பக்தியும் ஹ்ருதயமும் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

பக்தியின் அன்பும் நைச்ய பாவமும் உண்டாகி விருத்தியாகிறபோது இதுவரை பண்ணின ஸாதனைகளால் லேசாக, அதாவது ஒல்லியாக ஆன மனஸ், புத்தி ஆகிய இரண்டையும் அஹங்காரம் அப்படியே ஹ்ருதயத்திற்குள் உறிஞ்சிக் கொண்டுவிடும். பக்தியில் – ஸரியான, ஸத்யமான பக்தியில் – ஆத்ம நிவேதனம், [அதாவது] பரமாத்மாவுக்கு ஜீவாத்மா தன்னை நிவேதனம் செய்து கொள்வதான பக்தியில் – புத்திக்கு வேலை இல்லை என்று எல்லோருக்கும் தெரியும் அது மட்டுமில்லை. அங்கே மனஸுக்கும் வேலை இல்லை. ஸங்கல்ப, விகல்ப மயமானதே மனஸ். அந்த இரண்டுக்கும் நிஜமான பக்தியில் வேலை இல்லை. ஸங்கல்ப, விகல்ப மயமானதே மனஸ். அந்த இரண்டுக்கும் நிஜமான பக்தியில் வேலை இல்லை. ‘உன் ஸங்கல்பம்’- ‘Thy will’ என்று கிடக்கிற நிலை அது. பக்தியுணர்ச்சி மனஸ் உண்டு பண்ணி, அநுபவிக்கிற அநேக உணர்ச்சிகளைச் சேர்ந்ததில்லை. பக்தி பாவங்கள் என்பதாக வாத்ஸல்யம், மதுரம், தாஸ்யம் என்று பலது சொன்னாலும் இவற்றுக்கும் ஸாதாரணமாக ஒரு தாயார் குழந்தையிடம் வைக்கும் வாத்ஸல்யம், பதி பத்னிகள் பரஸ்பரம் கொண்டிருக்கும் ப்ரேமை, ஒரு விச்வாஸ வேலைக்காரன் ப்ரபுவிடம் காட்டுகிற பணிவு ஆகியவற்றுக்கும் மலைக்கும் மடுவுக்குமாக இருக்கும். அடுத்தகத்து குழந்தையிடம் ஒரு ஸ்த்ரீ வைக்கும் ப்ரியத்திற்கும் ஸொந்தக் குழந்தையிடம் வைக்கும் வாத்ஸல்யத்திற்கும் எத்தனை வித்யாஸமிருக்கும்? அதைவிட ஜாஸ்தி இவளுடைய வாத்ஸல்யத்திற்கும் பகவானிடம் ஒரு பரம பக்தர் காட்டுகிற பக்தி வாத்ஸல்யத்திற்கும் இருக்கும்! இப்படியேதான் ப்ரேமை, தாஸ்யம் முதலானவை பக்தி ரூபமாக அவனிடம் செலுத்தப்படும்போதும்!நமக்கே எவன் மூலமோ அவனைக் குறித்து உண்டாவதால் இந்த உணர்ச்சிகள் மனஸின் உணர்ச்சிகளை விட மஹா சக்தி வாய்ந்த தனி க்ளாஸான பரிசுத்த பாவங்களாக இருக்கும்.

ஆக, நிஜமான பக்தி மனஸின் கார்யமில்லை. மனஸின் ஆட்டங்கள் இல்லாமல், இன்னும் ஆழமாக ஒருபோதும் ஆடாமல் ‘நான்’என்கிற ஸ்திரமான மூல உணர்ச்சியோடு உள்ள அஹங்காரத்திலிருந்தே உண்டாவது பக்தி. அதோடு அந்த அஹங்காரத்தைப் போஷித்து வளர்த்துக் கொள்வதற்காக இல்லாமல், அதை ஒல்லி பண்ணி ஆத்ம ஸ்தானத்திற்குள் போய்த் தனக்கும் மூலமான ஒரே தானிடம் கரையப் பண்ணுவதற்காக உண்டாவது. கரைய வேண்டும் என்று ஆசைப்படுவதற்காக ஒன்று இருந்தாதானே ஆகணும்? இருந்துதானே தொலையணும்?என்பதற்காக இருக்கிற ஒன்றாக அப்போது அஹங்காரம் ஆகிவிடும். அஹங்காரம் பக்தி செய்வதற்காகவே அஹங்காரம் இருப்பதாக இருக்கும்.

நினைவு மறக்காமலிருக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அத்வைத லக்ஷ்யத்தில் வருகிற இந்த பக்தி ஸாதாரணமாக பக்தி என்று சொல்லப்படுவது போல வித வித ரஸாநுபவத்தையே லக்ஷ்யமாகக் கொண்டதல்ல என்பது. அப்போது அந்த ரஸாநுபவத்திற்காக ஒரு தனி ஜீவ நானை விடாமல் வைத்துக் கொண்டேதான் இருக்க வேண்டியிருக்கும். பக்தியே முடிவு. அதுவே முக்தி என்கிற ஸித்தாந்திகள் அப்படித்தான் சொல்வார்கள். ஆனால் இங்கேயோ, சாச்வதமாக பக்தி பண்ணிக் கொண்டேயிருப்பதற்காக சாச்வதமாக பக்தி பண்ணிக் கொண்டேயிருப்பதற்காக சாச்வதமாக பக்தி பண்ணிக் கொண்டேயிருப்பதற்காக சாச்வதமாக அஹங்கார ஜீவியும் இருக்க வேண்டும் என்ற அடிப்படை எடுபட்டுப் போய்விடுகிறது. அஹங்காரத்தை அன்பினால் கரைக்கிறதல்லவா இங்கு உத்தேசமே? சாச்வதமாக எப்படி கரைக்க முடியும்? கரைந்து கரைந்து ஒரு பீரியடுக்கு அப்புறம் கரைய ஒன்றுமே இல்லை என்றுதானே [அஹங்காரம்] அழிந்துவிட வேண்டியிருக்கும்? மேலே மேலே பக்தியை ‘கோட்டிங்’ கொடுத்துக் கொண்டு போவது என்றால் சாச்வதமாக அப்படிப் பண்ணிக் கொண்டு போகலாம். ‘கோட்டிங்’ காக இல்லாமல், ஆஸிட் போட்டுப் போட்டுக் கரைக்கிறதென்றால் அது எப்படி சாச்வதமாயிருக்கும்? இங்கே அஹங்காரத்திற்கு ஆஸிடாகத்தான் பக்தி. அப்படி பக்தியில் தன்னைக் கொடுத்துக் கொள்ளும்போது அஹங்காரத்தின் ஸ்தானமான ஹ்ருதயத்தில் அஹங்காரம் மெலிந்து மெலிந்து பக்தியே வியாபித்து அது பக்தியின் ஸ்தானந்தான் என்னும்படியாக ஆகிவிடும்.

அப்படி பக்தியில் பக்குவமாகி ஆச்ரமம் வாங்கிக் கொண்டு பக்தியோடுகூட – அதாவது அஹங்காரத்தை லக்ஷ்யத்திலே கொஞ்சம் கொஞ்சமாக அன்போடு கரைத்து – ச்ரவண மனன நிதித்யாஸனங்களைப் பண்ணிக் கொண்டே போனால் பக்தி ஹ்ருதயத்திலே நன்றாக, வேகமாகப் பொங்கிக்கொண்டு வருவதில் அஹங்காரம் என்கிற உணர்ச்சி அடிபட்டுப் போகிறதோடுகூட, அது முழுக்க அடிபட்டுப் போகிறதற்கு முந்தியே, ஹ்ருதயம் என்று பௌதிகம் மாதிரி இருக்கிற ஸ்தானம் பக்தியினுடைய ஸூக்ஷ்ம அணுக்களாலேயே ரொம்பினதாக ஆகிவிடும்.

அஹங்கார ஸ்தானமான ஹ்ருதயத்தைப் பற்றி உபநிஷத்துக்களில் வருகிற இடங்களிலெல்லாம் ஆசார்யாள் அதை ‘மாம்ஸ பிண்டம்’ என்றே சொல்லியிருப்பார்*. ஆனாலும் அப்படிச் சொன்னதால் முழுக்க ஸ்தூலமான அவயம் என்று நினைத்துவிடக் கூடாது. அதனால் தான் ‘பௌதிகம் மாதிரியான ஸ்தானம்’என்றது. ரத்தத்தைப் பாய்ச்சுகிற ஹ்ருதயந்தான் முழுக்க ஸ்தூலம். இந்த ஹ்ருதயமோ ஸ்தூலத்திற்கும் ஸூக்ஷ்மத்திற்கும் நடுவில் வருவது. யோகிகள் சொல்லும் சக்ரங்கள், நாடிகளில் அநேகம் முழு ஸூக்ஷ்மம். எந்த எக்ஸ்-ரேயிலும் அவை அகப்படுவதில்லை. இந்த ஹ்ருதயமும் எக்ஸ்-ரேயில் விழாதுதான். ஆனாலும் அந்த அளவு ஸூக்ஷ்மமில்லை. ஸ்தூல ஹ்ருதயத்தால் நடக்கும் ரத்த ஒட்டம், ஸ்தூலமான ஸ்வாச கோசத்தால் நடக்கும் மூச்சின் ஒட்டம், ஸ்தூலமான மூளையின் ஏவுதல்களின்படி நடக்கும் நாடிகளின் ஒட்டம், ஸ்தூலமான ஜீர்ணக் கருவிகள் முதலியவற்றிலும், அவற்றின் குழாய்களிலும் நடக்கும் கார்ய ஒட்டங்கள் எல்லாவற்றையும் சேர்த்துப் பிடித்து ஒரு தினுஸாகக் கன்ட்ரோல் பண்ணி ஜீவஸத்தை ஊட்டுவது இந்த ஹ்ருதயந்தான். அதிலிருந்து புறப்படும் நாடிகளைக் கொண்டு இந்த [கன்ட்ரோல் செய்யும்] கார்யத்தைப் பண்ணுகிறது. ஜீவனின் நான் என்ற உணர்ச்சியில்லாமல் ஒரு சரீரத்தில் என்ன நடக்க முடியும்? அதனால்தான் அஹங்கார ஸ்தானமான ஹ்ருதயத்திற்கு இந்த பவர் கொடுத்திருக்கிறது. ஸ்தூல சரீர விஷயங்களே ஜீவ ஸமூஹத்திற்கு முக்யமாக இருந்து, அவற்றையே இது கண்காணித்து நடத்திக் கொடுக்க வேண்டியிருப்பதாலோ என்னவோ இதையும் ‘ஸெமி’ஸ்தூலமாக வைத்திருக்கிறது.

அப்படி [ஒரளவு ஸ்தூலமாக] இருப்பதே அஹங்காரம் கரையணும் கரையணும் என்று அப்யாஸம் பண்ணும்போது ஸூக்ஷ்மமாகி ‘ஆகாசம்’ என்னும்படி ஆகும். இன்னும் அதிஸூக்ஷ்மமான காரண ஆகாசமாக ஆத்ம ஸ்தானம் இருக்கிறது – ஹ்ருதயத்தின் மைய த்வாரமாக!அந்த ஸூக்ஷ்ம தரத்திற்கு ஸ்தூலம், ஸெமி-ஸ்தூலம் எதுவும் நேரே போக முடியாது. நன்றாக க்ருசப்படுத்தி ஒல்லி பண்ணி ஸூக்ஷ்மமாக்கித்தான் ஸூக்ஷ்மதரத்திற்குள் பிரவேசிக்க வைக்க முடியும். அந்த அஹங்கார கார்ச்யத்தை [மெலிதாக்குவதை]த் தான் பக்தி என்பது செய்கிறது.

பக்தி பழுக்கிறபோது ஹ்ருதயம் பூராவும் மாம்ஸத்திற்கும் நாடிகளுக்கும் மேலாக ப்ரகாசித்துக் கொண்டு அன்பு மட்டுமே இருக்கும். அதனால்தான் அதையே ஹ்ருதயம் என்பது. அன்பு இல்லாதவர்களை ஹ்ருதயமில்லாதவர் என்கிறோம். சில ஸமயம் இரண்டையும் சேர்த்து ப்ரேம ஹ்ருதயம், அந்பிதயம் என்று சொல்கிறோம். அந்தஃகரணத்தில் நாலு உறுப்புகளில் எதையுமே இப்படி அதன் ஸ்தானத்துடம் ஒற்றுமைப் படுத்திச் சொல்லும் வழக்கில்லை என்பதைக் கவனிக்கணும். மனஸின் ஸ்தானம் கழுத்தானாலும் நல்ல மனஸுள்ளவர்களைக் கழுத்துள்ளவர் என்பதுண்டா? அதே மாதிரி நிரம்ப புத்தியுள்ளவர்களை முகமுள்ளவர் என்றும் சொல்வதில்லை. ஏனென்றால் மாம்ஸ மயமான இந்த ஸ்தூல அவயங்களில் அந்த அந்தஃகரண அவயங்கள், ஒரு நாற்காலியில் ஆஸாமி உட்கார்ந்திருப்பது போல இடம் பெற்றிருப்பதோடு ஸரி!நாற்காலியையே ஆஸாமியாகச் சொல்ல முடியாதல்லவா?

ஹ்ருதயம் என்பதுங்கூட [ஸெமி] ஸ்தூலமாயுள்ள போது அதில் இப்படி உட்கார்ந்திருப்பது அஹங்காரம் என்று சொன்னேன். ஆனாலும் ரொம்பவும் அஹங்காரமுள்ளவர்களை ஹ்ருதயமுள்ளவர் என்பதில்லை. ஸூக்ஷ்ம பூதமான ஹ்ருதயத்தில் அன்பு அணு அணுவும் ஊடுருவி வியாபித்திருப்பது போல மற்ற எதுவுமில்லாததால் தான் அன்பையே ஹ்ருதயம் என்பது. பகவானை ஹ்ருதயவாஸி என்கிறபோது கூட [ஸெமி] ஸ்தூல ஹ்ருதயத்தில் அஹங்கார ஜீவனாக வேஷம் தரித்துக் கொண்டிருக்கிறவன் அவன்தான் என்ற அர்த்தத்தில் அப்படிச் சொல்லாமல், அன்பே அதன் உச்சியில் பக்தியாகி ஸ்தூலத்தை ஸூக்ஷ்மமாகக் குழைத்து விட்ட நிலையில் அதனுள்ளே ப்ரகாசமாகத் தெரிகிறவன் என்ற அர்த்தத்தில்தான் சொல்கிறோம். இவ்வளவு விளக்கமாக விஷயம் தெரியாவிட்டாலும், பக்தி ப்ரேமையில் ப்ரஸன்னமாயிருப்பவன் என்ற அளவில் புரிந்து கொண்டு சொல்கிறோம்.


* (உ-ம்) சந்தோக்யம் VIII. 6.1; ப்ருஹதாரண்யகம் IV.2.3