தன்னேராயிரம்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

மூன்றாம் பத்து

தன்னேராயிரம்

கண்ணபிரானை அம்மமுண்ண (முலைப்பால் குடிக்க) யசோதை அழைக்கிறாள். கண்ணன் வருகிறான். ஆனால் அவனுடைய மேன்மையையும், அவனுடைய செயல்களையும் நினைத்து அஞ்சுகிறாள். தன் மகன் பகவானே என்று நினைக்கிறாள். "உனக்கு அம்மம் தர அஞ்சுவன்" என்று கூறுகிறாள். ஆழ்வாரும் யசோதையாக இருந்துகொண்டு அப்படியே அநுபவிக்கிறார்.

அன்னை கண்ணனுக்கு அம்மம்தர அஞ்சுதல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வஞ்சமகள் துஞ்ச வாய்வைத்தவன்

223. தன்னே ராயிரம் பிள்ளைக ளோடு

தளர்நடை யிட்டு வருவான்,

பொன்னேய் நெய்யடு பாலமு துண்டொரு

புள்ளுவன் பொய்யே தவழும்,

மின்னேர் நுண்ணிடை வஞ்ச மகள்கொங்கை

துஞ்சவாய் வைத்த பிரானே,

அன்னே!உன்னை யறிந்துகொண் டேன்உனக்

கஞ்சுவன் அம்மம் தரவே. 1

சகடம் இறச் சாடியவன்

224. பொன்போல் மஞ்சன மாட்டி அமுதூட்டிப்

போனேன் வருமள விப்பால்,

வன்பா ரச்சக டமிறச் சாடி

வடக்கி லகம்புக் கிருந்து,

மின்போல் நுண்ணிடை யாளரு கன்னியை

வேற்றுரு வம்செய்து வைத்த,

அன்பா!உன்னை யறிந்துகொண் டேன்உனக்

கஞ்சுவன் அம்மம் தரவே. 2

மருதான அசுரரைப் பொன்றுவித்தவன்

225. கும்மா யத்தொடு வெண்ணெய் விழுங்கிக்

குடத்தயிர் சாய்த்துப் பருகி,

பொய்ம்மா யமரு தான அசுரரைப்

பொன்றுவித் தின்றுநீ வந்தாய்,

இம்மா யம்வல்ல பிள்ளைநம் பீ!உன்னை

என்மக னேயென்பர் நின்றார்,

அம்மா!உன்னை யறிந்துகொண் டேன்உனக்

கஞ்சுவன் அம்மம் தரவே. 3

ஆய்ச்சியரை மையல் செய்தவன்

226. மையார் கண்மட வாய்ச்சியர் மக்களை

மையன்மை செய்தவர் பின்போய்,

கொய்யார் பூந்துகில் பற்றித் தனிநின்று

குற்றம் பலபல செய்தாய்,

பொய்யா உன்னைப் புறம்பல பேசுவ

புத்தகத் துக்குள கேட்டேன்,

ஐயா!உன்னை யறிந்துகொண் டேன்உனக்

கஞ்சுவன் அம்மம் தரவே. 4

விம்மியழுது எதையும் சாதிக்கும் பிள்ளை

227. முப்போ தும்கடைந் தீண்டிய வெண்ணெயி

னோடு தயிரும் விழுங்கி,

கப்பா லாயர்கள் காவில் கொண்ர்ந்த

கலத்தொடு சாய்த்துப் பருகி,

மெய்ப்பா லுண்டழு பிள்ளைகள் போலநீ

விம்மிவிம் மியழு கின்ற,

அப்பா!உன்னை யறிந்கொண் டேனுனக்

கஞ்சுவ னம்மம் தரவே. 5

கன்றினால் விளவெறிந்தவன்

228. கரும்பார் நீள்வயல் காய்கதிர்ச் செந்நெலைக்

கற்றா னிரைமண்டித் தின்ன,

விரும்பாக் கன்றொன்று கொண்டு விளங்கனி

வீழ எறிந்த பிரானே,

சுரும்பார் மென்குழல் கன்னி யருத்திக்குச்

சூழ்வலை வைத்துத் திரியும்,

அரம்பா!உன்னை யறிந்துகொண் டேனுனக்

கஞ்சுவ னம்மம் தரவே. 6

ஆயர் கன்னியர் தொழும் சோதி

229. மருட்டார் மென்குழல் கொண்டு பொழில்புக்கு

வாய்வைத்தவ் வாயர்தம் பாடி,

சுருட்டார் மென்குழல் கன்னியர் வந்துன்னைச்

சுற்றும் தொழநின்ற சோதி,

பொருட்டா யமிலே னெம்பெரு மான்!உன்னைப்

பெற்றகுற் றமல்லால், மற்றிங்-

கரட்டா வுன்னை யறிந்துகொண் டேனுனக்

கஞ்சுவ மம்மம் தரவே. 7

சொல்லப்படாதன செய்தவன்

230. வாளா வாகிலும் காணகில் லார்பிறர்

மக்களை மையன்மை செய்து,

தோளா லிட்டவ ரோடு திளைத்துநீ

சொல்லப் படாதன செய்தாய்,

கேளா ராயர் குலத்தவ ரிப்பழி

கெட்டேன்!வாழ்வில்லை, நந்தன்

காளாய்!உன்னை யறிந்துகொண் டேனுனக்

கஞ்சுவ னம்மம் தரவே. 8

காய்வார்க்கு உகப்பவே செய்பவன்

231. தாய்மார் மோர்விற்கப் போவர் தகப்பன்மார்

கற்றா னிரைப்பின் போவர்,

நீயாய்ப் பாடி யிளங்கன்னி மார்களை

நேர்பட வேகொண்டு போதி,

காய்வார்க் கென்று முகப்பன வேசெய்து

கண்டார் கழறத் திரியும்,

ஆயா!உன்னை யறிந்துகொண் டேனுனக்

கஞ்சுவ னம்மம் தரவே. 9

இருபத்தொரு நாழிகை மறைந்த மாயன்

232. தொத்தார் பூங்குழல் கன்னி யருத்தியைச்

சோலைத் தடங்கொண்டு புக்கு,

முத்தார் கொங்கை புணர்ந்திரா நாழிகை

மூவேழு சென்றபின் வந்தாய்,

ஒத்தார்க் கொத்தன பேசுவர் உன்னை

உரப்பவே நானொன்றும் மாட்டேன்,

அத்தா!உன்னை யறிந்துகொண் டேன்உனக்

கஞ்சுவ னம்மம் தரவே. 10

இருடீகேசன் அடியாராவார்

233. காரார் மேனி நிறத்தெம்பி ரானைக்

கடிகமழ் பூங்குழ லாய்ச்சி,

ஆரா இன்னமு துண்ணத் தருவன்நான்

அம்மம்தா ரேனென்ற மாற்றம்,

பாரார் தொல்புக ழான்புது வைமன்னன்

பட்டர்பி ரான்சொன்ன பாடல்

ஏரா ரின்னிசை மாலைவல் லாரி

ருடீகே சனடி யாரே. 11

அடிவரவு:தன்னேராயிரம் பொன் கும்மாயத்தொடு மையார் முப்போதும் கரும்பு மருட்டார் வாளா தாய்மார் தொத்தார் காரார்- அஞ்சன.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is ஆற்றிலிருந்து
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  அஞ்சன வண்ணனை
Next