ஆத்மா உயிர் மயமானது; தத்வப் பொருள் மட்டுமன்று : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

இது ச்லோகத்தின் முன் பாதி. பின் பாதியில் பக்தி என்பதென்ன என்று டெஃபனிஷன் கொடுத்திருக்கிறார்:

ஸ்வஸ்வரூபாநுஸந்தாநம் பக்திரித்யபிதீயதே

‘தன்னுடைய ஸ்வரூபத்தையே, அதாவது உண்மையில், இயற்கையாக நாம் யாரோ அந்த ஆத்மாவையே எப்போதும் இடைவிடாமல் சேர்ந்திருப்பதுதான் பக்தி என்று சொல்லப்படுகிறது’ என்று அர்த்தம்.

‘பக்தி: இதி அபிதீயதே’ என்றால் ‘பக்தி எனப் பெயரிடப்பட்டிருப்பது’.

ஸ்வஸ்வரூபத்தை ‘அநுஸந்தானம்’ பண்ணனுமென்று சொல்கிறார். அதென்ன அநுஸந்தானம்? ‘ஸந்தானம்’ என்றால் ஒன்றோடு போய்ச் சேர்ந்து ஒட்டிக் கொண்டிருப்பது. ‘சந்திப்பு’ என்று சொல்கிறோமே, அது! விடாமல் தொடர்ந்து அப்படிச் சேர்ந்திருப்பது ‘அநுஸந்தானம்’.

ஆத்மாவில் அப்படி சேர்ந்திருப்பதென்றால், ஆத்மா ஒன்று, அதில் சேர்த்து இழைந்துகொண்டிருக்கிற ஜீவாத்மா ஒன்று என்று இரண்டா? இல்லை. ஆத்மாவுடன் சேர்கிறது, இழைகிறது என்றெல்லாங்கூட எதுவும் பண்ண முடியாது. இந்த மாதிரி அல்ப ஸ்வல்ப த்வைதத்திற்குக்கூட அது இடம் கொடுக்காது. சேர விரும்புகிற, தாபத்தில் ப்ரேமையோடு தவிக்கிற ஜீவனை – அதாவது அந்தஃகரணத்தை; குறிப்பாக அஹங்காரத்தை – அது அப்படியே முழுங்கி விட்டு தானாக நிற்குமே தவிர, சேர்ந்து இழைத்து குழைந்து இருப்பதெல்லாங்கூட இங்கே நடக்காது. ஆகவே வாஸ்தவமாகவே ஸ்வஸ்வரூபமான அந்த ஆத்மாவை அநுஸந்தானம் பண்ணாமல், அதைப் பற்றிய நினைப்பிலேயே இடைவிடாமல் உள்ளத்தைச் சேர்த்து, இழைத்து, குழைத்துக் கொண்டிருப்பதைத்தான் ‘அநுஸந்தானம்’ என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளவேண்டும். புத்தியை சுத்த ப்ரஹ்மத்திலே ஸ்தாபித்து ஸமாதானப்படுத்த வேண்டும் என்று வந்த இடத்தில், சுத்த ப்ரஹ்மத்தின் கிட்டேயே புத்தி போக முடியாதாகையால் அதைக் குறித்த விஷயங்களில், உபதேசங்களில், ஆத்ம வித்யா சாஸ்திரங்களிலேயே புத்தியைச் செலுத்தணும் என்றுதானே அர்த்தம் பண்ணிக்கொண்டோம்? அதேபோல இங்கேயும் ஆத்ம ஸ்வரூபத்தையே இடைவிடாமல் சேர்ந்திருக்கும் அநுஸந்தானத்தைப் பண்ணவேண்டும் என்பதற்கு அதைப் பற்றிய நம்முடைய நினைப்பிலேயே அநுஸந்தானம் என்று அர்த்தம் பண்ணிக்கணும்.

ஸந்நியாஸத்திற்கு முந்தியே ஆரம்பிக்கும் இந்த அநுஸந்தானம் ஸந்நியாஸத்திற்கு அப்புறம்தான் மேலும் மேலும் பலப்பட்டு, ஆழப்பட்டு முடிவாக ஸாதனை பண்ணுபவன் தன்னையே பூர்ணமாகக் கொடுத்து அழித்துக்கொண்டு, ஆத்மா பிரகாசிப்பதாகப் பூர்த்தியாகும்.

இடைவிடாமல் இழைந்து குழைவது என்றால் அது தானே ப்ரேம பக்தி?

ஜீவபாவத்தை பரப்ரம்மம் முழுங்கி ஆத்மாவாக நிற்கிறது என்னும்போது ஒன்று சொல்லவேண்டும். ஒரே முழுங்காக அது முழுங்கித் தீர்த்துவிடுவதில்லை. முழுங்கும்; மறுபடி கக்கும்; மறுபடி முழுங்கும். ஸமாதியிலிருப்பது, கலைந்து எழுந்திருப்பது என்கிறவை இப்படி முழுங்கப்பட்ட, கக்கப்பட்ட நிலைகள்தான். ஒவ்வொரு தடவை முழுங்கப்பட்டு வெளிவருகிறபோதும் ஜீவபாவம் முன்னைவிட மெலிந்து கரைந்துபோயிருக்கும். ஆனாலும் இருக்கும். அப்போதெல்லாம் இன்னும் கரையணும் என்ற பக்தியநுஸந்தானத்தைத் தொடர வேண்டும்.

முமுக்ஷுதையைச் சொல்லும்போது “ஸ்வஸ்வரூப அவபோத”த்தைச் சொன்னார். இப்போது பக்தியைச் சொல்கிற இடத்தில் “ஸ்வஸ்வரூப அநுஸந்தானம்” என்கிறார். ‘அவபோதம்’ என்பது ‘விழிப்பு’. ஆத்ம விழிப்புக்காகவே விடுதலை பெறவேண்டும் என்று இச்சைப்படுவதுதான் முமுக்ஷுதை என்றார். அப்படிச் சொல்லும்போது [ச்லோக] ஆரம்பத்திலேயே இத்தனை நாழி நான் சொல்லி வந்த ‘அஹங்கார’த்தைத்தான் குறிப்பிட்டிருக்கிறார். தனி ஜீவனுக்குப் பிள்ளையார் சுழியான, பரம ஸூக்ஷ்மமான அஹங்காரத்திலிருந்து ஆரம்பித்து நல்ல ஸ்தூலமான தேஹம் வரையிலான மாயா கல்பித பந்தத்திலிருந்து விடுதலை பெற வேண்டும்; வெறுமே அதிலிருந்து விடுபட்டால் போதாது; “ஸ்வஸ்வரூப அவபோதத்திற்காக, அதாவது ஆத்மாவில் விழிப்புறுவதற்காகவே அப்படி விடுபட விரும்ப வேண்டும்” எனறார். இப்படி, விழிப்புறுவதற்காக [“அவபோதாய”] விடுதலைக்கு ஆசைப்பட்டுத் தவித்தால், கடைசியில் அந்த விழிப்பு ஏற்பட்டு அதனாலேயே [“அவபோதேன”] விடுபட்டு நிற்கலாம் என்று முடிவாக அர்த்தம் பண்ணிக் கொண்டோம் – ச்லோகத்தில் “அவபோதேன” என்று இருப்பது முடிவு நிலையில் என்றும், “அவபோதாய”வாக ஆரம்பிப்பதே அப்படி முடியும் என்றும் பார்த்தோம்.

அஹங்கார பந்தத்திலிருந்து விடுபடவேண்டும் என்ற முமுக்ஷுதைக்கு அப்புறம், பந்தப்படுத்துவதில் அஹங்காரத்திற்குள்ள பலத்தைப் போக்கி இளைக்க வைக்கும் பக்தியை logical sequence-ஆக வைத்திருக்கிறார். அந்தஃகரணத்தில் அடங்கும் மனோ-புத்தி-அஹங்காரங்களில் மனஸை சம தமாதிகளினால் அடக்கி, புத்தியை ச்ரத்தையாலும் ஸமாதானத்தாலும் அடக்கி, அப்புறம் அஹங்காரத்தை முமுக்ஷுதையால் அடக்கி, பக்தியால் நன்றாக மெல்லிசு பண்ணுவதாக sequence போகிறது.

வாஸ்தவத்தில் ஆத்மா விழித்துக்கொள்ளும்போது – அதாவது, எப்போதுமே அது விழிப்புடன் இருப்பதுதானென்றாலும் இப்போது நமக்குத் தெரியாமலிருப்பதால் தெரிகிற நிலையை விழித்துக்கொள்வதாகச் சொல்வது; அப்படி அது ஆகிறபோது – ஆஸாமியே [தனி ஜீவனாக இருக்கும் ஸாதகனே] காலிதான்! ஆனால் வாஸ்தவத்தில் இல்லாமல், ‘இப்படி ஸ்வப்ரகாசமான ஆத்மா மாயையின் இருட்டால் நமக்குத் தூங்கினாற்போலாகி விட்டதே! அது விழித்துக்கொள்ள வேண்டும்’ என்று நாம் நினைக்கிறபோது நாமும் இருப்போம்; ஆத்மா விழித்துக் கொண்டதாக ஒரு பாவனை, கல்பனை – இன்னவென்று வர்ணிக்க முடியாமல் – அப்படி ஒரு எண்ணமும் இருந்து கொண்டிருக்கும். அது வர்ணனாதீதந்தான். ஆனாலும் ஆத்மா, ப்ரம்மம் என்கிறபோது அகண்டமாக ஏதோ ஒன்று, பரம சுத்தமாக ஒன்று, ஸச்சிதானந்த மயமாக ஒன்று என்று ஒரு நினைப்பு இருக்கவே செய்யும். அகண்டம், ஸச்-சித் எதுவும் இன்னவென்று வரையறுத்து ‘கன்ஸீவ்’ பண்ண முடியா விட்டாலும் அவற்றைப் பற்றிய ஏதோ ஒரு அபிப்ராயம் இருந்துகொண்டிருக்கும். அந்தஃகரணம் அடியோடு அடிபட்டுப் போகிற வரையில் ஏதாவது எண்ணம் இருந்து தான் தீரும் என்பதில், இப்படி ஆத்மாவைப் பற்றியும் பாவமோ, பாவனையோ எதுவோ ஒன்று இருக்கத்தான் செய்யும். இப்படி ஆத்மா விழித்துக்கொண்டதாக பாவிக்கும்போது அதைத் தத்வமாக மாத்திரம் நினைக்காமல் உயிராக, உயிருள்ள தத்வமாக நினைக்க வேண்டும். அப்புறம் நம்முடைய சிற்றுயிரை அதற்கு அர்ப்பணித்துவிடும் பாவத்தைப் பெற்று இடைவிடாமல் அப்படி ஈடுபட்டிருப்பதுதான் பக்தி. அவபோதத்திற்கு அப்புறம் அநுஸந்தானம். தூக்கத்திலிருந்து முழிக்கப் பண்ணுவது முதலில்; முழித்துக்கொண்டுவிட்டு அதனிடம் உறவு கொண்டாடுவது அடுத்தாற்போல! உறவும் போய் ஒன்றே ஆகிவிட வேண்டும் என்பதை லக்ஷ்யமாகக் கொண்டு உறவு கொண்டாடுவது!

” [ஆத்மாவைப் பற்றி] இப்படி அப்படி என்று ஒன்றும் நீ ‘கன்ஸீவ்’ பண்ணாமல் அது வாஸ்தவத்தில் எப்படியிருக்கிறதோ அப்படித் தெரியட்டும், ஆட்கொள்ளட்டும் என்று வெறுமே பார்த்துக்கொண்டிரு. ஸத்-சித், அகண்டம் என்றெல்லாம் அடைமொழி எதுவுங்கூட கொடுக்காதே! ‘எப்படியோ அப்படி’ என்று விட்டுவிட்டு இரு” என்று சொல்வதுண்டு. அப்படிப் பண்ணுவது கஷ்டந்தான் என்றாலும் அட்வான்ஸ்ட் நிலையில் முடியாததில்லை. அடைமொழி கொடுத்து பாவித்துக்கொண்டே போகும் போது, தானாகவேகூட ஒரு ஸ்டேஜில் ‘இதெல்லாம் என்ன ஜோடிப்பு?’ என்று விட்டு விட்டு, ‘உள்ளபடி பார்ப்போமே!’ என்று தோன்றும். அப்படி எந்த பாவனையுமில்லாமல் வெறுமே பார்க்கிறபோது [ஆத்ம] தத்வம் ஒரு வெறுமையாக, பாழாக, சூன்யமாகத் தோன்றக்கூடிய ஆபத்து இருக்கிறது. ஆகையினாலே [ஆத்மாவைக் குறித்து] வேறே ஒரு கன்ஸெப்ஷனும் இல்லாவிட்டாலுங்கூட, அது வெறும் பாழில்லை, உயிர் என்ற அடிப்படையை மட்டும் விட்டு விடக்கூடாது. உயிர் என்றவுடனேயே நாமும் அடிப்படையில் உயிரேயாகையால், தானாக உறவு ஏற்பட்டு விடும். உறவு ஏற்படுகிறதென்றால் அன்பு வந்துவிட்டதென்று அர்த்தம். நிஜ அன்பாக அதை ஆக்கிக் கொள்ள வேண்டும் – சிற்றுயிருக்கு அந்தப் பேருயிரிலிருந்து எதையும் பெற்றுச் சேர்த்துக் கொள்கிற தப்பான அன்பாக இல்லாமல், இதை அதில் சேர்த்து, அது இதை அப்படியே உட்கொள்ள வேண்டும் என்று தவிக்கும் உண்மை அன்பாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

அந்த உறவு, உயிர் தெரிவதற்காகத்தான் ‘ஸ்வ-ஸ்வரூப அவபோதம்’, ‘ஸ்வ-ஸ்வரூப அநுஸந்தானம்’ என்று இரண்டு இடத்திலேயும் ‘ஸ்வரூபம்’ என்று போட்டிருக்கிறார். ‘ஸ்வ-ஸ்வரூப’ என்பதில் இரண்டு ‘ஸ்வ’ வருகிறது. முதல் ‘ஸ்வ’வுக்குத் ‘தன்னுடைய’ என்று அர்த்தம். இரண்டாவது ‘ஸ்வ’வுக்கு ‘இயற்கையான என்று அர்த்தம். ‘ஸ்வ-ஸ்வரூபம்’ என்பது தன்னுடைய இயற்கையான ரூபம் — இப்போது மாயை கலந்து செயற்கை ரூபத்திலிருக்கும் ஜீவனின் இயற்கையான, உண்மையான, மாயைக் கலப்பில்லாத ரூபமான ஆத்மா.

ஆத்மாவுக்கு ஏது ரூபம் என்றால், இங்கே ‘ரூபம்’ என்பதற்கு உருவம் என்று அர்த்தமில்லை …. ‘உருவம்’ என்பதும் ‘ரூப’த்திலிருந்து வந்த வார்த்தைதான். ஸம்ஸ்கிருத ‘ர’ வரிசை எழுத்துக்கள் தமிழில் வரும்போது முன்னாடி அ, இ, உ என்ற ஏதாவதொன்றைச் சேர்த்துக் கொள்ளும். ரங்கன்-அரங்கன், ராமன்-இராமன், ருக்மிணி-உருக்குமிணி இப்படி. அப்படித்தான் ரூபம் என்பது ‘உருவம்’ என்று ஆயிற்று…. “ஆத்மாவுக்கு ரூபம் ஏதையா?” என்றால் – ரூபம் என்றால் இங்கே form, வடிவம் என்று அர்த்தமில்லை. ஒன்றின் ‘தன்மை’ எதுவோ அதையும் ‘ரூபம்’ என்றே சொல்வது. ரூபிப்பது, நிரூபிப்பது என்கிறபோது ஒன்றின் வாஸ்தவமான தன்மை என்னவென்பதைத்தானே வெளிப்படுத்திக் காட்டுகிறோம்?

ஆனாலும் பொதுவாக ரூபம் என்கிறபோது அந்தத் ‘தன்மை’ ஜடத்தன்மையாக இல்லாமல் உயிர் கலந்த தன்மையாகவே மனஸுக்கு வரும். ‘ராகத்தின் ரூபத்தை பாகவதர் நன்றாகக் காட்டினார்’ என்கிறோம் — அதை ஒரு உயிருள்ள ஜீவனாக உள்ளுக்குள்ளே அபிப்ராயப்பட்டு அப்படிச் சொல்கிறோம். எல்லாக் கலைகளையுமே அப்படிச் சொல்கிறோம். ஸயன்ஸைச் சொல்வதில்லை. ‘ஃபிஸிக்ஸ் ரூபத்தை ப்ரொஃபஸர் நன்றாகக் காட்டினார்’ என்று சொல்வதுண்டா? காரணம், ஆர்ட் மாதிரி ஸயன்ஸை உயிருள்ள விஷயமாக நினைக்காததுதான். எதற்கு சொல்லவந்தேன் என்றால் ‘ரூபம்’ என்று ஒன்றின் தன்மையைச் சொல்லும்போது அங்கே உயிரின் தொடர்பு வந்துவிடுகிறது. முன்னாடி ‘ஸ்வ’ போட்டு ‘ஸ்வரூபம்’ என்னும்போதோ இன்னும் அழுத்தமாக ‘ஜீவசக்தி உள்ள ஒன்று’ என்று நடைமுறையில் அர்த்தம் செய்து கொள்கிறோம். ‘ஆத்ம ஸ்வரூபம்’ என்ற வார்த்தை காதில் படுகிறபோதே அது உயிருள்ள ஒன்றாக மனஸுக்குள் இறங்குகிறது. ‘தனக்கென்றே இயற்கையாக ஏற்பட்டது’ என்பதை ‘ஸ்வ’ என்கிற சின்ன வார்த்தை குறிப்பிடுகிறது. ‘தனக்கென்றே’ என்று சொல்கிறபோதே அந்த வஸ்துவின் உயிருள்ள தன்மையும் நம் மனஸுக்குள் இறங்கி விடுகிறது.

உயிரைப் பற்றிப் பேசுகிறோம்; சில வார்த்தைகளுக்கே அலாதியான உயிரிருக்கிறது! ஸத்-சித்-ஆனந்தம் என்பதில் ‘ஸத்’ என்றால் ‘உள்ளது’. ‘உள்ளது’ என்றால் ‘உயிருள்ளது’ என்றே அர்த்தம். அதை Being, Existence, Life என்று மூன்று வார்த்தைகளில் சொல்கிறார்கள். அப்படிச் சொல்லும்போது ‘Being’ என்கிற வார்த்தை, உயிரிருந்தாலும் ஒட்டி நிற்காமல் ‘அகாடெமிக்’காகத் தனித்து நிற்கிற மாதிரி அர்த்தம் கொடுக்கிறது. Existence என்பதோ அதை விடவும் உயிரையே ஜடமாகச் சொல்கிறாற்போல அத்தனை dry -யாக, மெடஃபிஸிகலாக இருக்கிறது. Life என்றால் அப்போதுதான் அப்படியே ஸாரபூதமாக உயிரைக் காட்டினாற்போலப் ‘பொயட்டிக்’காக இருக்கிறது. அந்த வார்த்தைக்கே உயிரிருப்பதால் அதன் அர்த்தமான உயிரிலும் ஜீவஸத்து நன்றாக த்வனிக்கிறது! அப்படித்தான் ‘ஸ்வரூபம்’ என்னும் வார்த்தையும். ஆத்மா என்பது உயிர் ஸத்து, வறண்ட ‘dry’ தத்வமில்லை என்று நமக்குப் புரிவிப்பதற்காகவே அதன் ஸ்வரூப அவபோதத்திற்காக நமக்கு முமுக்ஷுதையும், அவபோதமான பிறகு அந்த ஸ்வரூபத்தோடு உயிராக உறவு கொண்டாடி அநுஸந்திப்பதற்காக பக்தியும் வேண்டுமென்று உபதேசித்திருக்கிறார்.

இப்படி இரண்டு இடத்திலும் ‘ஸ்வரூபத்’தையே சொன்னவர் மேற்கொண்டு, “ஆத்ம தத்வ’த்தை அநுஸந்தானம் செய்வதுதான் பக்தி என்பது சொல்கிறவர்களும் இருக்கிறார்கள்” என்பதாக, இன்னொரு விதமான அபிப்ராயத்தையும் தெரிவிக்கிறார்: “ஸ்வாத்ம தத்த்வாநுஸந்தானம் பக்திரித்யபரே ஜகு:”1.

“அபரே ஜகு:” என்றால் “வேறு சிலர் சொல்கிறார்கள்”. என்ன சொல்கிறார்கள்? தனது ஆத்ம தத்வத்தைத் தொடர்ந்து சிந்தனை பண்ணிக் கொண்டிருப்பதே பக்தி என்று (சொல்கிறார்கள்): “ஸ்வாத்ம தத்த்வாநுஸந்தானம் பக்திரிதி.”

‘வேறே சிலபேர் சொல்கிறார்கள்’ என்பதால் அது ஆசார்யாளின் அபிப்ராயமல்ல என்று தெரிகிறது. தன்னுடைய அபிப்ராயத்தைத்தான் முன் ச்லோகத்தில் ‘ஸ்வ ஸ்வரூபாநுஸந்தானம்’ என்றார். இப்போது இன்னொரு அபிப்ராயமிருப்பதையும் சொல்லாமலிருக்கக் கூடாது என்ற ஸத்யமான மனப்பான்மையினால், “ஸ்வ ஸ்வரூபம் இல்லை; ஸ்வாத்ம தத்வம்” என்று ஒரு கருத்து இருப்பதையும் தெரிவிக்கிறார்.

என்ன வித்யாஸமென்றால் இவ்வளவு நேரம் உயிர், அன்பு, ஈரம் என்றெல்லாம் சொல்லி வந்ததற்கு மாறாக ஆத்மாவை வெறும் தத்வமாக – abstract principle ஆகவே – வைத்து அதைப் பற்றியே விடாமல் சிந்தனையை ஈடுபடுத்துவதான அநுஸந்தானம்தான் பக்தி என்று அந்த மாற்று அபிப்ராயக்காரர்கள் சொல்கிறார்கள். லக்ஷ்யமான ஆத்மாவை அன்பு செலுத்தக்கூடிய உயிரென்று வைக்காமல், அதற்காக ஸாதனை செய்கிறவனையும் அன்பினாலேயே தன் உயிரை அந்த பேருயிரில் கரைகிறவனாகச் சொல்லாமல் தத்வரீதியாகவே இடைவிடாமல் ஈடுபட்டுச் சிந்திக்கிறதையே அந்த அபிப்ராயக்காரர்கள் சொல்கிறார்கள். ‘உயிரோடு உறவு கொண்டாடும் அன்பைச் சொல்லாதவர்கள் பின்னே எப்படி இந்த தத்வாநுஸந்தானத்திற்கு பக்தி என்று பெயர் கொடுத்திருக்கிறார்கள்?” என்றால், ‘பக்தி என்பது ஒருமுகமாக ஒரு விஷயத்திலேயே ஈடுபட்டுக் கொண்டிருப்பதுதான்’ என்று மாத்திரம் அவர்கள் குறுக்கி அர்த்தம் பண்ணிக் கொண்டு அப்படி வைத்திருக்கிறார்கள்.

ரூபம் என்றால் தன்மை. தத்-த்வம் என்றாலும் தன்மைதான். இன்னும் சொல்லப்போனால் ‘தத்-த்வம்’ என்கிறதுதான் நேராகத் ‘தன்-மை’யைச் சொல்வது. ஆனாலுங்கூட ‘ஸ்வ-ஸ்வரூப அநுஸந்தானம்’ என்னும் போது இந்த சிற்றுயிர் தன்னுடையதேயான மூல உயிரின் தன்மையில் உள்ளுக்குள் ஊறி ஊறிக் கரைவதாகத் தெரிந்த மாதிரி ‘ஸ்வாத்ம தத்த்வ அநுஸந்தானம்’ என்பதில் இல்லை. இது என்னவோ ஒரு எட்டாத தத்வத்தை வெளியிலே இருந்து கொண்டு அநுபவிக்கிற மாதிரிதான் இருக்கிறது.

எப்படியானாலும் ஆசார்யாளின் ‘வோட்டு’ இதற்கில்லையாகையால் இதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். வெறுமே ஒருமுகமான ஈடுபாட்டை மட்டும் நாம் பக்தி என்று எடுத்துக்கொள்ளாமல் உயிரோடு சேர்ந்த அன்பையே அப்படி நினைத்துப் பண்ணுவோம்.

[அத்வைதிகளுக்குள்ளேயே] இருக்கிற இன்னொரு அபிப்ராயத்தைச் சொல்லாமலிருக்கக்கூடாது என்ற நியாயத்திற்காகவே இதையும் எடுத்துக் காட்டியிருக்கிறார். நிஜத்தை சொல்லணுமானால் அந்த மாற்று அபிப்ராயந்தான் அதிகம் ப்ரசாரமாகிவிட்டது! ஆசார்ய பக்தர்கள், சிஷ்யர்களிலேயே ரொம்பப் பேருக்கு அப்படித்தான் அபிப்ராயம்! நானே இப்போது, ‘நம்முடைய ஞான மார்க்கத்திலே இதென்ன பக்தியைக் கொண்டு வந்து விட்டிருக்கிறார்?’ என்று கேள்வியைப் போட்டுவிட்டுத்தானே இத்தனை ‘எக்ஸ்பிளனேஷன்’ கொடுக்க வேண்டியிருந்திருக்கிறது? ………

அன்போடு உறவு கொண்டாடும் ரீதியில் ஆத்ம சிந்தனை பண்ணுவது; ஆனாலும் உறவே எப்பவும் நீடிக்கணும் என்று த்வைதமாக, த்வைதத்திற்காகப் பண்ணாமல், அத்வைதமாகக் கரைந்து போவதற்கு வழியாகவே பண்ணுவதுதான் பக்தி என்பதே இத்தனை எக்ஸ்பிளனேஷனுக்கும் சுருக்கம்.

நிர்குணத்திடம் எப்படி பக்தி என்பது இப்போது புரிந்திருக்குமென்று நினைக்கிறேன். அது எப்படி ‘கரீயஸி ஸாமக்ரி’ என்றும் புரிந்து கொண்டிருப்பீர்களென்று நம்புகிறேன்.


1 விவேகசூடாமணி, ச்லோ. 32 (அ) 33.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is பக்தி மார்க்க பக்தியிலும் சிறந்த ஞானமார்க்க பக்தி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  வேதமே விதிக்கும் ஞானமார்க்க பக்தி
Next