ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பெரிய திருமொழி ஒன்பதாம் பத்து தந்தையாய் திருவல்லவாழ் கோலப்பிரான் என்னும் திர

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

ஒன்பதாம் பத்து

தந்தையாய்

திருவல்லவாழ்

கோலப்பிரான் என்னும் திருநாமம் கொண்ட பெருமான் எழுந்தருளியுள்ள திருவல்லவாழ் என்னும் ஊர் மலைநாட்டுத் திருப்பதி. திருமங்கையாழ்வார் மலைநாட்டுத் திருப்பதிகளுள் மூன்றை மட்டும் மங்களாசாஸனம் செய்துள்ளார். அவற்றுள் ஒன்று இந்தத் திவ்ய தேசம். இவ்வூருக்கு அருகில் வாழ்பவர்கள் இவ்வூரைத் 'திருவல்லா'என்பார்கள். 'திருவல்லவாழ்'என்ற பெயரை வாயால் சொல்லவேண்டும் என்று மனம் நினைப்பதே சிறந்தது என்கிறார் ஆழ்வார்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மனமே!திருவல்லவாழைச் சொல்ல நினை

1808. தந்தையாய் மக்களே சுற்றமென்

றுற்றவர் பற்றி நின்ற,

பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ

பழியெனக் கருதி னாயேல்,

அந்தமா யாதியாய் ஆதிக்கும்

ஆதியாய் ஆய னாய,

மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா

வல்லையாய் மருவு நெஞ்சே! 1

பெண்ணாசை நீங்கத் திருவல்லவாழ் நினை

1809. மின்னுமா வல்லியும் வஞ்சியும்

வென்றநுண் ணிடைநு டங்கும்,

அன்னமென் னடையினார் கலவியை

அருவருத் தஞ்சி னாயேல்,

துன்னுமா மணிமுடிப் பஞ்சவர்க்

காகிமுன் தூது சென்ற

மன்னனார் வல்லவாழ் சொல்லுமா

வல்லையாய் மருவு நெஞ்சே! 2

திருவல்லவாழ் என்று அஞ்சாமல் சொல்

1810. பூணுலா மென்முலைப் பாவைமார்

பொய்யினை 'மெய்யி ª 'தன்று,

பேணுவார் பேசுமப் பேச்சைநீ

பிழையெனக் கருதி னாயேல்,

நீணிலா வெண்குடை வாணனார்

வேள்வியில் மண்ணி ரந்த,

மாணியார் வல்லவாழ் சொல்லுமா

வல்லையாய் மருவு நெஞ்சே! 3

உய்யவேண்டுமா? வல்லவாழ் நினை

1811. 'பண்ணுலாம் மென்மொழிப் பாவைமார்

மணைமுலை அணைதும் நாம்,'என்று,

எண்ணுவார் எண்ணம் தொழித்துநீ

பிழைத்துய்யக் கருதி னாயேல்,

விண்ணுளார் விண்ணின்மீ தியன்றவேங்

கடத்துளார், வளங்கொள் முந்நீர்

வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா

வல்லையாய் மருவு நெஞ்சே! 4

வல்லவாழ் என்று சொல்லும் திட்பம் வேண்டும்

1812. மஞ்சுதோய் வெண்குடை மன்னராய்

வாரணம் சூழ வாழ்ந்தார்,

துஞ்சினா ரென்பதோர் சொல்லைநீ

துயரெனக் கருதி னாயேல்,

நஞ்சுதோய் கொங்கைமேல் அங்கைவாய்

வைத்தவள் நாளை யுண்ட,

மஞ்சனார் வல்லவாழ் சொல்லுமா

வல்லையாய் மருவு நெஞ்சே! 5

பிறவித்துயர் நீங்க வல்லவாழ் நினை

1813. உருவினார் பிறவிசேர் ஊன்பொதி

நரம்புதோல் குரம்பை யுள்புக்கு

அருவிநோய் செய்துநின் றைவர்தாம்

வாழ்வதற் கஞ்சி னாயேல்,

திருவினார் வேதநான் கைந்துதீ

வேள்வியோ டங்க மாறும்,

மருவினார் வல்லவாழ் சொல்லுமா

வல்லையாய் மருவு நெஞ்சே! 6

வல்லவாழ் என்று சொல்லும் உறுதி கொள்க

1814. நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை

மெய்யெனக் கொண்டு, வாளா

பேயர்தாம் பேசுமப் பேச்சைநீ

பிழையெனக் கருதி னாயேல்,

தீயலா வெங்கதிர்த் திங்களாய்

மங்குல்வா னாகி நின்ற,

மாயனார் வல்லவாழ் சொல்லுமா

வல்லையாய் மருவு நெஞ்சே! 7

யாக்கை நிலையாது:வல்லவாழ் நினை

1815. மஞ்சுசேர் வானெரி நீர்நிலம்

காலிவை மயங்கி நின்ற,

அஞ்சுசேர் ஆக்கையை அரணமன்

றென்றுய்யக் கருதி னாயேல்,

சந்துசேர் மென்முலைப் பொன்மலர்ப்

பாவையும் தாமும், நாளும்

வந்துசேர் வல்லவாழ் சொல்லுமா

வல்லையாய் மருவு நெஞ்சே! 8

எந்த நூலும் வேண்டாம்:வல்லவாழ் நினை

1816. வெள்ளியார் பிண்டியார் போதியார்

என் றிவர் ஓது கின்ற,

கள்ளநூல் தன்னையும் கருமமன்

றென்றுய்யக் கருதி னாயேல்,

தெள்ளியார் கைதொழும் தேவனார்

மாமுநீர் அமுது தந்த,

வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா

வல்லையாய் மருவு நெஞ்சே! 9

உலகை ஆண்டு இன்புறுவர்

1817. மறைவலார் குறைவிலார் உறையுமூர்

வல்லவாழ் அடிகள் தம்மை,

சிறைகுலா வண்டறை சோலைசூழ்

கோலநீள் ஆலி நாடன்,

கறையுலா வேல்வல்ல கலியன்வாய்

ஒலியிவை கற்று வல்லார்,

இறைவராய் இருநிலம் காவல்பூண்

டின்பநன் கெய்து வாரே. 10

அடிவரவு:தந்தை மின் பூண் பண் மஞ்சுதோய் உரு நோய் மஞ்சுசேர் வெள்ளியார் மறை --- முந்துற.