படைத்தலைவர் பக்தித் தொண்டரானார்! : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

பூர்வாச்ரமப் பரஞ்ஜோதிக்கு, ஒரு பக்கம் தநுர்வேதப் பயிற்சி இருந்தாலும் இன்னொரு பக்கம் நல்ல சிவபக்தியும் இருந்தது. பக்தியை உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டு வெளியே வீரதீரங்கள் காட்டினார். நரஸிம்ஹ வர்மாவின் படையில் சேர்ந்து யானைப்படைத் தலைவராகி அவனுக்காக வாதாபி வரை போய் வெற்றி பெற்றார். அங்கே கவர்ந்த பொன், மணி, யானை, குதிரை முதலானதுகளை ராஜாவுக்கே ஸமர்ப்பணம் பண்ணிவிட்டு வாதாபி கணபதியை மாத்திரம் தனக்கென்று வைத்துக் கொண்டார்.

“சளுக்கியர்களுடைய மஹா பெரிய யானைப்படையை ஜயிக்கும்படியான திறமை உமக்கு எப்படி வந்தது?” என்று ராஜா ஆச்சர்யப்பட்டு அவரைக் கேட்டான்.

அவர் ஒன்றும் சொல்லாமல் அடக்கமாக நின்று கொண்டிருந்தார்.

ஸேநாதிபதியாயிருந்தாலும் தன்னுடைய சொந்த விஷயம் எதையும் அவர் ராஜாவிடம் தெரிவித்ததில்லை. தன் கார்யத்தைக் கவனமாகச் செய்வாரே தவிர, கார்யம் செய்கிற தன்னைப் பிரகாசப்படுத்திக் கொண்டதில்லை. இப்போது ராஜா அவருடைய வீர ஸாஹஸத்துக்குக் காரணம் கேட்டபோதும் பேசாமலே இருந்தார்.

ஆனால், கூடியிருந்த மந்திரிகளுக்கு விஷயம் தெரியும். ராஜாவுக்கே தெரியாத விஷயங்களெல்லாம்கூட மந்திரிகள் நன்றாகத் துப்புத் துலக்கித் தெரிந்துகொண்டு மனஸுக்குள்ளேயே வைத்துக் கொண்டிருப்பார்கள்.

‘மந்த்ரி’ என்றாலே ‘மனஸுக்குள் வைத்துக் காப்பாற்றுபவர்’. ‘மந்’-மனஸுக்குள், அதாவது வெளியே விடாமல் வைத்திருந்து, ‘த்ர’-ரக்ஷிப்பது எதுவோ அதுவே மந்த்ரம். நாம் மனஸுக்குள்ளேயயே ஸதாவும் வைத்திருந்து, சப்தம் போட்டு வெளியே சொல்லாமல் மனஸினால் மனனம் செய்து ரஹஸ்யமாக உபாஸிப்பதால் எது நம்மை ரக்ஷிக்குமோ அதுவே ‘மந்த்ரம்’ என்பது நாம் உபாஸனையாக ஜபிக்கும் ‘மந்-த்ரம்’ என்பதற்குச் சொல்கிற அர்த்தம். நம்மை ரக்ஷிக்கும் விஷயமாக இல்லாமல், ரஹஸ்ய ஆலோசனையாக மனஸுக்குள்ளேயே நாம் ரக்ஷிக்கும் விஷயத்துக்கும் மந்-த்ரம் என்று பெயர். இப்படி ராஜாங்க ரஹஸ்யங்களை ரக்ஷிப்பவரே மந்திரி. ‘ரிஸர்ச்’ என்று இந்த நாளில் அரை குறை ஞானத்திலோ, அல்லது வேண்டுமென்றே க்ரித்ரிமமாகவோ செய்வதில் ஒருவர், “க்ஷத்ரிய ராஜா மந்த்ர சக்தியில் கெட்டிக்காரர்களான ப்ராம்மணர்களை ‘மந்த்ரி’ என்ற பெயரில் துணை சேர்த்துக் கொண்டே ஆட்சி பண்ண வேண்டுமென்று ப்ராம்மணர்கள் சாஸ்த்ரம் பண்ணிவிட்டார்கள். அதனால் வாஸ்தவத்தில் அப்படி சக்தி இருந்ததோ இல்லையோ, ராஜா ஆளுவது அவனுடைய ஆயுத பலத்தால் மட்டுமில்லை; அதைவிட அதிகமான அந்த ப்ராம்மண அதிகாரியின் மந்த்ர பலத்தால் தான் என்று லோகத்தை நம்பப் பண்ணி ப்ராம்மண ஏகாதிபத்யத்தை உண்டாக்கிவிட்டார்கள். ராஜாவே, ‘இவர் மந்த்ர சக்தியால் என்ன பண்ணிவிடுவாரோ?’ என்று பயந்து கொண்டு மந்த்ரி மண்டலத்தின் அபிப்ராயத்திற்குத் தான் ஸலாம் போட வேண்டியிருந்தது” என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். அது அடியோடு தப்பு. ராஜாங்க அதிகாரியான மந்த்ரியிடமுள்ள ‘மந்த்ரம்’ என்பது ரஹஸ்யாலோசனைதான். தர்ம சாஸ்த்ரம், அர்த்த சாஸ்த்ரம் ஆகியவற்றில் மாத்ரமின்றி ஸாதாரண டிக்ஷனரியில் பார்த்தால் கூடத் தெரியும். இந்த இடத்தில் ‘மந்த்ரம்’ என்பது Confidential Counsel என்றும், மந்த்ரி என்பவர் அப்படிப்பட்ட Counsellor- ஏ என்றும்.

மந்த்ரிகள் கல்வி கேள்விகளில் வல்லவர்களாக இருப்பார்கள். நல்ல சாஸ்த்ராநுஷ்டானமுள்ளவர்களாக இருப்பார்களென்றாலும் மந்த்ர சாஸ்த்ரத்தில் மஹா கெட்டிக்காரர்களாக இருக்கவேண்டுமென்றில்லை. அப்படி இருப்பது ராஜாவின் குருதான். அப்படிப்பட்ட ஒரு குருவான வஸிஷ்டரிடம் சிஷ்ய ராஜாவான திலீபன், ‘தேவர்கள், மநுஷ்யர்கள் ஸகலராலும் எனக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களைத் தாங்களே நிவிருத்தி பண்ணுகிறீர்கள். நான் கண்ணுக்குத் தெரிகிற சத்ருக்களைத்தான் அஸ்திரத்தால் அழிக்கிறேன். தாங்களோ அவர்கள் கண்ணுக்குத் தெரியாமலிருக்கும்போதும், என்னிடம் தங்களுக்குள்ள அநுக்ரஹ சித்தத்தால், அவர்களை மந்த்ர பலத்தால் அடக்கி விடுகிறீர்கள். தங்களால் அப்படி ஆக்கப்பட்டவர்களைத்தான் அப்புறம் என் அஸ்த்ரமும் சும்மாவுக்காகத் தாக்கி எனக்கு ஜயசாலி என்ற பெருமையை வாங்கித் தருகின்றன!” என்று சொன்னதாகக் காளிதாஸர் சொல்லியிருக்கிறார்1. மஹரிஷியாகப் போற்றப்பட்ட ஒரு ராஜகுருவைப் பற்றி இருப்பதை எல்லா மந்த்ரிகள் விஷயமாகவும் குழறுபடி பண்ணி ரிஸர்ச் என்று நடக்கிறது.

ரஹஸ்ய ஆலோசனைக்கு உரியவர்தான் மந்த்ரி. Secret-ary: ‘ஸெக்ரடரி’ என்று இருப்பதும் இதே தாத்பர்யத்தில்தான். ஆனால் ஒரு ஸெக்ரடரிக்கும் மந்த்ரிக்கும் என்ன வித்யாஸமென்றால், ஸெக்ரடரி தன்னுடைய யஜமானனின் ரஹஸ்யமான விஷயங்களைப் பிறருக்குத் தெரியாமல் காப்பாற்றுபவன்; மந்த்ரியோ அநேக ராஜாங்க ரஹஸ்யங்களை யஜமானனான ராஜாவுக்கே தெரியாமலும் காப்பாற்றுபவன் – சொன்னால் அவனுக்கு வீண் கவலையளிப்பதாக இருக்கும், அவன் மனஸில் பாரத்தை ஏற்றும் என்ற ராஜ விச்வாஸத்தினாலேயே பல விஷயங்களைச் சொல்லாமல், தன்னுடைய மனஸுக்குள்ளேயே கெட்டியாக ஒளித்து வைத்திருந்து, அதாவது ‘மந்-த்ரம்’ பண்ணி, அதே ஆலோசனையாக இருப்பதால் அவற்றைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளைக் கார்யத்தில் எடுத்து, அவச்யம் ஏற்பட்டால் அப்போதே வெளியிடுபவன். அநாவச்யமாக ராஜாவுக்கு ஊர் ஸங்கதிகள் சொல்லாமல், ஆனால் தான் நாட்டில் நடக்கும் ஸகல விஷயமும் தெரிந்து வைத்துக் கொண்டு, அவச்யம் ஏற்படும்போது அவனுக்குச் சொல்வது மந்த்ரி லக்ஷணம்.

அப்படி இப்போது அந்தப் பல்லவ ராஜாவின் மந்த்ரிகள், “இந்தப் பரஞ்ஜோதி பெரிய சிவபக்தர். வெளியில் தெரியாமல் சிவனடியார்களுக்குத் தொண்டு செய்கிறவர். இப்படிப்பட்டவருக்கு முன்னாடி எந்த எதிரிப் படைதான் நிற்க முடியும்?” என்றார்கள்.

அவருடைய தநுர்வேத சாதுர்யத்தையோ, புஜ பல, புத்தி பலங்களையோ அவர்கள் வெற்றிக்குக் காரணமாகச் சொல்லாமல் அவருடைய சிவ பக்தியே எதையும், யுத்தத்தில் ஜயத்தையுங்கூட, சாதித்துத் தந்ததாகச் சொன்னதைக் கவனிக்கணும். பரலோகத்துக்குத்தான் பக்தி வழிகாட்டுமென்று இல்லை. இஹலோக கார்யம் ஒருத்தரால் நடக்கவேண்டியிருக்கும்வரை அதற்கும் பக்தி உபகாரம் பண்ணும்.

மந்த்ரிகள் சொன்னதுதான் தாமஸம், ராஜா அப்படியே நடுநடுங்கிப் போய்விட்டான். “ஐயையோ, ஒரு உத்தமமான சிவ பக்தரை, சிவநேசச் செல்வரையா படைத் தலைவராக வைத்துக் கொண்டு வேலை வாங்கி இருக்கிறேன்? பெரிய அபசாரம் பண்ணிவிட்டேனே!” என்று அழுதுகொண்டு “க்ஷமிக்கணும்!” என்று பரஞ்ஜோதிக்கு நமஸ்காரம் செய்தான்.

இதிலிருந்து அந்தக் காலத்து அரசர்களின் உசந்த பண்பாடு தெரிகிறது.

நானாக ஒன்றும் சொல்லவில்லை. பெரிய புராணக் கதையைத்தான் சொல்கிறேன்.

ராஜா நமஸ்காரம் பண்ணியதும் அவனைத் தடுத்துக் கொண்டு அவனுக்கு நமஸ்காரம் செய்த பரஞ்ஜோதி, “நீங்கள் இப்படியெல்லாம் வருத்தப்படக்கூடாது. நாங்கள் குலதர்மமாக உத்யோக ப்ராமணர்களாகி, அதிலேயும் யானைப்படை ஸேவகம் செய்வதென்று வைத்துக்கொண்டவர்கள்தான். அந்தக் குல வழக்கப்படி நானேதான் உங்கள் படையில் சேர்ந்தேன். இனிமேலேயும் இந்தப் பாரம்பர்யத் தொழில் தாராளமாகத் தொடர்ந்து பண்ணுவதற்கு நான் தயார்தான்!” என்று சொன்னார்.

அரைவேக்காடுகள் ஸந்நியாஸியாவது, ஒரேடியாக தீவிர பக்தி மார்க்கத்திற்கே போகப் பார்ப்பது ஆகியவை நம் சாஸ்த்ர ஸம்மதமல்ல. நன்றாகப் பக்குவம் அடைந்த பிறகே ஆஹாரப் பண்டம் வெந்து பக்குவம் ஆகிற மாதிரி மனஸ் முழுவேக்காடு ஆன பிற்பாடே – ஸந்நியாஸாச்ரமம், அதற்கு முந்தி க்ருஹஸ்தாச்ரமம்தான் என்றே நம் சாஸ்திரங்கள் வைத்திருக்கின்றன. யார் வேண்டுமானாலும் பிக்ஷுவாகலாம் என்று புத்தர் பண்ணினதால்தான் அவர்களுடைய புத்த ஸங்கம் போகப் போக ஊர் சிரிக்கிற மாதிரி ஆகிவிட்டது. மஹேந்த்ர வர்மா அதை ஒரே பரிஹாஸமாகப் பண்ணி, ‘மத்த விலாஸ ப்ரஹஸன’த்தில் எழுதியிருக்கிறான்.

நாம் எந்த ஸ்திதியிலிருக்கிறோமென்று நம்மை நாமே அலசிப் பார்த்துக்கொண்டு அப்புறம்தான் ஸந்நியாஸம், அல்லது தெய்வ ஸம்பந்தமாகவே வாழ்க்கை முழுதையும் ஆக்கிக் கொள்வது என்று முடிவு செய்யணும். எட்டாத உயரத்துக்குத் தாவி விழுந்துவிட்டால், கை கால் முறிந்து, அப்புறம் எப்போதுமே ஏற முடியாதபடி ஆகி விடும்.

பரஞ்ஜோதி அப்போதே நல்ல பக்குவ ஸ்திதி அடைந்துதான் இருந்தார். யுத்தத்தைக்கூட பகவத் ஸ்மரணத்தோடு, பகவானுக்காகச் செய்கிற ஒரு கார்யமே என்று, “மாம் அநுஸ்மர; யுத்ய ச” என்று பகவான் சொன்னபடி2 செய்கிற நிலையில்தான் அவர் இருந்தார். அதனால் ராஜாவுக்கு gulity feeling (குற்ற உணர்ச்சி) இருக்க வேண்டாம் என்ற உதார எண்ணத்தில், “இனியும் தொடர்ந்து ஸேநாதிபதியாக, கஜபதியாக இருக்கிறேன்” என்று சொன்னார்.

அவர் அப்படிச் சொன்னாலும் ராஜா தனக்கு அவர் ஸேவகம் செய்பவராக இனிமேல் ஒரு க்ஷணங்கூட இருக்கக்கூடாது என்று நினைத்து, “வேண்டாம் வேண்டாம். இனிமேலே தாங்கள் ஸதா காலமும் சிவ ஸ்மரணமும், சிவ புண்யமுமே பண்ணிக் கொண்டிருங்கள்” என்று தீர்மானமாகச் சொல்லி, அவருடைய குடும்பத்தின் போஷணைக்காகவும், அவருடைய சிவனடியார் பணி நன்றாக நடப்பதற்காகவும் ஏராளமாகப் பொன்னும் பொருளும் ஸமர்ப்பணம் பண்ணினான்.

இது ஒரு புது மாதிரிக் கதை. இவர் கஜபதி. சத்ருவிடமிருந்து ஆர்ஜிதம் பண்ணிய பொன்னையும் பொருளையும், எல்லாக் கதையும் மாதிரி, ராஜாவுக்கு ஸமர்ப்பித்தாரென்றால், புதுக் கதையாக ராஜாவும் திரும்ப அதே மாதிரி இவருக்குப் பண்ணியிருக்கிறான்!

அதெல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அவர் சொந்த ஊரான திருச்செங்காட்டாங்குடிக்கே வந்தார். அதோடு அவர் வாழ்க்கையில் பெரிய திருப்பம் ஏற்ப்பட்டது. சிவ பக்தியை உள்ளூர வைத்துக்கொண்டு வெளிக்கார்யத்தில் படை எடுப்பது, வெட்டுவது, குத்துவது என்று இருந்தவர், வெளியேயும் பரம ஸாத்விகராகிவிட்டார். வாதாபி கணபதியைத் தம்மூரில் உள்ள கணபதீச்வரமாகிய சிவன் கோவிலில் பிரதிஷ்டை செய்தார். பத்தினியோடுகூட சிவோபாஸனை பண்ணிக்கொண்டு, சிவனடியார்களுக்கெல்லாம் நன்றாக பிக்ஷை பண்ணிக் கொண்டு இருந்தார். தான் அந்தத் சிவத்தொண்டர்களிலெல்லாம் ரொம்பச் சின்னவன் என்ற விநய மனோபாவத்தில் தன்னை ‘சிறுத்தொண்டன்’ என்றே சொல்லிக் கொண்டார். பரஞ்ஜோதி என்ற பேர் போய் சிறுத்தொண்டர் என்பதே அவர் பெயராக நிலைத்து விட்டது. பெரிய பல்லவ ஸாம்ராஜ்யத்தின் ஸேநாதிபதியாக எந்தப் பெயரில் அவர் பிரஸித்தி பெற்றிருந்தாரோ, அந்தப் பெயரை மறந்து, சிவனடியார்களில் அடியார்கடியாராக அவர் தமக்கு வைத்துக் கொண்ட சிறுத்தொண்டர் என்ற பேரையே லோகம் எடுத்துக் கொண்டது என்பதிலிருந்து நம் ஜனங்கள் எப்படி லௌகிக ஸ்தானம், அந்தஸ்து எல்லாவற்றையும்விட தெய்வ ஸம்பந்தமாகப் பணி செய்வதைத்தான் பெரிஸாக மதித்திருக்கிறார்களென்று தெரிகிறது.

அவர் கதை ‘சிறுத் தொண்ட நாயனார் புராணம்’ என்றே பெரிய புராணத்தில் வருகிறது. செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் என்று ஸுந்தரமூர்த்தி ‘திருத்தொண்டத் தொகை’யில் சொல்லியிருக்கிறார். ஸுந்தரமூர்த்தி அறுபத்து மூன்று நாயன்மார்களையும் குறித்தே திருத்தொண்டத் தொகை பாடியதால், அவர் சிறுத்தொண்டரைச் சொன்னதில் விசேஷமில்லை. விசேஷம் எதிலிருக்கிறதென்றால் ஞானஸம்பந்தரும் சிறுத்தொண்டரைச் சிறப்பித்துப் பாடியிருப்பதில்தான். அவர் திருச்செங்காட்டாங்குடிக்குச் சிறுத்தொண்டர் இருந்த காலத்திலேயே வந்து, அவருடைய பாதத்தை இவர் மார்போடு கட்டியணைத்ததாகச் சொன்னேன். அவரும் இவரைக் கொண்டாடி, தான் பாடின தேவாரத்திலேயே இவரைச் சொல்லியிருக்கிறார். ஒரு பதிகத்தில் சிறுத்தொண்டரைப் ‘பொடி’ பூசிக் கொண்டிருக்கிறாரென்று அவருடைய விபூதி தாரணத்தை விசேஷமாகச் சொல்லியிருக்கிறார். [தோடுடைய செவியன் என்ற] முதல் பாட்டிலேயே ஸ்வாமியை “பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்” என்றவர் இங்கே இந்த சிவத் தொண்டரை அப்படிச் சொல்லி அவருக்கு அருள் பண்ணுவதற்காகவேதான் ஸ்வாமி அந்த ஊரிலே கோவில் கொண்டிருக்கிறார் என்று பாடியிருக்கிறார்3. இன்னொரு பதிகத்தில்4 பத்து அடியில் ஒவ்வொன்றிலும் சிறுத்தொண்டரை ஏதாவதொரு புகழ்ச்சியான அடைமொழி சேர்த்துக் குறிப்பிட்டுவிட்டு, அப்படிப்பட்டவருடைய ‘செங்காட்டங் குடிமேய’ அதாவது ‘திருச்செங்காட்டாங் குடியிலிருக்கிற ஸ்வாமியே!’ என்று பாடியிருக்கிறார். ஒரு அடியில், அவருடைய பிள்ளை சீராளன் பேரையும் சேர்த்துச் “சீராளன் சிறுத்தொண்டன்” என்று சொல்லியிருக்கிறார்.


1 ரகுவம்சம் 1. 60-61

2 கீதை VIII 7

3 பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க் கருள்செய்யும் பொருட்டாகக்

கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச் சரத்தானே

(சம்பந்தர் தேவாரம், “நறைகொண்ட” பத்தாவது அடி)

4 ‘பைங்கோட்டு மலர்ப் புன்னை’ எனத் தொடங்குவது

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is நந்தனார் : உண்மையை வென்ற கற்பனை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  பிள்ளைக் கறி : அதன் உட்கிடைகள்
Next