வண்ண மாடங்கள்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
பெரியாழ்வார் திருமொழி
(பெரியாழ்வார் அருளிச்செய்தது)

முதற் பத்து

வண்ண மாடங்கள்

பிறந்த நாளை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடலாம். கண்ணன் பிறந்த நாள் எப்படிக் கொண்டாடப்படுகிறது!பக்தியின் எல்லையைக் கடந்தவர்களின் செயல் இப்படித்தான் இருக்கும்!குழந்தை கண்ணன் யார்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாகக் கூறிப் புகழ்கிறார்கள். ஆனால் ஒன்று மட்டும் உறுதி! பலரும் பல வகையாகப் புகழ்வதற்கு ஏற்ற தகுதியுடையவன் அவன் ஒருவனே!

கண்ணன் திவவதாரச் சிறப்பு

கலி விருத்தம்

திருக்கோட்டியூர்க் கேசவனே கண்ணன்

13. வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர்,

கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்

எண்ணெய் சுண்ண மெதிரெதிர் தூவிடக்

கண்ணன் முற்றம் கலந்தள றாயிற்றே. 1

ஆயர்களின் மெய்ப்பாடு

14. ஓடு வார்விழு வாருகந் தாலிப்பார்

நாடு வார்நம்பி ரானெங்குற் றானென்பார்,

பாடு வார்களும் பல்பறை கொட்டநின்று,

ஆடு வார்களு மாயிற்றாய்ப் பாடியே. 2

திருவோணத்தான் உலகாளும்

15. பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்,

காணத் தாம்புகு வார்புக்குப் போதுவார்

ஆணொப் பாரிவன் நேரில்லை காண், திரு

வோணத் தானுல காளுமென் பார்களே. 3

ஆயர்களின் மெய்மறந்த செயல்

16. உறியை முற்றத் துருட்டின்நின் றாடுவார்,

நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார்,

செறிமென் கூந்த லவிழத் திளைத்து, எங்கும்

அறிவ ழிந்தன ராய்ப்பாடி யாயரே. 4

அரும்பன்ன பல்லினர்

17. கொண்ட தாளுறி கோலக் கொடுமழு,

தண்டி னர்பறி யோலைச் சயனத்தர்,

விண்டமுல்லை யரும்பன்ன பல்லினர்,

அண்டர் மிண்டிப் புகுந்துநெய் யாடினார். . 5

பிள்ளை வாயுள் வையம் கண்ட அசோதை

18. கையும் காலும் நிமிர்த்துக் கடாரநீர்

பைய வாட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால்,

ஐய நாவழித் தாளுக்கங் காந்திட,

வைய மேழுங்கண் டாள்பிள்ளை வாயுளே. 6

அருந்தெய்வம்

19. வாயுள் வையகங் கண்ட மடநல்லார்,

ஆயர் புத்திர னல்ல னருந்தெய்வம்,

பாய சீருடைப் பண்புடைப் பாலகன்,

மாய னென்று மகிழ்ந்தனர் மாதரே. 7

உத்தான விழா

20. பத்து நாளுங் கடந்த இரண்டாநாள்,

எத்தி சையும் சயமரம் கோடித்து

. மத்த மாமலை தாங்கிய மைந்தனை,

உத்தா னஞ்செய் துகந்தன ராயரே. 8

குழந்தையின் செயல்

21. கிடக்கில் தொட்டில் கிழிய வுதைத்திடும்,

எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும்,

ஒடுக்கிப் புல்கி லுதரத்தே பாய்ந்திடும்,

மிடுக்கி லாமையால் நான்மெலிந் தேன்நங்காய்!9

பாவம் பறந்துவிடும்

22. நெந்நெ லார்வயல் சூழ்திருக் கோட்டியூர்,

மன்னு நாரணன் நம்பி பிறந்தமை,

மின்னு நூல்விட்டு சித்தன் விரித்த, இப்

பன்னு பாடல்வல் லார்க்கில்லை பாவமே. 10

அடிவரவு:வண்ணம் ஓடு பேணி உறி கொண்ட கை வாயுள் பத்து கிடக்கில் செந்நெல் - சீத.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is முதற் பத்து
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  சீதக்கடல்
Next