பொதுச்சபையில் விளக்கும் முறை : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

இந்த விஷயங்களை பொது ஸபையில் உபந்நியாஸங்கள் பண்ணும்போது விஸ்தாரம் செய்யாமல், கோடி காட்டி, விடுவதே முறை.

புஸ்தகமாகப் போடும் போதும் ரஹஸ்யமான விஷயங்களைச் சேர்க்காமல் பாபுலர் எடிஷனாக ஒன்றும்; அந்த விஷயங்களையும் விளக்கி லிமிடெட் ஸர்க்குலேஷனாக உபாஸகர்கள், உபாஸனை மேற்கொண்டிருப்பவர்கள் ஆகியவர்களுக்கு மட்டுமே இன்னொரு எடிஷனுமாகப் போடலாம். இந்த [பின்னால் கூறிய] புஸ்தகக் காப்பி, தக்க பெரியவர்களிடமிருந்து ‘ஆதரைஸேஷன்’ பெற்று வந்தவர்களுக்கே தருவது என்று வைத்துக் கொள்ளலாம்.

டெமாக்ரஸி! ஸகல ஸமாசாரமும் நாற்சந்திக்கு வந்தாக வேண்டுமென்ற அபிப்ராயம் பரவிக்கொண்டு வரும்போது நான் நினைப்பது வேர் பிடிக்குமா என்று தோன்றாமலில்லை. ஆனாலும் குரு பட்டம் கட்டி வைத்திருப்பதால் என் ‘ட்யூடி’, சொல்ல வேண்டியதைச் சொன்னேன். விதையைத் தூவ முடிவதால் தூவியிருக்கிறேன். அது வேர் பிடிக்கப் பண்ணுவது என் கையில் இல்லை.

உபாஸகர்களாக ஆகணுமென்று ஸின்ஸியராக நினைக்கிறவர்களுக்குத்தான் சாஸ்த்ர ரஹஸ்யங்களைச் சொல்ல வேண்டுமென்பது போலவே, கவி மரபில் வரும் சில ரூப வர்ணனைகள், நாயக நாயகி சிருங்காரத்தில் சில ஸமாசாரங்கள் ஆகியவற்றை ‘இலக்கியக் கண்ணோட்டம்’ என்றும் ‘ஸஹ்ருதயத்வம்’ என்றும் சொல்லும் ரஸிக த்ருஷ்டி படைத்தவர்களுக்கு மட்டுந்தான் சொல்லவேண்டும். பொத்தம் பொதுவான கூட்டத்தில் சொல்லப்படாது.

ஆனாலும் ‘ஸெளந்தர்ய லஹரி’ போன்ற ஒரு ஸ்தோத்ரத்தில் சாஸ்த்ரார்த்தங்களை அடியோடு, அறவே, விட்டுவிட்டு அர்த்தம் சொல்வது; ஸதி பதி உறவுகளில் கவி மரபை அறவே விட்டு [சிரித்து] ரொம்ப ‘மடி’ பண்ணித் தான் சொல்வது என்று வைத்துக்கொண்டால் ஆழமான தத்வார்த்தங்கள் அநேகம் விட்டே போய்விடும்; அநேக அழகான கவிதா கல்பனைகளும் விட்டுப்போய்விடும். அதனால் ஜாக்ரதையாக, ரொம்பவும் ஜாக்ரதையாக, ஒரு அளவுக்கு, ஒரு அளவுக்குத்தான் இம்மாதிரி விஷயங்களையும் தெரிவிக்க வேண்டியதாகிறது. ‘மேல் நோக்காகப் பார்க்கும்போது இதில் ரொம்பவும் ச்ருங்காரமாக, அல்லது பீபத்ஸமாக [அருவருப்பாக], விகல்பமாகத் தெரிவது ஆழ்ந்து பார்த்தால் அப்படியில்லை’ என்று எங்கே பளிச்சென்று புரியவைக்க முடியுமோ — ரொம்பவும் ஸமய சாஸ்திரச் சிக்கலிலோ, அலங்கார சாஸ்திரச் சிக்கலிலோ போகாமலே புரியவைக்க முடியுமோ — அப்படிப்பட்ட இடங்களில் தத்வார்த்தம், காவிய மரபு இவற்றை எடுத்துச் சொல்லி விளக்கலாம். குண்டலிநீ யோக ஸமாசாரங்களைச் சொல்லும் ச்லோகங்களிலும் அந்த ரஹஸ்யங்களைச் சொல்லாமல் பக்தி உணர்ச்சி உண்டாகக்கூடியதாக, அழகான வர்ணனையாக உள்ள விஷயங்களை மட்டும் எடுத்துக் காட்டலாம்.

ஸெளந்தர்யலஹரிக்கு அர்த்தம் சொல்லும்போது அதன் தேவதையான அம்பாள் பஞ்ச ப்ரஹ்மாஸனத்தில் வீற்றிருக்கிறாள் என்பது போன்ற அடிப்படை விஷயங்களைக்கூடச் சொல்லாமலிருக்க முடியுமா? கேட்பவர்கள் ‘ஐந்து பேரை ஆஸனமாகப் போட்டுக் கொண்டு உட்காரவாவது? அதோடு பஞ்ச ப்ரேதம் என்று வேறு அவர்களைச் சொல்லியிருக்கிறதே!’ என்று நினைப்பார்கள் என்பதற்காக விஷயத்தை விட்டேவிடலாமா? அந்த இடத்தில், ‘இதில் அநுசிதமில்லை, பீபத்ஸமில்லை; இதற்கு இப்படியிப்படி தத்வார்த்தம்’ என்று எடுத்துச் சொல்லவேண்டும்1.

அம்பாள் பாத மஹிமையை [ஆசார்யாள்] அழகாகச் சொல்கிறார். அங்கே, ‘அந்தப் பாத தீர்த்தம் எப்படிப் பட்டது தெரியுமா? ஸாக்ஷாத் ஈச்வரனுடைய சிரஸிலுள்ள கங்கையாக்கும் அப்படி இருக்கிறது!’ என்கிறார்2. அவள் பாதத்தை நம் சிரஸில் தியானித்து, அப்போது அதிலிருந்து கங்கை நமக்குள்ளே பெருகி நம்முடைய மாசு மலங்களையெல்லாம் அடித்துக்கொண்டு போவதாக பாவித்து நாம் சுத்தி பெறுவதற்கு வழியாக இப்படி அழகாகச் சொல்லியிருக்கிறார். இதிலேயே நாயக-நாயகி ஊடல் விஷயமான கவி மரபும் வரத்தான் செய்கிறது. நாயகரான ஸ்வாமி நாயகியான அம்பாளின் ஊடலை ஸமாதானப்படுத்துவதற்காக அவள் காலில் விழுவதால்தான் அவர் சிரஸிலுள்ள கங்கை அவளுடைய பாத தீர்த்தமாகிறது என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்! இதைச் சொல்லாமல் கங்காம்ருதமாக அவளுடைய சரணாம்ருதம் நமக்குள்ளே குளு குளு என்று பய்ந்து நம் சித்த அழுக்குகளை நீக்கும் என்பதை மட்டும் எப்படிச் சொல்லமுடியும்? அதனால் இதையும் சொல்லத்தான் வேண்டிவரும். ஆனால் அப்படிச் சொல்லும் போது அபக்குவிகள் அனர்த்தங்கள் பண்ணிக் கொள்ளவிடாமல் நல்ல தினுஸில் விளக்கம் தர வேண்டும். ”நம் மாதிரியானவர்கள்கூட ‘இவரா இப்படிப் பண்ணுவது? என்று சொல்லும் லெவலுக்கு ஆனானப்பட்ட ஈச்வரனே போய்விடுகிறார் என்பதிலிருந்து ஆசை வேகம் எத்தனை பொல்லாதது, அதனிடம் நாம் எத்தனை ஜாக்ரதையாயிருக்க வேண்டும் என்று பாடம் பெறவேண்டுமென்பதுதான் தார்பர்யம்’ என்ற மாதிரி விளக்கத்தை வளைத்துக் கொண்டு போகவேண்டும்!

மூன்று பேருக்கு ஜாஸ்தி free licence கொடுத்திருக்கிறது. யார் யார் என்றால் பக்தர், கவி, விதூஷகன் என்பவர்கள். ஒரு விதூஷகன் ராஜா-ராணியையே அவர்களுக்கு முன்னாடியே நட்ட நடு ஸதஸில் என்ன வேண்டுமானாலும் பரிஹாஸம் பண்ணலாம். பக்தரும் கவியும் ஸ்வாமியிடமே ஸர்வ ஸ்வாதீனம் எடுத்துக் கொள்வார்கள். பக்த கவியாக இருப்பவர்கள் — ஆசார்யாள் இங்கே அப்படித்தான் இருக்கிறார் — பக்தி பாவத்துக்கும், காவ்ய த்ருஷ்டிக்கும் தொன்றுதொட்டு ஒரு நாகரிக ஸமுதாயத்திலேயே கொடுத்துள்ள ஸ்வாதந்திரியத்தினால் நாம் சொல்லக்கூடாத சிலவற்றை, சொல்லத் தயங்கும் சிலவற்றைக்கூடச் சொல்வார்கள். பணிவோடு மனஸு திறந்த ராஸிக்யத்தோடு பார்த்தால் நாமுங்கூட ஸரியாக எடுத்துக்கொண்டு ஸந்தோஷப்படும் விதத்தில் சொல்வார்கள். நிந்தா ஸ்துதி செய்வது பரிஹாஸம் செய்வது, [தெய்வ] தம்பதியில் ஒருத்தரைத் தூக்கி வைத்து மற்றவரை இறக்குவது, இரண்டு பேருக்கும் நடுவே கோழி மூட்டுவது என்றெல்லாம் அவர்கள் பண்ணுவதை நாம் தப்பாக நினைக்கக்கூடாது. நம்மால் அதை ரஸிக்க முடியாவிட்டாலுங்கூட அவர்களுக்கு அது தப்பில்லை என்றாவது ஒப்புக்கொள்ள வேண்டும்.

இத்தனை ஏன் சொல்கிறேனென்றால் ‘ஸெளந்தர்ய லஹரி’ ஆரம்பிக்கிறபோதே ச்லோக கர்த்தாவோடு ஸஹ்ருதய பாவம் இல்லாதவர்களுக்கு ‘என்னவோ போல’ இருக்கலாம்.

[‘ஸஹ்ருதயத்வம்’ என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேறு பதமுண்டா என்று சிலரை வினவுகிறார்கள். ‘Rapport’ என்று ஒருவர் சொல்ல, ‘அது நல்ல வார்த்தை தான். என்றாலும் எல்லோருக்கும் அர்த்தமாகாது’ என்கிறார்கள். ‘மன இணக்கம்’ என்று ஒருவர் சொல்ல மகிழ்ச்சியடைந்து, ‘மனோபாவ இணக்கம் என்று சொல்வது இன்னும் சிலாக்கியம்’ என்கிறார்கள்.]

”சிவன் பதி, அம்பாள் பத்னி. அவளுடைய சக்தியால் தான் அவர் அசைகிறார் என்று முதல் ச்லோகம் சொல்கிறது. இப்படிச் சொன்னால் பெண்டாட்டிதான் புருஷனை ஆட்டி வைக்கிறாள் என்றாகிறது. ஸாக்ஷாத் ஸ்வாமி பெண்டாட்டி ஆட்டி வைக்கிறபடி ஆடுகிறார், அவள் ஸம்பந்தமில்லாவிட்டால் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. அசையக்கூட முடியாது. ‘யூஸ்லெஸ்’ என்கிற லெவலுக்கு போய் விடுகிறார் என்றாகிறது. இது ஸரியாயில்லையே! ஆரம்பிக்கும் போதே அம்பாள் மஹிமையைச் சொல்லணும் என்பதற்காக ஸ்வாமியை இப்படியா ஒரேயடியாக குறைக்க வேண்டும்?” என்று மனோபாவ இணக்கம் இல்லாதவர்கள் நினைக்கக்கூடும். அப்படி விகல்பமாக நினைக்கக்கூடாது என்பதற்குத்தான் தத்வார்த்தம், கவி மரபு ஆகியவற்றைப் பற்றி இவ்வளவு சொன்னேன்.

இதில் தத்வார்த்தம், கார்யமில்லாத ப்ரஹ்மம் சித்சக்தி விலாஸத்தால்தான் கார்யத்தில் அசைகிறது என்பது. தன்னை நான் என்று அது தெரிந்து கொள்வதே கார்யந்தான் என்றும் சொன்னேன். கவிதை என்ற அடிப்படையிலும் நாயகிக்கு அடங்கியவனாகவே நாயகனைச் சொல்வது மரபானதால் அவள் அசைத்தாலே இவன் அசைகிறான் என்று சொல்வது அங்கீகரிக்கத்தக்கதாகிறது.

இப்படி இரண்டு அடிப்படையிலும் விளக்கம் தருவதோடு நவீன ஸயன்ஸ் கொள்கைப்படியும் சிவ-சக்தி தத்வங்களைச் சொன்னால் மேலும் ‘கன்வின்ஸிங்’காக இருக்கும்.


1 இவ்வுரையில் ‘பஞ்சக்ருத்யமும் காமேச்வரி-காமேச்வரர்களும்‘ என்ற முற்பிரிவில் இத்தத்வார்த்தம் விளக்கப்பட்டுவிட்டது.

2 ச்லோகம் 84.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is குண்டலிநீ யோகம்:அதி ஜாக்கிரதை தேவை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  சாக்த தத்வத்திற்கு ஸயன்ஸின் சான்று
Next