கால ஸ்வரூபமாக : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

அப்புறம் கால ஸ்வரூபமாக அம்பாளைச் சொல்லி ஒரு ச்லோகம் – “க்ஷிதௌ ஷட்பஞ்சாசத் த்விஸமதிக பஞ்சாசத் உதகே”. (ச்லோ. 14) ஒரு வருஷத்தில் ஆறு ரிதுக்கள், மொத்தம் 360 நாள் என்று இருக்கிறதோல்லியோ? இந்த 360 நாளுங்கூட குணடலிநீ சக்தியின் ஜ்யோதிஸிலிருந்து வெளிப்படும் 360 கிரணங்கள்தான் என்றும், ஆறு சக்ரங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு ரிதுவாக அந்த ரிதுவுக்கு எத்தனை நாளோ அத்தனை கிரணங்கள் பிரகாசிக்கின்றன என்றும் அந்த ச்லோகத்தில் சொல்லியிருக்கிறார். “க்ஷிதௌ ஷ்ட்பஞ்சாசத்” என்றால் ப்ருத்வீ தத்வத்தில், அதாவது மூலாதாரத்தில், 56 கிரணங்கள் என்று அர்த்தம். அதாவது அங்கே 56 நாள் கொண்ட வஸந்த ரிதுவாக அம்பாள் இருக்கிறாள். இப்படியே ஒவ்வொரு சக்ரத்திற்கும் கணக்கு சொல்கிறார்.

இப்படித் தன்னை ஒவ்வொரு ரிதுவாகக் காலத்திற்குள் குறுக்கிக் கொண்டு, சுருக்கிக் கொண்டிருக்கும்போது அம்பாள் கால ஸ்வரூபமாயிருக்கிறாள். ஆனால் வாஸ்தவத்தில் அவள் காலாதீதமானவள் [காலத்திற்கு அப்பாற்பட்டவள்]. அந்தக் காலாதீத நிலையில் ஆறு சக்ரத்திற்கும் மேலே ஸஹஸ்ர தள பத்மத்தில் அவளுடைய சரணாரவிந்தங்கள் குருபாதமாக விளங்குகின்றன. இதை “மயூகாஸ்-தேஷாம் அப்யுபரி தவ பாதாம்புஜ யுகம்” என்று சொல்ல்யிருக்கிறார். ‘மயூகம்’ என்றால் கிரணம்; கிரண வடிவான நாள். இப்படியுள்ள 360-க்கும் மேலே – ”தேஷாம் அபி உபரி”: அவற்றுக்கும் மேலே – அதாவது ஸஹஸ்ரார பத்மத்தில், ‘தவ பாதாம்புஜ யுகம்‘: உன்னுடைய இரு தாமரைப் பாதங்கள்; இணையடித் தாமைரைகள். அம்பாளைப் பார்த்துச் சொல்வதால் ”உன்னுடைய” என்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is உவமிக்கவொண்ணாத உருவழகு; காண்பதற்கொண்ணாத காட்சி!
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  வாக்குவன்மை அருள்வது; சாக்தத்தில் சப்தத்தின் விசேஷம்
Next