித்தோலும், இதெல்லாம் போதாதென்று கையிலே ஒரு மானையும் வைத்துக் கொண்டிருக்கிற ஸ்வாமியைப் பார்த்தவுடன் ஆசார்யாளுக்கு ஒரு சிங்கம் தான் க்ளோஸ் பண்ணின ஆனை, புலித்தோல்களைப் போட்டுக்கொண்டு அப்புறம் தின்னலாமென்று ஒரு மானைப்பிடித்துக் கொண்டு போகிற மாதிரித் தோன்றிவிட்டது. சிங்கம் குகையில் வஸிக்கிறது போலவே ஸ்வாமியும் ஹ்ருதய குகையிலே வஸிக்கிறார். இரண்டு பேருக்கும் ‘பஞ்சமுக’ப் பேரும் உண்டு. பரந்து விரிந்த முகத்தைக் கொண்டதால் சிங்கத்திற்குப் ‘பஞ்சமுகம்’ என்று பெயர். ஐந்து முகம் படைத்தவரானதால் ஸ்வாமிக்கும் அப்படிப் பெயர். சிங்கத்துக்கும் ஸ்வாமிக்கும் சிலேடை வைத்து இப்படி ச்லோகம் பண்ணியிருக்கிறார். அங்கே ஆனை, புலிகளைத் தின்று தீர்ந்துவிட்டு அவற்றுக்கு வெளி அடையாளமாக அந்தச் சர்மங்களை மாத்திரம் தன்னிடம் ஸ்வாமிச் சிங்கம் வைத்துக் கொண்டிருக்கிறதாக வர்ணித்திருக்கிறாரோல்லியோ? அதுதான் இங்கே எனக்கு ஞாபகம் வந்து, அதே மாதிரி அந்த ஸ்வாமியையே அம்பாள் முழுங்கி விட்டு அதற்கு அடையாளமாக லலாட நேத்ரத்தையும் சந்த்ரகலையையும் வெளியிலே காட்டுகிறாளென்று சொல்லத் தோன்றிற்று. சர்மத்தை வர்க்கு வர்க்கென்று தின்ன வேண்டாமென்று சிங்கம் விட்டிருக்கும்! இங்கே அம்பாள்-ஸ்வாமி விஷயத்தில் நாம் எப்படி வைத்துக் கொள்ளலாமென்றால், அந்த சரீரம் முழுக்க இவள் சரீரத்திற்குள் போன பிற்பாடு, யாருக்குமில்லாமல் அதிகப்படியாக அவருக்குள்ள லலாட நேத்ரம் மட்டும் பிதுங்கிக் கொண்டு வெளியிலே வந்துவிட்டது; சரீராவயங்களோடு சேராமல் சிரஸில் தனியாயிருந்த சந்த்ர கலையும் அப்படியே தனிப்பட வெளிப்பட்டுவிட்டது என்று வைத்துக் கொள்ளலாம்!

வாஸ்தவத்தில் மர்டருமில்லை, திருட்டுமில்லை! அந்த மஹா ம்ருத்யஞ்ஜயனை இவளுடைய தாடங்க மஹிமை மஹா ப்ரளயத்திலும் அழியாதவனாக ஆக்குகிறது என்கிறபோது அந்த நித்ய ஜீவியை எப்படி மர்டர் பண்ணுவது? திருட்டும் வாஸ்தவத்தில் அவர்தான் இவள் விஷயத்தில் பண்ணியிருக்கிறாரென்று கவிகள் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். அதென்ன ஸமாசாரமென்றால், வாஸ்தவத்தில் அவளுடைய ப்ரபாவத்தினால் நடந்த ஒன்றரை விஷயங்களில் அவளுக்கு உரியதான கீர்த்தியை அவரே தமக்கென்று திருடிக்கொண்டுவிட்டார்! அதென்ன ஒன்றரை விஷயமென்றால், ஏற்கெனவே சொன்ன காம தஹன, கால ஸம்ஹாரங்களைப் பற்றிய விஷயந்தான். அர்த்தநாரீச்வர ரூபத்திலே இரண்டு பேருக்கும் பொதுவாக உள்ள லலாட நேத்ரமே காமதஹனம் பண்ணியதால் அதற்கான கீர்த்தியில் பாதி அம்பாளுக்குச் சேர வேண்டும். ஆனால் காமதஹன மூர்த்தி என்று அவரே முழு கீர்த்தியையும் தஸ்கரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்! கால ஸம்ஹாரமோ முழுக்கவே அவளுடையதான இடது பாதத்தால் நடந்ததால் அதற்கான கீர்த்தி பூராவுமே அவளுக்குரியதுதான். ஆனால் இதையும் முழுக்க அவரே தஸ்கரம் பண்ணிக் கொண்டு காலஸம்ஹாரமூர்த்தி என்று டைட்டில் போட்டுக்கொண்டிருக்கிறார்! அட்ட வீரட்டானாம் – ‘அஷ்ட வீரஸ்தானம்’ என்று நாம் செய்த எட்டு வீர பராக்ரம லீலைக்காக அவர் எட்டு க்ஷேத்ரங்களில் இருப்பதில் திருக்குறுக்கையில் காமதஹன மூர்த்தியாகவும் திருக்கடவூரில் காலஸம்ஹார மூர்த்தியாகவும் அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கிறார்! அம்பாள் தான் திருட்டுக் கொடுத்தவள்! அவள் விஷயத்திலேயே அவளுடைய பதி தஸ்கராணாம் பதியாயிருந்திருக்கிறார்! ஆனாலும் அவருக்கே தன்னுடைய சரீரம், ஆத்மா எல்லாவற்றையும் அர்ப்பணம் பண்ணிய மஹா பதிவ்ரதையாக இருப்பவள் அவள்.

அவளைத்தான் கவிக்கண்ணில் பார்த்து காவ்யரஸம், இலக்கியச் சுவை என்கிறார்களே அது பெருகும்படியாகப் பதியின் சரீரத்தைப் பூரணமாகத் திருடியதாக ஆசார்யாள் பாடிவிட்டார்.

ஸ்வாமியையும் ப்ரேமையினாலே தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டு விட்டாள் என்பதுதான் தாத்பர்யம் இவளுக்குள்ளேயே அவரும் அடங்கிவிட்டதால்தான் காமாக்ஷி மாதிரி அவளை மட்டும் முழு ரூபத்தில் பார்க்கிறபோதும் நமக்குக் குறையே இருக்கவில்லை. மாதா-பிதா என்று வழிபடுவதில் ஒரு ஆனந்தமென்றால் இப்படி மாதாவிலேயே பிதாவும் என்று பார்க்கும்போது இதுவும் ஒரு ஆனந்தமாகத்தானிருக்கிறது! ‘தாயுமானவர்’ என்று அவரை வைத்து ஸந்தோஷப்படுவதைப் போலவே ‘தந்தையுமானவன்’ என்று அவளை வைத்து ஸந்தோஷிப்பதாக இருக்கிறது.

ப்ரம்மம், ப்ரம்ம சக்தி என்ற இரண்டு, இரண்டு ரூபத்தில்தான் இருக்க வேண்டுமென்றில்லாமல் அம்பாளே சிவசக்தி ஐக்ய ரூபிணியாக உள்ள அத்வைதம்தான் முடிவாக ச்லோகத்தின் உட்பொருள்.

[சிறிது நேரம் மவுனமாகக் கண் மூடி இருந்து, மிகவும் உள்ளடங்கிய குரலில் கூறுகிறார்கள்:] ஸ்வரூபம் ஒரே சிவப்பு ஜ்யோதிஸாக இருக்கிறது. ஸரி, அம்பாள், அம்பாள் மாத்திரம் என்று நினைத்து அந்தச் சிவப்பிலே அவயங்களாகப் பிரித்துப் பார்த்தால் நெற்றிக் கண் தெரிகிறது. சந்திரகலை தெரிகிறது! த்ரயம்பகனை, நமக்கு [ஸ்ரீ சங்கர மடங்களுக்கு] ஸ்வாமியான சந்த்ரமௌளீச்வரனை அந்த இரண்டும் ஞாபகப் படுத்துகின்றன. அவர் தெரிகிறாரா என்று பார்த்தால், இல்லை. இந்த இரண்டைத் தவிர அவர் சரீரத்தில் எதுவும் தெரியவில்லை. இப்படிப்பட்ட அநுபவ நிலையிலே பார்த்துத்தான் ஆசார்யாள், [பலத்த குரலில்] “ஒஹோ! பாதி சரீரமே உன்னுடையது என்று பூர்வத்தில் ஆக்கிக் கொண்டவள், போகப் போக அதுவும் போதவில்லை என்று மீதியையும் அபஹரித்துவிட்டாயா?” என்று கேட்டிருக்கிறார்.

சிவாம்ருதத்தைப் பங்கு போட முடியாது! பூராவாகவே புஜித்துவிட வேண்டும். அதுதான் அம்பாள் பண்ணியது.


1 ஸ்ரீருத்ரம், 3-ம் அனுவாகம்

2“ஆபாதாள” எனத் தொடங்குவது.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is விஷ்ணுவை விட்டதேன்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ஸர்வ ஸமர்ப்பணம்
Next