அடிப்பொடி கொண்டே அகிலாண்ட வியாபாரம் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரணபங்கேருஹபவம்

விரிஞ்சி: ஸம்சிந்வந் விரசயதி லோகாந்-அவிகலம் |

வஹத்யேநம் சௌரி: கதமபி ஸஹஸ்ரேண சிரஸாம்

ஹர: ஸம்க்ஷுத்யைநம் பஜதி பஸிதோத்தூளந விதிம் | |

[ (தவ) உனது (சரண பங்கேருஹ பவம்) பாத தாமரையில் உண்டான (தநீயாம்ஸம்) மிக நுண்ணியதான (பாம்ஸும்) தூளியை (விரிஞ்சி:) பிரம்மன் (ஸஞ்சின்வன்) ஸம்பாதித்து [அதைக் கொண்டே] (லோகான்) எல்லா உலகுகளையும் (அவிகலம்) முழுமையாக (விரசயதி) நிர்மாணிக்கிறார். (ஏனம்) இதனை [பாததுளியை, அதாவது அதைக் கொண்டு படைக்கப்பட்ட உலகுகளை] (சௌரி:) மஹாவிஷ்ணு (கதமபி) எவ்வாறோ (ஸஹஸ்ரேண சிரஸாம்) ஆயிரம் தலைகளால் (வஹதி) தாங்குகிறார். (ஏனம்) இதனை (ஹர:) ருத்திரன் (ஸம்க்ஷுத்ய) நன்கு பொடியாக்கி (பஸித உத்தூளன விதிம்) திருநீறு பூசிக்கொள்ளும் முறையை (பஜதி) அநுஷ்டிக்கிறார்.]

இது இரண்டாவது ச்லோகம். முதல் ச்லோகத்தில் ”ஹரி-ஹர-விரிஞ்சாதிபிரபி ஆராத்யாம்” என்று சொன்னதையே இங்கே விஸ்தரித்து, த்ரிமூர்த்திகளும் அம்பாளுடைய க்ருபா லேசத்தால் (அருள் திவலையால்) தான் தங்களுடைய ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற பெரிய கார்யங்களைச் செய்கிறார்கள் என்கிறார்.

அம்பாளுடைய ஒரு பாத துளியைக் கொண்டே ப்ரம்மா இத்தனை லோகங்களையும் படைக்கிறாராம்! ‘பாம்ஸு’ என்றால் பாத தூளி. அந்தப் பாத தூளியிலேயுங் கூட ரொம்பவும் பொடியூண்டு தூளி என்பதாகத் ‘தநீயாம்ஸம்’ என்று போட்டிருக்கிறார். பரப்ரஹமத்தின் பூர்ண சக்தி ஒரு ரூபம் எடுத்துக் கொள்ளும்போது அதன் பாதத்தின் பொடியத்தனை தூளியே பதிநான்கு லோக ஸ்ருஷ்டிக்கும் தேவையான மூலப் பதார்த்தத்தைக் கொடுத்து விடுகிறது! இது ஸ்ருஷ்டி ஸமாசாரம்.

அப்புறம் பரிபாலனம். அனந்த பத்மநாபன் என்று சொல்லப்படும் விஷ்ணுவின் ஒரு ரூபமேதான் அவர் சயனித்துக் கொண்டிருக்கும் அனந்தனும் – [அதாவது] ஆதிசேஷனும். அவன் ஆயிரம் தலைமேல் தாங்கிக் கொண்டு பரிபாலிக்கிறானே, இந்த லோகம், இது அம்பாளுடைய அந்த ஒரு அங்க்ரிரேணு [அடிப்பொடி] தான்! விஷ்ணுவுக்கு இங்கே ‘சௌரி’ என்று பேர் சொல்லியிருக்கிறார். திருக்கண்ணபுரத்தில் சௌரிராஜப் பெருமாள் என்று ஸ்வாமிக்குப் பெயர். யதுவம்சத்தில் சூரன் என்கிறவனின் பிள்ளைவழிப் பேரனாகப் பிறந்ததால் கிருஷ்ண பரமாத்மாவுக்கு சௌரி என்று பேர். பலராமனுக்கும் அதே பேர் கொடுக்க நியாயமுண்டு. இவருக்கும் அவர் அண்ணாவானதால் அதுவே அதிக நியாயங்கூட! அவரை தசாவதாரத்தில் ஒன்றாகவும் சொல்கிறோம். சேஷாவதாரம் என்று சொல்கிறோம். அதனால் மஹாவிஷ்ணுவையே சேஷனாகச் சொல்லி, அவர் ஆயிரம் தலையாலும் லோகங்களைத் தாங்குவதாகச் சொல்வதும் தப்பில்லை தானே? புருஷோத்தமனான பகவானை பற்றிப் புருஷஸூக்தம் ஆரம்பிக்கிறபோதே ஸஹஸ்ர சிரஸுக்காரன் என்றுதான் சொல்கிறது!

தலையினால் தாங்குகிறார் என்றால் லோகங்கள் உருண்டு போகாமல் ஸ்திரப்படுத்தித் தூக்குகிறார் என்பது நேர் அர்த்தம். உள்ளர்த்தம் பரிபாலிக்கிறார் என்பதே. ”கதமபி”- ”எப்படியோ”- இந்தக் கார்யத்தை அவர் பண்ணுகிறார் என்று [ஆசார்யாள்] சொல்கிறார். கஷ்டமான ஸாதனைதான்; ஆனாலும் ‘எப்படியோ’ (கதமபி) அதை ஸாதிக்கிறார் என்று தாத்பர்யம். பாததூளியைக் கொண்டு ப்ரம்மா ஸ்ருஷ்டிக் கார்யம் பண்ணுவதற்குக் ‘கதமபி’ போடவில்லை; அப்புறம் ருத்ரன் ஸம்ஹாரம் பண்ணுவதைச் சொல்லும்போதும் போடவில்லை. இங்கே மட்டும் போட்டிருக்கிறார். ஏனென்றால் ஸ்ருஷ்டி என்பது கொஞ்ச நாழி பண்ணி முடிந்து போகிற கார்யம். ஸம்ஹாரமோ அதைவிடக் குறைச்சல் நாழியே பிடிப்பது! ஒன்றை உண்டாக்குவதைவிட அழிப்பது ஸுலபந்தானே? ஆனால் ஜகத்பரிபாலனம் என்பதுதான் ரொம்ப நீண்ட காலம் — யுகங்கள், கல்பங்கள் — பண்ண வேண்டியதாயிருக்கிறது. இத்தனை நீண்ட காலம் விஷ்ணு ஜகத்தைத் தாங்குகிறாரே என்பதால்தான் இங்கே மாத்திரம் ‘கதமபி’ போட்டிருக்கிறார்.

பெரியவர்களுடைய பாத தூளியை சிரஸில் வஹிப்பதே முறை, அதுவே பெரிய பாக்யம். பதிநாலு லோகமாகவும் ஆகியுள்ள அம்பாளுடைய பாத தூளியை மஹாவிஷ்ணு சிரஸில் வஹிக்கிறார்.

இவர் சிரஸில் வஹிக்கிறாரென்றால் ஈச்வரனோ ஸர்வாங்கத்திலும் பஸ்மோத்தூளனமாகப் பூசிக் கொண்டிருக்கிறார். ”முழு நீறு பூசிய முனிவர்” என்று பெரிய புராணம் சொல்லும் தொகையடியார்களில் ஈச்வரவனையும் சேர்த்து விடலாம்போலிருக்கிறது! பாத தூளி சதுர்தச லோகங்களாகவும் ஆயிற்றல்லவா? ஸம்ஹார காலத்தில் அதவ்வளவையும் ஈச்வரன் பொடிப் பொடியாக பஸ்மம் பண்ணி, ”இதற்கு மூலம் அம்பாளின் பாததூளியானதால் இதுவே அதுதான்” என்ற எண்ணத்தில் அதை சரீரம் பூராவும் பூசிக்கொள்கிறாராம்!

செக்கச் சிவந்த அம்பாளுடைய பாதத்தின் தூளி ஸ்வபாவத்தில் சிவப்பாகத்தானிருக்கும். வேதமாதா அம்பாளின் பாதத்தில் தலை வைத்து நமஸ்காரம் பண்ணும்போது அந்தச் சிவப்புப் பொடி அவள் வகுட்டிலே குங்குமமாக ஒட்டிக்கொள்கிறது என்று ஸஹஸ்ரநாமத்தில் வருகிறது: ச்ருதி ஸீமந்த ஸிந்தூரீ க்ருத பாதாப்ஜ தூளிகா. அந்தக் குங்குமப் பொடிகளில் ஒன்று அப்புறம் ப்ரளயாக்னியில் பஸ்ம விபூதியாக உருமாறியிருக்கிறது! ஸ்வாமி பிரஸாதமாக விபூதி, அம்பாள் பிரஸாதமாகக் குங்குமம் கொடுப்பது வழக்கம். இங்கே அம்பாள் குங்குமமே ஸ்வாமிக்கு விபூதியாகியிருக்கிறது!

திரிமூர்த்திகளும் அவளை ஆராதிக்கிறார்கள் என்று மேல் ச்லோகத்தில் சொல்லிவிட்டு இங்கே அவர்களுடைய [த்ரிமூர்த்திகளுடைய] க்ருத்யங்களைச் சொல்லியிருப்பதால், அந்த ஆராதனா பலனாகப் பெற்ற அவளுடைய அநுக்ரஹ பலத்தின் மேல்தான் அவர்கள் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது என்ற உண்மை தொக்கி நிற்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is முதல் ச்லோகத்தின் பாடம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  பாதத்தில் தொடங்கலாமா?
Next