உடன் செய்ய வேண்டியது : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

முதலில் பண்ணவேண்டியது கர்மாநுஷ்டானம்; சாஸ்திரத்தில் சொல்லியுள்ள ஆசார விதிகள் வழுவாமல் செய்கிற கர்மாநுஷ்டானம். இப்போதெல்லாம் ‘அத்வைதா’ என்றாலே உடனே கர்மாநுஷ்டானத்தை விட்டுவிட வேண்டும், ஆசாரங்களையெல்லாம் விட்டுவிட வேண்டும் என்பதுதான் அபிப்ராயமாயிருக்கிறது! அநாசாரமாயிருப்பதற்கு ‘ஃப்ரீ லைஸன்ஸ்’ தான் ‘அத்வைதா’ என்று ஆக்கிக் கொண்டு, ‘இதிலேயெல்லாம் என்ன இருக்கு?’ என்று என் மாதிரி ‘கட்டுப்பெட்டி’களுக்கு உபதேசிப்பதாயிருக்கிறது! அத்வைத அநுபவம் – ஜீவ-ப்ரம்ம அபேத அநுபவம் -லவலேசங்கூட வாய்க்காமலே, வாய்க்க எந்த முயற்சியும் பண்ணாமலே, ‘ஆத்மாவுக்கு ஏது கர்மா? ஏது ஆசாரக் கட்டுப்பாடு? வர்ணாச்ரம வித்யாஸமெல்லாம் பார்த்தால் அத்வைதத்திற்கு அடியோடு விரோதமில்லையா?’ என்று சவுடால் பண்ணுவது நிறைய வழக்கத்திற்கு வந்திருக்கிறது! அதாவது, தாங்கள் சாஸ்திரத்தையெல்லாம் விட்டுவிட்டு இஷ்டப்படி இருப்பதற்காகவே ‘அத்வைதா’வை சந்திக்கு இழுப்பதாகத்தான் இருக்கிறது. இந்த பாபத்துக்கு நாமும் ஆளாவானேன் என்றுதான் நான் [அத்வைத விஷயமாக உபந்நியாஸம் சொல்வதில்லையென்று] வாயை மூடிக் கொண்டிருந்தேன். இன்றைக்கு என்னமோ பேச வைத்து விட்டது. தப்பானால் ………. இவ்வளவு பேசிவிட்டுக் கடைசியில் வருத்தமாக, guilty-யாக முடிக்க வேண்டாம். முடிவான லக்ஷ்யமான அத்வைதத்தைப் பற்றி எல்லாருக்குமே ஒரு அவுட்லைன் தெரியத்தான் வேண்டும் என்பதே ஆசார்யாளின் அபிப்ராயமாதலால் அவர் அநுக்ரஹத்தில்தான் ஏதோ எனக்குத் தெரிந்த மட்டும் சொன்னதாக நினைத்து த்ருப்தி அடையப் பார்க்கிறேன்.

இப்போது உடனே ஸீரியஸாக மேற்கொள்ள வேண்டிய ஸமாசாரம் என்று இதை [அத்வைத ஸாதனையை] யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம். அடி மனஸில் ஜீவனும் ப்ரம்மமும் ஒன்றுதான் என்பதை நன்றாகப் பிடித்துப் போட்டுக் கொள்ளுங்கள். அது தன்னால் வேலை செய்யும். நீங்கள் ‘தெரிந்து’ செய்ய வேண்டியது, சாஸ்திரோக்தமாகக் கர்மாக்களை அநுஷ்டிப்பதுதான்.

அநுபூதிமான்கள்0 வளர்த்துக் கொடுத்து ஸம்ப்ரதாயமாக வந்துள்ள அத்வைத சாஸ்திரத்தில், முதலில் வைதிக கர்மாநுஷ்டானத்தைச் சொல்லி அதில் ஸித்தி கண்ட பிறகுதான் ஸீரியஸாக அத்வைத ஸாதனைக்கு போகச் சொல்லியிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் அடிப்படையாக நாம் நல்லவர்களாக இருப்பதற்கு முயற்சி ஆரம்பிக்க வேண்டும். நாம் ‘ஏகம் ஸத்’தாகிறது இருக்கட்டும். பெத்தப் பேரில் அந்த ஸத்தாகிறதற்கு ஸாதனை ஆரம்பிக்கிறோமாக்கும் என்று இதை விட்டுவிடக்கூடாது! ‘ஸத்’ என்பதற்கு மெய்ப் பொருளான ப்ரம்மம் என்பதோடு நல்லது (நல்லகுணம்) என்றும் அர்த்தமுண்டு என்று கிருஷ்ண பரமாத்மாவே எடுத்துக் காட்டியிருக்கிறார்; ‘ஸத்பாவே ஸாது பாவே ச ஸதித்யேதத் ப்ரயுஜ்யதே’1. நல்லவராக இருப்பவரை ‘ஸாது’ என்கிறோமல்லவா? அது ‘ஸத்’ என்பதன் அடியாகத்தான் பிறந்திருக்கிறது. “அவர் நல்ல ஸத்து. அவனா? அஸத்தாச்சே!” என்கிறபோது நல்லதைத்தானே ‘ஸத்’என்கிறோம்? ஆகவே முதலில் இந்த ஸத்தைப் பிடித்துக் கொண்டு அப்புறம் இதன் வழியாக அந்த ஸத்துக்குப் போகலாம்!

ஸத்குணமும் ப்ரம்ம ஞானமும் ஸம்பந்தமில்லாதவை அல்ல. இது இருந்தால்தான் அது. அதற்கு இது “ஸஹகாரிகாரணம்”2 என்றே ஆசார்யாள் சொல்லியிருக்கிறார். அப்படியென்றால், “துணைக்காரணம்”, ‘சேர்ந்து ஒத்துழைப்புப் பலனை விளைவிக்கிற காரணம்’, என்று அர்த்தம். [சிரித்து] பலன் விளைவிக்கிறது என்றவுடன் மாம்பழம் விளைவிப்பது நினைவு வருகிறது3. மாம்பழத்தில் ரொம்ப ருசி ஒட்டு மாம்பழம்தான். இரண்டு தினுஸுப் பழவகைகள் சேர்ந்து ஒத்துழைத்து, ஒட்டி உழைத்து உண்டாவது அது. ஒட்டு மாம்பழத்திற்கு ‘ஸஹகாரம்’ என்றே பேர். காஞ்சீபுரத்தில் ஒரு மாவான ஒட்டு மா அடியிலேதான் ஏகாம்ரேச்வரரோடு அம்பாள் அத்வைதமாக ஒட்டிக் கொண்டிருப்பது4. அப்படி ஸத்குணமும் ஞானமும் ஒட்டிக் கொண்டுதான் மோக்ஷப் பழம் பழுக்க வேண்டும். [கீதை]யில் ஒரு இடத்தில் ஞானம் என்பது இன்ன என்று ஸ்வாமி சொல்கிறபோது, “தற்பெருமை பாராட்டக் கூடாது, டம்பம் கூடாது, அஹிம்ஸா குணத்தோடும் பொறுமையோடும் நேர்மையோடும் இருக்க வேண்டும்” என்றெல்லாம் ஆரம்பித்து5 இன்னம் நிறைய லிஸ்ட் கொடுத்துக் கொண்டு போகிறார். அங்கேதான் ஆசார்ய பாஷ்யத்தில், “இதெல்லாம் எப்படி ஞானம்?” என்று எதிராளி எழுப்புவதாக ஆக்ஷேபணையைப் போட்டுவிட்டு, பதிலாக, இதெல்லாம் ஞானத்திற்கு ஸஹகாரி காரணமாதலால் இவற்றையே ஞானம் என்றது” என்கிறார். அதோடு ஞானம் ஏற்பட இம்மாதிரியான நல்ல குணங்களே நிமித்தமாகும் என்றும் சொல்லியிருக்கிறார்.

‘தற்பெருமை பாராட்டப்படாது’ என்பது விநயத்தைத்தான்; அடக்க குணத்தைத்தான். நாமும் அப்படி அடக்கமாக ஆரம்பித்து நல்லவர்களாக இருக்க முயற்சி பண்ணுவோம். அந்த ஸத்தின் நினைவை அடி நெஞ்சில் வைத்துக் கொண்டு, ஆசார்யாளைப் பிரார்த்தித்துக் கொண்டு இந்த ஸத்துக்கானதைச் செய்வோம்!

“ஸத்” என்ற வார்த்தையோடுதான் பூர்த்தி பண்ணுவது6. அப்படி உங்கள் எல்லாருக்காகவும் மனஸுக்குள் சொல்லிக் கொள்கிறேன்.


1 கீதை XVII.26

2 கீதா பாஷ்யம் XIII.1.1

3 மரம் தரும் முடிவான பலன் “பலம்” (பழம்) ஆதலால்!

4 மூக பஞ்சசதி, ஆர்யா சதகம், ச்லோ., 64-ஐக் கருத்திற்கொண்டு கூறிதாயிருக்கலாம்.

5 XIII.7

6 “ஓம் தத்ஸத்” என்பதைக் குறிக்கிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is புழு குளவியாவது ; புழுவைக் குளவியாக்குவது
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  அவதார புருஷர் ஆசார்யாள்
Next