சிவ, சக்திகளாக இன்றி சிவசக்தி ஒன்றாகவே : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

காமேச்வரி என்றால் காமேச்வரனையும் கூடக் காட்டி, அவனுடைய இடது மடியிலே அம்பாள் இருப்பது போல வர்ணனை இருந்தால்தான் முழுக்க ஸரி. ஆனால் சில்ப, சித்ரங்களில் அப்படிப் பண்ணுவது ரொம்பவும் அபூர்வமே! ஸ்தூலமாக அந்த மாதிரிப் பண்ணிக் கண்ணால் பார்த்தால் அம்பாளுக்கு முழு முக்யத்வமில்லாமல் பாதி ஸ்வாமிக்குப் போய்விட்டாற்போலத் தோன்றுவது காரணமாயிருக்கலாம். காஞ்சீபுரத்திலேயே அம்பாள் தான் மட்டுந்தானே தனியாயிருக்கிறாள்? அதற்கு வேறே காரணமுமுண்டு என்றாலும்1 காமேச்வரன் என்று ஒருத்தனை நடு நாயகமாக உட்கார்த்தி வைத்து அவனுக்கு வாமாங்கத்தில் அம்பாள் என்றால் அவளுடைய இம்பார்டன்ஸ் தெரியாமல்தான் போகும். அதனால்தான் பொதுவாக ரவிவர்மாவின் ராஜராஜேச்வரி உள்பட, லலிதாம்பாள் பிம்பம் என்றால் அவளை மட்டும் காட்டுவதாகவே இருக்கிறது. ஒரு ‘சேஞ்சு’க்குக் காமேச்வர ஸஹிதையான காமேச்வரியாக யாராவது போட்டுப் பார்க்கமாட்டோமா என்றுகூட இருக்கிறது2!  இரண்டு பேர் நெருக்கியடித்துக் கொண்டு ஒரே மாதிரியான நான்கு ஆயுதங்களைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும்போது இரண்டு தநுஸ், இரண்டு பாணம் என்றெல்லாம் பார்க்கிறவர்கள் குழம்பாதபடி சில்பம் பண்ணுவது, சித்ரம் போடுவது கஷ்டந்தான். அந்தக் கஷ்டத்தை சமாளித்து அழகாகப் பண்ணிக் காட்டுவதில்தான் கலைஞன் என்கிறவனின் ஸாமர்த்யம் இருக்கிறது!

‘காமேச்வரி’ என்ற பெயரைச் சொன்னால் உடனே காமேச்வரன் நினைப்பும் வந்துவிடுகிறது! ஒருத்தியாகக் காட்டிவிட்டு அந்த பேரைச் சொன்னால் ஸரியாயில்லை என்பதால்தானோ என்னவோ காமாக்ஷி, ராஜராஜேச்வரி, லலிதாம்பா, த்ரிபுரஸுந்தரி, வடிவுடையம்மன் என்றே பெயர்களும் சொல்வதாயிருக்கிறது! ரொம்ப நுணுக்கமாக மந்த்ர சாஸ்த்ரத்தைப் பார்த்தால் ராஜராஜேச்வரிக்கு தநுர்-பாண-பாச-அங்குசங்களோடு, இன்னும் நாலு கைகளில் புஸ்தகம்-அக்ஷரமாலை-வரம்-அபயம் ஆகியவையும் உண்டு. அதோடு மார்[பு] மேலே வீணையைச் சார்த்திப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். லலிதா த்ரிபுரஸுந்தரி இரண்டு காலையும் மடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதாகவும், ராஜராஜேச்வரி வலது காலை மடித்து இடது காலைத் தொங்கப்போட்டுக் கொண்டிருப்பதாகவும் பாவிக்கிறது ஸம்பிரதாயம். காமேச்வரனுடைய வாமாங்கத்தில் காமேச்வரியாக உள்ளபோது [தநுர்-பாண-பாச-அங்குசங்களை தரித்த] நாலே கை, ஆனால் இதே போல வலது காலை மடித்து, இடதைத் தொங்கப் போட்டு உட்கார்ந்திருப்பதாக பாவிக்கிறது. ஸ்வாமி வலது காலைத் தொங்கப் போட்டுக்கொண்டு இடதை மடித்துக் கொண்டிருப்பார். மடித்துக் கொண்ட மடியில் — இரண்டு ‘மடி!’ — அந்த மடியில்தான் அம்பாள் உட்கார்ந்திருப்பது.

த்யான ச்லோகம் என்று பார்த்தால் லலிதா [மஹா] த்ரிபுரஸுந்தரி, ராஜராஜேச்வரி இரண்டு பேரையுமே பதியின் வாமாங்கத்தில் [இருப்பதாகச்] சொல்லாமல், தனி மூர்த்தியாகத்தான் சொல்லியிருக்கிறது. மந்த்ரத்தின் அதி தேவதை என்று வைத்து நிறைய நாழி த்யானம், ஜபம் என்று மனஸை ஒருமுகப்படுத்த வேண்டியபோது இரட்டை மூர்த்தியாகச் சொல்வதே ‘இரண்டுமுக’ப் படுத்துகிறதாகத்தானே ஆகும்?

அம்பாளை மாத்திரம் ஏகமூர்த்தியாகச் சொல்வதற்கு ஸெளந்தர்ய லஹரியிலேயே ஆசார்யாள் யுக்தியாக நியாயங்காட்டி ஒரு ச்லோகம் [23] கொடுத்திருக்கிறார். ஒரே மூர்த்தியான அர்த்த நாரீச்வர ரூபத்தில் பதியின் இடது பக்கத்தைத் திருடிக் கொண்டது மட்டும் அம்பாளுக்குத் திருப்தி தரவில்லையாம். அதனால் அவருடைய வலது பக்கத்தையும் அவளே கவர்ந்து கொண்டு விடுகிறாளாம். அதனால்தான் ஏக மூர்த்தியாகத் தன்னுடையதான அருணச் சிவப்பு நிறமாகவே இருந்து கொண்டு, ஆனால் ஈச்வர லக்ஷணமாக நினைக்கப்படும் லலாட நேத்ரம் [நெற்றிக்கண்], சந்த்ரகலை ஆகியவற்றையும் தரித்துக்கொண்டு காட்சி கொடுக்கிறாளாம்!

அம்பாளுடைய உபாஸனா மார்க்கங்களில் ஒன்றில் (உத்தர கௌலம் என்பது), ‘ஈச்வரனுக்குத்தான் ஸ்வதாவாக [ஸ்வயமாக] ரூபம் கிடையாதே! கார்யமும் கிடையாதே! அவை அம்பாள் கொடுத்துத்தானே அவனுக்கு ஏற்பட்டவை? ஆகையால் அவளுக்கு வேறாக அவன் என்று பூஜை பண்ண ரூபம் ஏது? பூஜையை ஏற்றுக்கொண்டு அநுக்ரஹம் என்ற கார்யம் பண்ணவுந்தான் ஆஸாமிக்கு சக்தி ஏது? அதனால் அவனைச் சேர்க்கவே வேண்டாம். ரூபமும் கார்யமும் இருக்கிற அவளுக்கு மட்டுமே பூஜை பண்ணலாம்’ என்று வைத்திருக்கிறது.

இப்படிப் பலவித அபிப்ராயங்கள் இருப்பதை அநுஸரித்தே த்யான ச்லோகத்தின் ஸ்தானத்தில் ஆசார்யாள் ஒன்று பண்ணும்போது அம்பாளை மாத்திரம் (காமேச்வர ஸஹிதையாக இல்லாமல்) வர்ணித்துப் பண்ணியிருக்கிறார்.

சிவ-சக்தி என்று இரண்டு மூர்த்தியாகத்தான் ஸ்தோத்ரத்தை ஆரம்பித்தார். ஆனாலும் சிவனின் சக்தியாக இருக்கப்பட்ட ஒரு மூர்த்தியை ஸ்துதிப்பதுதான் லக்ஷ்யம். ஆகையால், அம்மா, அப்பா என்று ஜோடியாகச் சொல்லி ஆரம்பிக்கணும், அவளுடைய ஸெளமாங்கல்யம் தெரியும்படி பதியைச் சொல்லி ஆரம்பிக்கணும், அவளுடைய பாதிவ்ரத்யம் தெரியும்படி பதியை முதலில் சொல்லி அப்புறம் அவளைச் சொல்லணும் என்றெல்லாம் நினைத்து முதல் ச்லோகம் செய்தாலும், அப்புறம் ‘இம்பார்டன்’ஸை அவர் ‘ஷேர்’ பண்ணிக் கொள்ள விடப்படாது என்று அவளை மாத்திரம் வர்ணித்து ச்லோகம் கொடுத்திருக்கிறார் — சிவ, சக்தி என்ற இரண்டு பேராயில்லாமல், சிவசக்தியான ஒருவரை மட்டும் சொல்லி. [அந்த ச்லோகமே அடுத்து வருவது.]


1 மன்மதனுக்கு சிவபெருமானின் மீது வெற்றியீட்டித்தருவதற்காகவே அம்பிகை செய்த லீலையில் இதுவும் ஓர் அங்கம். முந்தைய அடிக்குறிப்பில் கூறப்படும் உரையிலும் நூலிலும் விவரம் காணலாம்.

2 நமது நூலின் பின்னட்டை சித்திரம் இவ்விருப்பத்தை கருத்திற்கொண்டே வரையப்பட்டது. இதே வகையான ஒரு முற்காலச் சித்திரமும் அச்சிட்ட படமாகவே உள்ளதெனினும் அது ஸ்ரீசரணர்களின் கவனதிற்கோ நினைவுக்கோ வரவில்லை எனத் தோன்றுகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is சிவனைக் காமன் வென்றதைச் சொல்லாதது
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ஸ்வரூப வர்ணனை
Next