பக்தி என்றால் என்ன ? : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

பக்தி என்றால் ‘பரமாத்மாவை ஸகுணமான, ஸாகாரமான [உருவம் கொண்டதான] ஒரு தேவதா மூர்த்தியாக நினைத்து அன்பு செய்வது’ என்பதே பிரஸித்தமான பொது அபிப்பிராயம். சும்மா மானஸிகமாக அன்பு செய்வதென்றால் முடியவில்லை என்பதால் பூஜை, ஆலய தர்சனம், ஸ்தோத்ர பாராயணம் என்றெல்லாம் கார்யத்தைச் சேர்த்துச் செய்வது என்று வைத்துக் கொண்டிருக்கிறோம். அது ஸரிதான்; தப்பென்று சொல்ல முடியாது. ஆனாலும் ஹையர் க்ரேடில் நினைக்கிறபோது ஸாகாரமாக, அதாவது உருவமாக பரமாத்மாவை ஒரு தேவதையாக நினைத்தால்தான் அன்பு செய்ய முடியும் என்றில்லாமல், நிராகாரமான – அருவமான – பரமாத்மாவாக அவன் இருக்கும்போதும் அன்பு செய்யப் பழகி அதில் தேறவேண்டும். ஸாகாரமாயுள்ளபோது இப்படியிப்படி கண்ணு, மூக்கு, கை – நாலு கை, எட்டு கை – இப்படியிப்படி வஸ்த்ர பூஷணங்கள் என்று கண்ணுக்குத் தெரிவதாலும், அந்த மூர்த்தியின் குண கணங்களையும் மஹிமைகளையும், பரம கருணையையும் புராணங்கள், ஸ்தோத்ரங்கள் முதலியவை தெரிவிப்பதாலும் அப்படிப்பட்ட ஒரு மூர்த்தியிடம் அன்பு வைக்க முடிகிறது. அன்புதான் பக்தி. பல தினுஸான அன்புகளில் ரொம்ப உசந்ததாக ஈச்வரனிடம் வைக்கும் அன்பே பக்தி. கண்ணுக்கு இன்பமளிக்கும் ரூபம், மனஸுக்கு இன்பமளிக்கும் குணங்கள் கொண்ட ஸகுண மூர்த்தியிடம் அன்புருவான பக்தி வைப்பதென்றால் ஸுலபமாக முடிகிறது. ஆனால் ரூபமே கிடையாது, மனஸுக்கும் பிடிபடாது என்று இருக்கும் நிர்குண பரமாத்மாவிடம் அன்பு வை என்றால் எப்படி என்று தோன்றலாம்.

நம் நிலையில் அது முடியாமல் இருக்கலாம். இருந்து விட்டுப் போகட்டும். நமக்குண்டான மட்டில் ஒரு ஸாகாரமூர்த்தி, பூஜை, க்ஷேத்ராடனம் என்று பண்ணிவிட்டுப் போவோம். ஆனால் ஸாதன சதுஷ்டயத்தில் முன்னேறி ஸம்ஸ்க்ருதமான – அதாவது, refined , [சற்று யோசித்து] பண்பட்ட (பண்பட்ட என்பது நல்ல வார்த்தை; யோசித்தால்தான் வருகிறது! பண்பட்ட) ஸாதகர்களால் நிராகாரத்திடமும் நிர்குணத்திடமுங்கூட அன்பு வைக்க முடியும். ஏனென்றால் அந்த ஸ்டேஜில் எதனிடம் அன்பு என்றோ – அந்த எதுவோ ஒன்றிடம் நல்ல ரூபம், குணம், லீலை என்றெல்லாம் இருப்பதே அதனிடம் நமக்கு அன்பை உண்டாக்கும்; இப்படி ஒன்று வெளியில் இருந்தாலே அதன் பொருட்டாக நம்மிடம் அன்பு உண்டாகும்; இல்லாவிட்டால் இல்லை என்றோ – விஷயம் போகாமல் தானாகவே ஸ்வாபாவிகமாக அன்பு உண்டாக முடியும். முடியக்கூடிய அதை வாஸ்தவமாகவே ஸாதிக்காவிட்டால் அந்தப் பண்பட்ட நிலையிலேகூட அத்தனை ஸாதனையும் அஹங்காரத்தில் போய் முட்டிக் கொண்டு முடிந்து விடும். செய்த ஸாதனைக்காக மோக்ஷ ஸித்தி கிடைக்குந்தான் என்றாலும் அது இப்போது என்றில்லாமல் எப்போதோ கோடி, கோடி வருஷத்திற்கப்புறம் ஏற்படக்கூடிய ஆத்யந்திக ப்ரளயத்தின் போதுதான் கிடைக்கும்படியாகத் தள்ளி, ரொம்பத் தள்ளிப் போவதாக ஆகிவிடும்! இப்போது நான் சொன்ன ‘அஹங்காரம்’ என்ன, ‘ஏதோ ஒரு ப்ரளயம்’ என்ன என்பதற்கு அப்புறம் வருகிறேன்! முதலில் அன்பு என்னவென்று தெரிந்து கொள்வோம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is பக்தி : ஞானமார்க்த்தில் அதன் இடம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  அன்பு என்பது என்ன ?
Next